அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 11

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் பின்வரும் சுவாரசியமான நிகழ்ச்சி நடைபெற்றது. ஜார்ஜிய மொழிப் பாட வேளையில் கடைசி பத்து நிமிடங்கள் எஞ்சியிருந்தன. இது மூன்றாவது பாடவேளையாக இருந்தது. நாங்கள் வார்த்தைகளின் பகுப்பாய்வில் மூழ்கியிருந்தோம். நான் குழந்தைகளை நோக்கி ஒலிகளை “விட்டெறிய”, அவர்கள் “பிடித்தனர்”. திடீரெனப் பார்த்தால் வோவா கண்களை மூடியபடி ஒலிகளை “பிடிக்காமல்” மேசையில் சாய்ந்திருந்தான்.

“அவன் தூங்கி விட்டான்!” என்று வோவாவைச் சுட்டிக் காட்டியபடி தாம்ரிக்கோ கூறினாள்.

குழந்தைகள் சிரித்தனர். சத்தம் போட வேண்டாமெனக் குழந்தைகளிடம் சொல்லி விட்டு நான் வோவாவை நெருங்கினேன். அவன் கவலையின்றி உறங்கிக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் முன் வரை அவன் சுறுசுறுப்பாகச் சிரித்துக் கொண்டிருந்தான், மகிழ்ச்சியோடிருந்தான். மகிழ்ச்சியாலும் களைப்பேற்படலாம், சிறிதே கண்ணயர விருப்பமேற்படும். நான் என்ன செய்வது? சிறுவனை எழுப்பி, பாடவேளையில் தூங்கக் கூடாது என்று விளக்குவதா?

“குழந்தைகளே, ஒருவன் தூங்கும் போது இடையூறு செய்யக் கூடாது, ஏனெனில் தூக்கத்தின் போது மனிதன் தான் இழந்த சக்திகளை மீட்கிறான். எனவே, வோவாவை எழுப்பிவிடாதபடி அமைதியாகப் பாடம் படிப்போம் வாருங்கள்!” என்றேன் நான்.

நான் குரலைத் தாழ்த்தியபடி அவர்களை நோக்கி ஒலியலைகளை விட்டெறியத் துவங்கினேன்.

குழந்தைகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

அவர்கள் திடீரெனப் பெரும் அக்கறையுள்ளவர்களாக, மென்மையானவர்களாக மாறினர். ஒவ்வொருமுறை பதில் சொன்ன பிறகும், எங்கே வோவாவை எழுப்பி விட்டோமோ என்று அவனைப் பார்த்தார்கள். இடைவேளை வந்ததும் அரவமின்றி மெதுவாகத் தாழ்வாரத்திற்கு வந்தார்கள், யார் நாற்காலியை நகர்த்தினாலும் உரக்கப் பேசினாலும் அவர்களைக் கண்டிப்போடு பார்த்தனர்.

சில சமயங்களில் குழந்தைகள் களைத்துள்ளதைப் பார்த்ததும் இவர்களில் சிலர் கொட்டாவி விட்டனர், சோம்பல் முறித்தனர்- நான் அவர்களுக்கு தலையைக் குனிந்து, வசதியாக உட்காரும்படியும் கண்களை மூடிக் கொண்டு கதை கேட்கும்படியும் முன்மொழிவேன். கதையை மிக மெதுவான, சாந்தப்படுத்தும் குரலில் நான் சொல்வேன். முழு நிசப்தம் நிலவும், குழந்தைகள் ஒவ்வொரு வார்த்தையையும் கிரகித்தபடிக் கண்ணயர்வார்கள். இப்படிப்பட்ட ஐந்து நிமிட ஓய்விற்குப் பின் அவர்கள் இழந்த சக்தியை விரைவாக மீட்டதையும் பின் முன் போன்றே மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பாடங்களைத் தொடர்ந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

இந்த அனுபவம் எதைக் காட்டுகிறது? ஆறு வயதுக் குழந்தைகள் பள்ளி வாழ்க்கைக்குப் பழகுவது கடினமானது என்பதை ஒருவேளை இது காட்டுகிறதோ? இவர்களுடைய மூளை அறிவைப் பெறத் தயார். ஆனால் உட்கார்ந்த நிலையில் உடல் பலம் செலவாவதால் இவற்றை மீட்க விசேஷ வழிகள் தேவைப்படுகின்றன. மினி-பாடவேளைகள், வெவ்வேறுவிதமான வகுப்பு, பள்ளி இடைவேளைகள் போன்றவை குழந்தைகளின் களைப்பை அகற்றி இது ஏற்படாது செய்யும் வழிகளாகத்தான் என் நடைமுறையில் வந்தன.

படிக்க:
தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
♦ இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை !

விரைவில் மினி-பாடவேளைகள் தேவையிருக்காது என்று எண்ணுகிறேன். இவை பள்ளிக் கல்விக்குப் பழக்கப்படும் வாய்ப்பை குழந்தைகளுக்கு அளித்தன, பாடவேளையின் நேரத்தை மதிப்பிட எனக்குச் சொல்லித் தந்தன.

மனச்சாட்சியைத் தட்டியெழுப்பு

பத்து நிமிடப் பள்ளி இடைவேளைகளின் போது எனக்கு எப்போதும் வேலையிருக்கும். இந்தச் சமயங்களில் நான் அடுத்த பாடவேளைக்குத் தேவையானவற்றைக் கரும் பலகையில் எழுதுவேன், உதவி செய்யும் குழந்தைகளுடன் சேர்ந்து பாடத்திற்குத் தேவையானவற்றை எல்லா பெஞ்சுகளுக்கும் பகிர்ந்து அளிப்பேன், மீன் தொட்டியையும் பூந்தொட்டிகளையும் பராமரிக்க குழந்தைகளுக்கு உதவுவேன்.

ஆனால் இதைவிட முக்கியமான ஒரு வேலை உண்டு. இதன் உட்பொருளை முன் கூட்டியே கணிக்க முடியாது. அதாவது குழந்தைகளுக்கு நடுவராக இருக்க வேண்டும், அவர்களிடையே தோன்றும் பூசல்களைத் தீர்க்க வேண்டும், அவர்களோடு கலந்து பழக வேண்டும், உறவு முறைகளை ஒழுங்கமைக்க வேண்டும்.

இதோ இப்போது இதற்கு அவசியமேற்பட்டுள்ளது. இலிக்கோ, கோச்சா, எலேனா, நீக்கா ஆகியோர் என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

“நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள்?”

“இவை கடினமானவையா?”

“இவை என்ன என்று எனக்குத் தெரியும்.”

இலிக்கோவும் கோச்சாவும் சிவிங்கத்தையும் மிட்டாயையும் பகிர்ந்து கொண்டனர். இலிக்கோ மிட்டாயை உடனே வாயில் போட்டுக் கொண்டான், கோச்சா தன் சிவிங்கத்தைச் சிறுமிகளுடன் பகிர்ந்தபடி எனக்கும் நீட்டினான்.

“நன்றி!” என்றபடியே சிவிங்கத்தை வாங்கி மென்றேன். “மிகச் சுவையாக உள்ளது!”

“மிட்டாயும் சுவையாக உள்ளது!” என்கிறான் இலிக்கோ. “உங்களுக்கு வேண்டுமா?”

“நன்றி, வேண்டாம், என்னிடம் சிவிங்கம் உள்ளது.”

“ஆனால் மிட்டாய் சிறந்தது!” என்கிறான் இலிக்கோ, வாயிலிருந்து எஞ்சிய , துண்டை எடுத்து என் வாயருகே நீட்டுகிறான். “சாப்பிட்டுப் பாருங்கள்!” நான் விருப்பத்தோடு வாயைத் திறக்கிறேன்.

“நன்றி, இலிக்கோ! உண்மையிலேயே சுவையான சாக்லேட்.”

இது சுகாதாரக் கேடானது என்று சொல்லாதீர்கள்! இது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் வளர்ப்புப் பணிக்கு ஏற்றது: குழந்தைகள் தமக்கு விருப்பமான தின்பண்டங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள, என்னோடு நட்பு கொள்ள முயல்கின்றனர், இதற்காக ரொட்டித் துண்டை, திராட்சைக் குலையை, இன்ன பிறவற்றை நீட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன் சூரிக்கோ தாழ்வாரத்தில் என் கையில் ஒரு சாக்லேட்டைத் திணித்தான்.

“உனக்கு இருக்கிறதா?” என்றேன் நான்.

“எனக்கு வேண்டாம், இது உங்களுக்கு.”

சாக்லேட் வழவழவென்று இருந்தது. எனக்குத் தருவதா, தானே சாப்பிடுவதா என்று இதை கையில் வைத்தபடி அவன் நீண்ட நேரம் யோசித்தது எனக்கு நன்கு புரிந்தது.

“வா, பகிர்ந்து கொள்ளலாம்!” என்றேன் நான்.

“சரி!” என்று மகிழ்ந்தான் சூரிக்கோ.

நாங்கள் சாக்லேட்டைப் பகிர்ந்து கொண்டோம். பின் எங்களைச் சுற்றிலும் இருந்தவர்களுக்கும் பகிர்ந்தளித்தோம்…..

இப்படிப்பட்ட சம்பவங்களும் பள்ளியில் நடப்பதுண்டு: யாராவது கண்ணாடியை உடைப்பார்கள், புத்தகத்தைக் கிழிப்பார்கள், யாராவது யாரையாவது அடிப்பார்கள். இருவர், மூவர் அல்லது அதற்கும் அதிகமானோர் அங்கிருந்தால் அவர்கள் உடனே பரஸ்பரம் மற்றவர் மீது குற்றஞ்சாட்டத் துவங்கி தம்மை நியாயப்படுத்தத் துவங்குவார்கள். உண்மையில் பல சந்தர்ப்பங்களில் யாரைக் “குற்றவாளியாகக் கருதுவது என்று குழந்தைகளுக்குத் தெரியாது” என்பதை நான் நம்புகிறேன். தான் குற்றவாளியல்ல – அவ்வளவுதான். பெரியவர்கள் யார் குற்றவாளியென குழந்தைகளிடம் பெரிதும் தீவிரமாயும் கண்டிப்புடனும் விசாரித்து, ஒரு சாரர் சொல்வதை நம்பாமல் மறு சாரார் சொல்வதை நம்பி “குற்றம்” புரிந்தவருக்கு புத்திமதி சொல்வதும் தண்டிப்பதும் எனக்குப் பிடிப்பதில்லை.

தண்டிக்கப்பட்டவன் தவறிழைக்காதவனாக இருந்தால் என்ன செய்வது? அவனது “குற்றத்திற்காக” சொல்லப்பட்ட புத்திமதி அல்லது கொடுக்கப்பட்ட தண்டனை தன் காரியத்தைச் செய்யும், குழந்தையை எச்சரித்து அவன் இனி தவறிழைக்காதவாறு பார்த்துக் கொள்ளும் என்று நம்ப முடியுமா? இப்படி மட்டும் இருந்தால் இது ஆசிரியரியலில் குழந்தைகளின் சகலவிதக் குறும்புகளுக்கும் ஒரு சஞ்சீவி மருந்தாகத் திகழும். செய்யப் போகும் குறும்புகளுக்காக முன்கூட்டியே எல்லோரையும் தண்டித்து விட்டால் கண்டிப்பாக புத்திமதிகளைக் கூறிவிட்டால் எல்லா குழப்பங்களுக்கும் என்றென்றைக்குமாக ஒரு முடிவு கட்டி விடலாம். தான் தப்பு செய்யவில்லை என்று கருதும் ஒரு குழந்தையைக் குற்றஞ்சாட்டுவது ஆசிரியரியலில் தீய செயலாகும்.

இது இக்குழந்தையை எதிர்காலத்தில் தவறுகள் செய்யாமல் காப்பாற்றாது, ஆனால் தன்னை நம்பாத பெரியவர்கள், நண்பர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். தப்பு செய்தவனைத் தேடாமல், அவன் முன்னிலையில், அவன் பங்கேற்போடு ஒழுங்கை நிலை நாட்டி, நடந்ததை மதிப்பிடுவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன். தப்பு செய்தவர்களைத் தேடி கண்டிக்காமல் விடுவதன் மூலம் அவர்கள் மீண்டும் இதே மாதிரி செய்ய ஊக்கம் தருகிறோம் என்று யாராவது மறுப்புத் தெரிவிக்கக் கூடும். இல்லை, நான் இப்படிக் கருதவில்லை. இது குழந்தையின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும், செய்யும் காரியங்களுக்கான பொறுப்புணர்வை ஏற்படுத்தும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க