அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 27

அத்தியாயம் ஐந்து – சாகஸக்காரரும் தீர்க்கதரிசியுமான ஜான் லோ
அ.அனிக்கின்

ஜான் லோ பிரபலமானவர். இந்தப் புகழ்மிக்க ஸ்காட்லாந்துக்காரரின் முதல் வாழ்க்கை வரலாறு அவருடைய வாழ்நாளின் போதே வெளியிடப்பட்டிருந்தது. பிரான்சில் ”லோவின் திட்டம்” சீர்குலைந்ததும் அவரைப் பற்றி எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் எழுதப்பட்டது. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு அரசியல் எழுத்தாளர் யாரும் அவரைக் குறிப்பிடத் தவறுவதில்லை.

19-ம் நூற்றாண்டில் நவீன வங்கிகள் ஏற்பட்டு கடன் வசதிகளும் பங்குச் சந்தை ஊக வாணிகமும் விரிவாக வளர்ச்சியடைந்ததோடு சேர்ந்து, கடன் வசதியின் உணர்ச்சிகரமான தலைவராகிய ஜான் லோவின் கருத்துக்கள், செயல்களைப் பற்றி புதிய அக்கறை ஏற்பட்டது. அவர் ஒரு சிறப்பான சாகஸக்காரர் மட்டுமே என்று யாரும் இனிமேல் நினைப்பதில்லை; அவர் புகழ் மிக்க பொருளியலாளராகவும் இருந்தார் என்றே நினைக்கிறார்கள்.

”பண வீக்கத்தின் நூற்றாண்டாகிய” இருபதாம் நூற்றாண்டு இந்தக் குறிப்பிடத்தக்க நபரிடம் ஒரு புது அம்சத்தைக் கண்டு பிடித்தது. அபரிமிதமான கடன் வசதி, அதிகமான காகிதப் பணம் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று அவர் நம்பினார். இந்தக் கருத்து தான் (வேறு வடிவத்தில்) நவீன முதலாளித்துவ அரசின் நெருக்கடி எதிர்ப்புக் கொள்கையின் அடிப்படையாக இருக்கிறது.

முதலாளித்துவ ஆராய்ச்சியாளர்கள் லோவுக்கும் கெய்ன்சுக்கும் உண்மையாகவே மெய்யுணர்வு ரீதியான ஒற்றுமையைக் கண்டு வருகின்றனர். ”பிரெஞ்சு நிதித்துறையின் பொதுப் பொறுப்பாளராக இருந்த லொரி ஸ்டோனைச் சேர்ந்த ஜான் லோவுக்கும் (1671-1729) ஜான் மேனார்ட் கெய்ன்சுக்கும் இடையே உள்ள இணையான அம்சங்கள் மிக ஆழமானவையாகவும் விரிவான தளத்தைக் கொண்டவையாகவும் இருக்கின்றன; அவர்களுடைய சொந்த வாழ்க்கையிலிருக்கும் சிற் சில அம்சங்களில் கூட இந்த ஒற்றுமை இருக்கிறது; எனவே லோ இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கெய்ன்சாக மறு பிறவி எடுத்தார் என்று ஒரு ஆன்மீகவாதி சொல்லுவது கூட சாத்தியமே.” (1)

லோவைப் பற்றி அண்மையில் வெளிவந்திருக்கின்ற புத்தகங்களின் தலைப்புக்களும் கூட தனிச் சிறப்போடு அமைந்திருக்கின்றன : ஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர், கடன் மந்திரவாதி மற்றும் வங்கியாளர். லோவின் அசாதாரணமான வாழ்க்கை. அதே சமயத்தில் அவர் பொருளாதாரச் சிந்தனையின் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்டிருக்கின்ற கனமான புத்தகங்களில் சிறப்பு மிக்க இடத்தைப் பெற்றிருக்கிறார்.

ஆபத்தான வாழ்க்கைப் பயணமும் துணிவான கருத்துக்களும்

ஜான் லோ 1671-ம் வருடத்தில் ஸ்காட்லாந்தின் தலை நகரமான எடின்பரோவில் பிறந்தார். அவர் தகப்பனார் பொற்கொல்லராக இருந்ததோடு, அந்தக் காலப் பழக்கத்தின்படி வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்தார்.

ஜான் லோ

1683 ம் வருடத்தில் அவர் லொரி ஸ்டோன் என்ற சிறு பண்ணையை விலைக்கு வாங்கினார்; அதன் மூலம் நில வுடைமையாளர்களில் ஒருவரானார். ஜான் லோ-விடம் பணமும் தோற்றப் பொலிவும் கவர்ச்சியும் இருந்தது. எனவே அவர் வெகு சீக்கிரத்திலேயே போக்கிரி, சூதாடி என்று பெயரெடுத்தார். அவருக்கு இருபது வயதான பொழுதே அவர் “எல்லா விதமான சிற்றின்பப் பழக்கங்களிலும் அதிகமான அனுபவமுள்ளவராக இருந்தார்” என்று அவருடைய கூட்டாளி ஒருவர் எழுதியிருக்கிறார்.

லோவுக்கு எடின்பரோ சிறிய நகரமாகத் தோன்றியது. எனவே அவர் லண்ட னுக்குப் புறப்பட்டார். ஸ்காட்லாந்தும் இங்கிலாந்தும் ஒரே மன்னரின் கீழ் இருந்த போதிலும் மற்ற எல்லா அம்சங்களிலும் ஸ்காட்லாந்து இன்னும் சுதந்திரமான அரசாகவே இருந்தது.

லண்டனில் இந்த இளைஞர் சீக்கிரத்தில் லோ பெருமகனார் என்ற பட்டப் பெயரோடு எல்லோருக்கும் அறிமுகமானார். 1694 ஏப்ரல் மாதத்தில் அவர் வாட்சண்டையில் தன்னுடைய எதிரியைக் கொன்றார். நீதிமன்றம் அவர் கொலை செய்ததாகத் தீர்ப்புக்கூறி லோ பெருமகனாரை சிரச்சேதம் செய்யுமாறு தண்டனை வழங்கியது . செல்வாக்குள்ள நபர்கள் தலையிட்டு உதவி செய்தபடியால் அரசர் மூன்றாம் வில்ஹெல்ம் அவருக்கு மன்னிப்பளித்தார். ஆனால் செத்துப் போனவரின் உறவினர்கள் லோ மீது புது வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கின் முடிவுக்காகக் காத்துக் கொண்டிராமல் லோ நண்பர்களின் உதவியோடு சிறையிலிருந்து தப்பினார். அவர் முப்பது அடி உயரத்திலிருந்து கீழே குதித்த பொழுது கணுக்கால் முறிந்தது. இனிமேல் இங்கிலாந்தில் இருக்க முடியாது; எங்காவது வெளி நாட்டுக்குத் தான் போக வேண்டும். அவர் ஹாலந்து நாட்டுக்குப் போக முடிவு செய்தார்.

படிக்க:
♦ மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !
♦ ஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு

லண்டனில் தங்கியிருந்த மூன்று வருடங்களில் அவர் குடிகாரர்களோடும் பெண்களோடும் உல்லாசமாகப் பொழுது போக்கியதாக மட்டுமே நினைக்கக் கூடாது. அவர் செய்முறையான கல்வியைப் பெற்றிருந்தார்; கணக்குப் போடுவதிலும் பல விதமான பண விவகாரங்களிலும் அபாரமான திறமைசாலியாக இருந்தார். 1688-89 புரட்சிக்குப் பிறகு லண்டனில் பணக்கார வியாபாரிகள் ஏராளமாகப் பெருகிவிட்டார்கள். லோ அவர்களோடு பழகினார். இதற்குச் சில வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து வங்கி துவக்கப்பட்டது; இது ஆங்கில முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும்.

லோ வங்கித் தொழிலைப் பற்றி அதிகமான புத்தார்வக் கற்பனைகள் கொண்டிருந்தார். புத்தார்வக் கற்பனையும் வங்கித் தொழிலும் என்று சொல்வது இன்று வினோதமாகக் கூடத் தோன்றலாம். ஆனால் அந்தக் காலத்தில், முதலாளித்துவக் கடன் வசதிகளின் வைகறைப் பொழுதில், அதன் வாய்ப்புக்கள் பலருக்கும் முடிவில்லாதவையாகவும் அதிசய மானவையாகவும் தோன்றின்.

லோ தன்னுடைய கட்டுரைகளில் வங்கிகள் ஏற்பட்டுக் கடன் வசதிகள் வளர்ச்சியடைந்ததை “இந்தியாவைக் கண்டுபிடித்ததோடு”, அதாவது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடல் வழிப் பாதை கண்டு பிடிக்கப்பட்டு அதன் வழியாக விலையுயர்ந்த உலோகங்களும் அபூர்வமான பொருள்களும் ஐரோப்பாவுக்குக் கொண்டு வரப்பட்டதோடு திரும்பத் திரும்ப ஒப்பிடுகிறார் என்பது காரணமில்லாமல் அல்ல.

தான் நடத்தப் போகும் வங்கியின் மூலம் வாஸ்கோடகாமா, கொலம்பஸ் அல்லது பிஸாரோ செய்ததைக் காட்டிலும் அதிகமாகச் சாதிக்க முடியும் என்று அவர் தன் வாழ்க்கை முழுவதும் மனப்பூர்வமாக நம்பினார். ஜான் லோ இன்னும் பரிசோதிக்கப்படாத பலத்தைக் கொண்டிருந்த கடன் வசதியின் ஆர்வலராக, கவிஞராக, தீர்க்கதரிசியாக இருந்தார்.

அக்காலத்தில் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வங்கிyஆக இருந்த ஆம்ஸ்டர்டாம் வங்கி. (படம் : நன்றி – விக்கிபீடியா)

இது இங்கிலாந்திலே ஆரம்பமாகி ஹாலந்திலே தொடர்ந்தது. அங்கேயிருந்த ஆம்ஸ்டர்டாம் வங்கி ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய வங்கி; அதிகமான செல்வாக்கோடு அது இயங்கி வந்தது. அதன் அமைப்பை லோ ஆராய்ந்தார். 1699-ம் வருடத்தில் அவரைப் பாரிசில் பார்க்கிறோம். அங்கிருந்து அவர் இத்தாலிக்குப் புறப்பட்டபொழுது திருமணமான ஒரு பெண்ணையும் தன்னோடு கூட்டிக் கொண்டு சென்றார். காத்தரின் சென்னியேர் என்ற பெயருடைய அந்தப் பெண் இங்கிலாந்திலே பிறந்தவள். அன்று முதல் எல்லாப் பயணங்களிலுமே அந்தப் பெண் அவரோடிருந்தாள். புது வகையான ஒரு வங்கியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே லோ 1704-ம் வருடத்தில் காத்தரினோடும் அவர்களுடைய ஒரு வயது மகனோடும் ஸ்காட்லாந்துக்குத் திரும்பினார். அங்கே தன்னுடைய கருத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காகப் பாடுபட்டார்.

அன்று நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. வர்த்தகத்தில் தேக்கம் ஏற்பட்டு நகரங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருந்தது. தொழில்களை ஏற்படுத்துவதில் ஊக்க உணர்ச்சி நசுங்கிப் போயிருந்தது. அதுவும் நல்லதே! 1705-ம் வருடத்தில் எடின்பரோவில் லோ வெளியிட்ட நூலில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தன்னுடைய திட்டத்தை விளக்கினார். தேசத்துக்குப் பணம் கொடுப்பதற்கான ஆலோசனையோடு பணத்தையும் வர்த்தகத்தையும் பற்றி என்பது அந்த நூலின் தலைப்பாகும்.

லோ, எந்த விதமான விரிவான அர்த்தத்திலும், ஒரு தத்துவாசிரியரல்ல. பொருளாதாரத்தில் அவருடைய ஈடுபாடுகள் பணம், கடன் வசதி ஆகியவற்றுக்கு அப்பால் ஒரு போதும் போனதில்லை. ஆனால் தன்னுடைய திட்டத்துக்காகத் தீவிரமாகப் போராடிய பொழுது இந்தப் பிரச்சினையைப் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் பொருளாதார விஞ்ஞானத்தில் அதிகமான, மிகவும் முரண்பாடான பாத்திரத்தை வகித்தன.

லோவின் பொருளாதாரக் கருத்துக்களை அவருடைய செய்முறைப் பணிகளோடு சேர்த்தே பார்க்க வேண்டும் என்பது உண்மையே. அவருடைய செய்முறைப் பணிகளின் விளைவுகள் மாபெரும் அளவில் இருந்தன. அவருடைய பிற்காலத்திய எழுத்துக்களைப் போலவே இந்தப் பணிகளிலும் தாம் எடின்பரோவில் வெளியிட்ட புத்தகத்திலிருந்த அடிப்படையான கருத்துக்களையே அவர் செயல்படுத்தினார், வளர்த்துச் சென்றார்.

”அவர் ஒரு முறையை உருவாக்கும் மனிதர்” என்று சான் – சிமோன் கோமகன் அவரைப் பற்றி எழுதினார். இவர் எழுதிய புத்தகத்தில் தனி மனிதர் என்ற முறையில் லோவைப் பற்றி சில முக்கியமான தகவல்கள் கிடைக் கின்றன. தன்னுடைய திட்டத்தின் ஆதாரக் கருத்துக்களை முடிவு செய்தவுடன் லோ சிறிதும் ஊசலாட்டம் இல்லாத பிடிவாதத்தோடும் கொள்கைப்பற்றோடும் அதைப் பிரச்சாரம் செய்து அமுல் நடத்தினார்.

ஒரு நாட்டில் அபரிமிதமான பணப் பெருக்கமே பொருளாதார வளத்தின் திறவுகோல் என்று லோ எடுத்துக் கூறினார். அவர் பணத்தையே செல்வமாகக் கருதியதாக முடிவு செய்யக் கூடாது; உண்மையான செல்வம் என்பது பண்டங்கள், தொழிற்சாலைகள், வர்த்தகமே என்பதை அவர் மிக நன்றாக உணர்ந்திருந்தார். ஆனால் அவருடைய கருத்தின்படி நிலம், உழைப்பு, தொழில் திறமை ஆகியவற்றை முழு அளவுக்குப் பயன்படுத்துவதைப் பணப்பெருக்கம் உறுதிப் படுத்துகிறது.

படிக்க:
♦ 18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை !
♦ முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?

”உள்நாட்டு வர்த்தகம் என்பது மக்களுக்கு வேலை கொடுப்பதும் பொருள்களைப் பரிவர்த்தனை செய்வதுமாகும். உள்நாட்டு வர்த்தகம் பணத்தை நம்பியிருக்கிறது . அதிகமான அளவு பணம் குறைவான பணத்தால் இயன்றதைக் காட்டிலும் அதிகமானவர்களுக்கு வேலை கொடுக்கும்….. பணம் அதனால் முடிந்த அளவுக்கு முழுச் செலாவணியை ஏற்படுத்துவதும் நாட்டுக்கு அதிகமான லாபத்தைத்தரக் கூடிய துறைகளில் அது ஈடுபடும்படி நிர்ப்பந்திப்பதும் நல்ல விதமான சட்டங்களினால் முடியும். ஆனால் சட்டங்களினால் மட்டும் அதிகமான வர்களுக்கு வேலை கொடுக்க முடியாது. அதிகமான எண்ணிக்கையுள்ளவர்களுக்குக் கூலி கொடுக்கும் வகையில் அதிகமான பணத்தைச் செலாவணியில் ஈடுபடுத்தாமல் இது முடியாது ….” (2) என்று லோ எழுதினார்.

லோ பழைய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து வேறுபடுகிறார் என்பது நிச்சயமானதாகும். அவரும் பொருளாதார வளர்ச்சியின் விசையைச் செலாவணியின் எல்லைக்குள் தேடுகிறார் என்றாலும் கூட, அவர் உலோகப் பணத்தைப் போற்றிக் கொண்டாடவில்லை, அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்குத் தன்னாலியன்ற அனைத்தையும் செய்கிறார்.

இதற்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கெய்ன்ஸ் தங்கப் பணத்தைக் “காட்டு மிராண்டிக் காலத்தின் எச்சம்” என்று கூறினார். லோவும் இதைப் போல சொல்லியிருக்கக் கூடியவரே. பணம் உலோகமாக இருக்கக் கூடாது. அது பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப வங்கி உருவாக்குகின்ற கடன் வசதியாக இருக்க வேண்டும்; வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் காகிதப் பணமாக இருக்க வேண்டும். ”பணத்தை அதிகரிப்பதற்கு வங்கிகளை உபயோகப்படுத்துவது இதுவரை பின்பற்றப்பட்டிருக்கும் வழிகளில் மிகச் சிறந்ததாகும்.” (3)

லோவின் முறை இன்னும் இரண்டு கோட்பாடுகளைக் கொண்டிருந்தது; அவற்றின் முக்கியத்துவத்தை மிகைப் படுத்திச் சொல்வது கடினமே. முதலாவதாக, வங்கிகள் கடன் விஸ்தரிப்புக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றார். அதாவது வங்கியில் இருக்கின்ற உலோகப் பணத்தின் அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகக் கடன்கள் வழங்க வேண்டும் என்றார். இரண்டாவதாக, வங்கியை அரசு நடத்த வேண்டும், அரசின் பொருளாதாரக் கொள்கையை அது அமுலாக்க வேண்டும் என்று கோரினார்.

இதை விளக்கி எழுதுவது அவசியம். ஏனென்றால் இன்று இதே மாதிரியான பிரச்சினைகள் -வெவ்வேறான நிலைமைகளிலும் வடிவங்களிலும் விசேஷமாக ஏற்பட்டிருக்கின்றன. ஒரு வங்கியின் உரிமையாளர்கள் தங்கத்தில் ஒரு மில்லியன் பவுன் மூலதனம் போட்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர ஒரு மில்லியன் பவுன் மதிப்புடைய தங்கம் அவர்களிடம் இருப்புநிதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. வங்கி ஒரு மில்லியன் பவுன் மதிப்புடைய நோட்டுகளை அச்சிட்டு அவற்றைக் கடன் கொடுக்கிறது. அந்த வங்கியின் இருப்பு நிலைக் கணக்கு பின்வரும் விதத்தில் இருக்கும் என்று வாணிபக் கணக்குமுறையைப் பற்றி மிகக் குறைவாகத் தெரிந்தவர்கள் கூட அறிந்திருப்பார்கள். 

சொத்துக்கள் கடன் பொறுப்புகள்
தங்கம் 2 மில்லியன்

 

கடன்கள் 1 மில்லியன்

சொந்த மூல தனம் 1 மில்லியன்

 

இருப்பு நிதி 1 மில்லியன்

 

வங்கி நோட்டுகள் 1 மில்லியன்

மொத்தம் 3 மில்லியன் மொத்தம் 3 மில்லியன்

 

இந்த வங்கியை நிச்சயமாக நம்பலாம் என்பது தெளிவு. ஏனென்றால் அதன் தங்க வைப்பு எந்த நேரத்திலும் தங்கத்துக்காகக் கொடுக்கப்படக் கூடிய வங்கி நோட்டுகளையும் அதன் இருப்பு நிதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட வங்கியினால் என்ன பயன் என்று லோ கேட்கிறார். அவர் கேள்வியும் நியாயமானதே. இந்த வங்கியினால் ஓரளவுக்குப் பயன் ஏற்படுவது உண்மையே. அது வழங்கீடுகளுக்கு உதவி செய்கிறது; தங்கம் தேய்ந்து விடாமல் அல்லது தொலைந்து விடாமல் பாதுகாக்கிறது. எனினும் இந்த வங்கி அதிகமான நோட்டுகளை, உதாரணமாக, 10 மில்லியன் பவுன் மதிப்புள்ள நோட்டுகளை வெளியிட்டு அவற்றைப் பொருளாதாரத்துக்குள் புகுத்தினால் அதிகமான பயனுள்ளதாக இருக்கும். அப்படிச் செய்யும்பொழுது பின்வரும் வகையில் கணக்கு இருக்கும்: 

சொத்துக்கள் கடன் பொறுப்புகள்
தங்கம் – 2 மில்லியன்

 

கடன்கள் 10 மில்லியன்

சொந்த மூல தனம் 1 மில்லியன்

 

இருப்பு நிதி 1 மில்லியன்

 

வங்கி நோட்டுகள் 10 மில்லியன்

மொத்தம் 12 மில்லியன் மொத்தம் 12 மில்லியன்

 

இந்த வங்கி ஓரளவுக்கு ஆபத்தோடுதான் இயங்கக் கூடும். வங்கி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மூன்று மில்லியன் மதிப்புள்ள நோட்டுகளைப் பரிவர்த்தனைக்குக் கொடுத்தால் என்ன ஆகும்? வங்கி முறிந்துவிடும் (அல்லது லோவின் காலத்தில் சொல்லப்பட்டது போல, இன்றும் சொல்லப்படுவது போல வங்கி வழங்கீடுகளை நிறுத்திவிடும்). ஆனால் அது அவசியமான, நியாயமான ஆபத்தே என்று லோ நம்புகிறார். இதற்கு மேலும் சென்று, வங்கி குறைந்த காலத்துக்கு வழங்கீடுகளை நிறுத்திவிட நேர்ந்தால், அது ஒன்றும் அவ்வளவு ஆபத்தான தல்ல என்றும் கூறுகிறார்.

மேலே கொடுத்த உதாரணத்தில் வங்கியின் தங்க இருப்பு அது வெளியிட்டுள்ள நோட்டுகளின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதம் மட்டுமே; இருப்புநிதிகளையும் சேர்த்தால் தங்க இருப்பின் சதவிகிதம் இன்னும் குறைந்துவிடும். இது பகுதி இருப்புக் கோட்பாடு என்று சொல்லப்படுகிறது; முழு வங்கித் தொழிலுக்கும் இதுவே ஆதாரம். இதன் மூலம் வங்கிகள் கடன்களை நெகிழ்ச்சியோடு விஸ்தரிக்கவும் செலாவணியை அதிகரிக்கவும் முடிகிறது. முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சியில் கடன் வசதி மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. இதை முதன் முதலில் தெரிந்து கொண்ட சிலரில் ஜான் லோவும் ஒருவர்.

ஆனால் இதே கோட்பாடு வங்கி அமைப்பின் நிலையுறுதிக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. வங்கிகள் ”ஒரேயடியாகப் போக” முற்படுகின்றன; லாப நோக்கத்தினால் கடன்களின் அளவை உயர்த்தி விடுகின்றன. எனவே வங்கிகள் முறிந்துவிடுவதும் சாத்தியமே, அது பொருளாதாரத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். !

வங்கியினால் ஏற்படும் நன்மையை அரசு தவறான வகையில் உபயோகிப்பது இன்னொரு ஆபத்து அல்லது அதே ஆபத்தின் மற்றொரு அம்சம் என்று சொல்லலாம். வங்கி நாட்டுப் பொருளாதாரத்தின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்கிற விதத்தில் நோட்டுகளை வெளியிடுவதற்குப் பதிலாக நாட்டின் வரவு-செலவுத் திட்டத்திலுள்ள பற்றாக் குறையை மறைப்பதற்காக அதிக அளவில் நோட்டுகளை வெளியிடுமா று நிர்ப்பந்திக்கப்பட்டால் என்ன நடக்கும்? ”பண வீக்கம்” என்ற சொல் அன்று இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் ஜான் லோவின் வங்கிக்கும் அது இயங்கிக் கொண்டிருக்கிற நாட்டுக்கும் அந்த ஆபத்து ஏற்படும்.

கடன் வசதியினால் ஏற்படக் கூடிய சாதகங்களை லோ கண்டார்; ஆனால் அதிலிருக்கின்ற ஆபத்துக்களை அவர் பார்க்கத் தவறினார் அல்லது பார்க்க மறுத்தார். அவருடைய திட்டத்திலிருந்த முக்கியமான செய்முறைக் குறை இது ; அது வீழ்ச்சியடைந்ததற்கு இறுதியான காரணமும் இதுவே.

லோ வெகுளித்தனமாகக் கடன் வசதியையும் பணத்தையும் மூல தனத்துக்குச் சமமென்று கருதியது அவருடைய கருத்துக்களிலிருந்த தத்துவரீதியான குறையாகும். ஒரு வங்கி கடன் வசதிகளை விஸ்தரித்துப் பண நோட்டுகளை அதிகமாக வெளியிடுவதால் மூலதனத்தைப் படைக்கிறது, அதன் மூலம் செல்வத்தையும் வேலை வாய்ப்புக்களையும் பெருக்குகிறது. என்று அவர் கருதினார்.

எனினும் உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு உண்மையான உழைப்பும் பொருளாயத செல்வாதாரங்களும் அவசியம்; எப்படிப்பட்ட கடன் வசதியும் இதற்கு ஈடாகாது. – ஜான் லோ தன்னுடைய முதல் புத்தகத்தில் எதிர்நோக்கிய கடன் வசதியை அதிகரிக்கின்ற நடவடிக்கைகள்இவற்றை 10-15 வருடங்களுக்குப் பிறகு அவர் மிகவும் பிரம்மாண்டமான அளவில் அமுலாக்கினார்- அவருடைய திட்டத்துக்கு நிதித்துறையில் ஆர்ப்பரிப்போடு கூடிய வீரசாகஸத் தன்மையைக் கொடுக்கின்றன.

லோ ”கடன் வசதியின் பிரதான கருத்தறிவிப்பாளர்” என்று மார்க்ஸ் அவரை வர்ணித்துவிட்டு, இப்படிப்பட்ட நபர்கள் “மோசடிக்காரன், தீர்க்கதரிசி ஆகிய இரண்டு பேர்களின் குணாம்சங்களின் இனிய கலவையைக்”(4) கொண்டிருக்கிறார்கள் என்று ஏளனமாக எழுதுகிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) F. Zweig, Economic Ideas. A Study in Historical Perspectives, |N.-Y., 1950, p. 87.

(2) J. Law, Oeucores completes, Vol. 1, Paris, 1934, pp. 14-16.

(3)  Ibid., p. 46.K. 

(4) Marx, Capital, Vol. 3,Moscow, 1971, p. 441

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983