கேள்வி : //தமிழகத்தில் தேவேந்திர குல மக்களின் தற்போதைய பட்டியல் வெளியேற்ற கோரிக்கை பற்றிய உங்களுடைய கருத்து என்ன?//

-திருமலைகுமார்

ன்புள்ள திருமலைகுமார்,

பட்டியல் இன மக்கள் என்ற பிரிவிலிருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தேவேந்திர குல வேளாள மக்களைச் சேர்ந்த சிலரிடமிருந்து ஏன் வருகிறது? அது சாதி – தீண்டாமை எதிர்ப்பு – ஒழிப்பை முன் வைத்து வரவில்லை. ஆண்ட பரம்பரை, பார்ப்பனமயமாக்கம் மற்றும் பாஜக-வின் மறைமுக ஆதரவோடும்தான் வருகிறது.

பள்ளர்கள் தமிழகத்தை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள், பின்னாளில் ஆளப்படும் பரம்பரையாக வீழ்ந்து போனார்கள் என்று சிலர் முன்வைக்கிறார்கள். இதை பள்ளர் பிரிவைச் சேர்ந்த சில அறிஞர்கள் மட்டுமல்ல ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தோரும் தத்தமது சாதிகள் ஆண்ட பரம்பரை என்றே கூறுகின்றனர். ஆண்ட பரம்பரை வரலாற்றின் படி ஒரு அரசன் அவனது வாரிசுகள் மட்டுமே ஆண்டிருக்க முடியும். மற்றவர்கள் குடிமக்களாகவோ அடிமைகளாகவோ மட்டுமே வாழ்ந்திருக்க முடியும். குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அனைவரும் ஆண்டார்கள் என்று பேசினால் ஆள்வதற்கு இந்த ஒரு பூமி போதாது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் இப்படி கூறுகிறார்:

“தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படும் மக்கள், பூர்விக வேளாண் குடிமக்கள். இவர்கள் மருத நிலத்தின் மக்கள் ஆவர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆதி திராவிடர் பிரிவில் தேவேந்திர குல வேளாளர்களை சேர்க்கக்கூடாது என்று அப்போதே இந்த சமுதாயத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், வலுவான சமுதாய தலைமை இல்லாத காரணத்தால் தேவேந்திர குல வேளாளர் சமூகம் பட்டியல் சாதிப் பிரிவில் சேர்க்கப்பட்டது. பட்டியல் சாதிப் பிரிவில் சேர்க்கப்பட்டதால் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் தனது பூர்வீக அடையாளத்தை இழந்துள்ளது.

ஆதி திராவிடர் என்றும், ஹரிஜன் என்றும் இந்த சமூகம் கொச்சைப்படுத்தப்பட்டது. இட ஒதுக்கீடு என்ற பெயரில் இந்த சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டது. அதனால், இந்த பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நீக்க நாங்கள் கோருகிறோம்.

படிக்க:
வேதாரண்யம் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு : திட்டமிட்ட சதி !
♦ கருத்துக் கணிப்பு : புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் அடையாளம் எது ?

சாணார் என்றும் கிராமணி என்றும் அழைக்கப்பட்டவர்களை நாடார்கள் என்று அழைக்கிறார்கள். கள்ளர், மறவர், அகமுடையார் என்று அழைக்கப்பட்டவர்களை முக்குலத்தோர் என்றழைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. வன்னியர்கள் என்று அழைக்கப்பட்டவர்களை சத்திரியர்கள் என்றழைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதே போல், ஏழு பட்டப்பெயர்கள் கொண்ட எங்கள் சமூகத்தை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க நாங்கள் கோருகிறோம். எங்கள் சமுதாயத்தின் அடையாள மீட்புக்காக நாங்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.

பெரும்பான்மை சமூகத்தினருடன் நாங்கள் இரண்டறக் கலப்பதற்கு பட்டியல் சாதிப் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வெளியேற வேண்டும்.”

கிருஷ்ணசாமி கோரிக்கையின் படி பட்டியல் இன மக்களிடமிருந்து பள்ளர்களை விடுவித்து விட்டு இதர பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்க வேண்டுமாம்.

Dr Krishnasamy
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் கிருஷ்ணசாமியும் அவரது மகனும் (கோப்புப் படம்)

கிருஷ்ணசாமியின் வாக்குமூலத்தின் படி பள்ளர்கள் வேளாண் குடி மக்கள். எனில் வட தமிழகத்தில் விவசாயக் கூலிகளாக பணியாற்றும் பறையர் இன மக்கள், அதே போன்று மேற்கு தமிழகத்தில் பணியாற்றும் அருந்ததி இன மக்களெல்லாம் வேளாண் குடி மக்களில்லையா? இன்றும் தஞ்சை, கீழத்தஞ்சை மாவட்டங்களில் நிலமற்ற விவசாயக் கூலிகளாக அதிகம் பணியாற்றுவது பள்ளர் மற்றும் பறையர் இன மக்கள்தான்.

ஒரு சில ஊர்களில் பள்ளர்களுக்கு நில உரிமை இருக்கிறது என்றாலும் பெரும்பான்மையினர் இன்னும் கூலிகளாகத்தான் வாழ்கின்றனர். அதே போன்று பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோரிலும் விவசாயக் கூலிகள் இருக்கத்தான் செய்கின்றனர். கிருஷ்ணசாமியின் கணக்குப்படி கூலி வேலை செய்பவர்கள் விவசாயிகள் இல்லைபோலும்!

ஆதிக்க சாதிகளின் சாதி வெறியை, தீண்டாமை ஒடுக்குமுறையை கண்டிப்பதற்கு பதில் நானும் ஆதிக்க சாதிகளின் பட்டியலில் சேருகிறேன், இனிமேல் என்னை ஆதி திராவிடன், ஹரிஜன் என்று அழைக்காதீர்கள் என்று கேட்கிறார் கிருஷ்ணசாமி. அவர் அப்படிக் கேட்டு அதன்படி அரசு நடப்பதாக வைத்துக் கொண்டாலும் இதர ஆதிக்க சாதிகள் பள்ளர் இன மக்களை சரிக்கு சமமாக நடத்துவார்கள் என்று கிருஷ்ணசாமி எதிர்பார்க்கிறார். அது நடப்பதாக இருந்தால் இந்தியாவில் சாதி வேறுபாடுகளும், தீண்டாமையும் இருக்கவே முடியாது.

படிக்க:
கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !
♦ தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

பட்டியல் பிரிவில் பள்ளர்களை சேர்த்ததாலேயே தாம் இகழப்படுகிறோம் என்று பேசுகிறார் கிருஷ்ணசாமி. இந்தியாவில் தீண்டாமை என்பது ஏதோ ஒரு பேப்பரில் இருக்கும் நிர்வாக விசயத்தால் வந்து விடவில்லை. அது சமூக பொருளாதார அரசியல் வாழ்வில் பௌதீக சக்தியாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பான்மையோர் நிலமின்றி வாழ்வதே முதல் பிரச்சினை. தீண்டாமை மற்றும் அசமத்துவ விசயங்களின் அடிப்படையே இந்த நிலமின்மைதான். உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோரிக்கை நிறைவேறும் போதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் தமது அடிமை நிலையை எதிர்த்துப் போராடும் ஊக்க சக்தியைப் பெற முடியும். பொருளாதார ரீதியாக ஆதிக்க சாதிகளை சார்ந்து நிற்கும் இன்றைய நிலையில் இருந்து அவர்கள் ஊரகப் பகுதிகளில் சமத்துவப் போராட்டங்களை நடத்துவது வெகு சிரமம். அதே போன்று இந்தப் போராட்டத்தில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களையும் இணைக்க வேண்டும்.

VENMANI
கீழத்தஞ்சை வெண்மணி தியாகிகள் நினைவுத் தூண்.

கீழத்தஞ்சையில் கம்யூனிச இயக்கம் பண்ணையாதிக்கத்தை எதிர்த்து போராடிய போது இந்த இணக்கத்தை கொண்டு வந்தது. மேற்கு வங்கத்தில் நிலவுடமை கணிசமான அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே அங்கே ஆதிக்க சாதி ஒடுக்குமுறை அதிகம் இல்லை.

கிருஷ்ணசாமி போன்ற இட ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த முன்னேறிய பிரிவினருக்கு பட்டியல் இன மக்கள் என்ற பதம் உறுத்துகிறது. தம்மைப் போன்று இன்னும் சில சாதி மக்கள் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களே அவர்களெல்லாம் சாதி தீண்டாமையினால் பாதிக்கப்படுவார்களே என்ற சமூக உணர்ச்சி இல்லை. பட்டியல் பிரிவே வேண்டாம் என்று அவர் கோரியிருந்தால் கூட அதில் ஒரு சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக, பொருளாதார வாழ்வில் இம்மக்களுக்கு இடமில்லை என்ற காரணத்தினால்தான் ஆங்கிலேயர் காலத்தில் பட்டியல் பிரிவு உருவாக்கப்பட்டது.

அதன்படியான இட ஒதுக்கீடு இன்றும் தொடர்கிறது. ஏதோ கிராமத்திற்கு ஓரிருவர் முன்னேறுவதற்காகவாவது இந்த இட ஒதுக்கீடு வழி செய்கிறது. கிருஷ்ணசாமி போன்றோர் முன்னேறிய பள்ளர்களை வைத்து பாஜக உதவியுடன் ஒரு அரசியல் சக்தியாக மாறுவதற்கு இந்த கோரிக்கையை கையில் எடுத்திருக்கிறார்கள். சாதி அரசியலை வைத்து வட இந்திய மாநிலங்களில் அரசியல் செய்யும் பாஜக இங்கே முதல் கட்டமாக கிருஷ்ணசாமியை தெற்கிலும், பா.ம.க ராமதாஸை வடக்கிலும் இறக்கியிருக்கிறது. இதை வைத்து அமித்ஷா ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருப்பார்.

புதிய தமிழகம் அல்லாத பள்ளர் இன மக்கள் இக்கோரிக்கையை பொதுவில் ஏற்கவில்லை. இட ஒதுக்கீடும், பட்டியல் பிரிவும் நீடிக்க வேண்டும் என்றே அவர்கள் கருதுகிறார்கள். அப்படி கருதுகிறவர்கள் புதிய தமிழகத்தால் சில இடங்களில் பகிரங்கமாக மிரட்டப்படுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சமுதாயத் துரோகி என வசைபாடப்படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்தோடு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முன்வைக்கும் இக்கோரிக்கையை யாரும் ஏற்க இயலாது.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்