பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 7

டோக்ளியாட்டி

குட்டி பூர்ஷுவாக்களிடையே இந்த இயக்கம் எப்பொழுது ஓர் ஒருமித்த இயக்கமாக மாற்றம் கண்டது? ஆரம்பத்தில் அல்லாமல், 1920-ம் ஆண்டின் இறுதியில்தான் அந்த மாற்றம் ஏற்பட்டது. அதிலும் ஒரு புதிய அம்சம் குறுக்கிட்டபொழுதுதான் அது மாற்றமடைந்தது. பூர்ஷுவா வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான சக்திகள் ஓர் ஒருங்கிணைந்த அணியாக குறுக்கிட்டபொழுதுதான் அந்த மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன்னரும் பாசிசம் வளர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், அடிப்படை சக்தியாக அது ஆகியிருக்கவில்லை.

பாசிச இயக்கம் யுத்தத்தின் பொழுது தோன்றுகிறது, பின்னர் அது பாஸ்ஸி டி கம்பாட்டிமென்டோ 8 (இத்தாலிய போராடும் லீக்) ஆகத் தொடர்கிறது. எனினும், சில தனி நபர்கள் அதை இறுதிவரை ஆதரிக்கவில்லை. உதாரணத்திற்குச் சொல்வதென்றால் அரசியல் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடும்போது நென்னியை நாம் பாசிசவாதி என்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அவர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிவிட்டார் 9. துவக்கத்தில் பாசிசமானது வெவ்வேறு தன்மை கொண்ட பல்வேறு குழுக்களைக் கொண்டிருந்தது. அவை, இறுதிவரை ஒன்றாகச் சேர்ந்து சென்றதாக வரலாறு இல்லை. நகரங்களில் பாசிச இயக்கத்தின் அத்தியாயங்களைப் படித்துப் பாருங்கள். 1919 – 20-ல் குட்டி பூர்ஷுவா நபர்களும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பொதுவான அரசியல் பிரச்சினைகளை விவாதித்ததையும் ஏராளமான கேள்விகளை எழுப்பியதையும் கோரிக்கைகளை முன்வைத்ததையும் நீங்கள் கண்டிருக்கக் கூடும். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பாசிசத்தின் முதல் வேலைத் திட்டம் தோன்றியது.

ஸ்குவாட்ரிஸ் மோ (Squadrismo)

பியஸ் ஸா சான் செபோல் குரோ10 வேலைத் திட்டமானது பிரதானமாகக் குட்டி பூர்ஷுவா திட்டமாகும்; அது நகர்ப்புற பாசிச சக்திகளைப் பிரதிபலித்தது. இதற்குப் பதிலாக பாசிசத்தை எமிலியா போன்ற கிராமப்புறப் பகுதிகளில் கவனியுங்கள். அது வித்தியாசமானது. பின்னாட்களில், 1920-ல் தொழிலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ஆயுதம் தாங்கிய குழுக்கள் வடிவத்தில் அது தோன்றியது. அது ஸ்குவாட்ரிஸ் மோக்களாக11 அதாவது சிறு குழுக்களாக ஆரம்பத்தில் உருவெடுத்தது. தறுதலைகள், குட்டி பூர்ஷுவா மற்றும் நடுத்தர சமூகப் படிமானத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் பின்பற்றினார்கள். ஆனால் அது உடனேயே தொழிலாளி வர்க்கத்திற்கெதிரான ஒரு போராட்டக் கருவியாயிற்று. அதனுடைய தலைமையகத்தில் எவ்வித விவாதமும் நடத்தப்படுவதில்லை. ஏன் இந்த வித்தியாசம்? ஏனென்றால் இங்கே கிராமப்புற பூர்ஷுவா வர்க்கத்தினர் ஒரு அணி திரட்டும் சக்தியாகக் குறுக்கிட்டனர்.

1921 நடுப்பகுதியிலிருந்து நகரங்களில் சிறுசிறு குழுக்கள் (ஸ்குவாடு) அமைக்கப்பட்டன. முதலில் தேசியப் பிரச்சினை கூர்மையாகவிருந்த டிரிஸ்டியிலும் பின்னர் இந்தச் சக்திகள் மிகவும் பதட்டநிலையிலிருந்த இதர நகரங்களிலும் இந்தச் சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்தச் சிறு குழுக்கள் கிராமப்புற குழுக்கள் போன்று உருவாக்கப்பட்டன. டூரின் நகரின் தொழிற்சாலைகள் கைப்பற்றப்பட்ட பிறகு12 இந்தக் குழுக்கள் அங்கே தோற்றுவிக்கப்பட்டன; எமிலியாவில் இந்த நேரத்திற்குள் பாசிசம் ஏற்கெனவேயே ஒரு வலுவான அமைப்பைப் பெற்றுவிட்டது.

1920-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பூர்ஷுவா வர்க்கத்தினரும் அமைப்பு ரீதியாக நகரங்களில் தலையிட்டனர். இதன் விளைவாக நகரங்களில் பாசிசக் குழுக்கள் தோன்றின. பாசிச இயக்கத்திற்குள் பல நெருக்கடிகள் தோன்றின. முதல் இரண்டு வருட நெருக்கடிகளை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

முசோலினி.

அச்சமயம் பாசிஸ்டுகளிடையே பின்வருமாறு விவாதிக்கப்பட்டது: நாம் ஒரு கட்சியா? இதுதான் ரோம் காங்கிரசில் அகஸ்டியோவில் நடந்த காங்கிரசில் எழுந்த பிரச்சினை13. அந்த காங்கிரஸ் கூறுகிறது: நாம் ஒரு கட்சியாக வேண்டும். முசோலினி இதற்குப் பின்வருமாறு பதிலளிக்கிறார்; “நாம் இன்னமும் ஒரு இயக்கமாகவே இருந்து வருவோம்.” முசோலினி சாத்தியமான அளவுக்கு பரந்துபட்ட மக்கட் பகுதிகளை தனது செல்வாக்கில் வைத்திருக்க முயற்சித்தார். அதன் காரணமாக அவருக்கு எப்பொழுதும் அதிக ஆதரவும் இருந்தது. அதே சமயம் தொழிலாளிவர்க்க அமைப்புகளை நொறுக்க வேண்டுமென்பது பகிரங்கமாகவே விரும்பியவர்களுக்கும் பழைய தத்துவங்களின் மிச்ச சொச்சங்களை இன்னும் ஆதரித்து வந்தவர்களுக்குமிடையே மோதல் நடைபெற்றது.

முசோலினி டி அன்னுன்ஸியோ இயக்கத்திற்குத் துரோகம் இழைத்தார்14; அது ஆபத்தானது என்று அவர் கருதியதே இதற்குக் காரணம். 1920-ம் ஆண்டில் தொழிற்சாலைகள் கைப்பற்றப்பட்ட நடிவடிக்கை விசயத்தில் அவர் முதலில் அனுசரணையான அணுகுமுறை கொண்டிருந்தார். ஆனால் பிறகு முற்றிலும் மாறிவிட்டார். பாசிச இயக்கத்திற்கும் தொழிலதிபர்களின் அமைப்புகளுக்குமிடையே முதலாவது பகிரங்க தொடர்புகள் ஏற்பட்டன. தாக்குதல் ஆரம்பமாகிவிட்டது. ரோம் மீது படையெடுப்பு துவங்கும் வரை இரண்டு வருட காலம் அந்தத் தாக்குதல் நீடித்தது.

அமைப்பு ரீதியான அம்சம் இப்போது குறுக்கிட்டது. கிராமப்புற பூர்ஷுவா வர்க்கத்தினர் சிறு குழுக்கள் வடிவத்திலான அமைப்பை அளித்தனர். தொழிலதிபர்கள் அதை நகரங்களுக்குப் பயன்படுத்தினர்.

படிக்க :
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
♦ பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

குட்டி பூர்ஷுவா சக்திகள் மற்றும் பெரும் பூர்ஷுவா வர்க்கத்தினரின் ஸ்தாபன அம்சம் ஆகிய இரண்டு அம்சங்கள் குறித்த நமது நிர்ணயிப்பு எவ்வளவு சரியானது என்பதை இந்த ஆய்விலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய அம்சங்கள் பரஸ்பரம் ஒன்று மற்றொன்றின் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தின என்பதை இனிப் பார்ப்போம்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

8. பால்சி இதாலியனி டி கம்பாட்டிமென்டோ (இத்தாலிய போராடும் லீக்) முசோலினியின் இயக்கத்திற்கு மிலானில் 1919 மார்ச்சில் நடந்த அதன் அமைப்பு கூட்டத்திற்குபின் அதற்கு கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வப் பெயர்.

9. முசோலினிக்கும் சோஷலிஸ்டுத் தலைவர் பியட்ரோ நென்னிக்கும் (பிறப்பு 1891) இடையே அரசியல் ஒத்துழைப்பும் போட்டி போடுதலும் மாறி மாறி ஏற்பட்டதன் வரலாறு 1908-ல் துவங்கியது; அப்பொழுது குடியரசுவாதியாக இருந்த நென்னி, போர்லிப் பண்ணைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். சோஷலிஸ்டுக் கட்சியின் போர்லி தொகுதிச் செயலாளராக இருந்தார் முசோலினி.

பியட்ரோ நென்னி (Pietro nenni)

முதலாவது உலகப் போரில் ஒப்பந்த நாடுகள் பக்கம் இத்தாலி தலையிட வேண்டுமென இருவரும் வலியுறுத்தினர். இந்த நிலை மேற்கொண்டமைக்காக முசோலினி சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். போருக்குபின் பொலோக்னாவின் ஜனநாயகக் கட்சியின் அமைப்புக் கூட்டத்தில் நென்னி பங்கு கொண்டார். முன்னாள் படைவீரர்களின், குட்டி பூர்ஷுவாக்களின் பிரச்சினைக்கு தீவிரமான ஜனநாயகத் தீர்வை பொலோக்னாவின் ஸ்தாபனம் முன் வைத்தது – முசோலினி முன்பு பயன்படுத்திய தெளிவற்றதன்மையுடைய வெகுஜன இயக்கத்தை ஒத்தது இது. நென்னி பின்னால் அதிகம் திட்டவட்டமான வர்க்க நிலைக்கு ஈர்க்கப்பட்டு 1921-ல் சோஷலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.

10. மிலானின் பியஸ்ஸா : சான் செபோல்கிரோவின் ஒரு மண்டபத்தில் 1919 மார்ச் 23-ம் தேதி நடந்த கூட்டத்தில் பாசிஸ்டு இயக்கம் அதிகாரப்பூர்வமாக தோன்றியது. முசோலினியின் ஏடான ‘இல் போப்பலோ டி’ இத்தாலியாவின்’ ஆதரவாளர்கள் படையிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள், அராஜக சிண்டிக்கலிச சிறுபான்மையினர் இவர்களெல்லாம் ஒரே வேலைத் திட்டத்தின் கீழ் அணி திரண்டனர். இதன் விளைவாக ஏற்பட்ட வேலைத் திட்டம் வாய்வீச்சும், தெளிவற்ற தேசியவாதமும், அரைகுறையான சமூக சீர்திருத்தமும் கொண்டதாக இருந்தது.

இந்த இயக்கம் தன்னை ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்டது என்று அறிவித்தது; உண்மையில் பகிரங்கமாக உலகப் போரை ஆதரித்தது. பியூம் (ரிஜிகா), டால்மாட்டா மீது இத்தாலி உரிமை கொண்டாடியபோது அதற்கு ஆதரவளித்தது. தொழிலாளர் நலன்களை பாதுகாப்பது தங்கள் லட்சியம் என அறிவித்தது. ஆனால் சோஷலிசத்துக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. மூலதனத்தின் மேலாதிக்கமும் தொழிலாளர்கள் அமுக்கப்படுதலும் தனிச் சொத்துரிமைக்கும் லாபத்திற்கும் தேவைப்படுகின்றன என்ற திட்டத்தை அந்த இயக்கம் ஏற்றது. இந்தத் திட்டத்தின் தெளிவின்மை ஒருபுறம் சோஷலிஸ்டுக் கட்சியின் வெகுஜனக் கொள்கையை எதிர்க்க முடியாது போயிற்று.

மறுபுறம் முதலாளிகளை நம்ப வைத்து இந்த புதிய இயக்கத்திற்கு ஆதரவு கோருவதும் சாத்தியமில்லாது போயிற்று. இந்த உள்ளார்ந்த பலவீனம் 1919 பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியில் முடிந்தது. மிலானில் போட்டியிட்ட ஒரே பாசிஸ்டு வேட்பாளர் 4795 வாக்குகள் பெற்றார்.

11. ஸ்குவாட்ரிஸ்மோ : திட்டமிட்டு வன்முறையை கையாளுவதற்காக பாசிஸ்டுகளால் வேலைக்கு அமர்த்தப்பட்ட “செயல் குழுக்களை”க் குறிப்பதற்காக உண்டாக்கப்பட்டது இந்தப் பதம்.

12. தொழிற்சாலைகளில் கதவடைப்பு செய்யப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாக, இத்தாலிய உலோகத் தொழிலாளர்கள் சம்மேளனம் உத்திரவிட்டதற்கிணக்க டூரின், மிலான், ஜினோவாவிலும் அதைவிட குறைந்த தொழில் கேந்திரங்கள் பலவற்றிலும் எந்திரங்களையும் உலோகத் தொழிற்சாலைகளையும் 1920 செப்டம்பர் துவக்கத்திலிருந்து தொழிலாளர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இத்தாலியின் யுத்த பிற்கால புரட்சிகர அலையின் உச்சகட்டத்தை இது குறிக்கிறது என்று பொதுவாக சித்தரிக்கப்படுகிறது. இவ்வாறு தொழிற்சாலைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் இயக்கம் புரட்சிக்கு பக்குவமான சந்தர்ப்பத்தைக் குறிக்கிறதா இல்லையா என்பது இன்னமும் விவாதிக்கப்படுகிறது. (இந்த இயக்கம் மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவியது; ரயில்வே தொழிலாளர்கள் ஆதரவளித்தனர்).

தொழிற்சாலைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் இயக்கம். (கோப்புப் படம்)

தொழிற்சாலைகளை இவ்வாறு எடுத்துக் கொண்டது உலோகத் தொழிலாளர்களுக்கு ஒரு தற்காலிகத் தொழிற்சங்க வெற்றியில் முடிந்தது. ஆனால் தொழிலாளர் இயக்கம் மொத்தத்திற்கும் அதனுடைய அரசியல் விளைவுகள் பெரிதும் நாசகரமாக இருந்தன. சோஷலிஸ்டுக் கட்சி தயாராக இல்லாதிருந்ததும், “புரட்சியை நடத்த” அதற்கு அடிப்படை விருப்பமின்மையும் அம்பலப்படுத்தப்பட்டன. இத்தாலியத் தொழிலாளர்களின் பலம் கடுமையாகச் சோதிக்கப்பட்டது. தங்களுடைய வர்க்க நலன்களை காப்பாற்றிக் கொள்ள தொழிலதிபர்கள் ஒட்டுமொத்தமாக பாசிசத்தின் பக்கம் திரும்பினர்.

13. பாஸ்சி இத்தாலியன் டி கம்பாட்டிமென்டோ : 1921 நவம்பர் 7 முதல் 10 வரை ரோம் நகரின் தியேட்ரோ அகஸ்டோவில் நடந்த காங்கிரஸின் இறுதியில் இவர்கள் தங்களை தேசிய பாசிஸ்டுக் கட்சியாக மாற்றிக் கொண்டனர். இயக்கத்தின் சமரசத்தை விரும்பாத பகுதியால் முசோலினியின் மீது கிட்டத்தட்ட திணிக்கப்பட்ட நடவடிக்கையாகும் இது.

14. முதலாவது உலகப் போருக்குப்பின் இத்தாலியத் தொழிலும் வாணிகமும் இத்தாலிய ராணுவ அமைப்பும் டால்மாடியன் கடற்கரையோரத்தில் உள்ள பியூமி (ரிஜிகா) நகர் மீது பார்வையைச் செலுத்தின. அட்ரியாட்டிக் கடலை “இத்தாலிய ஏரி”யாக மாற்றவும் முந்திய ஆஸ்ட்ரிய-ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் பிரதேசங்களில் பொருளாதார ஊடுருவலுக்கு கதவு திறந்து விடவும் இது கேந்திரமானது. அந்த நகரின் உரிமை பற்றி (1863-1938) யுகோஸ்லேவியாவுடன் இருந்த தாவா இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும்போதே அதைத் திரும்ப பெறக்கோரும் கவிஞர் கேப்ரியல் டி அன்னுன்ஸியோ தலைமையிலான சக்திகள் இர்ரெண்டிஸ்டுகள் (இத்தாலி முதலிய கீழ் ஐரோப்பிய நாடுகளில் அவ்வந்நாட்டு மொழி பேசும் மாவட்டங்கள் அவ்வந்நாட்டைச் சேர வேண்டுமென்ற கோட்பாட்டாளர்கள், முன்பு இத்தாலிக்கு சொந்தமாக இருந்த பிரதேசங்களை மீண்டும் அந்த நாட்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறவர்கள்) 1919 செப்டம்பரில் அந்நகரை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

கவிஞர் கேப்ரியல் டி அன்னுன்ஸியோ (Gabriele D’Annunzio)

டி அன்னுன்சியோபிவின் கட்டுப்பாட்டில் பியூமி, ரோம் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்யும் களமாக ஆயிற்று. முசோலினி, கவிஞரின் செயலை ஆதரித்தார். “ரோம் மீது படையெடுப்பு” என்ற அவரது திட்டம் இத்தாலியக் கிழக்கு கடற்கரையில் படைகள் இறங்குவதுடன் துவங்கும் என்பதையும் தெரிவித்தார். இத்தாலிக்கும் – யூகோஸ்லேவியாவுக்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினைகள் 1920 நவம்பரில் செய்து கொண்ட ரப்பல்லோ ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பியூமி நகர் ஒரு சுதந்திரமான நகர அரசாக ஆயிற்று. இதனைக் கண்ணுற்ற முசோலினி, டி’அன்னுன்சியோவுக்கு அளித்த ஆதரவை மாற்றிக் கொண்டார். திடீர் அரசியல் புரட்சி பற்றிய திட்டத்தை தனது பத்திரிகையில் பிரசுரித்தன் மூலம் கவிஞருக்கு துரோகம் இழைத்தார்.

டி’அன்னுசியோவின் நேரடி நடவடிக்கை கட்சியைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்ட வலதுசாரி இயக்கத்தில் கவிஞரை முதலிடத்திற்கு கொண்டு சென்றது: முசோலினியின் திடீர் மாற்றத்தை இது பெருமளவுக்கு விளக்குகிறது. பிரதம மந்திரி கியோவான்னி கியோலிட்டியின் உத்தரவுபடி இத்தாலிய ராணுவப்படை டி’அன்னுன்யோவின் படைகளை பியூமி நகரை விட்டு விரட்டியடித்ததும் 1920 டிசம்பர் 26-ல் அந்த நகரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !