அமனஷ்வீலி
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 01

பரஸ்பர உறவு பற்றிய விதி

னிய மணியொலி கேட்கிறது …

நான் திடீரென வகுப்பறையினுள் நுழைந்து குழந்தைகளைப் பார்க்கிறேன். உடனே நிசப்தம் நிலவுகிறது.

“குழந்தைகளே, வணக்கம்!” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறேன்.

வகுப்புகள் தொடங்கி இன்று இருபதாவது நாள். குழந்தைகள் என்னிடம் நெருங்கி வருவதை என்னால் உணர முடிந்தது.

ஒரு சிறுவன் சனிக்கிழமையும் தன்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லுமாறு எப்படி வேண்டினான் என்று அவனுடைய தாய் கூறினாள். “இன்று விடுமுறை நாள்” என்றாள் அம்மா. “நான் அங்கு ஓய்வெடுக்கிறேன்!.. ஏன் பள்ளியில் ஓய்வெடுக்கக் கூடாது?” என்று அச்சிறுவன் பிடிவாதமாக இருந்தான்.

ஆம், குழந்தைகள் பள்ளியை நோக்கி, சக நண்பர்கள், ஆசிரியரை நோக்கி, பாடங்களை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். ஏன்? எது இவர்களை இப்படி ஈர்க்கிறது?

ஆசிரியர் பணியில் வெளிப்படும் ஒரு விசேசமான புறவய விதி உள்ளது என்று நம்ப விரும்புகிறேன். இதை “பரஸ்பர உறவு பற்றிய விதி” என்றழைக்கலாம்:

குழந்தைகளைச் சந்திக்க ஆசிரியர் எப்போதுமே விருப்பத்தோடு செல்லட்டும், இவர்களைக் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியடையட்டும்; அப்போது குழந்தைகளும் விருப்பத்தோடு பள்ளிக்கு வருவார்கள், தம் ஆசிரியரைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியடைவார்கள்.

“வணக்கம்!” என்று அவர்கள் மகிழ்ச்சியோடு பதில் அளிக்கின்றனர்.

“உட்காருங்கள்! இன்று நிறைய வேலைகள் நமக்கு உள்ளன. ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காது துவங்குவோம் வாருங்கள்!”

படிக்கத் துவங்க வேண்டுமென பல குழந்தைகள் பொறுமையின்றித் துடிக்கின்றனர். “எழுத்துகளைப் படிக்க ஆரம்பிப்போம்!” என்று 3-4 நாட்களாக அவர்கள் இடையறாது என்னிடம் வேண்டினார்கள். “எழுத்துகளைச் சொல்லிக் கொடுப்பதற்கு முந்தைய காலகட்டத்தை” 3-4 நாட்கள் குறைக்க வேண்டுமென நான் இப்போது நினைக்கிறேன், நான் எனது கட்டமைப்புப் பகுப்பாய்வில் சிறிது அதிக நேரத்தைக் கழித்து விட்டேன்.

நான் என்ன செய்ய வேண்டும்!

வார்த்தைகளைப் பற்றிய ஒலிப் பகுப்பாய்வுக் கோட்பாட்டை குழந்தைகள் புரிந்து கொண்டபின் (15 பாட நாட்களுக்குப் பின் இவ்வாறு புரிந்து கொண்டனர்) குழந்தைகளுக்கு எழுத்துகளைச் சொல்லித் தரத் துவங்கியிருக்க வேண்டும், கூடவே, வார்த்தைகள், வாக்கியங்களை எழுதும் முறைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தர ஆரம்பித்திருக்க வேண்டும்.

நானோ, ஏதோ தெளிவற்ற “எழுத்துக்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு முந்தைய கட்டத்தை” பின்பற்றினேன். குறைந்தபட்சம் குழந்தைகளை 3-4 நாட்கள் தாமதப்படுத்தி விட்டேன். “குழந்தைகளே, என்னை மன்னியுங்கள், நான் வேண்டுமென்றே இப்படிச் செய்யவில்லை. நீங்கள் போகும் போக்கிலேயே எனது விஞ்ஞானத்தை முறிக்கின்றீர்கள், எனக்கு எல்லாவற்றையும் முன்கூட்டியே பார்ப்பது கடினம். இப்போது 1½ – 2 வயதுள்ளவர்கள் நான்கு வருடங்கள் கழித்து என் வகுப்பிற்கு வரும்போது இதை நான் சரி செய்கிறேன்!”

“எழுத்து வெறி”

என் வகுப்புக் குழந்தைகள் எழுத்துக்களை நோக்கிப் பாய்கின்றனர். நானே இதற்குத் துணை புரிந்தேன். வகுப்பறைக்கு வெளியில் உள்ள தாழ்வாரத்தில் அழகிய படங்களுடன் கூடிய குழந்தை நூல்கள் சிறு மேசைகளில் வைக்கப்பட்டன. இவற்றில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை. ஆனால் படிக்கத் தெரியவில்லை. லேலா என்னிடம் ஓடிவந்து கேட்கிறாள்: “இங்கு என்ன எழுதியுள்ளது!”. கியோர்கி கேட்கிறான்: “இந்தக் கதையை தயவு செய்து படித்துக் காட்டுங்கள்!” சாஷா, இடைவேளைகளின் போது ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டு சொற்களையும் வாக்கியங்களையும் படிக்க முயலுகிறான். “இது என்ன எழுத்து? இது ’க’ இல்லையா?” என்று தோழர்களைக் கேட்கிறான்.

ஒவ்வொரு நாளும் நான் காலையில் முன்னதாகவே வந்து, தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் சில வார்த்தைகளையும் எழுத்துகளையும் எழுதுவேன். குழந்தைகள் காலையில் வரும் போதே கரும்பலகையில் ஏதோ புதிதாக எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து விடுவார்கள். உடனே விவாதம் ஆரம்பமாகும்:

“இது ‘த’!”

“இல்லை, இது ‘த’ இல்லை ‘ட’!”

“இதோ ‘ட’, இது ‘த’. எனக்கு நன்கு தெரியும்.”

“இங்கு ‘மகிழ்ச்சி’ எனும் சொல் எழுதப்பட்டுள்ளது.”

“நெ.. நெநெ… நெருப்பு. நான் படித்து விட்டேன்!.. ‘நெருப்பு!..’ “

“’மக்க்க்கள்!… மக்கள்! ஓ… நானும் படித்து விட்டேன்!”

எங்கள் வகுப்பிற்கு வெளியே சலசலவென ஒலி எழுந்தது. இதை விட இசை நயமானதை எந்தக் காட்டிலும் கேட்க முடியாது. எழுத்துகள், வார்த்தைகளைப் படிக்க குழந்தைகள் பரஸ்பரம் உதவி செய்து கொண்டனர். நான் கரும்பலகையில் எழுதிய சொற்கள் தற்செயலானவையல்ல. இவையெல்லாம் வகுப்பறையில் ஏற்கெனவே ஒலித்தவை, இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக ஒலிப் பகுப்பாய்வு நடத்தியுள்ளோம். எனவே, வகுப்பறையில் பாடங்களின் போது எழுத்துகளைச் சொல்லிக் கொடுப்பதற்கு முந்தைய கட்டம்’ நீண்டு கொண்டே போனபோது தாழ்வாரத்தில் “எழுத்துக் கட்டம்” மும்முரமாக இருந்தது. கடந்த 3-4 நாட்களாக என் வகுப்புக் குழந்தைகளை ஆட்கொண்ட நிலையை “எழுத்து வெறி” என்று தான் என்னால் அழைக்க முடியும்.

இந்த எழுத்துக் கட்டத்தை உடனடியாகத் தாழ்வாரத்திலிருந்து வகுப்பறைக்கு, பாடங்களுக்கு மாற்ற வேண்டும். இல்லாவிடில், பேச்சு எதார்த்தம் பற்றி அவர்களிடம் சமீபத்தில் கேள்வி கேட்டபோது ஏற்பட்டதைப் போன்ற முட்டுக்கட்டை உண்டாகும். அப்போதுதான் வெறிக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன.

“நான் இப்போது செய்யப் போவதை எந்தச் சொல்லால் குறிக்கலாம்?” நான் வகுப்பறையில் நடந்து காட்டினேன்.

”நடப்பது!..” என்று குழந்தைகள் பதில் சொன்னார்கள்.

“இது?”

“உட்காருவது!..”

”இது?”

கையில் சாக்பீசை எடுத்துக் கொண்டு தற்செயலாக தோன்றிய சொல்லை எழுதி விட்டு எழுதுவது” என்று பதில் வருமென நம்பிக்கையோடு திரும்பிப் பார்க்கிறேன்.

ஏக்கா: “’துணிவு.”

“துணிவா! அப்படியென்றால் என்ன?” என்று நான் வியப்போடு கேட்டேன்.

வோவா: “நீங்கள் தானே ‘துணிவு’ என்று எழுதினீர்கள்.”

“நான் என்ன எழுதினேன் என்று கேட்கவில்லை. நான் செய்த செயலை எப்படி அழைக்கலாம் என்றுதான் கேட்கிறேன். இதோ பாருங்கள்!” என்றபடியே நான் இன்னமும் சிக்கலான ஒரு வார்த்தையை (”எதிர்பார்த்திரு”’) தெளிவின்றி விரைவாக எழுதிக் காட்டுகிறேன். “இந்தச் செயலுக்கு என்ன பெயர்?”

எழுதுவது என்று பெயர். அதே சமயம் என்ன நடந்தது தெரியுமா? பலர் தம் விரல்களைச் சுட்டிக் காட்டியபடியே மெதுவாக உச்சரிக்கத் துவங்குகின்றனர்.

மாயா: ”எஎஎ… திர்…”

தாத்தோ: “எதிர்பார்…”

கீகா: “இல்லை ! எதிர்காண்!”

மாயா: “’எதி-ர்-பா-ர்… எதிர்பார்த்திரு!” என்று உற்சாகமாகக் கூறுகின்றனர் “அங்கே ‘எதிர்பார்த்திரு’ என்று எழுதியுள்ளது.”

“சரி, நல்லது!” என்று நான் யோசித்தபடியே பேச்சு யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பயிற்சிகளை நிறுத்தினேன். “அடுத்த முறை வேறு பயிற்சிகளில் இதைத் தொடர்வோம்! இப்போது…”

“சிறிது விளையாடுவோமா? நான் வார்த்தைகளை எழுதுவேன். உங்களால் முடிந்தால் உடனேயே இவற்றை உரக்கப் படியுங்கள்.”

நான் கரும்பலகையை விட்டு அகன்று குழந்தைகள் நான் எழுதியதைப் பார்த்ததுமே “சூரியன்!” என்று ஒரு பெரும் ஓசை எழுந்தது.

நான் மீண்டும் அவர்களுக்குத் தெரியாதபடி கரும் பலகையின் முன் நின்று ஒரு வார்த்தையை எழுதி விட்டு நகர்கிறேன்.

“மரம்!” என்று மகிழ்ச்சியோடு குழந்தைகள் கூறுகின்றனர்.

பின்னர்: “வீடு!.. அம்மா!.. அப்பா!.. பாட்டி!..”

எல்லோரும் படிக்கவில்லை. எழுத்துக் கூட்டிப் படிக்கச் சிலருக்கு நேரம் போதவில்லை, மற்றவர்கள் இவ்வார்த்தையை உச்சரித்தனர்.

முடிவாக ஒரு துணிச்சலான சம்பவம் பற்றிய கதையைப் படித்தோம். ஓய்வு நேரம் கிடைத்த போதும், பெரும் இடைவேளைகளின் போதும், பூங்காவில் உலாவும் போதும் இப்படிப்பட்ட புத்தகத்தை என்னாலியன்றவரை உணர்ச்சியோடு, பாவனை நயத்தோடு படித்துக் காட்டினேன். படிப்பதைத் தொடர்ந்து கேட்கவே அவர்களுக்குப் பொறுமையில்லை. “இப்படிப் படிக்க முடியுமெனில் நீங்கள் எவ்வளவு சந்தோஷமானவர்!” என்று சமீபத்தில் ஏல்லா கூறினாள். “ஆம், குழந்தைகளே, படிக்கத் தெரிந்திருப்பதும், படிக்கும் ஆர்வமும் உண்மையான மானுட மகிழ்ச்சி. புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் படிக்கும் ஆர்வத்தை உங்களுக்கு எப்படி ஊட்டுவது? இதுதான் இனி என் அக்கறை!” என்று நான் என் மனதினுள்ளேயே ஏல்லாவிற்குப் பதில் சொல்லிக் கொண்டேன்.

நான் இப்படியாக “எழுத்து வெறியை” ஏற்படுத்தினேன்: குழந்தைகள் என்னையும், தம் பெற்றோர்களையும் துளைத்து எடுத்தனர். ”இது என்ன எழுத்து!.. இங்கு என்ன எழுதியுள்ளது!.. இதைப் படித்துக் காட்டு!” என்று கேட்டவண்ணமிருந்தனர். தாழ்வாரத்திலிருந்த கரும்பலகையில் காலைதோறும் நான் எழுதிய எழுத்துகள், சொற்கள், வாக்கியங்களின் அருகிலேயே நீண்ட நேரம் நின்றார்கள்…..

நாளை முதல் அவர்களுக்கு எழுத்துக்களைச் சொல்லித் தர ஆரம்பிப்பேன். அப்போது விரைவாகத் தெரிந்து படிக்கும் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்துவேன். இன்று 25 நிமிட மினி-பாடவேளைகளின் போது வார்த்தைகளின் கட்டமைவுப் பகுப்பாய்வு சம்பந்தமான பயிற்சிகளைத் தருவேன், படிக்கவும் எழுதவும் பயிற்றுவிக்க வேண்டும்.

படிக்க:
இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !
தளர்ந்த வயதிலும் தளராமல் உழைக்கும் டோக்கியோவின் வயோதிகர்கள் ! – படக்கட்டுரை

இந்த மினி- பாடவேளைகள் எவ்வளவு நல்லவை, கச்சிதமானவை, முழுமையானவை தெரியுமா! குழந்தைகள் களைப்படைவதேயில்லை, இடைவேளை நேரம் வந்ததும் உலோகத்தாலான ஒரு வளையத்தில் மாட்டப்பட்டுள்ள மூன்று பொன்னிற மணிகளை எடுத்து ஆட்டி ஐந்து நிமிட வகுப்பு இடைவேளை ஆரம்பமாகியதைக் குறிப்பிடுகிறேன். சில சமயங்களில் குழந்தைகள் என்னுடன் சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்வார்கள். சில சமயங்களில் அவர்கள் விருப்பப்படி விட்டு விடுவேன். மற்றும் சில நேரங்களில் தலையைக் குனிந்தபடி இருந்த இடத்திலேயே உட்கார்ந்தபடி நல்ல இசையைக் கேட்கும்படி அல்லது ஏதாவது நல்ல விஷயங்களைப் பற்றி யோசிக்கும்படி சொல்வேன், கற்பனை செய்து பார்க்கும்படி சொல்வேன். பின் என் கைவசமுள்ள மணிகள் ஐந்து நிமிடங்களுக்குப் பின் இனிய ஒலியை எழுப்பும். பள்ளி முழுவதற்குமான மின்சார மணி அடித்து இடைவேளை ஆரம்பமாகும்வரை எங்கள் பாடம் தொடரும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க :
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க