காஷ்மீர் : மக்கள் விரோத நடவடிக்கையை அனுமதிக்க முடியாது | மக்கள் அதிகாரம்

காஷ்மீரை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பது, அம்மக்களை சிறுபான்மையாக்கி குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்குவது என்ற திட்டத்துடன்தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும், அவர்கள் ஒப்புதலின்றியும் திணிக்கப்படும் முடிவுகள் ஜனநாயக விரோதமானவை.. ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

பத்திரிகைச் செய்தி

06.08.2019

காஷ்மீரில் அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து, பள்ளி கல்லூரி, விடுதிகள் அனைத்தையும் மூடி, தகவல் தொடர்பை முற்றாக முடக்கி முழு ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அரசியல் சட்டப்பிரிவு 35A, 370 ஆகியவற்றை நீக்கி காஷ்மீர் மக்களின் எஞ்சி இருந்த உரிமைகளையும் பறித்திருக்கிறது மோடி அரசு.

காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அதன் மாநிலத் தகுதியை ஒழித்து மத்திய அரசின் நேரடி அடக்குமுறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை நிகழ்த்தியிருப்பதன் மூலம் மோசமான விளைவுகளுக்கு வித்திட்டிருக்கிறது மோடி அரசு.

அரசியல் சட்டத்தை திருத்தியது சரியா? தவறா?, அதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்கிற விவாதத்தில் பொருளில்லை. 1947-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் நாள் காஷ்மீர் மன்னர் ஹரிசிங்குக்கும், அன்றைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் இடையே ஏற்பட்ட இணைப்பு ஒப்பந்தம்தான் இன்றளவும் செல்லத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் படி ராணுவம், வெளியுறவு, நாணயம், தகவல் தொடர்பு தவிர வேறு எது குறித்தும் காஷ்மீர் அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு எந்தச்சட்டமும் இயற்ற முடியாது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஐ.நா-வில் காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாத சிக்கலாக நீடிக்கிறது. ஐ.நா உட்பட எந்த நாடும் காஷ்மீரை இந்தியாவின் பகுதியாக இன்றுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

1971-ல் நிகழ்ந்த இந்தியா, பாகிஸ்தான் போருக்குப் பின் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தம் (இந்திராகாந்தி – புட்டோ) இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனாலும் இரு நாடுகளுமே உள்நாட்டு பிரச்சினைகளைத் திசை திருப்ப காஷ்மீரை மையமாக வைத்து பகை உணர்வையும், போலி தேச வெறியையும் கிளப்பி வருகின்றன.

படிக்க:
மோடி அரசை விமர்சிப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள் : கிரண் மஜும்தர் ஷா !
♦ “ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !

காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபர் சமரசத்திற்கே இடமில்லை எனப் பேசி வந்தது மோடி அரசு. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் சமரசம் செய்து வைக்குமாறு மோடி கேட்டுக் கொண்டதை ட்ரம்ப் அம்பலப்படுத்தி விட்டார். இதனை மூடி மறைக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எனப் பேசப்படுவதை மறுப்பதற்கில்லை.

உள்நாட்டு பொருளாதார நிலை, முன் எப்போதும் கண்டிராத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வாகன தயாரிப்புத்துறையில் 10 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கட்டுமானத்துறையில் 8 லட்சம் கோடி முதலீடு முடங்கிக் கிடக்கிறது. பெரும் முதலாளிகள் தற்கொலை, நாட்டை விட்டு ஓடுவது என தொழில்துறை நிலை குலைந்து விட்டது. வரி பயங்கரவாதம் என கார்ப்பரேட் முதலாளிகளே அலறுகின்றனர்.

வருவாய் பற்றாக் குறையை ஈடுகட்ட ரயில்வே, விமான நிலையங்கள் சேலம் உருக்காலை ஆகியவற்றை தனியாருக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பாசிச பாஜக அரசு. ஆனாலும் வாங்குவாரில்லை. அகண்ட பாரதக் கனவோடு ஆட்டம் போடும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக, காஷ்மீர் மக்களின் உரிமைகளை நசுக்குவதை வெறியோடு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. காஷ்மீரை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தாரை வார்ப்பது, அம்மக்களை சிறுபான்மையாக்கி குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்குவது என்ற திட்டத்துடன்தான் இந்த ஆக்கிரமிப்பை அரங்கேற்றியிருக்கிறது.

ஜி.எஸ்.டி, நீட், தேசிய கல்விக் கொள்கை, அணை பாதுகாப்பு மசோதா என மாநில உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டு தேசிய புலனாய்வு முகமை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் போன்றவற்றை மேலும் கடுமையாக்கி பாசிச ஆட்சியை அரங்கேற்றி வருகிறது மோடி அரசு.

வருங்காலத்தில் வடகிழக்கு மாநில மக்களுக்கு 371 பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளும் பறிபோகலாம். நாடு முழுவதையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. காஷ்மீர் மக்களின் உரிமைப் பறிப்பு என்பது காஷ்மீர் மக்களின் பிரச்சனையோ, அல்லது இஸ்லாமிய சிறுபான்மையினரின் பிரச்சினையோ அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்குமான பிரச்சனை.

காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும், அவர்கள் ஒப்புதலின்றியும் திணிக்கப்படும் முடிவுகள் ஜனநாயக விரோதமானவை. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே மக்கள் விரோத பாசிச பாஜக கும்பலின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் குரலெழுப்புவதோடு பாசிசத்தை வீழ்த்துவதற்கும் அணி திரளவேண்டும்.

காளியப்பன்
மாநில பொருளாளர்
99623 66321