அனுப்புனர்:

சி.ராஜு,வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

பெறுநர்:

தமிழக காவல்துறை இயக்குநர் அவர்கள் (சட்டம் ஒழுங்கு)
ராஜாஜி சாலை, தமிழ்நாடு. 

பொருள் :  தமிழகத்தில் எமது அமைப்புக்கு ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டங்கள் நடத்த தடை – அனுமதி மறுப்பது,  பிரச்சாரம் செய்தால், போராட்டம் நடத்தினால் பொய் வழக்கு போடுவது குறித்த முறையீடு.

மதிப்பிற்குரியீர் வணக்கம்,

எமது முறையீடு குறித்து தங்களின் பரிசீலனைக்கும் மேல் நடவடிக்கைக்கும் கீழகண்டவற்றை முன் வைக்கிறோம்.

நமது அரசியல் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளிலும், இந்தியா கையொப்பமிட்டுள்ள உலகளாவிய மனித உரிமைகளிலும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் முதன்மையானவை. அரசின் திட்டங்களை, கொள்கைகளை செயல்பாடுகளை விமர்சிக்கும் உரிமை, மக்கள் தங்கள் தேவைகளைக் கோரியும், பாதிக்கும் திட்டங்கள் கொள்கைகளை எதிர்த்தும் போராடும் உரிமை ஆகியவை ஒரு ஜனநாயக அரசின் மிக அடிப்படையான கூறுகள் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளதோடு விமர்சிப்பதையும் எதிர்க்கருத்துச் சொல்வதையும் அரசு ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக கூறியிருப்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்.

ஆயினும் ஜனநாயக நெறி முறைகளுக்கும், அரசியல் சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் நேர் எதிரான முறையில் மாவட்ட, கோட்ட, வட்டார காவல்துறை அதிகாரிகள் செயல்படுவதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

படிக்க :
♦ அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி
நந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை பாதிக்கும் பிரச்சினைகளான எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு உள்ளிட்ட கார்ப்பரேட் நலத்திட்டங்களை எதிர்த்தும், பாலியல் வன்கொடுமை, ஆணவப்படுகொலை, ஊழல் முறைகேடு போன்ற மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகளிலும், பொதுக்கூட்டம், கருத்தரங்கம், தெருமுனைப் பிரச்சாரம், மாநாடு போன்றவற்றிற்கு சட்டப்புறம்பான நியாயமற்ற காரணங்களை கூறி போலீசார் எதேச்சதிகாரமாக எமது அமைப்புக்கு அனுமதி மறுக்கின்றனர்.

மேலும் அமைதியான ஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டம், தொடர்முழக்கப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், ஊர்வலம் ஆகிய எதற்கும் போலீசார் இறுதி நேரத்தில் அனுமதி மறுக்கின்றனர். மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களை விமர்சித்து துண்டு பிரசுரம்விநியோகித்தல், சுவரொட்டி ஒட்டினால்கூட  பொய்யான காரணங்களை புனைந்து பொய் வழக்கு போட்டு சிறையிலடைக்கின்றனர். காவல் சட்டம் பிரிவு 30 (2) பேச்சுரிமைக்கு தடை போட வில்லை. ஆனால் போலீசார் இஷ்டம் போல் இந்த சட்டப்பிரிவை காரணம் காட்டி அனுமதி மறுத்துள்ளனர். இவ்வாறான சட்டப்புறம்பான, கருத்து உரிமையை மறுக்கின்ற காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைகளுக்கு சான்றாக சில நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சட்டப்புறம்பான, நியாயமற்ற காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டவை:

  1. 17.3.2019, 8.4.2019 ஆகிய நாட்களில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மற்றும் பெரியார் சிலை உடைப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அவ்வாறு எந்தத் தடையும் விதிக்காத போது இவ்வாறு மறுத்தது சட்ட மீறல் என்றே கருதுகிறோம்.
  1. 24.4.2019 கோத்தகிரியில் பொன்பரப்பி சாதி வெறி தாக்குதலை கண்டித்தும், 23.4.2019 தருமபுரியிலும் போலீசு சட்ட பிரிவு 30(2) அமலில் உள்ளதைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு அமலில் உள்ளபோது அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்பதை போலீசார் தவறாக செயல்படுத்துகின்றனர்.
  1. மத்திய – மாநில அரசுக்கு எதிராக பேசுகிறீர்கள், இந்து அமைப்புகளைத் தாக்கி பேசக்கூடும் என்ற அனுமானத்திலும், விவசாயிகளைத் தூண்டிவிட வாய்ப்புள்ளது என்ற அனுமானத்திலும், மாற்றுக்கட்சியினரால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும் என்ற அனுமானத்திலும் போலீசார் சென்னையில், கோவையில், திருச்சியிலும்  கூட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளார். இவை சில எடுத்துக்காட்டுகளே,. யார் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவார்கள் எனக் காவல்துறை கருதுகிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்  சட்டப்படியான கருத்து உரிமையை ஒருதலைபட்சமாக பறிப்பது அரசியல் சட்ட மீறல் அநீதியானது.
  1. தனியார் மண்டபங்களில் நடக்கும் உள் நிகழ்ச்சிகளை தடை செய்யக்கூடாது எனவும், பொதுவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் காரணம் கூறி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது என நீதிமன்றத் தீர்ப்புகள் உத்திரவாதப்படுத்தி உள்ள நிலையில் போலீசார் மதிக்காது அனுமதி மறுக்கும் போக்கு தொடர்கிறது.
  1. போலீசாரின் ஒவ்வொரு சட்டமீறலுக்கும் உயர் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் பெறுவது சாதாரண மக்களைச் சார்ந்து இயங்கும் எம்மை போன்ற இயக்கங்களுக்கு மிக சிரமமான் காரிணம்.

  உண்மைக் காரணங்களை மறுத்து பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்தவை:

  1. 17.12.2018 சென்னை, சிந்தாதிரிப் பேட்டை 380/2018 ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறைத்து டாஸ்மாக் கடை பணியாளரை பணம் கேட்டு மிரட்டி டாஸ்மாக் பார்-யை சேதப்படுத்தியதாக வழக்கு.
  1. திருச்சி திருவெறும்பூர் 24.7.2018 233/18 சுவரொட்டி ஒட்டியதற்காக எட்டு காவல்நிலையங்களில் வழக்கு. ஒரு சம்பவத்திற்கு ஒரு வழக்குதான் பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் 8 வழக்கு. அதே போல் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஆய்வாளர் ஒருவர் கீழே தள்ளியதில் இறந்த பெண்ணுக்கு நியாயம் கேட்டதற்கு மூன்று காவல் நிலையங்களில் வழக்கு.
  1. கரூர் டவுன் காவல் நிலையம் 429/18, 15-3-2019 கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பு திருச்சி மாநாட்டு விளம்பர பிரசுரம் விநியோகித்த எமது அமைப்பினர் மீதான பொய் வழக்கு
  1. விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் 18.9.18 – Cr.no.864/18 – ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விளக்கி மக்களிடம் துண்டறிக்கை வினியோகித்ததை மறைத்து போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கையில் கருங்கல்லை வைத்து கொண்டு பேருந்து நிலையத்தில் பொது மக்களையும், போலீசையும் மிரட்டியதாக பொய் வழக்கு.
  1. கரூர் பசுபதிபாளையம் (Cr.no.701/18 10.11.2018) எமது அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்த நிர்வாகிகள் மீது பொய் வழக்கு.
  1. கள்ளக்குறிச்சியில் ( Cr.no. 480/18 18.7.2018) ஸ்டெர்லைட்டை மூடக்கோரி துண்டறிக்கை வினியோகித்த எமது தோழர்கள் மீது தேசத்துரோக பொய் வழக்கு.

இவ்வாறு எமது அமைப்பின் மீது மட்டுமல்ல வேறு பல அமைப்புகளுக்கும் அனுமதி மறுப்பு பொய் வழக்கு என போலீசு அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்கின்றன. மேற்குறிப்பிட்டவை சில சான்றுகள் மட்டுமே.

மக்கள் மத்தியில் வெளிப்படையாக செயல்படும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போலீசார் அமல்படுத்துவதாகவே கருதுகிறோம். மக்களின் அடிப்படை கருத்துரிமைகளை நசுக்கும் போக்கு ஜனநாயகத்தை பெரிதும் பலவீனப்படுத்தும். மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுக்காக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. எனவே காவல்துறை அவற்றை நசுக்குவதையும், மக்களுக்காகப் போராடுபவர்களை கிரிமினல் குற்ற வழக்கில் கைது செய்து ஒடுக்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இவண்
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க