ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு !

‘தயவு செய்து கணவனே கண்கண்ட தெய்வமென்று உங்கள் மகள்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள். சிறுமிகளை வளர்ப்பதை நீங்கள் அளவுக்கதிகமாக வெறுக்கிறீர்கள் என்றால், அவர்களைப் பிறப்பதற்கு அனுமதிக்காதீர்கள். அப்போதுதான் பல சிறுமிகள் கொல்லப்படுவதற்குப் பதில் ஒரேயொரு பெண் மட்டும் இறந்து போவாள்!”

என்று நீண்ட நெடிய பெண் வாழ்வின் அவலத்தை நான்கு வரியில் சொல்கிறார் ஷகீலா. ஷகீலாவின் கதை என்ன?

அவரது சகோதரி வகிதா ஒரு மருத்துவர். அவளும், அவளது மூன்று மகள்களும் கணவனால் அமிலம் ஊற்றிக் கொல்லப்பட்டார்கள். வகிதாவின் குற்றம் என்ன? ஆண் வாரிசுக்குப் பதிலாகத் தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதும், அது குறித்து அடிக்கடி அடித்துச் சண்டையிடும் கணவனைச் சகித்துக் கொண்டு அவனோடு வாழ்ந்ததும்தான் அவளது குற்றங்கள்.

மருத்துவராகப் பணியாற்றும் ஒரு மேல்தட்டு இசுலாமியப் பெண்ணுக்கே இக்கதி என்றால் ஏழை எளிய பெண்களின் நிலை? அமிலம் ஊற்றிக் கொல்லப்படுவதும் குதறப்படுவதும் வடஇந்திய – பாக்கிஸ்தான் – வங்கதேச இசுலாமியப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாக இருக்கும்போது, ‘இந்து’ப் பெண்களுக்கோ ஸ்டவ் வெடித்து எரிக்கப்படுவது என்று வேறுபடுகிறது. உலகை உய்விக்க வந்தது தன் மதம்தான் என்று மார்தட்டும் இருமத அடிப்படைவாதிகளும், பெண்களை ஆசிட் ஊற்றியோ- மண்ணெண்ணெய் ஊற்றியோ ‘அழகு’ பார்ப்பதில் மட்டும் ஒன்றுபடுகிறார்கள். பெண்ணினத்திற்கு எதிராக ஆண்களும் கடவுள்களும் இணைந்து அமைத்த கூட்டணியில் மதம் ஒரு பொருட்டல்ல.

உத்திரப் பிரதேச மாநிலப் பெண்களின் வாழ்க்கையில் வன்முறை எப்படிப் பிரிக்க முடியாதபடி ஒன்றியிருக்கிறது என்பதை அரசு நடத்திய ‘மக்கள் நீதிமன்றத்தில்’ விளக்கிய பெண்களின் கதைகளை வைத்து ‘தி இந்து’ பத்திரிகையில் கல்பனா சர்மா என்பவர் எழுதியிருக்கிறார். அதிலொன்றுதான் முன்னர் கண்ட ஷகீலாவின் கதை. இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி. பரப்பளவில் மட்டுமல்ல, மத்திய அரசின் தலைமையைத் தீர்மானிக்கின்ற மாநிலமாகவும் இருக்கிறது. இன்னொரு புறம் வறுமை, எழுத்தறிவின்மை, இந்து மதவெறி, பெண்கள் மீதான வன்முறை, சுகாதாரக் கேடு இவற்றிலும் முன்னணியில் இருக்கிறது. இத்தகைய பின்தங்கிய இந்தி பேசும் மாநிலங்களில்தான் பாரதீய ஜனதாக் கட்சி பலமாக வேரூன்றியிருக்கிறது என்பதும் மேற்படி பட்டியலின் விளைவுதான். இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையினால் கொல்லப்படும் பெண்களில் மூன்றிலொரு பங்கு உ.பி.மாநிலப் பெண்களாக இருக்கின்றனர் என்ற உண்மை கொடூர முகத்தையும் இந்தியப் பெண்களின் சராசரி அவலநிலையையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு !

அரசு நிறுவனங்கள் – தன்னார்வ அமைப்புகள் நடத்திய இம்மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்ட (முன்னாள்) குடியரசுத் தலைவர் நாராயணன் ‘பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகள்தான்’ என்ற ‘அரிய’ உண்மையைக் கண்டெடுத்துப் பேசினார்;’ நள்ளிரவில் நகையணிந்து பயமின்றி  நடமாடும் நிலை வந்தால்தான் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்ததாகக் கருத முடியும்,’ என்ற மற்றொரு அரிய தத்துவத்துக்குச் சொந்தக்காரரான காந்தியின் சுவரொட்டியையும் வெளியிட்டார். நள்ளிரவிலோ, பகலிலோ போடுவதற்கு நகை வேண்டுமே, அந்த நகை இல்லாததால் நடந்த கொடுமைகளை வந்திருந்த பெண்கள் விளக்கினார்கள். மற்றபடி ‘மகாத்மா’வின் கனவை ஜெயா – சசி வகையறாக்கள் மட்டும் நள்ளிரவில் நகை போட்டு பவனி வந்து வளர்ப்பு மகன் திருமணம் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதால் அவரது ஆன்மா சாந்தியடையலாம்.

ஆணாதிக்கக் கொடுமைகளை தனது மதத்திலும், தனது அணிகளிடமும் வைத்திருக்கும் மாநில பா.ஜ.க. அமைச்சர் – தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இக்கொடுமைகளை நேரடியாகச் செய்தும், ‘சட்டப்படி’ ஆதரித்தும் செயல்படுகின்ற மாநிலப் போலீசும் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இறுதியில் வந்திருந்த பெண்கள் தமது உள்ளக் குமுறல்களைக் கொட்டியது மட்டுமே இந்நிகழ்ச்சியின் ஒரு பலன்.

உ.பி.மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பெண்கள் குடும்ப வன்முறை, சாதி வன்முறை, அரசு – போலீசு வன்முறை என விதவிதமான கொடுமைகளைச் சொன்னார்கள். சித்திரக்கோட் மாவட்டத்திலிருந்து வந்த 19 வயது கிஸ்மாத்தூன் பானோ கூறுகிறார்:

”ஏழு வருடங்களுக்கு முன்பு மணமுடிக்கப்பட்டேன். எனது கணவன் மோட்டார் சைக்கிள் வாங்குவற்காகப் பத்தாயிரம் ரூபாயை வரதட்சணையாகக் கேட்டு நச்சரித்தான்; தொடர்ந்து அடித்துக் கொண்டுமிருந்தான். இதை எனது கிராம மக்களிடமும், போலீசிடமும் தெரிவித்தேன். எவரும் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. ஆனால் கணவனுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்தினார்கள். அப்படி ஒவ்வொரு முறையும் திரும்பியபோதும் அடிப்பதை மட்டும் அவன் நிறுத்தவில்லை. இப்போது என் உடல் நலத்தையும் இழந்துவிட்டேன். ஆயினும் வயதான என் தாயையும், மூன்று வயதுக் குழந்தையையும் காப்பாற்ற வேலை செய்ய வேண்டும். எனது கணவனும் அவனது குடும்பத்தாரும் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.”

ஒரு தாய், தனது 11 வயது மகளை கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பிணமாகப் பார்த்தது, 68 வயதுப் பெண்மணியை 27 வயது இளைஞன் கற்பழித்தது இப்படிச் சில உண்மைகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தன. இப்பெண்களில் பலர் ஏழை – எளிய – தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அதேசமயம் நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்கப் பெண்களும் நிம்மதியாக வாழ்கின்றனர் என்பதில்லை.

லக்னோவைச் சேர்ந்த தீப்தி கல்லூரிப் படிப்பு முடித்து கணினி ஆசிரியையாகப் பணி புரிபவள். பெற்றோரால் சதீஷ் என்ற அறிவியல் ஆராய்ச்சியாளனுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள். ”மணமான முதல் நாளிலிருந்தே எனது கணவனும், அவனது பெற்றோர்களும் வரதட்சணை கேட்டு நச்சரித்தும் பின்னர் அடித்துத் துன்புறுத்தவும் செய்தார்கள். மேலும் எனது கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்யப் போவதாகவும் மிரட்டினார்கள்” என்று தன் மணவாழ்க்கையை ஆயுள் தண்டனையாகத் தொடங்கியதை நினைவு கூர்கிறாள் தீப்தி. இறுதியில் அவளது கணவன் ஏதோ கருத்தரங்கம் ஒன்றிற்குச் சென்றிருந்த போது வீட்டை விட்டுத் துரத்தப்பட்டாள். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன் அவளைத் தேடி விவாகரத்து வழக்கு வந்தது. பின்னர் மகளிர் அமைப்பு ஒன்றின் உதவியுடன் எதிர் வழக்குப் போட்ட தீப்திக்கு கடந்த 6 மாதமாக முடிவோ, இல்லை அமைதியோ கிடைத்து விடவில்லை.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த கிராம்பபுற தலித் பெண்கள், நகர்ப்புற நடுத்தரவர்க்கப் பெண்கள் அனைவரும் அரசு – அதிகார வர்க்கம் – போலீசுத் துறைகள் சாதி – பண பலத்தின் முன் மண்டியிட்டு தமது அவலங்களைப் பாராமுகத்துடன் நடப்பது குறித்து விளக்கினார்கள். ஏதோ ஒரு மகளிர் அமைப்பின் தொடர்பினால் இங்கு வந்த பெண்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும்போது வெளியுலகம் அறியாத பெண்களின் எண்ணிக்கை பல ஆயிரம் இருக்கும். 1998-ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி உ.பி.மாநிலத்தின் பெண்கள் மீதான வன்முறை 17,497 ஆகும். எனில் பதிவு செய்யப்படாத புகார்களின் எண்ணிக்கை எத்தனை இலட்சமிருக்கும்? இந்த எண்ணிக்கையுங் கூட வேறு இந்திய மாநிலங்களின் கணக்கைவிட மிக அதிகம். இந்தியாவின் பெரிய மாநிலத்தின் பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

இந்த அதிகாரபூர்வ வழக்குகளில் பாதி கற்பழிப்பு வழக்குகளாகவும் அதில் பாதி ஆதாரமில்லையென மூடப்படுவதாகவும் இருப்பது நடைமுறை உண்மை. பெண்களுக்கு நியாயம் கிடைப்பதற்குச் சட்டம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே கற்பழிப்பு – வீட்டு வன்முறை – அலுவலகப் பாலியல் வன்முறை குறித்த குற்றவியல் சட்டங்களில் ஏராளமான திருத்தங்களும், புதிய சட்டங்களும் கொண்டு வந்தார்கள். ஆயினும் என்ன, வரதட்சணைக்காக எரிக்கப்படுவதும் ‘மேல்’ சாதி வெறியர்களால் கற்பழிக்கப்படுவதும், காமவெறிக் கிரிமினல்களால் கற்பழித்துக் கொலை செய்யப்படுவதும் அதிகரித்தே வருகிறது. பதிவு செய்யப்படும் வழக்குகளிலும் பெரும்பாலானோர் விடுவிக்கப்படுகிறார்கள்.

‘பவாந்தர்’ எனும் இந்தித் திரைப்படத்தில் கதைக்குச் சொந்தக்காரரான பன்வாரி தேவி, இராஜஸ்தான் மாநிலத்தில் ‘மேல்’ சாதியினரை எதிர்த்து நின்று அதனால் கற்பழிக்கப்பட்டு, நீதிமன்றத்திலும் நியாயம் கிடைக்காத ஒரு அப்பாவிப் பெண். ‘பண்டிட் குயின் திரைப்படக் கதைக்குச் சொந்தக்காரரான பூலான் தேவி பாராளுமன்றம் வரை சென்றும் விடுதலை கிடைக்காமல் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு பெண். ரவுடிகள் – போதை –சிறை அதிகாரிகளால் மனநிலை சிதையுமளவு குதறப்பட்ட தமிழகத்தின் ரீட்டாவுக்கு 5 லட்சத்தைக் கொடுத்துவிட்டார்கள் என்பதைத் தவிர பன்வாரி தேவிக்கு நேர்ந்தது இவருக்கும் நேரிடும்.

இப்படிப் பெண்கள் மீதான வன்முறையின் புள்ளி விவரம் சலிப்பூட்டும் ஒரு சடங்காக மாறிவிட்டது. அவர்களின் அவலங்களைப் பாலுணர்வைக் கிளப்பும் பரபரப்பான பத்திரிக்கைச் செய்திகளாக மாற்றிவிட்டார்கள். உழைப்பைச் செலுத்தும் பெண்களை வீட்டு வாழ்க்கையில் கூட சரிசமமாக மதிக்காமல் அடிமைகளாக நடத்தும் நாட்டில் அவர்களின் விடுதலையும் எளிதில் கிடைத்துவிடாது. அரசியல் – சமூக – பொது வாழ்க்கையில் அதிகம் பங்கேற்பதும், போராடுவதும்தான் விடுதலைக்கான தொடக்கமாக இருக்கும். அப்போதும் கூட அரசு நடத்தும் ‘மக்கள் நீதிமன்றத்தில்’ துயரங்களைப் பகிர்ந்து கொள்வது என்பதைத் தாண்டிச் செல்வது கடினம்.

அதற்கு உ.பி. மாநிலத்தின் அருகிலிருக்கும் பீகார் மாநிலத்திற்குச் செல்ல வேண்டும். தெற்கு பீகாரிலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் வலுவாக இருக்கும் மாவோயிச கம்யூனிச மையம் (M.C.C) (இன்று மாவோயிசக் கட்சி) என்ற நகசல்பாரிப் புரட்சியாளர்களால் கிராமங்கள் தோறும் உண்மையான மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. சாதி – வர்க்க – பாலியல் கொடுமைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு அங்கே உடனுக்குடன் நீதி கிடைக்கின்றது. குற்றவாளிகளுக்கான தண்டனையும் மக்களால் உடன் நிறைவேற்றப்படுகிறது. ஒப்பீட்டளவில் இப்பகுதிகளில் பெண்கள் மீதான வன்முறை ஏனைய மாநிலங்களைவிடக் குறைவு. நிலவுகின்ற சமூகக் கொடுமைகளிலிருந்து விடுபடத் துடிக்கும் ஒரு பெண்ணுக்கு இதைவிடத் தெளிவான வழி வேறு ஏதும் இருக்கிறதா?

___________________________________________

புதிய கலாச்சாரம், ஜனவரி 2002.

___________________________________________    

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

23 மறுமொழிகள்

  1. //ஆணாதிக்கக் கொடுமைகளை தனது மதத்திலும், தனது அணிகளிடமும் வைத்திருக்கும் மாநில பா.ஜ.க. அமைச்சர் – தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.//
    அப்படீன்னாக்க உபி யில் முலாயம் சிங்கின் கட்சி ஆளும் கட்சி இல்லைன்ங்கறீங்களா? அவருக்கு முன்னாலே கூட அங்கு தலித் மாயாவதிதானே முதலமைச்சர்?

    தகவல் பிழை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    • 2002 – ல் எழுதப்பட்ட கட்டுரையை மீள்பதிவாக இப்போது வெளியிட்டிருப்பதை கவனியுங்கள்.

      // புதிய கலாச்சாரம், ஜனவரி 2002. //

    • சார் இது ‘சமீபத்தில்’ 2002 இல் வந்த கட்டுரை.. அப்ப பி.ஜே.பி ராஜ் நாத் சிங் முதலமைச்சர்.

      நன்றி..

  2. ‘மகாத்மா’வின் கனவை ஜெயா – சசி வகையறாக்கள் மட்டும் நள்ளிரவில் நகை போட்டு பவனி வந்து வளர்ப்பு மகன் திருமணம் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதால் எப்பவே அவரது ஆன்மா சாந்தியடையடைந்து இருக்கும்

  3. கட்டுரை வந்த ஆண்டு புதிய கலாச்சாரம், ஜனவரி 2002.

    டோண்டு சார் போன் வயர் அந்து 10 வருசம் ஆச்சி…

    நொன்புடன்,
    போண்டா மாதவன்

  4. பிஜேபியை மட்டுமே எதற்கு குத்தம் சொல்லி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பெரியாரிஸ்டுகளும் கம்யூனிஸட்களும் தாண்டவமாடும் தமிழகத்தில் நடப்பது என்ன? இலங்கைக்கு போன பிஜேபி தலைவியான சுஷ்மா சுவராஜ்பற்றி திராவிட தமிழ் குருப்புகள் எவ்வாறு அசிங்கமாக எழுதின என்பது தெரியாதா? இதேயளவு வக்கிரமா இலங்கைக்கு போன திருமாவளவன் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது? பிஜேபிகாரர்கள் உத்தமர்கள் என சொல்லவில்லை, ஆனால் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளைதான் எதுக்கு ஒன்லி பிஜேபிமீது மட்டும் தாக்குதல்?

  5. // புதிய கலாச்சாரம், ஜனவரி 2002. //

    வினவின் துரிதச் செயல்பாட்டை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. அடேங்கப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.

    அது சரி, அப்புறம் வந்த தலித் மாயாவதி காலத்தில் எல்லாமே சரியாகி விட்டதாமா? இப்போ நிலைமை எப்படி?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    • என்ன சார் ரொம்ப நல்லவராட்டம் நலம் விசாரிக்கிறீங்களே. ஏன் தலித்துனா இந்து இல்லியா?

  6. தோழர்கள் அம்பி என்ற பெயரில் வருவதும்,
    அம்பிகள் பாண்டி என்ற பெயரில் வருவதும்,
    என்ன ஒரு நகைமுரண்?
    எங்கே இஸ்லாமிய தோழர்களை இன்னும் காணோம்?

    • silandhy மனுசனாக மாறி பின்னூட்டமிடுகையில் தோழர்கள் அம்பிகளாகவும்
      அம்பிகள் பாண்டிகளாகவும் வருவதில் என்ன ஆச்சர்யம்? எல்லாம் அல்லாவின் லீலை…யா அல்லாஹ்!

    • // தோழர்கள் அம்பி என்ற பெயரில் வருவதும், //

      கும்பி, எம்பி போன்ற பெயர்களில் வருபவர்கள் தோழர்களா என்று தெரியாது, ஆனால் எனக்கும் தோழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்துக் கொள்கிறேன். பிரச்சினை அடிப்படையில் தோழர்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது என் நிலைப்பாடு.

      // எங்கே இஸ்லாமிய தோழர்களை இன்னும் காணோம்? //

      அவர்கள் சிலந்தி, தமிழ்நண்டு, புரட்சிவண்டு போன்ற பெயர்களில் வருகிறார்களோ என்னமோ..

  7. டோண்டு சார்,

    பிஜேபி-ய சொன்னா உங்களுக்கு ஏன் பத்திக்கிட்டு வருது?
    எந்த பார்ப்பான் வீட்டுலயாவது இந்த கொடுமைகள் நடக்குதா, அப்படியே நடந்தாலும் அதற்கும் மற்ற சாதிகளில் நடப்பதற்கும் விகிதாசாரம் என்ன? மிக குறைவு தானே… இப்படி தானே நீங்க பேசனும்? 🙂

  8. அக்காகி,

    உமக்கும் வினவுக்கும் ஏன் பிஜேபி மேல அவ்வளவு காண்டு? ஒன் சைடடாக வினவு இருப்பதை குறிப்பிட்டேன் அவ்வளவே. இப்போது பல முறைகள் ஏற்கனவேயே செய்தது போல வினவு கள்ள மௌனம் சாதிக்கிறது. உம்மை மாதிரி அல்லக்கைகள் ஆட்டம் போடுகிறீர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    • கலந்து கொண்டவர்கள் பீஜேபிக்காரர்கள் எனும்போது திமுககாரர்கள் என்றா சொல்ல முடியும்?

  9. எலே எனக்கு ஒன்னு புரியமாட்டேங்குது. RSS யை திட்டுனா பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் கோவம் வருது அதே பாருங்க இந்து மதத்தையோ சாமியார்களையோ திட்டுனாலும் இதே காரங்களுக்குத்தான் கோவம் வருது. என்ன காரணம். இந்து மதம்னா அதுல பார்ப்பனர்கள் மட்டும்தானா?

  10. நக்சல் பாரி மக்களின் எழுச்சியாக ஆரம்பித்து இப்போது கொள்ளையடித்து சொகுசாக வாழும் இளைஞர்களின் கூட்டமாக மாறிப்போய்விட்டதே அதை என்னன்னு சொல்ல…நக்சல் என்ற பேரில் கொலை கொள்ளை அடிப்பதை எப்படி ஆதரிப்பது? இது கம்யூனிசம் என்றபேரில் ரஷ்யாவில் நடந்த அராஜகம் மாதிரிதான்…உடனே இந்துமதம் சரியில்லை இஸ்லாம் சரியில்லை…என்று மதத்தின் மீது பழியைப் போட்டு கட்டுரை தேத்தி விடுவது…இதுதான் புரட்சி…இல்லையா?

    • எலே நீயாவது பதில் சொல்லுலே. பிஜேபியையோ ஆரெஸெஸ்ஸையோ திட்டுனா பார்ப்பனர்களுக்கு மட்டும் கோவம் வருதே ஏன்லே?

      • பி.ஜே.பி ,ஆர்.எஸ்.எஸ் – ன் தலைமை பார்பனியச்சித்தாந்தத்தில் ஊறியது ,அதன் அடி பொடிகள் பார்பனர்களாக மட்டுமல்ல , சூத்திரராகவும் இருப்பதுதான் நம் அவலம்.

    • நக்சல் பாரிகள் ஒன்றும் கொள்ளையடித்து சொகுசாகவாழவில்லை …2G, 3G, என்றெல்லாம், கொள்ளையடித்து, சொகுசாகவாழ்வது , இந்த அரசியலமைப்பை பயன்படுத்தி பதவிக்கு வருபவர்களும் , அதிகாரவர்க்கமும்தான் . இவர்களின் அராஜகம் எல்லை மீறும்போது எதிர்த்துநின்றால் — அவர்களே , நக்சல் பாரிகள் ,அல்லது கம்யூனிஸ்ட்டுகள் . [ யாராவது- நக்சல்பாரிகள்,கம்யூனிஸ்ட்டுகள் பெயரில் சொகுசாகவாழ்ந்தால் அவர்கள் போலிகள் ]. சோவியத்ரஷ்யா -வின் பிறப்பிற்க்குப்பின்பே பல தேசங்கள் அரசியல் சுதந்திரம் பெற்றன. ..இன்று , ஈழதேசிய விடுதலையை ,
      போலிக்கம்யூனிஸ்டு நாடுகள் உட்பட அனைத்து வல்லரசு, துணைவல்லரசு நாடுகள் ஒன்று
      சேர்ந்து ,[ 1.5 இலட்சம் தமிழரின் படுகொலையில்,] சிங்களவனின் துணையோடு முடித்துவைத்ததை போன்றெ ,,, உலக முதலாளித்துவம் சோவியத்ரஷ்யா-வை முடித்துவைத்தது .

  11. அது அப்படிதாம்வே.ரெண்டுலயும் டாப் லெவல்ல இந்த பயலுவ தானே!
    அப்புறம் எப்படி விட்டு கொடுக்கரதுன்றேன்?
    கோட்டிக்கார பயபுள்ள நீர்.பொழப்ப கெடுத்தா கோவம் வரும்ல?

  12. சிலந்திகள் மனிதனாக மாறுவது நல்லவிசயம்.
    ஆனால் அம்பிகள் ஜந்துக்களாக மாறுவது
    நல்ல விஷயம் இல்லையே.

    சிலந்திக்கு ஏதையா ஜாதி,மதம்?

  13. பெண்கள் வாழத்தகுதியில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியகூட்டரசு முதல் இடத்தில் உள்ளது … வெங்கு CD .. ஈரோடு .

  14. பெண்கள் வாழத்தகுதியில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியகூட்டரசு முதல் இடத்தில் உள்ளது … உண்மை தான் … வெங்கு ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க