அப்பனும் மகனும் ஒன்னு சேந்து குடிச்சுட்டு அவுந்து விழுற வேட்டிய எடுத்துக் கட்டும் நிதானம் கூட தெரியாம அசிங்கப்படுத்தினா எப்பேர்ப்பட்ட அம்மாவுக்கும் அவமானமாதான் இருக்கும். வேலைக்கி போன கூலி காசுக்கு சாராயம் குடிக்கிறது பத்தாம வீட்டுல உள்ள காசையும், பொருளையும் திருடி குடிச்சா எப்புடி குடும்பம் பன்றது? இதெல்லாம் பொருக்க முடியாமெத்தான் சோலையம்மா வீட்ட விட்டு போனதும் நடந்தது.
அப்பனும் மகனும் குடிச்சுட்டு அசிங்கப்படுத்துறதும் அதுக்காக சோலையம்மா கோச்சுகிட்டு போறதும் புதுசில்ல, கோவங்கற பேருல பத்துநாளு ஒருவாரம் எங்கனா தெரிஞ்ச எடத்துல தங்கி கூலி வேல பாத்துட்டு பெறவு தலவிதின்னு வீட்டுக்கு திரும்பி வாரதும் புதுசில்ல.
ஆனா இந்த மொற கோவம் தீந்து வீட்டுக்கு திரும்பி வரும் போது சோலையம்மாவுக்காக காத்திருந்தது மரண ஓலம்.
“என்னத்த சொல்ல எங்கதைய. செத்தப் பொணம் வீட்டுல கெடக்க எழவு வீட்டுப் பொம்பள நானு வயக்காட்டுல நின்னு வயிராற கஞ்சிகுடிச்சுட்டு வாயாற வெத்தலப் போட்டேன். எழவு விழுந்த சேதி என்ன வந்து சேர அஞ்சு நாளச்சு…
நா.. ஒன்னும் பத்து ஏக்கர் பண்ணையம் பண்ணி பணக்கார வாழ்க்க வாழனுமின்னு ஆசப்படல. கூலி பாடுபட்டு சோறு தின்றோம் அத புள்ள, புருசனோட சந்தோசமா சேந்து திங்கனுமுன்னு நெனச்சேன். அதுக்கு குடுப்பன இல்ல.
இந்த பத்து வருசத்துக்குள்ள குடிச்ச குடியில கொடலே அழுகிருச்சுன்னு டாக்டருங்க சொல்றாங்க. கொடலு, கிட்னி, மஞ்சக்காமால இத்தனயும் ஒரு ஒடம்புல இருந்தா எதப்பாக்குறது?
அந்த மனுசன கெட்டவன்னு சொல்ல முடியாது. இந்த குடிதான் அவன கெடுத்துபுடுச்சி. குடிக்காதையா குடிக்காதையான்னு தலப்பாடா அடிச்சுகிட்டேன் கேக்காம இன்னைக்கி அனாதையா விட்டுட்டு போயிட்டான்.
நா.. கலைஞர் கச்சி அதனால எம்புள்ளைகளுக்கு தமிழ்லதான் பேரு வப்பேன்னு மூனு பிள்ளைக்கும் ஆசையா பேரு வச்சா..ன் அந்த மனுச… கதுரறுப்பு சீசன்ல ராத்திரி எத்தன மணிக்கி வீடு வந்தாலும் நெல்ல வித்து தீனி வாங்கிட்டுதான் வருவான். பிள்ளைங்க மேல உயிரையே வச்சுருந்தாரு.
- படிக்க:
- எம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா !
- இந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு !
- இரண்டு பீட்சா ஒரு கொசுவர்த்தி மற்றும் பாகுபலி – 2
வேலபாத்த அசதிக்காக சாரயத்த தேடிப் போயி குடிச்சப்ப பொண்டாட்டி பிள்ளையின்னு நிதானமா வீடு வந்தான். தடிக்கி விழுந்தா சாராயக் கடன்னு ஆன பொறவு எம்பொழப்பு சீரழிச்சி போச்சு.
பெரிய பொண்ண கட்டிக் குடுக்குற வறைக்கும் நிதானமாதான் இருந்தாரு. இந்த பத்து வருசத்துக்குள்ள குடிச்ச குடியில கொடலே அழுகிருச்சுன்னு டாக்டருங்க சொல்றாங்க. கொடலு, கிட்னி, மஞ்சக்காமால இத்தனயும் ஒரு ஒடம்புல இருந்தா எதப்பாக்குறது? மாசத்துக்கு ரெண்டு தரம் ஆஸ்பத்திரி கூட்டிப் போகனும் ஒருக்க பஸ்சுக்கு போக 200 செலவு ஆயிடும்.
மூனு வருசமா நாங்க ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு போறதும் டாக்டருங்க குடிக்காதிங்கன்னு சொல்றதும் பொழப்பா போச்சு. ஆஸ்பத்திரிலேருந்து திரும்பி வந்த மறு நாளே சாராய கடைக்கி போயிடுவான். நாத்து நட்டு, களப்பறிச்ச கூலிய ஏழு இடுக்குள பதுக்கி வச்சாலும் எடுத்துருவான். சாராயக் கட தூரமா இருந்தா போக முடியாது. காலடியில இருக்கதால தூங்கி முழிக்கிறதே அங்கதான்.
இப்பெல்லாம் எந்த வெவசாய வேலையும் சாராயம் இல்லாமெ நடக்குறதுல்ல. ஒரு மூட்ட நாத்தரிக்க, ஒரு ஏக்கர் நடவு நட, ஒரு ஏக்கர் கருதறுக்க கூலி இவ்வளவு, பாட்டுலுக்கு காசு தனி அப்புடிதான் ரேட்டே பேசுறானுங்க… ஈவுபாவா நல்லா வேல பாக்குற ஆளுக்கு வயக்காரங்க ரெண்டு பாட்டுலு சேத்தே வாங்கி தாராங்க.
எங்கூட்டாளு நாளைக்கி ஒங்களுக்கு வேலைக்கு வரேன்… இன்னைக்கி அவசரமா 100, 200 குடுங்கன்னு வாங்கியாந்து குடிச்சுருவாரு. காசு குடுத்தவங்க திட்டவும் செய்வாங்க சமயத்துல ரெண்டு அடியையும் போடுவாங்க. காசு குடுத்ததுக்காக முடியும் போது ஏதாச்சும் வேலைய வாங்கிப்பாங்க.
இந்தாள நம்பி ஒன்னுத்துக்கும் வேலைக்காதுன்னு ஆனபொறவு சின்ன பொண்ண துணிக்கடையில வேலப் பாக்க சென்னைக்கி அனுப்புனே. அது ஏதோ மூனு பவுன வாங்குச்சு துணிமணியெல்லாம் எடுத்து வச்சுருந்தா… அத போட்டு கல்யாணம் செஞ்சி வச்சோம்.
சின்னப்புள்ளைய கட்டிக்குடுத்து நாலு வருசமாச்சு. கல்யாணம் சீமந்தமுன்னு வாங்குன கடனுல அடைச்சது போக குழுக்கடனு 60 ஆயிரம் இருக்கு. தலைய அடகு வச்சாவது மாசாமாசம் தவண பணம் கட்டியாகனும்.
வீட்டுக்குள்ள ஒரு பொருளுருக்கா பாத்தியளா… கரி படிஞ்ச குண்டானத் தவிர வேற எதுவும் இல்ல என் வீட்டுல. தண்ணி எடுக்குற கொடம் தவல, வீட்டுல இருந்த சைக்கெளு… எல்லாத்தையும் வச்சு குடிச்சுட்டான். அதவிட கொடுமெ ஒரு நாளு மம்பட்டிய(மண்வெட்டி) வித்துட்டு குடிச்சுட்டு வந்தான். மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற எந்த குடியானவனும் குடும்பத்த காப்பாத்துவான்னு நம்ப முடியுமா..?
இந்த காலனி வீடு கட்டி எட்டு வருசம் ஆகப்போவுது. இருந்த இரும்பு கதவும் துரு..தின்னு சாத்த முடியாமெ போச்சு. வேற மாத்துக் கதவு போட முடியல. எங்கூட்டாளு ஒன்னும் வேல தெரியாத மனுசனில்ல. ஓங்கி வெட்டுன ஒரு கொட்டு மண்ணு ஒரு ஒடப்படையும் உழப்பாளி மனுசென்… சாராயம் எங்க வாழ்க்கைய மாத்திபுடிச்சு.
சாராயக் கட இல்லன்னா எங்கூட்டாளு நல்லவந்தான்னு சொல்லிட்டே இருந்தா கடன குடுத்தவங்க ஏத்துப்பாங்களா? ஆத்துல தண்ணி இல்லாம ஊருக்குள்ள வேலை நெரந்தரமா கெடைக்க மாட்டேங்குது. எப்புடி கடனடைக்க..?
நெனச்சு பாக்கையில ஆத்தரம் அதிகமா வரும். அப்பனும் மகனும் எப்படியாச்சும் ஆக்கி தின்னுங்கடான்னு விட்டுட்டு… போருங்க (ஆழ்துளை கிணறு) அதிகமா இருக்குற பட்டுக்கோட்ட, மன்னார்குடி பக்கம் போயிடுவேன். வாரம், பத்து நாளு தங்கியிருந்து வேலை செஞ்சுட்டு கூலிய கடங்குடுத்த குழுவுக்கு கட்டிட்டுதான் வீட்டுக்குள்ளேயே வருவேன்.
- படிக்க:
- டாஸ்மாக்கிற்கு எதிராக தமிழக பெண்களின் போர் – வீடியோ
- கோவை : போலீசா – மக்களா? டாஸ்மாக்கை மூடிய போராளிகள் !
- கணக்கில் வராத ஒரு தற்கொலை – ஒரு மரணம் !
இந்த தடவையும் அப்புடிதான்……. சின்னமக புள்ளைக்கி முடியெடுக்க போறேன்னு சொல்லிச்சு. ஒரு சட்டதுணி வாங்கிப் போடலான்னு காசு வச்சுருந்தேன் அப்பா எடுத்தானோ மகன் எடுத்தானோ காச காணோம். கேட்டா ரெண்டு பேருமே அடுச்சுபுட்டாய்ங்க… போக்கத்தவளுக்கு ஏது எடம், வழக்கம் போல திரும்பவும் கோச்சுகிட்டு வேலை தேடி போயிட்டேன்.
பத்துநாளைக்கு பெறவு என் போட்டா போட்டு கடையில ஒரு போஸ்டரு ஒட்டிருந்துச்சு. என்னையா எழுதிருக்குன்னு விசாரிச்சேன். அவசரமா வீட்டுக்கு வரனுமின்னு எழுதிருக்குன்னாங்க. ஒரு தடவையும் நம்மள தேடுவாரில்லையே இது என்ன புதுசான்னு… அடிவயிற கலக்கிருச்சு.
எங்கூட்டாளு ஒன்னும் வேல தெரியாத மனுசனில்ல. ஓங்கி வெட்டுன ஒரு கொட்டு மண்ணு ஒரு ஒடப்படையும் உழப்பாளி மனுசென்… சாராயம் எங்க வாழ்க்கைய மாத்திபுடிச்சு.
அடிச்சுபுடிச்சு வீட்டுக்கு ஓடியாந்தா அப்பா செத்து அஞ்சு நாளாச்சு… எங்கம்மா போனேன்னு கத்துறா எம்பொண்ணு. வெளிக்கி போன எடத்துலேயே ரெத்த வாந்தி எடுத்து செத்துக் கெடந்துருக்காரு அந்த மனுசென்…வயசு 49 – தாண்டலை!
ஒரு வருசமா சரியா நடக்கக் கூட முடியல. ஆனா சாராயம் காலடியிலேயே கெடைக்கிறதால நிறுத்தாம குடிச்சுட்டு இருந்தாரு…
நா.. பொலம்பி அழுதா போன உசுறு திரும்பி வருமா? கலங்கி படுத்தா கடங்காறன் விடுவானா? நா என்ன செய்யப் போறேன்?
ஊரா இது, ஒரு கட்டுப்பாடு இல்லாமெ போச்சு. பக்கத்து ஊரு டாஸ்மார்குல சாராயத்த வாங்கி ஊருக்குள்ள வச்சுகிட்டு சில்றையா டம்ளர்ல ஊத்திக் கொடுத்து யாவாரம் பாக்குறாங்க. முழுசா பாட்டுல வாங்க காசில்லன்னு கலங்கி நிக்க தேவையில்ல. கையில இருக்குற காசுக்கு தக்கன.. வாங்கி குடிச்சிக்கிடலாம். வேல முடிச்சு பொழுதுக்கா கூலி வாங்குனதும் முழு பாட்டுலு வாங்க டாஸ்மார்க்கு போறாங்க.
விடியக்காத்தாலயே ஊருக்குள்ள டீக்கடப் போல சாராயத்த விக்கிறதால வயக்காட்டுக்கு போற அத்தன ஆம்பளையும் வந்து குடிச்சுட்டு போறானுங்க. இது சரியில்லன்னு கேக்க முடியுமா? ஈனச்சிறுக்கி, பறச்செரிக்கி நாங்க எப்புடி நடந்துக்கனுன்னு தெருவுக்குள்ள வந்து நீ சொல்லித்தரியான்னு ஏசுவானுக.
எங்க தெருக்காரங்க எல்லாம் சேந்து போயி ஊரு பெரிய மனுசங்கிட்ட சொல்லியும் ஒன்னும் நடக்கல. டாஸ்மார்கு இருக்க கூடாதுன்னு சொல்லி கடைக்கி முன்னாடி உக்காது போராட்டம் செஞ்சும் ஒன்னும் நடக்கல.
அப்பனப் பாத்து எம்மகனும் 14 வயசுலேயே குடிக்க ஆரம்பிச்சுட்டான். இப்ப 17 வயசு ஆவுது காளை போல இருக்கான் ஒரு குடும்பத்த தாங்கலாம். ஆனா எந்த வய வேலையும் தெரியாது. குடிக்க கையில காசு இல்லன்னா மட்டும் சித்தாளு வேலைக்கி போவான். அவன நம்பி வீட்டுல அஞ்சு பத்து வைக்க முடியாது. இந்த சாராயக்கடைங்கள எடுக்காம வச்சுருந்தா எம்புருசனப் போல பிள்ளையையும் எழந்துடுவேனோன்னு பயமாருக்கு”
சாராயத்தால ஊருக்கூரு இதே நெலமெதான். யார் வீட்டு எழவொ பாய் போட்டு தூங்குனு… யாரும் கண்டுக்க மாட்டேங்குறாக.
குறிப்பு: உண்மைச்சம்பவம், ஊர்,பெயர் அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
- சரசம்மா