பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !

தபோல்கர், பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளில் சனாதன் சன்ஸ்தாவுக்கு தொடர்பு இருப்பது ஆரம்ப கட்டம் முதலே தெரியவந்த உண்மையாகும்.

3

டந்த ஆண்டு அக்டோபரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான சரத் கலாஸ்கர், பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே கொலைகளிலும் தனக்கு தொடர்பிருப்பதாக வாக்குமூலம் அளித்தார். தபோல்கரை சுட்டுக்கொன்ற இருவரில் தானும் ஒருவர் என்றும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

தபோல்கரை சுட்டு கொலை செய்த சரத் கலாஸ்கர்.

சரத் கலாஸ்கர் அளித்த 14 பக்க வாக்குமூலத்தை என்.டீ.டி.வி.வெளியிட்டிருக்கிறது. ஆகஸ்டு 2013 -ஆம் ஆண்டு தபோல்கர் கொலையின் பின்னணி சம்பவங்களை அதில் விவரித்துள்ளார் அவர்.

67 வயதான தபோல்கரை கண் மற்றும் தலைப் பகுதி ஆகிய இடங்களில் இரண்டு முறை சுட்டதாக கூறியுள்ளார். ‘ஒரு வலதுசாரி குழு’ தன்னிடம் வந்து, அவர்களுடைய சித்தாந்தம் குறித்தும் துப்பாக்கிகளை கையாளும் விதம் மற்றும் குண்டுகள் தயாரிப்பது குறித்து பயிற்சியளித்ததாக தெரிவித்திருக்கிறார். இந்த வழக்குகளில் தொடர்புடைய வலதுசாரி குழு, சனாதன் சன்ஸ்தா என்ற பயங்கரவாத அமைப்பாகும்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சனாதன் சன்ஸ்தாவின் வீரேந்திர சிங் தப்டே, ‘நாம் சில கெட்ட நபர்களை முடிக்க வேண்டியுள்ளது’ என தன்னை மூளை சலவை செய்ததாக கலாஸ்கர் கூறியுள்ளார். தப்டே-வையும் சிபிஐ கைது செய்துள்ளது.

படிக்க:
தியேட்டரில் குண்டுவைத்தது எப்படி ? சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் !
இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !

2017 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையிலும் கலாஸ்கர் முக்கிய பங்காற்றியிருக்கிறார். அவருடைய வாக்குமூலத்தின்படி, இந்தக் கொலை நிகழ்த்தப்படும் முன் பல முறை சந்திப்புகளில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். “ஆகஸ்ட் 2016-ஆம் ஆண்டும் பெல்காமில் இந்துத்துவத்துக்கு எதிராக செயல்படும் நபர்களின் பெயர்கள் கேட்கப்பட்டன. அப்போது கவுரி லங்கேசின் பெயர் சொல்லப்பட்டு, அவரை கொல்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது” எனவும் வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார்.

அதேபோன்ற ஒரு சந்திப்பில் ஆகஸ்டு 2017 -ஆம் ஆண்டு கலந்துகொண்டு, படுகொலைக்கான இறுதித் திட்டம் தீட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார். கலாஸ்கரும் இன்னொருவரும் சரியாக குறிபார்த்து சுட ஒரு நாள் முழுவதும் பயிற்சி எடுத்துக்கொண்டதையும் தெரிவித்திருக்கிறார்.

இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட த்போல்கர் மற்றும் கவுரி லங்கேஷ்.

தபோல்கர் படுகொலை வழக்கில் இதுவரை ஆறு நபர்கள் கைதாகியுள்ளனர். தபோல்கர், பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளில் இந்துத்துவ பயங்கரவாத இயக்கமான சனாதன் சன்ஸ்தாவுக்கு தொடர்பு இருப்பது ஆரம்ப கட்டம் முதலே தெரியவந்த உண்மையாகும்.

கவுரி லங்கேஷ் கொலைவழக்கின் குற்றப்பத்திரிகையில் இந்த படுகொலை சனாதன் சன்ஸ்தா -வின் ‘திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை’ என சொல்லப்பட்டுள்ளது. சனாதன் சன்ஸ்தா -வின் துணை அமைப்பான ஜனாஜக்ருதி சமிதி என்ற அமைப்பின் புனே பிரதிநியாக இருந்த அமோல் காலே, முக்கியமான குற்றவாளியாக சொல்லப்பட்டுள்ளார்.

தபோகரின் கொலைக்குப் பின் அமோல் காலே, தாவ்டே-விடம் தன்னை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஆயுத பயிற்சி, குண்டு தயாரிக்க பயிற்சி, சுட்டுக்கொல்ல பயிற்சி கொடுக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு, இன்னமும் சுதந்திரமாக இயங்க முடிகிறது. இந்தியாவில் கொலைகளைச் செய்ய ‘இந்துத்துவம்’ என்பது லைசென்ஸ் என்றாகிவிட்டது.


கலைமதி
செய்தி
ஆதாரம்:
த வயர்.