‘அர்ஜுன் ரெட்டி’ என்ற சூப்பர் ஹிட் படம், இந்தியில் ‘கபீர் சிங்’ என்ற பெயரில் தற்போது வெளியாகியிருக்கிறது. விரைவில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாக உள்ளது. அர்ஜுன் ரெட்டி வெளியானபோது, சில விமர்சங்கள் தவிர்த்து தென்னிந்திய மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பெண்கள் அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா-வை உடனடியாக தங்களுடைய கனவு நாயகனாக வரித்துக்கொண்டார்கள். நூற்றாண்டு கால இந்திய சினிமா வரலாற்றில் நிறைய தேவரகொண்டாக்கள் வந்திருக்கிறார்கள். எனவே, இதெல்லாம் வழமையாக நடக்கக்கூடியதுதான்.

சூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்… இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா? அப்படி சிந்தித்தவர்கள், அப்படிப்பட்ட ஒரு ஆணழகனு-டன் (சதை முறுக்கேறிய, பார்த்தவுடன் காதல் கொள்ளத்தூண்டும் ஒருவரை ‘ஆணழகன்’ என சொல்கிறார்கள் இல்லையா?)  வாழ நேர்ந்தால் அந்த வாழ்க்கை ‘ஸோ ரொமாண்டிக்’ என குதூகலிக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்தப் பதிவு.

என் பெயர் ‘அ’ அல்லது ‘ஆ’ என ஏதோ ஒன்று என வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய பெயர் இங்கு முக்கியமல்ல, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதுதான் முக்கியம். விசயத்துக்கு வருகிறேன்… நான் அர்ஜுன் ரெட்டியில் வருகிற நாயகிபோல, தலை நிமிர்ந்து (இதெல்லாம் ஒரு பெருமையா, அடிமைத்தனம் – அவமானம் என்பதை உணர்வதற்குள் 35 வருடங்கள் ஓடிவிட்டன) நடக்காத பெண்.

பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தது பெண்கள் பள்ளியில். பெண்கள் பள்ளியில் படித்தாலுமேகூட பதின்பருவ காதல்கூட வந்ததில்லை. நடுத்தரக் குடும்பங்களில் இயல்பாகவே இருக்கும் காதல் குறித்த எச்சரிக்கைகள் எனக்கும் விடப்பட்டுக்கொண்டே இருந்தன. நல்ல மதிப்பெண் வாங்குவது, பொறியியல் கல்லூரிக்குப் போவது, இது மட்டும்தான் அப்போதைய இலக்கு.

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றவள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், படிப்பு – மதிப்பெண் போன்றவை வாழ்க்கையின் நல்லது கெட்டதுகளை ஒருபோதும் சொல்லிக்கொடுப்பதில்லை. வீட்டிலும் அப்படித்தான் வெற்று எச்சரிக்கைகள்தான் வந்துகொண்டிருக்குமே தவிர, வெளிப்படையாக எதையும் சொல்ல மாட்டார்கள்.

படிக்க:
மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற குடியானவன் குடும்பத்த காப்பாத்துவானா ?
♦ பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

பள்ளிப் படிப்பு முடிந்ததும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். ஒரு சிறு நகரத்திலிருந்து பெருநகரத்துக்கு முதன்முறையாக வருகிறேன். விடுதியில் தங்கிப் படித்தாலும் பெற்றோரின் முழுநேர கண்காணிப்பிலிருந்து தப்பிக்கிறோம் என்கிற எண்ணம் சுதந்திர உணர்வைக் கொடுத்தது. ஆண்களுடன் படிக்கிறேன், பழகுகிறேன். கூச்ச உணர்வும் இல்லை, ஈர்ப்பும் இல்லை; எச்சரிக்கை உணர்வு அதிகமாகவே இருந்தது.

பிறகு ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்கிறேன். முதல் இரண்டு ஆண்டுகள் பணியைக் கற்றுக்கொள்வதிலும் தக்க வைத்துக்கொள்வதிலும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன. காதல் பற்றியெல்லாம் நினைக்க நேரமே இல்லை. அதன் பின், வழக்கமான பணி வாழ்க்கையில், பெற்றோரை விட்டு தள்ளியிருக்கும் சூழலில் நேர்ந்த தனிமை. சாதாரணமாக சாப்பீட்டீர்களா என்று கேட்டால்கூட மிகப்பெரும் ஆறுதலாக இருக்கும். அப்படியொருவர் மீது ஈர்ப்பு அல்லது காதல் என்று சொல்லமுடியாத ஒரு உணர்வு. அது அடுத்தக்கட்டத்துக்குப் போகாமல் அப்படியே முடிந்தது.

அதன் பிறகுதான் கதாநாயகன் அர்ஜுன் ரெட்டியை சந்திக்கிறேன். நான் பணியாற்றிய நிறுவனத்தில் அர்ஜுன் ரெட்டி, வேறொரு பிரிவில் வேலைப் பார்த்தார். ஒரு புராஜெக்ட்டுக்காக இருவரும் ஒன்றாக வேலைப் பார்க்க நேர்ந்தது. அர்ஜுன் ரெட்டி நல்ல உயரம்; முறுக்கேறிய உடல்வாகு; நன்றாகப் பாடுவார். ஆரம்பக்கட்ட ஈர்ப்புக்கு இதுபோதுமானது என்கிறது அறிவியல். எனக்கும் அப்படித்தான்.

அர்ஜுன் ரெட்டிக்கு என் மீது ஈர்ப்பு வர ‘அப்பாவிப் பெண்’ தோற்றம் போதுமானதாக இருந்திருக்கிறது. தான் சொன்னதைக் கேட்டு நடக்கும் ஒரு தலையாட்டி பொம்மையாக வேண்டும். எந்தவகையான மீறலிலும் ஈடுபடாத அடிமையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் பொருள். ஈர்ப்பு காதலாக முகிழ்ந்த காலத்தில் அர்ஜுன் ரெட்டி தன்னைப் பற்றிய ‘உண்மை’களை சொல்கிறார். தான் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்கள் இருவரையும் கட்டாயப்படுத்தி பிரித்துவிட்டதாகவும் சொல்கிறார்.

என்னை முற்போக்கானவள் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. என்னுடைய ’டிராக் ரெக்கார்ட்’ கடைந்தெடுத்த கட்டுப்பெட்டித்தனமான பின்னணியுடையது. எனவே, ஆண்களின் பலதார மணம், பல பெண்களுடன் உறவு என்பது இந்திய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. அத்தகைய சமூகத்தில் வளர்ந்த நான், அர்ஜுன் ரெட்டியின் முந்தைய வாழ்க்கை குறித்து, கவலை கொள்ளவில்லை. பரிவு கொண்டேன், காதல் மேலும் கூடியது.

அதே நேரத்தில், அர்ஜுன் ரெட்டி கடைந்தெடுத்த ஆணாதிக்கவாதி என்பதை அறியாமல் ஒரு நபர் மீது எனக்கிருந்த ஈர்ப்பும் காதலுமல்லாத உணர்வு குறித்து பகிர்ந்துகொண்டேன். திருமணத்துக்கு முன், அர்ஜுன் ரெட்டிக்கு அது ஒரு விடயமாகவே தெரியவில்லை. அர்ஜுன் ரெட்டியின் பரந்த மனப்பான்மையை எண்ணி பெருமை கொண்டேன்.

பணிக்குச் செல்ல ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே திருமண அழுத்தம் தர ஆரம்பித்துவிட்டனர் பெற்றோர். திருமணம் வேண்டாம் என்று ஒருமுறை சொன்னபோது என் அம்மா, திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கு சுடுகாட்டில் இடம் கிடைக்காது என்றார். எந்த விலை கொடுத்தேனும், எப்பாடுபட்டாவது தங்களுடைய பிள்ளைகளுக்கு ‘காலாகாலத்தில்’ திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பு. இது குழந்தைகள் மீதான அக்கறை என்பது போய், இறுதியில் அது அழுத்தமாகவே மாறிவிடுகிறது.

இத்தகைய சூழலில், திருமணத்தை தள்ளிப்போட்டவள், திருமணம் செய்துகொள்கிறேன் என்கிறாளே என்ற விதத்தில் என்னுடைய திருமணத்துக்கு உடனே ஒப்புதல் அளித்தார்கள். திருமணத்துக்கு முந்தைய நாள், அர்ஜுன் ரெட்டி, மதுபோதையில் இந்தத் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்றார். முந்தைய காதல் பிரிவை மறக்கமுடியாமல் அர்ஜுன் ரெட்டி தவிப்பதாக நினைத்தேன். திருமணம் ஆன நான்கைந்து மணி நேரத்திலேயே அர்ஜுன் ரெட்டியின் நிஜமான முகத்தை தரிசிக்க முடிந்தது.

படிக்க:
பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை
♦ ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு!

அர்ஜுன் ரெட்டியால் குடிக்காமல் இருக்க முடியாது; அதனால் தொட்டதெற்கெல்லாம் கோபம் வரும். பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கென்றே பிறந்த அடிமைகள் என்பது அர்ஜுன் ரெட்டியின் அசைக்க முடியாத நம்பிக்கை. முந்தைய நாள் இரவு திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று சொன்னதற்குக் காரணம் நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பு ஒருவர் மீது நான் ஈர்ப்பு கொண்டதுதானாம். நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ தன் பாலின் மீதோ எதிர்பாலின் மீதோ ஈர்ப்பு வராமல் இருக்குமா? இதெல்லாம் ஒரு விசயமா என்றபோது, அப்படியெல்லாம் இல்லை, நீ அவனுடன் எப்படியெல்லாம் கற்பனையில் வாழ்ந்திருப்பாய் என்றார் அர்ஜுன் ரெட்டி. ஒரு ஆணாதிக்க சைக்கோவால் மட்டுமே இப்படி கேட்க முடியும்.

ஆணாதிக்க சைக்கோக்களைக் கொண்ட சமூகத்தில் அர்ஜுன் ரெட்டியின் சைக்கோத்தனத்தை சகித்து வாழ முயற்சித்தேன். முதல் நாளே பிரச்சினை என்பதை யாரிடம் சொல்வது, ஊரிலிருந்து வந்திருந்த பெற்றோர் வீடுகூட போய் சேர்ந்திருக்க மாட்டார்களே… அடுத்த சில மணி நேரத்தில் அர்ஜுன் ரெட்டி வந்து மன்னிப்பு கேட்டார். இனி அப்படி பேசமாட்டேன் என்ற அர்ஜுன் ரெட்டி கட்டியணைத்த போது, சினிமாக்களில் காட்டப்படுவதுபோல ரொமாண்டிக்காக இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? பயமும் பீதியுமாக இருந்தது.

அர்ஜுன் ரெட்டி போன்ற ஆணாதிக்க சைக்கோக்களை அவர்களுடைய சூழலும் சேர்ந்தே உருவாக்குகிறது. அப்படிப்பட்ட சூழலில் குறைந்தபட்ச மரியாதை உணர்வுடன் வளர்ந்த பெண்களால் வாழ்வது இயலாத விடயம். பிரச்சினை எங்கிருந்து கிளம்பும் எப்படி முடியும் என்று தீர்மானிக்க முடியாது. எதற்காக அடிவிழும் என்று அனுமானிக்க முடியாது. பயத்துடனே வாழ வேண்டும். அர்ஜுன் ரெட்டி போன்ற குடிகாரர்களின் வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால், இதெல்லாம் நடக்குமா என கற்பனையில்கூட நினைத்திராத விடயங்கள் நடக்கும்.

அர்ஜுன் ரெட்டி எப்போது படுக்க அழைத்தாலும் படுக்க வேண்டும். உங்கள் விருப்பம், நிராகரிப்பு குறித்து அங்கே எந்தவித அனுசரணையும் இருக்காது. உங்களுக்கு மாதவிடாய் காலம் என்பது பற்றியோ, பகலாக இருக்கிறதே என்பது பற்றியோ, நள்ளிரவு 3 மணி, ஆழ்ந்த உறக்கத்துக்கு போய்விட்ட 12 மணிக்கு எழுப்பி உறவுக்கு அழைத்தாலும் நீங்கள் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் நாகூசும் வார்த்தைகளால் நீங்கள் அர்ச்சிக்கப்படுவீர்கள். உங்களுக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு இருப்பதாக உறுதிபடுத்தப்படும். சில சமயங்களில் அடியும் விழும். இது ரொமாண்டிக்காக இருக்கும் என உங்களால் மெய்சிலிர்க்க முடிகிறதா?

அர்ஜுன் ரெட்டி போன்ற போதைக்கு அடிமையான ஒருவனால், குறைந்தபட்சம் மனிதனாகக்கூட நடந்துக்கொள்ள முடியாது. கூடவே, மற்றொரு போதையான ஆணாதிக்க திமிரும் சேர்ந்துகொள்ளும்போது விளைவுகள் விபரீதமானவை. ‘திருத்திவிடுவேன்’, ‘திருந்திவிடுவான்’ என சொல்வது உங்களுக்கு நீங்களே குழிவெட்டிக்கொள்வதுபோலத்தான்.

இப்படியான உறவிலிருந்து எளிதாக வந்துவிடலாமே என நீங்கள் கேட்கக்கூடும். இந்திய சமூகத்தில் திருமணம் என்பது ஒரு பொறி. அதில் சிக்கிக்கொண்டவர்கள் வெளிவருவது அத்தனை எளிதல்ல. திருமணமான ஒரு மாதத்தில் என்னைப் பார்க்க வந்த அம்மாவிடம், அர்ஜுன் ரெட்டி ‘உங்கள் பெண் பல ஆண்களுடன் சுற்றியவள்’ என ஒரே போடாக போட்டார். அதற்கு அம்மா, “டாக்டர் கிட்ட சர்டிபிகேட் வாங்கிட்டு வந்தா என் பொண்ணு நல்லவன்னு ஒத்துகுவியாப்பா” என்றார் அப்பாவித்தனமாக. முதன்முறையாக அந்த நிமிடம் அம்மாவை வெறுத்தேன்.

எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும்; திருமணத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தால், அதை அப்படியே அடக்கிவிட்டு, அந்த வாழ்க்கையை தொடர வேண்டும். இதைத்தான் சமூகம் விரும்புகிறது. அம்மாவும் இந்த சமூகத்திலிருந்து வந்தவர்தான். இங்கே திருமண உறவில் வல்லுறவு, வன்முறை என்பது இயல்பானதாகவே இருக்கிறது.

திருமண உறவில் இருந்த அப்பா, வேறொரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று பிரச்சினையானதாக அம்மா ஒரு முறை பகிர்ந்துகொண்டார். அவருக்கு அப்பா மீது கோபம் இருந்தது. ஆனால், அப்பாவுடனான உறவை முறித்துக்கொள்ளும் தன்மானம் அவருக்கு இல்லை. அதேபோல், அர்ஜுன் ரெட்டியும் ஒரு பெண்ணிடம் நடந்துகொள்கிறார். நான் சகித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் வதை செய்யும் இந்த குடும்ப அமைப்பிலிருந்து என்னால் தப்ப முடியவில்லை. இறுதியில் அம்மாவின் நகலாக நான் மாறிப்போனேன்.

அர்ஜுன் ரெட்டிகளை சகித்துக்கொள்கிற பெண்கள் இப்படித்தான் வழிவழியாக உருவாக்கப்படுகிறார்கள். அர்ஜுன் ரெட்டி போன்ற கடைந்தெடுத்த ஆணாதிக்க சினிமா வெற்றிபெறுவதும், அது பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படுவதும் சமூகத்தின் சீழ்பிடித்த நிலையைத்தான் காட்டுகிறது.

அர்ஜுன் ரெட்டி போன்ற கதாபாத்திரத்தை கதாநாயகனாக பெண்கள் வரித்துக்கொள்வதைப் பார்க்கும்போது பயமே மேலிடுகிறது. அப்படிப்பட்டவர்களை ஒரு கணமேனும் இந்தப் பதிவு சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை எழுதியிருக்கிறேன்.

நன்றி,

தமிழரசி