என் சொந்த நாட்டிலேயே நான் ஏன் அகதியாகவோ பாலியல் அடிமையாகவோ வாழவேண்டும் ?

ராக்கில் ஐ.எஸ் அமைப்பால் 2014-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மனிதப் படுகொலைகளின் சாட்சியாக விளங்கும் யாசிடி குலப் பெண்களின் கேள்வி இது.

2014 -ம் ஆண்டு வடக்கு ஈராக்கில் கிராமம் கிராமமாகப் புகுந்த ஐ.எஸ் அமைப்பினர்; கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் காக்கைக் குருவிகளைப் போன்று சுட்டுத்தள்ளிவிட்டு, பெண்களைப் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றிச் சென்றனர்.

தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் பல பெண்கள் இப்போது தங்கள் பூர்வீக இடத்திற்குச் சென்று வசிக்க விரும்புகின்றனர். இது குறித்து அவர்களுக்கு எந்த பயமும் இருக்கவில்லை.

யாசிடிகள் இல்லாத சிஞ்சார் நகரமும் இல்லை; சிஞ்சார் இல்லையெனில் யாசிடிகளும் இல்லை என்கிறார் 25 வயதான ஷ்ரீன். மொசூல் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் பாலியல் அடிமையாக சிறைபட்டிருந்த இவர், அரச படைகளுக்கும், ஐ.எஸ்-க்கும் இடையே போர் தீவிரமடைந்த போது, தப்பிப் பிழைத்து சிரியா சென்று ஐ.எஸ்-ன் பிடியில் சிக்கியிருந்த தன் தங்கையை மீட்கச் சென்றுள்ளார்.

அழுதுபுலம்பும் யாசிடி இனப்பெண்கள் – இடம்: கோஜோ கிராமத்தில் கொத்தாகப் புதைக்கப்பட்ட மனிதச்சடலங்களை அடையாளம் காணும்போது.

நான் மற்றவர்களால் ஒரு அகதியாகவோ அல்லது பாலியல் அடிமையாகவோ பார்க்கப்பட விரும்பவில்லை. மாறாக யாசிடி இனக்குழுவின் போராட்டப் பெண்மணியாகப் பார்க்கப்பட விரும்புகிறேன். என் தந்தையின் இறந்த உடலைப் பெறும் வரை, ஈராக்கை விட்டுப் போகப் போவதில்லை என்கிறார் ஷ்ரீன். இவரின் தந்தை 2014-ம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஷ்ரீன் இப்போது, கோஜோ எனும் கிராமத்தில் ஐ.எஸ் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டு கொத்துக் கொத்தாகப் புதைக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கணக்கெடுக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் நடியா முராத் இந்த கிராமத்தில்தான் ஐ.எஸ் அமைப்பினரால் 2014-ம் ஆண்டு கடத்தப்பட்டார்.

படிக்க:
அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி
♦ மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !

ஐ.எஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட யாசிடி பெண்களின் நிலைமை என்னவானது என்று இதுவரை தெரியவில்லை. ஆனாலும் தப்பிப்பிழைத்த யாசிடி குலப்பெண்கள் உயிரைக் குறித்து அச்சப்படாமல் தங்களுடைய சொந்த இடத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஷ்ரீனைப் போலவே மற்ற ஷானா, நடா ஆகிய பெண்களும் இந்த நிறுவனங்களில் தன்னார்வலர்களாகப் பணியாற்றிவருகின்றனர். தங்கள் சொந்த பந்தங்களின் எலும்புக்கூடுகளையாவது பார்க்க முடியுமா என்பது தான் இவர்களின் நோக்கம்.

மக்கள் முகாம்களில் வாழ்வதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், யாசிடி பெண்களோ தங்கள் சொந்த இடத்திற்கு தைரியமாகச் சென்று புணரமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

யாசிடி மதத்தலைவர் ஷேக் கட்டோ, கோஜோ கிராமத்தில், புதைக்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் முன்பு வெள்ளைப் புறாக்களைப் பறக்கவிடுகிறார். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சூழ்ந்து நிற்கின்றனர். இது போன்று 70 இடங்களில் ஐ.எஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற நடியா முராத் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், இதே கோஜோ கிராமத்தில்தான் ஐ.எஸ் அமைப்பினர் 2014-ம் ஆண்டு இவரைக் கடத்தியிருந்தனர்.

மூன்று யாசிடி இனப்பெண்கள் கல்லறைகளுக்கு அவர்களின் மதமுறைப்படி சாம்பிராணி புகை போட்டு, சடங்குகளைச் செய்கின்றனர்.

சிஞ்சார் மலைப்பகுதியில் ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள அகதிகள் முகாம். ஐ.எஸ் தாக்குதல் தீவிரமான போது இந்த மலைப்பகுதியில் பலர் ஒளிந்து கொண்டு உயிர் தப்பியுள்ளனர்.

சிஞ்சார் மலையின் வடக்குப்பகுதியில் ஐ.எஸ் அமைப்பினரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டு மடிந்த யாசிடி இன ஆண்கள் மற்றும் பெண்களின் சதுக்கங்கள்.

நடா மற்றும் ஷானா இருவரும் ஐ.எஸ் தாக்குதலுக்கு முன் தாங்கள் வசித்து வந்த சிஞ்சார் நகரத்தில் இருக்கும் காட்சி. 2014-ல் இங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் இப்போது திரும்பவும் தங்களுடைய சொந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.

ஐ.எஸ் அமைப்பினரால் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்ட சிஞ்சார் நகர வீதியொன்றில் நடந்து வரும் நடா, ஷானா. யாசிடி இனத்தவரை இங்கே மீள்குடியமர்த்துவதற்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யும் வண்ணம் இங்கே வந்துள்ளனர்.

சிஞ்சார் நகரின் மலைப்பகுதியிலிருந்து சிஞ்சார் நகரைப் படம் பிடித்த காட்சிதான் இப்போது நீங்கள் பார்ப்பது.

அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருதுபெற்ற ஈராக்கிய பாராளுமன்ற உறுப்பினரான வியான் டக்கீல்-இன் பேனர். தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஈராக்கியப் பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர்

கோஜோ கிராமத்தில் ஐ.எஸ் அமைப்பினரால் சின்னா பின்னமாக்கப்பட்ட வீட்டின் மேல் ஈராக் தேசியக்கொடி பறக்கிறது

ஆயிஷா தன் இரு குழந்தைகள் ஜினான், ஜிகா-வுடன் சிஞ்சாரில் உள்ள தனது வீட்டிலிருக்கிறார். 2014-ல் இவர்கள் ஐ.எஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பிரிக்கப்பட்டு விட்டனர். 2018-ம் ஆண்டு சிரியாவில் உள்ள இருவேறு அகதிகள் முகாம்களிலிருந்து ஆயிஷாவின் குழந்தைகள் மீட்கப்பட்டு இப்போது ஒன்றாக வாழ்கின்றனர்.

யாசிடி இனக்குழுவைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தை சீர்குலைக்கப்பட்ட காரின் மேல் விளையாடும் காட்சி. முகாம்களில் இருந்து தைரியமாக இங்கே திரும்பி வந்துவிட்டாலும் இவர்களின் வாழ்க்கை விளிம்பு நிலையில்தான் இருக்கிறது.

சிஞ்சார் மலைப்பகுதியிலிருந்து ஐ.எஸ் அமைப்பினரால் சீர்குலைக்கப்பட்ட நகரத்தின் காட்சி.

கட்டுரையாளர்: Marta Bellingreri & Alessio Mamo
தமிழாக்கம் : வரதன்
நன்றி : aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க