ஜனநாயக கனவுகளை சுமந்து பறந்த கலைஞர் கிரிஷ் கர்னாட் !

இந்துமதவெறி, சாதிவெறி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக; ஜனநாயக ஆதரவாளராக, எதேச்சதிகார இந்திரா - மோடிகளுக்கு எதிரானவராக; இறுதிவரை உறுதியாக நின்றவர் கிரிஷ் கர்னாட்.

லைஞர் கிரிஷ் கர்னாட் இயற்கை எய்திவிட்டார். நாடக எழுத்தாளரும், மேடை / திரைக் கலைஞருமான கிரிஷ் கர்னாட் அரசியல் துறையில் பகுத்தறிவுக்கு ஆதரவாளராக, இந்துமதவெறி, சாதிவெறி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக; ஜனநாயக ஆதரவாளராக, எதேச்சதிகார இந்திரா – மோடிகளுக்கு எதிரானவராக; சிறுபான்மையினருக்கு ஆதரவாக, மதவெறி பார்ப்பனிய சம்பிரதாயங்களுக்கு எதிரான அறிவுத்துறை குரலாக, மனித உரிமை மீறல்களை வெளிப்படையாக விவாதித்து மக்களிடையே எடுத்துச் சென்ற களச்செயற்பாட்டாளராக பல்துறை அறிவாளியாக அவர் விளங்கினார்.

கோடம்பாக்கம் திரையுலகம் வரை வந்து நடித்ததால் மக்களிடையே அறியபட்டவரானாலும், கன்னட கலை – இலக்கியத் துறையில் மக்கள் சார்பான விழுமியங்களுக்காக எழுதியும், குரல் கொடுத்து களமிறங்கியும் போராடியவராக தமிழகத்தில் அறியப்படவில்லை. அவ்வகையில் தமிழகத்தின் ஜனநாயக கலைச் சரிவை நாம் இவர் மூலமும் எடைபோட முடியும். இங்கே அவர் வந்துச் சென்ற காலம் கலை நட்புக்கானது. மற்றப்படி அது ஒரு தற்செயல் விபத்தே.

பார்ப்பனச் சாதி அழுகலை கிழித்து தொங்கவிட்ட அவரது நாடக மற்றும் திரைப்படம் ‘சம்சுகாரா’ (கன்னடத்தில் பொருள் ‘இறுதிச்சடங்கு’), இஸ்லாமியரெல்லாம் வெறியர்கள், வஞ்சகர்கள், தேசத்துரோகிகள் என்ற பொதுக் கருத்தை உடைத்தெறியும் வண்ணம் அவர் எதிர் வரலாறாக உருவாக்கிய நாடகங்கள் ‘திப்பு சுல்தானின் கனவுகள்’ மற்றும் ‘துக்ளக்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கர்நாடக அரசியல் துறையில் அம்மாநில ஒருவித ரகமான ‘சோசலிஸ்டுகள்’ திரைக்கலைஞர் சிநேகலதா (ரெட்டி), அவரது கணவர் பட்டாபிராம், U.R. அனந்தமூர்த்தி, ஜார்ஜ் பெர்னான்டஸ், அவரது சகோதரர் மைக்கேல் பெர்னான்டஸ் போன்றவர்களின் நட்பினால் ‘சோசலிச’ ஆதரவாளர் என்று அறியப்படுகிறார்.

கர்நாடக நாட்டுப்புறவியல் சிவராம் காரந்த், மேடை எழுத்தாளர் – இயக்குனர் – நடிகரான பி.வி கரந்த், சந்திரசேகர கம்பார் போன்றவரோடும், மகாராட்டிய திரைப்பட இயக்குனரான ஷ்யாம் பெனகல் நட்புக் காரணமாகவும், எழுபதுகளில் கன்னட திரைத்துறையில் புயல் போல் வீசிய ‘கோபமுற்ற இளைஞர்களின்’ நட்பின் காரணமாகவும் தாராளவாத அறிவு ஜீவியாகவும் கன்னட மக்களிடையே பலவிதமாக புகழ்பெற்றவர்.

எப்போதும் இந்துத்துவ மதவெறியை எதிர்த்து‌ வந்த கர்னாட் பாபர் மசூதி இடிப்பின் போது கண்டனக் குரல் எழுப்பியவர். பெங்களூர் விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை சூட்ட வேண்டும் என கருத்து தெரிவித்து சர்ச்சைகளை எதிர்கொண்டவர்.

படிக்க:
♦ இத்தாலியில் பாசிசத்தின் வளர்ச்சியின் வரலாறு !
♦ “அவர்கள் யாரை அழிக்க நினைக்கிறார்கள்” : காவிகளை எதிர்த்த கிரீஷ் கர்னாட் !

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷை கொன்ற சங்பரிவாரத்தின் பயங்கரவாத அமைப்பான சனாதன சன்ஸ்தாவின் கொலைப்பட்டியலில் இவரின் பெயர் முதலில் இருந்தது. கௌரி லங்கேஷின் பெயர் இரண்டாவதாக இருந்தது. கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷின் கொலைகளை எதிர்த்து வெளிப்படையாக பேசியவர்.

அண்மைகாலத்தில் பசுவின் பெயரால் நடக்கும் படுகொலைகளைக் கண்டித்து நடந்த ‘எனது பெயரில் இல்லை’ (‘Not in my Name’) போராட்டங்களில் கலந்து கொண்டார். கௌரி லங்கேஷ் ஓராண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்ட கர்னாட், தன் கழுத்தில் ‘நானும் ஒரு நகர்ப்புற நக்சல்’ (Me too urban naxal) என்ற அறிவிப்பு பதாகையை துணிவுடன் ஏந்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

தற்போது “எனது உடல் எரிப்பு இந்துமத சடங்குகள் எதுவுமில்லாமல், அரசு மரியாதை எதுவுமில்லாமல் எளிமையாக நடத்தப்பட வேண்டும்” என்ற அவரின் விருப்பப்படியே இறுதி அஞ்சலி நடந்தது.

பகுத்தறிவாளராக தன் நெஞ்சுக்கு பொய்யற்றவராக வாழ்ந்து மறைந்த கலைஞர் கிரிஷ் கர்னாட்டின் ஜனநாயக பண்பில் இருந்து கற்றுக் கொள்வோம்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க