அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 24

குற்றமும் தண்டனையும்
அ.அனிக்கின்

ருடங்கள் உருண்டோடின. புவாகில்பேர் புதிதாகப் புத்தகங்கள் வெளியிடக் கூடாதென்று அமைச்சர் உத்தரவு போட்டிருந்தார்; தன் கருத்துக்களைச் செயல்படுத்துகிற காலம் வரும் என்ற நம்பிக்கையில் அவர் பொறுத்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் 1705-ம் வருடத்தில் அவருடைய “பொருளாதாரப் பரிசோதனையைச்” செய்வதற்கென்று ஆர்லியான் மாநிலத்தில் ஒரு பகுதி அவரிடம் ஒதுக்கித் தரப்பட்டது. இந்தப் பரிசோதனையை அவர் எத்தகைய சூழ்நிலையில் எப்படிச் செய்தார் என்பது சரியாகத் தெரியவில்லை. எப்படி இருந்த போதிலும், அந்தப் பரிசோதனை அடுத்த வருடத்திலேயே தோல்வியில் முடிவடைந்தது. இத்தகைய ஒரு பரிசோதனையை ஒதுங்கியுள்ள ஒரு சிறு வட்டாரத்தில் – செல்வாக்குள்ள சக்திகளின் எதிர்ப்புக்கு இடையில் – செய்தால், அதற்கு வெற்றி கிடைக்குமா?

இனி அவரை எதுவும் தடுக்க முடியவில்லை. 1707-ம் வருடத்தின் தொடக்கத்தில் அவர் தன்னுடைய கட்டுரைகளின் இரண்டு தொகுப்புகளை வெளியிட்டார். அவற்றில் தத்துவ ரீதியான ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தவிர அரசாங்கத்தின் மீது தீவிரமான குற்றச்சாட்டுகளும் அரசியல் தாக்குதல்களும் அபாய அறிவிப்புகளும் அடங்கிய கட்டுரைகளும் இருந்தன. இதற்குப் பதில் கிடைப்பதற்கு அதிகமான காலதாமதம் ஆகவில்லை. புத்தகங்கள் தடை செய்யப்பட்டன; அதன் ஆசிரியர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

புவாகில்பேருக்கு இப்பொழுது வயது அறுபத்தொன்று. அவருடைய குடும்பம் பெரியது – ஐந்து குழந்தைகள். அவருடைய சொந்த விவகாரங்களில் அதிகமான சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. அவருடைய உறவினர்கள் அவரை அமைதிப் படுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். அவருடைய தம்பி ருவான் நகரத்தில் நீதிமன்றத்துக்கு ஆலோசகராகவும் எல்லோராலும் மதிக்கப்பட்டவராகவும் இருந்தார். அவர் தன்னுடைய அண்ணனுக்காகப் பரிந்து பேசினார்.

அவருக்காகப் பரிந்து பேசுவதற்குப் பலர் இருந்தார்கள். ஷமில்லாரும் அரசாங்கம் விதித்த தண்டனையின் பொருந்தாத் தன்மையை உணர்ந்தார். ஆனால் திட்டங்களைத் தயாரிக்கும் அந்தப் பைத்தியக்காரன் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். கற்சுவரின் மீது தலையை மோதிக் கொள்வதால் பலனில்லை என்பதை புவாகில்பேரும் உணர்ந்தார். எனவே அவரும் பற்களைக் கடித்தபடியே ஒத்துக் கொண்டார்.

அதன் பிறகுதான் அவர் ருவானுக்குத் திரும்புவதற்கு அனுமதி கிடைத்தது. அவர் ஊருக்குத் திரும்பிய பொழுது நகர் மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றுச் சிறப்பளித்தார்கள் என்று அவருடைய சமகாலத்துக் கட்டுரையாளரான சான்-சிமோன் கோமகன்(1) எழுதியிருக்கிறார். (இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் பல விவரங்களுக்காக நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்).

படிக்க:
இத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி !
♦ உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

இதற்குப் பிறகு புவாகில்பேர் மீது நேரடியான அடக்குமுறை ஒருபோதும் பிரயோகிக்கப்படவில்லை. அவர் தம்முடைய புத்தகங்களுக்கு இன்னும் மூன்று பதிப்புகளை வெளியிட்டார்; அவற்றில் தகராறுக்குரிய பகுதிகளை நீக்கியே வெளியிட்டார் என்பதும் உண்மையே. ஆனால் அவர் மனமுடைந்து போய்விட்டார்.

1708-ம் வருடத்தில் ஷமில்லார் வகித்த முக்கியமான பதவிக்குக் கொல்பேரின் மகனான டெமரே நியமிக்கப்பட்டார். இவர் கெட்டிக்காரர், திறமைசாலி. இவர் அவமானப்படுத்தப்பட்ட புவாகில்பேரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டவர். அவரை நிதித்துறை நிர்வாகத்துக்குள் கொண்டு வருவதற்குக் கூட சில முயற்சிகளைச் செய்தார்.

ஆனால் காலம் கடந்துவிட்டது. புவாகில்பேர் மிகவும் மாறிப்போயிருந்தார்; நாட்டின் நிதி நிலைமை வேகமாகச் சீர்கேடடைந்து கொண்டிருந்தது; ஜான் லோவின் பரிசோதனைக்குத் தளம் தயாராகிக் கொண்டிருந்தது. புவாகில்பேர் ருவானில் 1714-ம் வருடம் அக்டோபர் மாதத்தில் மரணமடைந்தார்.

அவருடைய புத்தகங்கள், கடிதங்கள், அவருடைய சமகாலத்தவர்கள் அவரைப் பற்றி எழுதிய குறைவான செய்திகள் ஆகியவற்றிலிருந்து அவர் பலமான ஆளுமை உடையவர் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அவரிடம் எல்லா அம்சங்களும் இணைந்து பொருந்தியிருந்தன. சொந்த வாழ்க்கையிலும் மற்ற விவகாரங்களிலும் அவரோடு பழகுவது சுமூகமானதாக இருந்திருக்க முடியாது. ஏனென்றால் பிடிவாதமும் முரட்டுத்தனமும் மன உறுதியும் அவருடைய சிறப்பான குணங்கள்.

”அவருடைய உற்சாகமான இயல்பைப் பொறுத்தவரை, அந்த வகையில் அது ஒப்புவமையில்லாதது” என்று சான்-சிமோன் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். எனினும் புவாகில்பேரிடம் அவர் ஆச்சரியம் கலந்த மரியாதை கொண்டிருந்தார் என்பது தெளிவாகும்.

அவருடைய வளைந்து கொடுக்காத சுபாவத்துக்கு அவர் கோட்பாடுகளில் வைத்திருந்த உறுதியே காரணமாகும். முக்கியமானவை, முக்கியம் இல்லாதவை ஆகிய இரண்டிலுமே அவர் தன்னுடைய கோட்பாடுகளை உணர்ச்சி வேகத்தோடு வலியுறுத்தினார். இந்தக் கோட்பாடுகள் அன்று புதுமையானவையாக இருந்தபடியால் தவிர்க்க முடியாத மோதல்கள் ஏற்பட்டன.

ருவான் நகரத்தைச் சேர்ந்த இந்த அடக்கமான நீதிபதி இருபது வருட காலம் விடாப்பிடியாகப் போராடினார்; மன அமைதியையும் வசதிகளையும் பொருளாயத நலன்களையும் இழந்தார். (அவருடைய பிடிவாதத்தை அடக்குவதற்காக ஷமில்லார் விசித்திரமான அபராதங்களை விதித்தார். அவர் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய பதவிக்கே மறுபடியும் பணம் கட்ட வேண்டுமென்று உத்தரவு போட்டார்.) அமைச்சர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. அதே சமயத்தில் அவரிடம் அவர்களுக்கு லேசான (உண்மையைச் சொல்வதென்றால் சற்று அதிகமான) பயம் இருந்தது.

புவாகில்பேர் தன்னுடைய கருத்துக்களிலும் கோட்பாடுகளிலும் யாருக்கும் அஞ்சாத நேர்மையோடு உறுதியாக நின்றதில்தான் அவருடைய சிறப்பு அடங்கியிருக்கிறது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) இவர் மாபெரும் கற்பனாவாத சோஷலிஸ்டான சான்சிமோன் பிரபுவின் முன்னோர்.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க