ஜெர்மனியைச் சேர்ந்த பழமையான வங்கியும், சொத்துக்களின் அடிப்படையில் உலகின் 15-வது மிகப் பெரிய வங்கியுமான டாயிட்ஸ்சே வங்கி (Deutsche Bank), உலகம் முழுவதும் உள்ள தமது வங்கிக் கிளைகளில் இருந்து எதிர்வரும் 2022-ம் ஆண்டுக்குள் 18,000 பேரை பணிநீக்கம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் திங்கள்கிழமை (08-07-2019) முதல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை, சிட்னி, ஹாங்காங் மற்றும் ஆசிய பசிபிக் மண்டலங்களில் உள்ள இதர இடங்களில் நடைமுறைக்கு வந்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுமே பெரும்பான்மையான பணிநீக்கம் நடைபெறும் என்றாலும், ஆசியாவில், டாயிட்ஸ்சே வங்கி தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை வெறும் 74,000-மாக வரும் 2022-ம் ஆண்டுக்குள் சுருக்கப் போவதாகக் கூறியிருக்கிறது. அதாவது தனது மொத்த ஊழியர்களில் ஐந்தில் ஒரு பங்கு ஊழியர்களை குறைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறது.

பல ஆயிரம் ஊழியர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய இந்த வேலைநீக்க அறிவிப்பு வெளியான அதே நாளில், அதே சமயத்தில் அவ்வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் சிலர் சுமார் 1500 டாலர் மதிப்புள்ள தையல் ஆடைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது செய்தி ஊடகங்களில் அம்பலமானது.

லண்டனில் பிரபலமான ஆடை தைக்கும் நிறுவனமான ஃபீல்டிங் & நிக்கல்சன் டைலரிங் நிறுவனத்தைச் சேர்நத இருவர் திங்கள் அன்று வங்கியின் நிர்வாக இயக்குனர்களிடம் ஆடை தைப்பது குறித்து ஆர்டர் எடுத்துவிட்டு டாயிட்ஸ்சே வங்கியிலிருந்து வெளி வந்தனர். அவர்கள் வெளி வருகையில் அவர்களை வங்கியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவர்களது படங்கள் டிவிட்டரிலும் ஊடகங்களிலும் பரவின. இதில் கூத்து என்னவென்றால், அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த இருவரில் ஒருவர், ஃபீல்டிங் & நிக்கல்சன் நிறுவனத்தின் உரிமையாளரான ஐயான் ஃபீல்டிங் கல்கட்.

படிக்க:
♦ முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!
♦ டாயிஷே வங்கி திவால் : வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டு ?

வேலையிழந்த வங்கி ஊழியராக ஐயான் ஃபீல்டிங்கை சித்தரித்து செய்தி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஃபீல்டிங் & நிக்கல்சன் நிறுவனம் தமது நிறுவனம், ஊழியர்களின் படம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக தமது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

“இந்தப் பணி நீக்கத்தால் பாதிக்கப்படாத எங்களது வாடிக்கையாளர்களைச் சந்திக்கவே நாங்கள் அங்கு சென்றிருந்தோம்” என்று ஐயான் ஃபீல்டிங் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஃபீல்டிங் அண்ட் நிக்கல்சன் நிறுவனம் லண்டனின் மேட்டுக்குடிகளுக்கு உடை தைத்துத் தரும் மிகவும் பிரசித்தி பெற்ற தையல் நிறுவனமாகும். இவர்கள் துணியை தைத்துத் தருவதற்கு 8 வாரங்கள் வரை எடுத்துக் கொள்வர். அவ்வளவு கிராக்கி. மேலும் இவர்களது குறைந்தபட்ச தையல் கட்டணமே 1500 அமெரிக்க டாலர்களிலிருந்துதான் (அதாவது சுமார் ரூ.1,00,000) தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த அதே நாளில் விலையுயர்ந்த சூட் தைப்பதற்கு ஆடர் கொடுத்துள்ளனர் நவீன நீரோக்கள். ஃபீல்டிங் & நிக்கல்சன் நிறுவனத்தின் உரிமையாளரான ஐயான் ஃபீல்டிங் கல்கட்(வலது) அவருடன் ஊழியர் அலெக்ஸ்.

ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பணி நீக்கம் அறிவிக்கப்பட்டு, ஒரே நாளில் அதே வளாகத்தில் சுமார் 3,200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும்போது, தமது மேட்டுக்குடி உடைகளுக்கு ஆர்டர் வழங்க ஒரு நிர்வாக இயக்குனரால் சர்வசாதாரணமாக முடிகிறது. ஊழியர்களின் பணிநீக்கம் குறித்தோ, அது அவர்களது வாழ்க்கையில் ஏற்படப் போகும் தாக்கம் குறித்தோ எவ்விதக் குற்றஉணர்வும் இல்லாமல் தமது நுகர்வில் கண்ணும் கருத்துமாக இவர்களால் இருக்க முடிகிறது.

டாயிட்ஸ்சே வங்கியின் இந்த பணிநீக்க நடவடிக்கை குறித்து ஆர்.டி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், பிரபல அமெரிக்க முதலீட்டாளரான ஜிம் ரோகர்ஸ், “இந்த நிதியமைப்பு மிகப்பெரும் சிக்கலில் இருக்கிறது. டாயிட்ஸ்சே வங்கியின் இந்த நடவடிக்கை, நடந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்த ஒரு சமிக்ஞை மட்டுமே. இது கடந்த 1930-களிலோ அல்லது 1960-களிலோ அல்லது 1990-களிலோ ஏற்பட்ட நிதிப் பிரச்சினையைப் போன்றே மீண்டும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் “டாயிட்ஸ்சே வங்கியின் இந்தப் பணிநீக்க நடவடிக்கையைக் கொண்டு, அவ்வங்கி நீடிக்காது என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. ஆனால் இவ்வங்கி முன்னைப் போல இனி இருக்காது. இது வங்கிக்கு மட்டுமல்ல உலகின் ஒட்டுமொத்த நிதியமைப்புக்கே பாரதூரமான பிரச்சினை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படிக்க:
♦ குழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு !
♦ ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை

மிகவும் உறுதியான வங்கிகளே திடீரென யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் தகர்ந்துவிட்டன என்பதை நினைவுபடுத்திய ரோகர்ஸ், 2008-ம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் வங்கியும், பழமையான பிரிட்டிஷ் நார்த் ராக் வங்கியும் வீழ்ந்ததை உதாரணமாகக் காட்டுகிறார்.

“அந்த நிலைமை (2008) மீண்டும் நடைபெறுகிறது. ஸ்கேண்டிநேவிய நாடுகளில் பல ஆண்டுகளாக உள்ள பல வங்கிகள் இப்போது பெரும் சிக்கலில் உள்ளன. இது இன்றைய பொருளாதார நிலைமைகளுக்கான ஒரு குறியீடே ஆகும். நாம் இனி வரும்காலங்களில் இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க இருக்கிறோம்.” என்று முதலாளித்துவத்தின் சீழ் வடிந்த முகத்தை அம்பலப்படுத்துகிறார் ரோகர்ஸ்.

2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் முழுமையாக மீண்டு எழுவதற்கு முன்னரே மீண்டும் ஒரு பலத்த வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் வீழ்ச்சியை இனி எந்தக் கொம்பனாலும் (முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களாலும்) தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் ரோகர்ஸ் சொல்லவருவதும், டாயிட்ஸ்சே வங்கியின் வீழ்ச்சி உணர்த்துவதுமாகும்.

முதலாளித்துவம் மீண்டும் படுகுழிக்குள் விழும்போது, அணுவுலை – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை – வளர்ச்சி என்ற பெயரில் நமது வாழ்வாதாரங்களைப் பிடுங்கிக் கொண்டு, நம்மையும் படுகுழிக்குள் இழுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப் போகிறோமா அல்லது இத்தகைய முதலாளித்துவச் சுரண்டலை எதிர்த்துப் போராடி அதனை மட்டும் சவக்குழிக்கு அனுப்பிவைக்கப் போகிறோமா?


நந்தன்

செய்தி ஆதாரம் : 

♦ Perfect timing: Deutsche Bank bosses fitted for £1,500 suits as thousands of employees are laid off
♦ Deutsche Bank’s brutal overhaul is sign that global financial system is in trouble – Jim Rogers

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க