ந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த நாற்பதாண்டுகளில் பனியின் கால் பங்கு உருகிவிட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.  முடுக்கிவிடப்பட்டுள்ள இந்த இழப்பு, 1 பில்லியன் மக்களின் குடிநீர் தேவைக்காக இந்தப் பனிப்பாளங்களை நம்பியுள்ள நிலையில் இது பேரழிவாக அமையும்.

1970−களின் மத்தியில் இருந்து சமீப காலம் வரையிலான அமெரிக்க உளவு செயற்கைகோள் படங்களின் அடிப்படையில், 2 ஆயிரம் கி.மீ. பரப்பளவிலான மலைத்தொடரின் நாற்பது ஆண்டு கால பதிவை வைத்து அறிவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இந்த பகுப்பாய்வில் ஒவ்வொரு வருடமும் 8 பில்லியன் டன் அளவிலான பனி குறைந்து வருவது, அது மீண்டும் பனியாக உருவாவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கீழ் அடுக்கில் உள்ள பனிப்பாளங்களின் உயரம் ஆண்டுதோறும் 5 மீட்டர் குறைவதும் தெரியவந்துள்ளது. மனித செயல்பாடுகளால் உலக வெப்பம் அதிகரிப்பதே இந்தப் பனிப்பாளங்களின் உருகுதலுக்கு காரணம் எனவும் ஆய்வு காட்டுகிறது.

முன்னதாக, இமாலய பனிப்பாளங்கள் உருகுவதற்கு போதிய சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போதைய ஆய்வு காரணத்தைச் சொல்லியிருப்பதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜோஷுவா மவுரெர் கூறுகிறார். “1975-ம் ஆண்டு முதல் இமாலய பனிப்பாளங்கள் ஏன் வேகமாக உருகுகின்றன என்பதற்கு சரியான காரணம் கிடைத்துள்ளது”.

இந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றிய கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா. ஜார்க் சுஹாபெர், “உருகும் பனிப்பாளங்களின் அளவு இரண்டு மடங்காக இருப்பதுதான் கவலைக்குரியதாக உள்ளது” என்கிறார்.

கிழக்கு நேபாளம் மற்றும் இந்தியாவின் சிக்கிம் இடையேயான இமயமலை நிலப்பரப்பின் செயற்கைக்கோள் படம். 1975 டிசம்பர் 20 அன்று எடுக்கப்பட்டது.

“சந்தேகமின்றி இது பேரழிவாகத்தான் தெரிகிறது. காலநிலை நெருக்கடியின் தாக்கத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கை, உடனடியாக மாசு உமிழ்வை குறைக்க நடவடிக்கை எடுத்தால், இந்துகுஷ் – இமாலய தொடர்களில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பனி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உருகிவிடும் எனவும் இல்லையெனில் மூன்றில் இரண்டு பங்கு உருகிவிடும் எனவும் கூறுகிறது.

எப்படியாயினும், இமாலயத்தின் உச்சியிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகளை நம்பியுள்ள இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட மற்ற நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். “இதுதான் நீங்கள் கேள்விப்பட்டிராத காலநிலை நெருக்கடி” என்கிறார் இந்த ஆய்வில் பங்கேற்ற பிலிப்பஸ் வெஸ்டர். மேலும், “எதிர்பாராத மற்றும் தொடர்ச்சியில்லாத தண்ணீர் விநியோகம் இமாலய மலைப்பகுதியின் அடிவாரத்தில் வாழும் 1 பில்லியன் தெற்காசியர்களை பாதிக்கும்” என்கிறார், அவர்.

உளவு செயற்கைகோள் படங்கள், பல காலங்களாக பயன்படுத்தப்படாமல் கிடப்பில் இருந்தன. இந்த ஆய்வுக் குழுவினர் உருவாக்கிய கணினி கருவியைக்கொண்டு 1970-களின் படங்கள் முப்பரிமாண வரைபடங்களாக மாற்றியுள்ளனர்.

650 இமாலய பனிப்பாளங்களில் நடந்த மாற்றங்களை வைத்து ஆய்வு செய்ததில் 1975 முதல் 2000 வரை பனிப்பாளத்தின் மேற்பரப்பு சராசரியாக 22 செ. மீ(8.6 இன்ச்) சுருங்கியிருக்கிறது. 2000 முதல் 2016 வரை 43 செ. மீ. வரை சராசரியாக சரிந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கிடைத்திருக்கும் ஆதாரங்கள், மனிதர்கள் உண்டாக்கிய காலநிலை மாற்றமே பனிப்பாளங்களின் உருகுதலுக்குக் காரணம் என்பதைச் சொல்கின்றன. அதுபோல, இந்த பிராந்தியத்தின் வெப்பநிலையும் 2000-16ஐ 1975-2000 ஆண்டுகளை ஒப்பிட 1 செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருப்பதும் வெப்பநிலை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பனியின் இழப்போடு வெப்பநிலை உயர்வு கணக்கீடு ஒத்துப்போகிறது.

“புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு, உலக காற்றின் வெப்பநிலையை உயர்த்துவதால், உலகின் உயர்ந்த மலைத்தொடரின் பனிப்பாளங்களைக்கூட உருக்கிவிடுகின்றன” என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபடாத, வடக்கு பிரிட்டீஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோசப் ஷியா.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?

“இங்கு வசிக்கும் மக்களின் நல்வாழ்க்கைக்கு எங்களுடைய ஆய்வு முடிவுகள் நிச்சயம் மோசமானவைதான். ஆனால், இப்போது அதை நாம் எதிர்க்கொள்ள தயாராக வேண்டும். நாம் நிறைய கவலைகொள்ள வேண்டும். ஏனெனில் இதனால் பெரும் மக்கள் திரள் பாதிக்கப்படப்போகிறார்கள்.

வெப்பநிலை உயர்வை தடுக்க, புவியைக் குளுமையாக்க வேண்டும். பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது மட்டுமல்லாது, அவற்றை பின்னோக்கி வரச்செய்ய வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதுதான் சவாலாக இருக்கப் போகிறது” என்கிறார் பேரா. ஜார்க் சுஹாபெர்.

இமாலயத்தின் உருவாகி வரும் ‘புனித’ கங்கையில் பிணங்கள் மிதக்கச் செய்யும் நாட்டில், இமாலய பனிப்பாளங்கள் உருகுவதைத் தடுக்க நிச்சயம் எந்த தொலைநோக்குத் திட்டத்தையும் எதிர்பார்க்க முடியாது. அநேகமாக சங்கிகளின் ”அகண்ட பாரதக் கனவிலும்”, இந்தியா ஜனநாயகத்திலும் நீர்நிலைகளிலும் வறண்டு போன நாடாகத்தான் இருக்குமோ என்னவோ ?


கலைமதி
நன்றி
:
கார்டியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க