ணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தடுக்கும் பொருட்டு இருக்கும் சட்டங்களில் திருத்தம்கொண்டுவர, கடந்த மோடி ஆட்சியில் முக்கிய அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ‘மீ டூ’ இயக்கம் பரவலாகப் பேசப்பட்ட, கடந்த அக்டோபர் 2018-ல் இந்தக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், எவ்வித கொள்கை முடிவுகளையும் பரிந்துரைகளையும் செய்யாத இந்தக் குழு கலைக்கப்பட்டதாக, அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது.

இது ஊடகங்களில் வெளியாகி, எதிர்க் கட்சிகள் மற்றும் செயல்பாட்டாளர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளான நிலையில், தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா தலைமையில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

படிக்க:
♦ மோடி கண்காணித்த பெண்
♦ மோடியின் பொய்களும் புரட்டுகளும் – மாதவராஜ்

அமித் ஷா தலைமையில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு என்கிற செய்தி எழுத்தாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் பலரை ‘வியக்க’ வைத்துள்ளது. 2013-ல் குஜராத் மாநிலத்தில் அமைச்சராக இருந்தபோது, அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தி ஒரு இளம் பெண்ணை தனது ‘சாகேப்’-க்காக சட்டவிரோதமாக கண்காணித்ததாக அமித் ஷா மீது குற்றம்சாட்டு எழுந்தது. அதுகுறித்த தொலைபேசி உரையாடல்களையும் கோப்ரா போஸ்ட் இணையதளம் வெளியிட்டிருந்தது.

அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடிக்கு வலது கையாக இருந்த அமித்ஷாவினுடைய “சாகேப்”, மோடியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என்ற முணுமுணுப்பு அப்போது பலரிடமிருந்தும் வெளிப்பட்டது.

இவ்விவகாரம் வெளிவந்து நாறிய பிறகு, அந்தப் பெண்ணின் தந்தை தனது பெண்ணிற்குப் பாதுகாப்புக் கொடுக்கக் கோரி நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டதாகவும் அதனடிப்படையிலேயே அப்பெண்ணை அரசுத் தரப்பு பின் தொடர்ந்ததாகவும் சப்பைக் கட்டு கட்டப்பட்டது. இதற்கு ஆதரவாக பாஜக ஒரு கடிதத்தை வேறு வெளியிட்டது. அதன் மூலம் அமித்ஷா-வைத் தாண்டி மோடியும் இவ்விவகாரத்தில் உள்ளார் என்ற தகவலையும் சூசகமாக வெளியிட்டது.

விரைவில், இந்தப் பின் தொடர்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவ்விவகாரம் அப்படியே அமுக்கப்பட்டது.

இத்தகைய பின்னணி  உடைய அமித் ஷா-தான், பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவின் தலைவரா? என வினவும் பத்திரிகையாளர் ரானா அயூப், இந்தச் செய்தியைப் படித்தவுடன் சிரித்துவிட்டதாகக் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், சொராபுதீனின் மனைவி கவுசர் பீ மர்மமான முறையில் கொல்லப்பட்டதற்கும், சொராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டதற்கும் தொடர்புடையவர் அமித் ஷா என்பதையும் நினைவுகூர்ந்தார்.

“அரசின் இந்த முடிவு பெண்கள் உரிமைகள் குறித்து அவர்களுக்கு கிஞ்சித்தும் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. பொது உரிமைகளை அவமதிக்கும் ஒரு நபர், இஸ்லாமிய வெறுப்பைக் கொண்ட ஒரு நபர் தலைமை வகிப்பதால், எந்தப் பெண்ணும் இந்தக் குழுவை நம்பிக்கையோடு அணுக மாட்டார்கள்” என்கிறார் ரானா அயூப்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு அமித் ஷா தலைமை தாங்கப்போவதை கண்டித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

“சல்மான் கான், ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு தலைவராகவும் சஞ்சய் தத் போதைப் பொருள் மறுவாழ்வு மைய தலைவராகவும் பதவியேற்ற சம்பவங்களுக்குப் பின், அமித் ஷா பாலியல் துன்பறுத்தல் தடுப்பு குழுவுக்கு தலைவராகி உள்ளார்” என கேலி செய்கிறது இந்தப் பதிவு.

“ஒரு நினைவூட்டல், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இளம் பெண்ணை கண்காணித்தவர், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுவின் தலைவராகியிருக்கிறார்” என விமர்சித்துள்ளார் பத்திரிகையாளர் சந்தியா மேனன்.

“இந்தியாவில் துன்பப்படும் பெண்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கிறது. அமித் ஷா இனி அவர்களுடைய பாதுகாப்புக்காக போலீசை நியமிப்பார்” என பதிவிட்டுள்ளார் மன்தீப் சிங் பஜ்வா.

குஜராத் கலவரங்கள் குறித்து நூல் எழுதியுள்ள மற்றொரு பத்திரிகையாளர் ரேவதி லால், பெண் அமைச்சர்கள் இருக்க ஏன் ஒரு ஆணை இந்தக் குழுவின் தலைவராக நியமித்திருக்கிறது அரசு என கேள்வி எழுப்புகிறார்.  கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழு எந்தவித செயல்பாட்டிலும் ஈடுபடாமல் கலைக்கப்பட்டது. அரசுக்கு பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள் குறித்து எந்தவித அக்கறையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது எனவும் ரேவதி விமர்சிக்கிறார்.

“இங்கே ஏராளமான சட்டங்கள் உள்ளன. புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை. அதுமட்டுமில்லாமல் அமித் தன்னுடைய எதேச்சதிகாரத்துக்கு பெயர் பெற்றவர். மீ டு இயக்கம் என்பது பெண்களின் பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்பதாகும். அவர்கள் எந்தப் பெண்ணின் பிரச்சினையாவது கேட்டிருக்கிறார்களா? அவர்களுக்கு என்ன வேண்டும் என கேட்டிருக்கிறார்களா?” என காட்டமாகிறார் அவர்.


அனிதா
நன்றி: ஹஃபிங்டன் போஸ்ட்