பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 2 | பாகம் – 10

டோக்ளியாட்டி

கியோலிட்டி தமது திட்டத்தை 1921-ம் ஆண்டிலும் 1922-ம் ஆண்டின் தொடக்கத்திலும் செயல்படுத்த முனைந்து ஈடுபட்டார். ஆளும் வர்க்கங்களைச் சேர்ந்த பழைய சக்திகளுக்கும் யுத்தப் பிற்காலத்தில் தோன்றிய சோஷலிஸ்டுக் கட்சி, பாப்புலர் கட்சி ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கும் இடையே சட்டமன்ற ஒத்துழைப்பை ஏற்படுத்தும் அரசியல் திட்டம் அவருடைய திட்டம். ஆனால் அதே சமயம் ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போன்று, கியோலிட்டியின் திட்டம் பாசிஸ்டு இயக்கத்தின் ஆதரவையும் சார்ந்து நின்றது; பாட்டாளி வர்க்கத்தின் கொத்தளங்களைத் தகர்த்தெறியும் ஓர் ஆயுதந்தாங்கிய இயக்கமாக அதனைக் கருதிற்று.

கியோலிட்டி – முசோலினி – துராத்தி அரசாங்கம் உருவாவதுதான் இன்றைய முக்கிய தேவை என்று டூரினைச் சேர்ந்த லாஸ்டாம்பா4 எனும் பிரபல ஏடு வலியுறுத்திற்று. இந்தக் கோரிக்கையின் மறுபதிப்புதான் கியோலிட்டியின் கோட்பாடு எனலாம்.

இச்சமயம் என்ன நடைபெற்று வந்தது? ஓர் ஆயுதந்தாங்கிய போராட்டமின்றி இப்போதைய நிலைமையிலிருந்து மீள்வது அசாத்தியம் என்று இத்தாலியப் பூர்ஷுவா வர்க்கத்தின் மிகவும் உறுதியான பகுதியினர் மென்மேலும் உணர்ந்து வந்தனர். தொழிற்சாலைகளைக் கைப்பற்றிக் கொண்ட பிறகு அவர்கள் பாசிசத்தைத் தழுவினர். பிறகு இதுவே கியோலிட்டி திட்டத்தின் அரசியல், சமூக அடித்தளமாயிற்று. நிலைமையைச் சமாளிக்க இத்தகைய வழிதான் சரியானது என அவர் கருதினார்.

இந்தக் காலகட்டத்தில் பாசிஸ்டுக் கட்சி என்ன செய்து கொண்டிருந்தது? பூர்ஷுவா வர்க்கத்திற்குள் ஏற்பட்ட அதே மாற்றங்கள் பாசிஸ்டுக் கட்சிக்குள்ளும் ஏற்பட்டதை நீங்கள் காணலாம். பாஸ்சி டி கம்பாட்டிமென்டோ-வின் 1919-ம் ஆண்டுத் திட்டம் ஒதுக்கி வைக்கப்பட்டது; பாசிசம் ஓர் அரசியல் கட்சியாக நாடாளுமன்றத்தில் பிரவேசித்தது; நாடாளுமன்றத்தில் முசோலினி பேசும்போது, சோஷலிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்து ஓர் அரசாங்கம் அமைக்கும் சாத்தியக்கூறைக் குறிப்பிட்டார்.

பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த தீர்மானமானப் பகுதியினர் வகுத்துத்தரும் பாதையைப் பின்பற்றியேதான் பாசிசம் தனது கொள்கையை உருவாக்கிக் கொள்கிறது. பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த இந்தப் பகுதியினர்தான் எப்போதுமே முடிவெடுக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். வடிவம் மாறலாம், ஆனால் உள்ளுறை சாரம் ஒன்றாகவே இருக்கிறது.

கியோவான்னி கியோலிட்டி (Giovanni Giolitti)

இத்தகைய நிலைமையின் அரசியல் வெளிப்பாடு அமைதி உடன்பாட்டில்5 பிரதிபலிக்கக் காணலாம். சோஷலிஸ்டுகளுடன் அமைதி உடன்பாடு செய்து கொள்வது அவசியம் என்று முசோலினி பாசிஸ்டுக் கட்சியில் போராடினர். சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகள் வெளியேறிய6 நிலைமையில் சோஷலிஸ்டுகள் வலதுசாரிப் பிரிவினரின் நிர்ப்பந்தம் காரணமாக உடன்பாட்டை ஏற்றுக் கொண்டனர். உடன்பாட்டில் முசோலினி கையொப்பமிட்டார். சோஷலிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான தலைவர்களது கையொப்பங்களையும் உடன்பாட்டில் காணலாம்.

ஆயினும் கியோலிட்டியின் திட்டம் உட்பட இத்திட்டங்கள் யாவும் படுதோல்வியடைந்தன. இது ஏன்? ஏனென்றால் எந்த வெகுஜன சக்திகள் தலையிட்டு நிட்டியின் திட்டத்தைத் தகர்த்தெறிந்தனவோ அதே சக்திகள் இப்போதும் தலையிட்டன. கியோலிட்டியின் திட்டத்திற்கு எதிராக, பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிராக அவர்கள் எதிர்த்தாக்குதல் தொடுத்தனர். இதன் விளைவாக இப்போது நாம் ஆர்டிட்டி டெல் பாப்பலோ7வைப் பெற்றிருக்கிறோம். ஆர்டிட்டி டெல் பாப்பலோ அடிப்படையான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தத் தொண்டர் படையினர் கியோலிட்டியின் திட்டத்தை நிர்மூலமாக்கிய சக்திகளில் ஒன்றாகத் திகழ்ந்தனர்.

அமைதி உடன்பாடு அற்பாயுசில் முடிந்தது. கிராமப்புற பூர்ஷுவா வர்க்கமும், கனரகத் தொழில்துறையும், நிதி மூலதனமும் ஒன்று சேர்ந்து இதனைக் குழி தோண்டிப் புதைக்கப் பாடுபட்டன. முசோலினியைவிட விடாக்கண்டர்களும், அரசியலில் சிறிதும் வளைந்து கொடுக்காதவர்களுமான தேசியவாதிகள் பாட்டாளி வர்க்க அமைப்புகளை ஒழித்துக்கட்டியே தீருவது என்று கச்சைக் கட்டிக் கொண்டுக் கிளம்பினர்.

படிக்க:
காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

எனவே, இந்த உடன்பாடு ஒன்றுக்கும் உதவாத செல்லாக்காசு ஆயிற்று. சோஷலிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த வலதுசாரியினரால் அரசாங்கத்தில் சேர முடியவில்லை. ஏனென்றால் அவ்வாறு சேர்ந்தால் அவர்கள் தனிமைப்பட்டுப் போகும் அபாயம் இருந்தது. பொது தொழிலாளர்களின் சம்மேளனத்தைச் சேர்ந்த லட்சோப லட்சக்கணக்கான தொழிலாளர்களிடமிருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டு விடுவார்கள்; தொடர்பற்றுப் போய்விடுவார்கள். தொழிலாளர்கள் அவர்களைக் கைவிட்டு விடுவார்கள். அரசாங்கத்தில் அவர்கள் தங்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். இறுதியில், துராத்தி குய்ரினால் அரண்மனைக்குச்8 சென்றபோது அவர் ஒரு வெறும் நிழலாக மட்டுமே இருந்தார். அவர் யாரையும், எதையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; எந்த சக்தியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; கையாலாகாத் தனத்தைத்தான் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இந்தத் திட்டமும் தோல்வியடைந்துவிடவே ஒரே ஒரு வழிதான் எஞ்சியிருந்தது. அதுதான் ரோம் மீது படையெடுப்பு. இந்தப் படையெடுப்பும் பூர்ஷுவா வர்க்கத்தின் ஒரு பகுதியினரது எதிர்ப்புக்கு இடையே நடைபெற்றது என்றும், கூட்டத்தின்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தளபதிகள் தயாராக இருந்தனர் என்றும் கூறப்படுவதெல்லாம் சுத்த முட்டாள்தனம். அவை உண்மைக்கு மாறானவை.

முசோலினி

பூர்ஷுவா வர்க்கத்திற்குள் ஒரு பெரிய போராட்டம் நடைபெற்றது என்பதும் கியோலிட்டி மீண்டும் பதவிக்கு வருவதைப் பலர் எதிர்த்தனர் என்பதும் உண்மை; ஆனால் பூர்ஷுவா வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரிடையே நடைபெற்ற இந்தப் போராட்டம் வெகுஜனங்களின் போராட்டத்தையே பிரதிபலித்தது.

பூர்ஷுவா வர்க்கத்தின் தீர்மானமானப் பகுதியினர் வங்கிகள், பெரிய தொழில்கள், ராணுவத்தினர் – இவர்கள் அனைவரும் ரோம் படையெடுப்பில் பாசிசத்துடன் நெருக்கி ஒத்துழைத்தனர். முடியாட்சியும்கூட இதே நிலையை மேற்கொண்டது. அரசவை பாசிசத்தைப் பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டதே இதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, கத்தோலிக்க திருச்சபையும் பச்சைக் கொடி காட்டிவிட்டது. இவ்வாறு பூர்ஷுவா வர்க்கத்தின் தீர்மானமான பகுதியினரிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது. அவர்கள் பாசிசத்தைத் தங்களது கோட்பாடாக ஏற்றுக் கொண்டனர்.

இச்சமயம் பாசிஸ்டுக் கட்சிக்குள்ளேயே பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன. குடியரசுப் பிரச்சினையை ஒழித்துக்கட்டியது, இவற்றில் மிக முக்கியமானது என்பதில் ஐயமில்லை. ரோம் படையெடுப்பு நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் முசோலினி தமது யுடைன்9 சொற்பொழிவில் குடியரசுக் கோட்பாட்டைத் தலைமுழுகினார். இதற்குப் பின்னர் அன்றைய இத்தாலிய நிலைமையில், பாசிஸ்டுக் கட்சி தன்னை ஆளும் கட்சியாகச் சித்தரித்துக் கொள்ள ஆரம்பித்தது.

இதற்கிடையே பாட்டாளி வர்க்க நிலைகள் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. பாட்டாளி வர்க்கத்தின் கொத்தளங்களான எமிலியாவும் துஸ்கேனியும் சுட்டெரிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. சோஷலிஸ்டுகளின் ஆதிக்கத்திலிருந்த நகரங்களும் ஊர்களும் மூர்க்கமாகத் தாக்கப்பட்டன; டிரென்ட் பிராந்தியத்தில் தேசிய சிறுபான்மையினரின் புரட்சி இயக்கம் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டது. டிரய்ஸ் டேயில் விவரிக்கவொண்ணா வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இவ்வாறு இத்தாலியப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வலுமிக்க நிலைகள் எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டன. பூர்ஷுவா வர்க்கத்துக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. ஸ்தாபன ரீதியாக ஒருங்குதிரண்ட எந்த ஒரு பூர்ஷுவா சக்தியும் இதைத்தவிர வேறு எவ்வகையான திட்டத்தையும் மேற்கொண்டிருக்க முடியாது.

(தொடரும்)

பின்குறிப்புகள் :

4. லா ஸ்டாம்பா – லிபரல் போக்கு கொண்ட தேசிய அளவில் செல்வாக்குள்ள செய்தித்தாள்.

5. 1921 ஆகஸ்டு 3 ஆம் தேதி பாசிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் “அமைதி உடன்பாட்டில்” கையெழுத்திட்டனர். முசோலினியைப் பின்பற்றுபவர்களிடமிருந்து பலமான எதிர்ப்பு வந்தபோதிலும் பல்வேறு சிக்கலான செயல்திற காரணங்களுக்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதை முசோலினி வற்புறுத்தினார். இதனால் பாசிஸ்டுகளிடையே பிளவு ஏற்பட்டு பாஸ்சி டி காம்பாட்டிமென்டோ நிர்வாகக்குழுவிலிருந்து ராஜினாமா செய்யும்படி முசோலினி நிர்ப்பந்திக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப்பின், பாசிஸ்டுத் தீவிரவாதிகள் பொலோக்னாவில் தங்கள் நடவடிக்கையை ஒருங்கிணைக்கக் கூடினர். சிறிது காலம் கழித்து, இந்த ஒப்பந்தம் அதன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது என்று கருதி, அவரது தன்மைக்கேற்ப முசோலினி தன்  நிலையை மாற்றிக் கொண்டார். பாசிஸ்டுகளின் ரோம் காங்கிரஸில் விட்டுக் கொடுக்காத பண்புடையவர் பக்கம் அதிகாரபூர்வமாக முசோலினி இழுத்துக் கொள்ளப்பட்டார். ஒப்பந்தம் செல்லாது என்று நவம்பர் 15-ல் காங்கிரஸ் அறிவித்தது.

6. 1921 ஜனவரி 15 முதல் 21 வரை லிவோர்னோவில் நடந்த இத்தாலிய சோஷலிஸ்டுக் கட்சியின் 27வது காங்கிரஸில் கம்யூனிஸ்டுக் குழுவின் உறுப்பினர்கள் இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சியை ஸ்தாபிப்பதற்காக வெளிநடப்புச் செய்தனர்.

7. இத்தாலிய ராணுவத்தில் இருந்த தொண்டர் படை கம்மாண்டோக்கள் ஆர்டிட்டி என்று அழைக்கப்பட்டனர். முன்பு ஆர்டிட்டியில் இருந்தவர்கள் பாசிஸ்டு பலாத்காரத்தை எதிர்ப்பதற்காக 1921 ஜூலை மாதத்தில் ஒரு குழுவாகச் சேர்ந்தனர். ஆர்டிட்டி டெல் பாப்பலோ என்ற பெயரில் அழைத்துக் கொண்ட இந்தக் குழு போர் குணம் படைத்த கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், அராஜகவாதிகள் ஆகியவர்களை தன்பால் ஈர்த்து, முதலில் சிறிதாக இருந்த குழு தொழிலாளி வர்க்கத்தின் பெரும் எண்ணிக்கை கொண்ட பலமான தற்காப்பு ஸ்தாபனமாக வளர்ந்தது. எனினும், இந்த வளர்ச்சி கட்சிகளுக்கு அப்பால் நடைபெற்றது.

ஆர்டிட்டி டெல் பாப்பலோ (Arditi del popolo) -வின் கொடி. (ஃபாசிச குறியீடாக உள்ள கோடரியை குறுக்காக மற்றொரு கோடரி பிளப்பது போன்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள இலச்சினை)

பாசிஸ்டுகளோடு அமைதி உடன்பாடு பற்றி தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சோஷலிஸ்டுக் கட்சியிடமிருந்து மட்டுமன்றி கம்யூனிஸ்டுக் கட்சியிடமிருந்தும் இந்த அமைப்புக்கு எதிர்ப்பு வந்தது. கம்யூனிஸ்டுத் தொழிலாளர்கள் அதனுடைய சொந்த செம்படையில்தான் சேரவேண்டும் என்ற இடதுசாரி செக்டேரியன் போக்கை இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சி மேற்கொண்டது. கீழ்மட்டத்திலிருந்து உண்மையில் பாசிசத்திற்கும் எதிராக வளர்ந்து வந்த இந்த இயக்கத்தை சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் காட்டிய பகை தகர்த்தது; இதில் அக்கறையுடன் சேர்ந்த சோஷலிஸ்டு, கம்யூனிஸ்டு அணியினரில் பெரும்பாலோர் அதிலிருந்து விலகினர். பலமான அரசியல் தலைமை இல்லாததால், இந்த அமைப்பு விரைவிலேயே தேய்ந்து போயிற்று. சில நகரங்களில் மட்டும் ஸ்தலமட்டத்தில் இது நீடித்து செயல்பட்டது.

8. பிரதம மந்திரி லியூகி பாக்டாவின் சர்க்கார் 1922, ஜூலை 19 ஆம் தேதி கவிழ்ந்தது. அரசாங்க நெருக்கடி உச்சகட்டத்தில் இருக்கும்போது, பாசிஸ்டு சக்திகள் ரேவென்னாவை நாசம் செய்து கொண்டிருந்தபோது, சோஷலிஸ்டுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு சட்டம் ஒழுங்கையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் மீண்டும் ஏற்படுத்தக் கூடிய ஒரு சர்க்காருக்கு சோஷலிஸ்டுக் கட்சி ஆதரவு கொடுக்கும் என்று ஜூலை 22-ம் தேதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்த நாள் குய்ரினால் அரண்மனைக்குச் சென்று இத்தீர்மானத்தை அரசர் 3-வது விக்டர் எமானுவேலிடம் சமர்ப்பிக்க பில்ப்போ துராத்தி சென்றார். ஆனால், நிலைமை தீர்க்கப்படாமல் இருந்தது. பாக்டா கடைசியில் ஒரு இரண்டாவது மந்திரி சபையை அமைத்தார். 3 மாதத்திற்குபின் ரோம் மீது படையெடுப்பினால் அந்த மந்திரி சபையின் காலம் முடிவுற்றது.

9. 1922 செப்டம்பர் 20 ஆம் தேதி யுடைனில் முசோலினி ஆற்றிய பிரசங்கம், பாசிஸ்டு இயக்கம் குடியரசுக்கு சாதகமானது, மன்னராட்சிக்கு எதிரானது என்ற கூற்றின் கடைசி அடிச்சுவட்டையும் அதிகாரரீதியாக அகற்றியது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க