குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 02
முதல் பாடநூல்களை உருவாக்கும் கோட்பாடு
ஒரே பாடத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கும்படி நான் குழந்தைகளுக்குச் சொல்லவில்லை. படிக்கும் பாடம் இடையறாது மாற்றப்படாவிடில் படிக்கும் பழக்கம் நன்கு வராது என்பது எனது உறுதியான நம்பிக்கை. பல்வேறு நூல்கள், கட்டுரைகளிலிருந்து வெவ்வேறு விதமான விஷயங்களை அறிந்து கொள்ளதான் படிப்பு தேவையே தவிர தேவையற்ற ஒரே வாசகத்தைத் திரும்பத் திரும்பப் படிப்பதற்காக அல்ல.
எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்த அனுபவம், ஆறு வயதுக் குழந்தைகளுக்கு முதல் பாடநூலை எப்படி சிறப்பாக உருவாக்குவது என்பது சம்பந்தமாக சில கருத்துகளை எனக்குச் சொல்லித் தந்தது. ஆறு வயதுக் குழந்தைக்கு ஒரே மாதிரியான பாடங்கள் அலுப்பு தட்டச் செய்யும், நீண்ட காலமாக – ஒரு கல்வியாண்டு பூராவும் – ஒரே நூலைப் பயன்படுத்தினால் அது அவனுக்குச் சலிப்பேற்படுத்தும். சிறுவர்களுக்கான தாய்மொழிப் பாடநூல் நான்கு நூல்களைக் கொண்டதாயிருந்தால் நல்லது. முதல் நூல் குழந்தையைப் பேச்சு யதார்த்த உலகிற்கு இட்டுச் செல்லும், இரண்டாவது நூல் படிப்பு ரகசியங்களைக் காட்டும், மூன்றாவது, நான்காவது நூல்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க உதவும். நான் முதல் நூலிலிருந்து துவங்குவேன். இதைக் கற்றுத் தேர்ந்ததும் “’பார்த்தீர்களா, நாம் வளர்ந்து விட்டோம், இப்போது இரண்டாவது நூலுக்குச் செல்வோம்” என்று கூறி இரண்டாவது நூலுக்குச் செல்வேன். இதே மாதிரி தொடரலாம். குழந்தையை இந்நூல்கள் சந்தோஷப்படுத்துமா? பெரும் சந்தோஷத்தைத் தரும். தான் எப்படி வளர்ச்சியடைகிறோம், எப்படி முன்னோக்கி நடைபோடுகிறோம் என்று குழந்தைக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு முறையும் குழந்தையிடம் புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வளரும்.
புதியவற்றை அறியும் மகிழ்ச்சி எனும் கோட்பாடுதான் இந்த நூல்களின் அடிப்படையாகத் திகழ வேண்டும். ஆம், மகிழ்ச்சிக் கோட்பாடு! ஆறு வயதுக் குழந்தைகளுக்கான முதல் பாடநூல்களில் நிறைய நகைச்சுவையும், குழந்தை தனது நேரத்தை நன்கு செலவிடவல்ல பல சுவாரசியமான கேள்விகளும் பயன்மிகு ஆலோசனைகளும் (உதாரணமாக, சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாமான்களை எப்படிச் செய்வது, பெற்றோர்களை எப்படி சந்தோஷப்படுத்துவது, அம்மாவிற்கு எப்படி உதவுவது) அடங்கியிருக்க வேண்டுமென என் அனுபவம் காட்டுகிறது. ஓவிய ஒலியெழுத்துப் புதிர்கள், குறுக்கெழுத்து புதிர்கள், பல்வேறு விதமான விளையாட்டுகள், விடுகதைகள், கடகடவென சொல்லவல்ல வாசகங்கள் போன்றவை இவற்றில் இருக்கலாம். இதில் மகிழ்ச்சிகரமான, புத்திசாலித்தனமான கவிதைகளும் கதைகளும் இருக்க வேண்டும். பள்ளிக்கு வருவதற்கு முன்னரே படிக்கக் கற்றுக் கொண்ட அல்லது படிப்பு வேகத்தில் முன்னிற்கும் குழந்தைகளுக்கான பக்கங்களைச் சேர்க்க நான் அஞ்ச மாட்டேன்.
சுயமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை – இந்த அடிப்படையில் தான் புதியவற்றை அறிந்து கொள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள நாட்டத்தை வளர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பாடநூல் இருந்தால் குழந்தைகளுக்கு அடிக்கடி பின்வருமாறு சொல்லலாம்:
“விருப்பமான புதிரைப் போடுங்கள்… ஏதாவது ஒரு கவிதையைப் படியுங்கள். உங்களுக்கு விருப்பமான கதையைப் படியுங்கள். பின்னர் எல்லோரும் சேர்ந்து இதைப் பார்ப்போம்!” அப்போது வகுப்பில் காரியரீதியான பேச்சு நடக்கும்!
படிக்க:
♦ உலக புத்தக தினம் : புத்தக வாசிப்பு – பலன்கள் பதினைந்து
♦ ரோஹித் வெமுலா முதல் நஜீப் வரை : தீவிரமடையும் பார்ப்பன பாசிசம்
குழந்தைகள் படிப்படியாகப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வழிகோலுவதே இந்நூல்களை உருவாக்குவதற்கான முக்கிய நிபந்தனையாகும்.
எழுத்துகளே! உமக்கு நன்றி!
“குழந்தைகளே, வணக்கம்!… நீங்கள் இன்று அலங்காரமாக ஆடையணிந்திருக்கின்றீர்களே! என்ன விஷயம்?”
“நீங்களும் தான் அழகாக ஆடையணிந்திருக்கின்றீர்கள்!”
“இன்று விழாவாயிற்றே!”
“நாம் எல்லா எழுத்துகளையும் கற்றுக் கொண்டு விட்டோம்!”
“இன்று விருந்தினர்கள் வருகின்றனர்!”
“தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் பாராட்டுதல் எழுதப்பட்டுள்ளதை நான் படித்தேன்…. நமக்குப் படிக்கவும் எழுதவும் தெரியும் என்பதற்காக நம்மைப் பாராட்டுகின்றனர்.”
“எனக்கு புத்தகம் படிக்கத் தெரியும்.”
“இன்று கடைசி எழுத்தைப் பார்ப்போம். கடைசி எழுத்துள்ள பக்கத்தைத் திறவுங்கள்!”
சின்னஞ்சிறு பாத்தா எல்லா எழுத்துகளையும் படித்த பின் மகிழ்ச்சியோடு வீட்டிற்கு ஓடிவந்து “பாட்டி, நான் உனக்குப் படிக்கச் சொல்லித் தரட்டுமா, இது மிகவும் சுலபம்!” என்று கூறியது பற்றிய கதையைக் குழந்தைகள் படிக்கின்றனர்.
“சரி, இப்போது அடுத்த கதையைப் படியுங்கள்!”
“இனி பக்கங்கள் இல்லை, தீர்ந்து விட்டது.”
“இல்லையா?”
“ஆம், நாங்கள் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டோம்.”
“முற்றிலுமாக முடித்து விட்டோம்…” மீண்டும் மகிழ்ச்சி ஆரவாரம்.
“அப்படியெனில் பாடநூலை மூடுங்கள்….. உங்களுக்கு என்ன தெரியுமென பார்ப்போம் வாருங்கள்!”
“இது எங்களுக்கு அழகிய தாய்மொழி எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்தது.”
“படிக்கவும் எழுதவும் சொல்லித் தந்தது!”
“தாய்மொழியில் சரியாகப் பேசக் கற்றுக் கொண்டோம்!”
“எங்களுக்கு அறிவைத் தந்தது!”
“அன்பாக இருக்கவும் நட்புக் கொள்ளவும் சொல்லித் தந்தது!”
“படிக்க விரும்பவும்… புத்தகங்களை நேசிக்கவும் சொல்லித் தந்தது!”
“பெற்றோர்கள் மீது மரியாதை செலுத்தச் சொல்லித் தந்தது!”
“நாகரிகமாகப் பழக சொல்லித் தந்தது!”
“நமது தாய் நாடு எப்படிப்பட்டதென சொல்லித் தந்தது!”
“அதில் நிறைய சிரிப்பான, மகிழ்ச்சியான படங்கள் உள்ளன.”
“பல்வேறு புதிர்களும் பாடல் வாசகங்களும் உள்ளன.”
“இப்புத்தகத்தின் மீது எனக்குப் பெரும் விருப்பம். இதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல நீங்கள் அனுமதித்த போது இதை நான் தலையணை அடியில் வைத்துக் கொண்டு தூங்கினேன்.”
“நான் இதை எல்லோருக்கும் காட்டினேன்.”
“இப்போது குனிந்து, கண்களை மூடுங்கள்” என்று நான் குரலைத் தாழ்த்திக் கூறுகிறேன். “உங்களுடைய முதல் புத்தகம் உங்களுக்குப் பிடித்துள்ளது. அப்படித்தானே!”
“ஆம்” என்று மெதுவாகச் சொல்கின்றனர் குழந்தைகள்.
“நீங்கள் இப்புத்தகத்திற்கு நன்றி சொல்ல விரும்புகின்றீர்களா?”
“ஆம்!” என்கின்றனர் குழந்தைகள்.
“உங்கள் நன்றியை எப்படிப்பட்ட ‘வார்த்தைகளின்’ மூலம் தெரிவிப்பீர்களென யோசியுங்கள்!”
ஒரு நிமிட மௌனம். குழந்தைகள் கரங்களை உயர்த்துகின்றனர்.
பல்வேறு நூல்கள், கட்டுரைகளிலிருந்து வெவ்வேறு விதமான விஷயங்களை அறிந்து கொள்ளதான் படிப்பு தேவையே தவிர தேவையற்ற ஒரே வாசகத்தைத் திரும்பத் திரும்பப் படிப்பதற்காக அல்ல.
மாரிக்கா: “ ‘என் அன்புப் புத்தகமே! உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்று நான் சொல்வேன்.”
லேரி: புத்தகத்தை தலைக்கு மேலாக உயர்த்தியபடி “மிக, மிக, மிக நன்றி!”
தீத்தோ: “என் அன்பு நண்பனே! நான் உன்னை என்றுமே மறக்க மாட்டேன்! உனது அட்டையை நாசப்படுத்தியதற்கு, பக்கத்தைக் கிழித்ததற்கு மன்னித்து விடு! புத்தகங்களைக் கவனமாகப் பேணிக் காப்பேன் என்று உறுதி தருகிறேன். நீ உண்மையான மனிதனைப் போன்றவன்!”
கீயா: “நான் நிறைய படிப்பேன், நூல்களை நேசிப்பேன் என்று கூறி உனக்கு நன்றி சொல்கிறேன்.”
மாயா: “எங்கள் அன்பு முதல் புத்தகமே! நாங்கள் ஒருவேளை உன்னை இம்சித்திருக்கலாம், எங்களுக்குப் படிப்பது கடினமாக இருந்தது, நீ அனேகமாக எங்கள் மீது கோபம் கொண்டிருக்கலாம்! ஆனால் நீ அன்பான புத்தகம். நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் நேசிக்கின்றோம். எப்போதும் உன்னை மறக்க மாட்டோம்!”
நீயா: “நீ சூரியன், நீ நூல்களின் ராணி! நீ என்றென்றும் நீடூழி வாழ்க!”
இலிக்கோ: “நான் பள்ளிக்கு வந்த போது தாய்மொழி எனக்கு நன்றாகத் தெரியாது. இந்தப் புத்தகம் தாய்மொழியில் நன்றாகப் படிக்கச் சொல்லித் தந்தது. எனவே, நான் இதை மிகவும் நேசிக்கிறேன்!”
சான்த்ரோ: “நீ மிகவும் நல்ல, நேர்மையான, மிகவும் அன்பான புத்தகம். நீ எல்லோருக்கும் தாய்மொழியைச் சொல்லித் தருகிறாய், எனவே எல்லோரும் உன்னை நேசிக்கின்றனர். நானும் உன்னை நேசிக்கிறேன்!”
தாம்ரிக்கோ: “நீ புத்திசாலியான புத்தகம், எங்களுக்கும் நீ இதைச் சொல்லித் தந்தாய். உனக்கு நன்றி!”
சாஷா: (மெளனமாக புத்தகத்தைப் பார்த்தபடி நின்று, பின் மெதுவாகச் சொல்ல ஆரம்பிக்கின்றான்) “இந்தப் புத்தகம் எழுத்துகளைக் கற்பித்தது, படிக்கச் சொல்லித் தந்தது. ஒருவனுக்குப் படிக்கத் தெரிந்தால் அவன் ஏராளமானவற்றைக் கற்றுக் கொள்வான், ஏனெனில், புத்தகங்களில் எல்லா விஞ்ஞானங்களும் அடங்கியுள்ளன என்று என் அம்மா கூறியிருக்கின்றாள். இது ஆசிரியராகத் திகழும் புத்தகம். நானும் இதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், இதை நான் நேசிக்கிறேன்!”
“உங்களுடைய முதல் புத்தகத்தை விட்டுப் பிரிய வருத்தமாயுள்ளதா?”
ஒரே ஏகோபித்த குரலில்: “ஆமாம், மிகவும் வருத்தமாயுள்ளது!”
படிக்க:
♦ நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்
♦ மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?
“அனேகமாக நீங்கள் இல்லாமல் அதற்கும் வருத்தமாயிருக்கும். வேண்டுமானால் இதைப் பள்ளியின் பரிசாக வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்!”
ஒரே மகிழ்ச்சி! பலர் புத்தகத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்கின்றனர்,
இது மிக முக்கிய நூல்.
“ ‘என்னுடைய புத்தகம்!’ என்று மெதுவாகக் கூறுகிறாள் தேக்கா.
மாக்தா புத்தகத்திற்கு முத்தம் தருகிறாள்.
சூரிக்கோ புத்தகத்தைத் திறந்து, ஏதோ முதன் முதலாகப் பார்ப்பதைப் போல் புரட்டுகிறான்.
இராக்ளி கிழிந்த அட்டையைச் சரிசெய்து, பக்கங்களின் மூலைகளைத் தடவித் தருகிறான்.
(தொடரும்)
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!