செய்தி: தபால் துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன. தமிழில் கேள்விகள் இல்லாததால் பலர் விடை எழுத முடியாமல் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு முடிவுகள் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அதன் உத்திரவுக்கு பின்னரே வெளியாகும்.

நீதி: தேசியக் கல்விக் கொள்கையின் இந்தித் திணிப்பு, தபால் வழியாக அமலாகிவிட்டது!

♠ ♠ ♠ 

செய்தி: ஆய்வுப் பணிகளை முடித்தபின் தங்கம் மற்றும் தாமிர சுரங்கத்தை, வெளிநாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட பாகிஸ்தான் மறுத்ததால் அந்நாட்டுக்கு சர்வதேச தீர்ப்பாயம் 40 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நீதி: ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் மோடி அரசு அம்பானியை நுழைத்தது போல இம்ரான்கான் செய்யவில்லை போலும்! இறையாண்மை என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கும் இல்லை!

♠ ♠ ♠ 

செய்தி: நேற்று பிரான்ஸ் நாட்டின் 230-வது தேசிய தினம் தலைநகர் பாரீசில் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், பாரீசில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை பிரான்ஸ் நடத்தியுள்ளது.

நீதி: காற்று ஓய்ந்தாலும் ஏகாதிபத்தியங்களுக்கிடையான முரண்பாடு ஓயாது. அமெரிக்கா எகிறினாலும் ஐரோப்பிய ஒன்றியம் அடங்காது! இந்த முரண்பாட்டை தொழிலாளி வர்க்கம் பயன்படுத்துமா?

♠ ♠ ♠ 

செய்தி: அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு முன்னர் பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்” என, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எச்சரித்ததை முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா தனது சுயசரிதையில் நினைவு கூர்ந்துள்ளார்.

நீதி: பொருளாதாரத் தடை வந்ததால் அதன் சுமைகளை மக்கள் சுமந்தார்கள். அணுகுண்டு வெடித்ததால் தேசிய வெறியின் ஆதாயத்தை பாஜக அடைந்தது.

♠ ♠ ♠ 

செய்தி: கார்நாடகாவில் காங்கிரசு மூத்த தலைவர்கள் பேசிய பிறகு மனம் மாறி, கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறிய எம்.எல்.ஏ நாகராஜ், மனநிம்மதிக்காக யாத்திரை செல்வதாக டிமிக்கி கொடுத்து விட்டு மும்பைக்கு தனி விமானத்தில் தப்பினார்.

நீதி: பாஜக-வின் குதிரைப் பேரத்தில் ஜனநாயகத்திற்குத்தான் மனநிம்மதி இல்லை. இருந்த போதிலும் அதற்காக அதை காப்பாற்றத்தான் யாருமில்லை.

♠ ♠ ♠ 

செய்தி: காஞ்சிபுரம் அத்திவரதரை பொதுமக்கள் தரிசிக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டுமென தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதி: தேமுதிக கப்பல் மூழ்கினாலும், மூழ்கிக் கிடந்த அத்திவரதரை பார்ப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் நேரத்தை அதிகம் கேட்கிறார் கருணை உள்ளம் கொண்ட கேப்டன்.

♠ ♠ ♠ 

செய்தி: “ரஜினி அரசியலுக்கு வருவது வீண் முயற்சி என்பதே அவரது ரசிகனாக என்னுடைய ஆலோசனை” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

நீதி: கரடியே காறித் துப்பிருச்சு!

♠ ♠ ♠ 

செய்தி: இராமநாதபுரம் அருகே வாகனச் சோதனையின் போது லத்தியால் போலிசார் தாக்கியதில் ஒரு பெண்ணின் மண்டை உடைந்தது!

நீதி: திருத்த முடியுமா.. போலீசை திருத்த முடியுமா? நிமித்த முடியுமா… நாய் வாலை நிமித்த முடியுமா?

♠ ♠ ♠ 

செய்தி: எட்டுவழிச்சாலையை ஆதரித்துப் பேசி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து சேத்துப்பட்டு அருகே ஆத்துரை கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதி: தமிழக அரசை உலுக்கும் வகையில் எட்டு திசையிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் வளரட்டும்!

♠ ♠ ♠ 

செய்தி: பெரம்பலூரில் பிடிபட்ட கஞ்சா கடத்தல் கும்பலை விசாரிக்கச் சென்ற போது, குற்றவாளியின் அண்ணனுடன், பெண் எஸ்.ஐ-க்கு தொடர்பு இருந்ததோடு, திருச்சி காவலர் குடியிருப்பில் குடும்பம் நடத்தியது அம்பலமானது.

நீதி: கஞ்சா கடத்தல், காவலர் குடியிருப்பு, எஸ்.ஐ-யுடன் குடும்ப வாழ்க்கை……..இதுதாண்டா போலீசு

♠ ♠ ♠ 

செய்தி: நாட்டு மக்கள் எப்படி தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர் என்ற கணக்கெடுப்பை மத்திய அரசு கடந்த ஜனவரி முதல் எடுத்து வருகிறது.

நீதி: மோடியின் ஆட்சியில் உழைத்துக் களைத்து மிச்சமிருக்கும் நேரத்தில் நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் திட்டம் தயாராகிறதோ?

♠ ♠ ♠ 

செய்தி: பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டை கண்டறியும் வகையில் புதிய மொபைல் ஆப்பை உருவாக்குவதில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது.

நீதி: பார்வையற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்காமல் ரூபாய் நோட்டை கண்டறிவதற்கு ஆப் உருவாக்கி என்ன பயன்?

♠ ♠ ♠ 

செய்தி: கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்துக்கு யாருமே பெண் தர முன் வருவதில்லை. இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி தவிப்பதுடன் பிரம்மச்சாரிகளாகவும் இருந்து வருகிறார்கள்.

நீதி: மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக, மோடியே பிரம்மச்சாரியாக இருக்கும் போது இக்கிராம ஆண்கள் இருப்பதில் என்ன பிரச்சினை என்று யோசித்திருக்கும்!

♠ ♠ ♠ 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க