திருச்சி லால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமத்தில் மக்கள் போராட்டதால் டாஸ்மாக் மதுபானக் கடையை தற்காலிகமாக மூடியுள்ளது அரசு. அந்த டாஸ்மாக்கில் பார் நடத்திய நபர்களும். மேலும் தற்போது கள்ளத்தனமாக சரக்கு (டாஸ்மாக்) விற்கும் நபர்களும் சேர்ந்து பொதுமக்கள் சிலரிடம் (10 பேரிடம்) கையெழுத்து வாங்கி மூடிய கடையை திறக்க வேண்டுமென போலீசிடம் மனுவாகக் கொடுத்துள்ளனர்.

இதைக் கண்ட ஊர் பொதுமக்கள் கடையை திறக்கும் நடவடிக்கைக்கு எதிராகவும், டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடக்கோரியும் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து 1000 பேரிடம் கையெழுத்து பெற்று கோரிக்கை மனுவாக  கொண்டு சென்றனர்.

மேலும் அப்பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்களில் குரங்குகள் மற்றும் காட்டுப் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளைந்த பருத்தி, சோளம் போன்ற பயிர்களை, ஆட்கள் இல்லாத  நேரத்தில் தின்று நாசம் செய்வதனால் பல விவசாயிகள் பெரு நட்டம் ஏற்பட்டு பாதிப்படைகின்றனர். குரங்குகளை பிடிக்கவும், காட்டுப்பன்றிகளை விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து 04.08.2020 காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மேற்கண்ட இரண்டு கோரிக்கை மனுக்களும் கொடுக்கப்பட்டன.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகளிடம் பேசி உறுதி செய்வதாகவும், மேலும் குரங்குகள் பன்றிகள் தடுக்க வனத்துறை அலுவலரிடம் பேசி கட்டுப்படுத்துவதாக கூறினார்.

பன்றி வளர்க்கும் இடத்தை தடை செய்வதாகவும் பேசினார். மேலும் குரங்குகள் வாழக்கூடிய பகுதியில் நாம் வாழ்ந்து வருகிறோம். குரங்குகளை கட்டுப்படுத்த சோலார் மின்வேலி அமைத்து கட்டுப்படுத்தலாம். அதற்கு ஒரு லட்சம் ருபாய்க்கு 75 ஆயிரம்  மானியமாக அரசு வழங்குகிறது. விவசாயிகள் இதற்கு முன் வாருங்கள் எனவும் பேசினார். அந்த வகையில் வனத் துறை அலுவலர்களை சந்தித்து பேசுமாறு கூறினார். வந்திருந்த விவசாயிகள் ஊர் முக்கியஸ்தர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வதாக கூறினார்கள்.

படிக்க:
தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் !
♦ ஒரே நாளில் டாஸ்மாக்கை மூடிய திருச்சி பெருவளப்பூர் மக்கள் !

தொடர்ந்து லால்குடி பகுதி தாசில்தாரை சந்தித்து டாஸ்மாக் மூட அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விவசாயிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். மக்கள் அதிகாரம் இச்செயலுக்கு ஆதரவாக இருக்கும் என்பதை நம்பிக்கையுடன் ஏற்று சென்றனர். இந்நிகழ்விற்கு ஊர் மக்கள் சார்பாக மக்கள் அதிகாரம் தோழர் மணி தலைமை தாங்கினார். இவர்களுடன் திருச்சி மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.