அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 07

நான் கரும்பலகையை நோக்கிச் செல்கிறேன்.

“இப்போது இன்னமும் சிக்கலான ஒரு கேள்வி. இங்கே நான் சில சதுரங்களை வரைந்திருக்கிறேன், ஆனால் இவற்றை எண்ண முடியவில்லை. நீங்கள் கவனமாகப் பார்த்து எண்ணி என் காதில் மெதுவாகச் சொல்லுங்கள்.

கரும்பலகையின் இன்னொரு பகுதியைத் திறக்கிறேன், அங்கு பின்வருமாறு வரையப்பட்டுள்ளது:

“பதில் சொல்ல அவசரப்படாதீர்கள்!” என்று குழந்தைகளை எச்சரித்துவிட்டு, நானும் கணக்கில் ஈடுபடுகிறேன். வகுப்பறையின் நடுவே நின்று கொண்டு விரலால் சுட்டிக் காட்டியபடி “ஒன்று, இரண்டு, மூன்று…” என்று எனக்குள்ளேயே எண்ணுகிறேன்.

ஒரு சிலர் பதில் சொல்வதற்காக என்னை ஏற்கெனவே அழைக்கின்றனர். “நான்கு”, “எட்டு”, “பன்னிரண்டு”, “நூறு”, “மூன்று” என்று ஏராளமான தப்பான பதில்கள் வருகின்றன. தம் பதிலைச் சரிபார்க்குமாறு ஒவ்வொருவர் காதிலும் சொல்கிறேன். சிலருக்கு ஒன்பதாவது சதுரத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறேன், இது. படத்தின் மையத்தில் உள்ளது, சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதைத்தான் பலர் கவனிக்கவில்லை.

ஒரு நிமிடம் கூடக் கழியும் முன், ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இந்தக் ”கண்டுபிடிப்பாளர்களால்” பதிலைக் கூச்சலிட்டுக் கூறாமல் இருக்க முடியவில்லை .

“எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்!” என்று கூறிய படியே சைகை காட்டுகிறேன்.

“எட்டு !… ஒன்பது!”

8 மற்றும் 9 என்று நான் கரும்பலகையில் எழுதுகிறேன்.

“இங்கு எட்டு சதுரங்கள் உள்ளன என்று கூறுபவர்கள் கைகளை உயர்த்துங்கள்!” கிட்டத்தட்ட பாதிப் பேர் கைகளை உயர்த்தினர். இப்போது, ஒன்பது சதுரங்கள் உள்ளன என்று கருதுபவர்கள் கைகளை உயர்த்துங்கள்!” எஞ்சியவர்கள் கைகளை உயர்த்தினர்.

இரு தரப்பின் சார்பாயும் மாக்தாவையும். மாயாவையும் கரும்பலகைக்கு அழைக்கிறேன்.

“நிரூபியுங்கள்!”

“இங்கே ஒன்பது சதுரங்கள் உள்ளன” என்கிறாள் மாயா.

“இல்லை, எட்டு!” என்று மற்றவர்கள் கத்துகின்றனர்.

“இதோ பாருங்கள்!” என்று மாயா ஒவ்வொரு சதுரமாக அடையாளக் குச்சியால் சுட்டிக் காட்டத் துவங்குகிறாள். “ஒன்று, இரண்டு, மூன்று… ஒன்பது!” இறுதியாக, மையத்தில் உள்ள சிறு சிவப்பு சதுரத்தைச் சுட்டிக் காட்டு கிறாள்.

“ஓ!” என்று ஒரு பாதியினர் பெருமூச்சு விடுகின்றனர்.

“நாங்கள் சொன்னதுதான் சரி!” என்று மற்றப் பகுதியினர் மகிழ்கின்றனர்.

“இப்போது குனிந்து கண்களை மூடுங்கள்” என்கிறேன் நான்.

உடனே வகுப்பறையில் சத்தம் நின்றது. கணக்குப் போட்டபோது தோன்றிய உணர்ச்சிகளிலிருந்து குழந்தைகளின் கவனம் திரும்புகிறது. இப்போது வேறு கேள்வியைக் கேட்கலாம். வரிசைகளின் இடையே நடந்தபடியே மெதுவாகச் சொல்கிறேன்:

“இன்னமும் சிக்கலான கணக்கைத் தரட்டுமா?”

“தாருங்கள்!”

“நான் கரும்பலகையில் A, B என்று இரண்டு தொகுதி சதுரங்களை வரைந்தேன். எந்தத் தொகுதியில் சதுரங்கள் அதிகம் என்று சொல்லுங்கள். (நீங்கள் எப்படி சிந்திப்பீர்களென நான் உங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அனேகமாக சிலரின் முகங்கள் கருத்தாழம் மிக்கவையாக, ஒருமுனைப்படுத்தப்பட்டவையாக இருக்கும். சரிபார்க்காத எதையும் வாய் சொல்லும்படி விட்டுவிடாதீர்கள். நான் கரும்பலகையில் உள்ள திரையை விலக்குகிறேன்.) நிமிருங்கள். பாருங்கள், சிந்தியுங்கள்.”

கரும்பலகையில் பின்வருமாறு வரையப்பட்டிருக்கிறது:

குழந்தைகள் என்ன பதில் சொல்வார்கள்? அனேகமாகப் பெரும்பாலோர் A தொகுதியில் B தொகுதியில் உள்ளதை விட அதிக சதுரங்கள் உள்ளன என்று கூறுவார்கள், கண்டிப்பாக இவர்கள் எண்ணிக்கையையும் பரப்பளவையும் குழப்புவார்கள். “எவ்வளவு?” என்பதை “பரப்பளவில் பெரிய” என்று ஏற்றுக் கொள்வார்கள்.

சமீபத்தில் இதே மாதிரி கேள்விகளைக் கேட்டபோது அனைவரும் சரியாகப் பதில் சொல்லவில்லை. கரும்பலகையில் வரையப்பட்டிருந்த மூன்று சிறிய, இரண்டு பெரிய பேரிக்காய்களைக் காட்டிக் கேட்டேன்:

“எங்கே பேரிக்காய்கள் அதிகமுள்ளன? வலப்புறமா, இடப்புறமா?”

”வலது புறம்!” என்று கூறினார்கள்.

“வாருங்கள், எண்ணிப் பார்ப்போம்!” என்றேன் நான்.

எண்ணினோம்: இடது புறம்-மூன்று, வலது புறம் இரண்டு. பேரிக்காய்களின் படத்தின் கீழ் நான் எண்களை எழுதினேன்:

“எது அதிகம், மூன்றா, இரண்டா ?”

“மூன்று அதிகம்!” என்றனர் குழந்தைகள்.

“அப்படியெனில் எங்கே பேரிக்காய்கள் அதிகம் உள்ளன – இடதுபுறமா, வலதுபுறமா?

“வலது புறம்.”

“ஏன்?”

குழந்தைகள் எனக்கு விளக்கினார்கள்: வலது புறம் உள்ளவை அளவில் பெரியவை, இடதுபுறம் சிறியவை.

அப்போது சாஷா மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை.

“தப்பு!” என்றான் அவன். “இடது புறம் மூன்றும் வலது புறம் இரண்டும் உள்ளன. எனவே, இடது புறம்தான் அதிகம்.”

நான் வகுப்பறையின் குறுக்காக நடந்து சென்று சிறுவனை நோக்கிக் கையை நீட்டினேன். அவன் கையைப் பிடித்துக் குலுக்கினேன். சாஷா புரியாதபடியே கையை நீட்டினான். வகுப்பில் உள்ளவர்கள், என்ன நடந்தது என்று ஆர்வத்தோடு பார்த்தார்கள்.

“நீ யோசித்து பதில் சொன்னதற்கு நன்றி, சாஷா. நீ என்னை மிகவும் சந்தோஷப்படுத்தினாய்.”

சாஷாவோடு சேர்ந்து நாங்கள் கரும்பலகையை அணுகினோம்.

“பாருங்கள், சாஷா எப்படி யோசிக்கிறான்!… சாஷா, இங்கே எந்த இடத்தில் அதிக வட்டங்கள் உள்ளன என்று சொல் பார்க்கலாம்” என்று கூறியபடியே இரண்டு ஓரங்களிலும் உள்ள கரும்பலகைகளைத் திறந்து காட்டி, நடுவில் உள்ளதை மூடினேன்.

படிக்க:
மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்
நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம் !

இடதுபுறமுள்ள பலகையில் ஆறு வட்டங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக வரையப்பட்டிருந்தன. வலதுபுறமுள்ள பலகையில் வட்டங்கள் எல்லா இடங்களிலும் வரையப்பட்டிருந்தன . சிறுவன் இரு பலகைகளிலும் உள்ள படங்களை கவனமாகப் பார்க்கத் துவங்கினான்.

”சாஷா, எங்கே எனக்கு உதவி செய். இப்போது இங்குள்ளவர்களுக்கு என்னை விட அதிகமாக உன்னால் உதவ முடியும். இப்போது இவர்களுக்கு நீதான் தலைசிறந்த ஆசிரியர்” என்று எனக்குள் நான் எண்ணிக் கொண்டேன்.

நான் வகுப்பறையின் நடுவில் நின்றபடி முழு நிசப்தத்தில் மெதுவாகப் பேசினேன்:

“பாருங்கள், அவன் எப்படி கவனமாக நோக்குகிறான்….. அவன் ஒன்றுமே பேசவில்லை, கவனித்தீர்களா!..  தவறு செய்யாமலிருப்பதற்காகத் தன் நாக்கை அடக்கிக் கொண்டு நிற்கிறான்.”

சாஷா இடது பலகையை அணுகி வட்டங்களை விரல் விட்டு எண்ணுகிறான். நான் குழந்தைகளிடம் மெதுவாகச் சொல்கிறேன்.

“பார்த்தீர்களா, அவன் தன்னைத்தானே சரிபார்த்துக் கொள்கிறான்.”

“சாஷா, இப்போது தயவு செய்து தப்பு செய்து விடாதே! மனிதனுக்குச் சிந்திப்பது எவ்வளவு முக்கியம், அவசியம், சிந்திக்கும் மனிதனைப் பார்க்க எவ்வளவு அழகாக உள்ளது என்று எல்லாக் குழந்தைகளுக்கும் காட்ட வேண்டியது மிக மிக அவசியம்” என்று என் மனதிற்குள்ளாகவே சாஷாவை நோக்கி கூறிக் கொண்டேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

2 மறுமொழிகள்

  1. இந்த புத்தகம் (தமிழ் பிரதி) எங்கு கிடைக்கும்? ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க