இன்று (செப்டம்பர் 11) சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரன் தேவர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள்.

தனது கல்லூரி வாழ்க்கையில் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற இவர் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1950 ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவர், தனது சமூக மக்களின் மீதான பிள்ளைமார் சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு இராணுவ வேலையைத் துறந்தார். “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் துவங்கினார்.

அக்காலகட்டத்தில் முக்குலத்தோர்களால் ஒடுக்கப்பட்டோர்களில் நாடார் சாதியினரும் இருந்தனர். இவர்களையும் இணைத்துக் கொண்டு சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தினர். ஆதிக்க சாதியினரின் சொல்லொன்னா வன்முறைகளைத் தாங்க முடியாது படை திரட்டி எதிர்த் தாக்குதல்களையும் நடத்தினார். 1957-களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்கச் சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவருக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த அவரின் அடியாட்களால் கொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன்.

இமானுவேல் சேகரன் தலைமையில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்த பள்ளர் மக்களிடையே, “தேவேந்திர குல வேளாளர்” என்ற பெயரில் ஆதிக்க சாதிவெறியை ஊட்டும் வேலையை ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றவர்களின் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பல் செய்து வருகிறது.

எனவே, இந்த பாசிசக் கும்பலைப் புறக்கணித்து சாதியத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுடன் பள்ளர் சமூக மக்கள் இணையவேண்டியது உடனடித் தேவையாக உள்ளது. இதை வலியுறுத்தும் விதமாக கீழ்க்கண்ட கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

இந்துத்துவ பாசிசத்தின் இருமுனைக் கத்தி:
பலிகடாவாக்கப்படும் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’!

ண்மைக்காலமாக, தென்மாவட்டங்களில் அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் ஒரு புதிய போக்கை வெளிப்படுத்துகின்றன. 90-களில் நடைபெற்றதைப் போல, மீண்டும் இப்பகுதிகளில் சாதிய மோதல்களை தூண்டிவிட்டு, அதன் மூலம் சாதி முனைவாக்கத்தை ஏற்படுத்துவதற்கும்; அதை தனது இந்துத்துவ பாசிச நிகழ்ச்சிநிரலுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயற்சித்துவருகிறது.

இச்சாதிவெறித் தாக்குதல்களில் பெரும்பாலானவை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைபெற்றவை. கடந்த ஆகஸ்டு மாதத்தில், நெல்லை மாவட்டத்தில் மட்டுமே 14 சாதியப் படுகொலைகள் பதிவாகியுள்ளன. ஆனால், ஆளும் வர்க்க ஊடகங்கள் இவற்றில் பெரும்பாலானவற்றை, சாதியத் தாக்குதல்களாக பதிவு செய்யாமல் முன்விரோதம், தனிநபர் மோதல் என்ற வகைகளில் சித்தரித்தன.

இந்த சாதியத் தாக்குதல்கள் மீது தி.மு.க. அரசு காட்டிவரும் அலட்சியப் போக்கும் ஊடகங்களின் பாராமுகமும் தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான சூழலை பொது விவாதத்திற்கு கொண்டுவந்துவிடாமல் தடுத்து வந்தன. ஆனால், அதையும்  மீறி இப்பிரச்சினை குறித்து பேசியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளும் வகையில், சாதிவெறிப் படுகொலைகள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நெல்லை மணிமுத்தீஸ்வரத்தில், ஆறு பேர் கொண்ட கும்பல் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மனோஜ், மாரியப்பன் என்ற இரண்டு இளைஞர்களை வழிமறித்து, அவர்களைத் தாக்கி, நகைகள், செல்போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளது. மேலும், அவர்களது சாதியை விசாரித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை அறிந்தவுடன், வெறிகொண்டு மீண்டும் அந்த இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளது; அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

இதே மணிமுத்தீஸ்வரத்தில், தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள், ஆதிக்கச் சாதிவெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.


படிக்க: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்? | சிறுநூல்


கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகிலுள்ள மணக்கரையில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க, மணி என்ற முதியவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, அருகிலுள்ள வேப்பமரத்து அடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரை, எவ்வித முன்விரோதமும் இல்லாத நிலையில், இருசக்கர வாகனத்தில் திடீரென்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றது.

தென்மாவட்டங்களில் அதிகரித்துவரும் இதுபோன்ற தாக்குதல்கள், பெரும்பாலும் தேவர் சாதிவெறியர்களால், தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களும் கூட அவ்வாறானவையே.

தென்மாவட்டங்களில் தற்போதுள்ள சமூகச் சூழலைத் தொகுத்துப் பார்க்கும்போது, இந்துமதவெறிக் கும்பல், தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக மேற்கொள்ளும் சதிச் செயல்களுக்கு பலிகடாவாக்கப்படும் முக்கியமான சமூகமாக, தேவேந்திர குல வேளாளர் சமூகம் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஏனென்றால் இப்பிரச்சினையில், ஒருபக்கம் நிற்பது தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது தாக்குதல்களை ஏவிவரும், சில ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டு – தேவர் சாதிவெறி அமைப்புகள்; மறுபக்கம் நிற்பது, இம்மக்களின் ‘காவலர்களாக’ தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், அதே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஏஜெண்டுகளாக செயல்படக்கூடிய ஜான் பாண்டியனும் கிருஷ்ணசாமியும். இந்த இருமுனைக் கத்தியால் குத்துப்பட்டுக் கொண்டிருப்பது, தேவேந்திர குல வேளாளர் மக்கள்தான்.

சாதிவெறி இல்லையாம்! கஞ்சா போதையாம்!

தென்மாவட்டங்களில் திட்டமிட்டு உருவாக்கப்படும் சாதிவெறித் தாக்குதல்களை, ஆரம்பத்தில் கண்டும் காணாமல் விட்டுவந்த ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும், தற்போது அதுகுறித்து கருத்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பல ஜனநாயகச் சக்திகளும் இப்பிரச்சினை தொடர்பாக எச்சரித்து ஆர்ப்பாட்டங்களையும் பிரச்சாரங்களையும் தொடர்ச்சியாக செய்துவருகின்றன. இந்நிலையில் இனிமேலும், இப்பிரச்சினைக்கு முகம்கொடுக்காமல் இருந்தால், தன் சாதி மக்களிடமே தாம் அம்பலப்பட்டு போய்விடுவோம் என்பதால், சம்மந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகளே களமிறங்கியுள்ளார்கள்.

“தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற கட்சியை நடத்திவரக்கூடிய ஜான் பாண்டியன், தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து, நவம்பர் 20-ஆம் தேதி நெல்லை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்.

இவ்வன்முறைகள், ஆர்.எஸ்.எஸ்-ஆல் கட்டுப்படுத்தப்படும் ஒருசில தேவர் சாதிவெறி அமைப்புகளால், திட்டமிட்டே நடத்தப்படுபவை என்று நாம் சொல்கிறோம். ஆனால், ஜான் பாண்டியன் கடந்த மாதம் 15-ஆம் தேதி இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா?

“பட்டியலின மக்களைக் குழப்புவதற்காக, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை மட்டும் குறிவைத்து, இளம் அப்பாவிகளை கொலை செய்வதை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது”.

“தேவரும் தேவேந்திரரும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் கொலை செய்தவர்களுக்கும் இடையே ஏதாவது முன்விரோதம் இருக்கிறதா என்றால் அப்படி இல்லை; அப்போ எப்படி இது சாதியாகும்?

கஞ்சா அதிகமாக நடமாடுகிறது; … .. கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான். நத்தத்தில் நடந்தது, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான்; மணிமுத்தீஸ்வரத்தில் நடந்தது, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான்; இப்போ நடந்த மணக்கரை மணி, கஞ்சா குடிச்சிட்டுதான் வெட்டியிருக்கான். கஞ்சா போதையில் அதிகமாக கொல செஞ்சிருக்கான். அவ்வளவுதான்”

ஒரு பத்திரிகையாளர் இடைமறித்து கேட்கிறார்: “அப்போ ஏன் எல்லா இடங்களிலும் தேவேந்திரர்களே வெட்டப்படுகிறார்கள்?”

அதற்கு ஜான் பாண்டியன் அளித்த பதில்: “அந்தப் பகுதிகளில் தேவரும் தேவேந்திரரும் மட்டும்தான் இருக்காங்க; வேற சாதி கிடையாது. வடகரை, கீழநத்தம், ஒவ்வொரு பகுதியிலயும் நீங்க ஆராய்ஞ்சு பார்த்தீங்கன்னா, அப்படித்தான் இருக்காங்க… எதார்த்தம் என்னவோ அத பார்க்கனும்; சும்மா சித்தரிக்கக் கூடாது!”

“தேவேந்திர குல வேளார்களின் குலதெய்வமே”, “எங்களின் இதயமே” என்று ஜான் பாண்டியனுக்கு போஸ்டர் ஒட்டும் அச்சமுதாய மக்களுக்கு ஜான் பாண்டியன் அளிக்கும் பதில் இதுதான்!

இதனை சாதிவெறிப் படுகொலை என்று சித்தரிக்கக் கூடாது, வழக்கமாக நடக்கும் கஞ்சா போதைக் கொலைகள்தான் என்றால், பிறகு எதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்; அதில் எதற்கு, “தேவேந்திர குல வேளாளர்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள்” என்று தலைப்பு. இந்த சுயமுரண்பாட்டை எவன் கேள்வி எழுப்பப் போகிறான் என்ற திமிர்தானே!

கஞ்சா அதிகமாக நடமாடுகிறது என்கிறாரே, ஜான் பாண்டியன். அதை நாம் முற்றிலும் மறுக்கவில்லை. அந்த கஞ்சாவை சப்ளை செய்வது யார்; கஞ்சாவுக்கும் சாதிவெறிக்கும், தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட படுகொலைக்கும் யார் காரணம் என்று ஜான் பாண்டியனுக்கு தெரியாதா? தெரியாதெனில், நாமே விளக்குகிறோம்; ஆனால், அதற்கு ஜான் பாண்டியனோ, அவரது த.ம.மு.க. கட்சியினரோ நடவடிக்கை எடுப்பார்களா?

நேராகப் போய், தேசிய அளவில் கஞ்சா ஒழிப்புப் போராட்டத்தை நடத்துவதாக இருந்தால், டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுங்கள். தமிழ்நாடு அளவோடு போராட்டத்தை வரம்பிட்டுக் கொள்வதாக இருந்தால், கமலாலயத்தை முற்றுகையிடுங்கள்; உங்கள் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பா.ஜ.க.காரனையும் தூக்கிப்போட்டு மிதியுங்கள், கஞ்சா ஒழிந்துவிடும்!

உண்மையைத்தான் சொல்கிறோம்! கஞ்சா அனைத்துக் கட்சி கிரிமினல்களின் ‘பொதுத்தொழிலாக’ இருந்தது, பழைய காலம். இப்போது அது மாறிக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால், இளைஞர்களை சீரழிப்பதற்கென்றே, கிராமங்களில் சாதிவெறி மோதல்களைத் தூண்டிவிடுவதற்கென்றே மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக, கஞ்சா மாறிப்போய் இருக்கின்றது.

மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி நடைபெற்ற இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது, நவம்பர் 13,14-ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மூன்று முக்கியமான வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அவை, ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர், ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரிடமும் வெளிநாட்டு தரகர் ஒருவரிடமும் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா தொழிலில் முதலீடு செய்வது தொடர்பாக, பேரத்தில் ஈடுபடுவது போன்ற உரையாடல்களுடனான வாட்சப் கால் வீடியோக்கள்.

இந்த உலக மகா மாஃபியா தொழில் வெளியே கசிந்தவுடன், அது போலி வீடியோ என்று தேவேந்திர சிங் தோமர் போலீசில் புகாரளித்தார். ஆனால், கனடாவில் உள்ள ஜெகம்தீப் சிங் என்ற நபர், தன்னிடம் முழு காணொளியும் உள்ளதாகவும், தேவேந்திர சிங் தோமரிடம் பேசியது நான்தான் என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். மேலும், இது 500 கோடி விவகாரம் கிடையாது; 10,000 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழில் என்றும்; நரேந்திர சிங் தோமர் குடும்பத்திற்கு தான் பினாமியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இவையெல்லாம் அம்பலமாகி, பா.ஜ.க.வின் மாஃபியா வலைப்பின்னல் வெளியே வந்தது.

இந்த கஞ்சா தொழிலைப் பற்றி ஜான் பாண்டியன் பேசுவாரா? சரி, கனடா, டெல்லி என்று தூரமாக போக வேண்டாம் என்றுகூட கருதலாம். ஒரு இரண்டு மாதத்திற்கு முன்பாக, ஆகஸ்ட் மாத இறுதிவாக்கில், ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு இரண்டு கார்களில் கஞ்சா கடத்தி வந்த ‘லோக்கல் செய்தி’யையாவது கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா! அதில் ஈடுபட்ட, தூத்துக்குடி பா.ம.க. மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் பற்றி ஜான் பாண்டியன் பேசுவாரா? கஞ்சா வியாபாரிகளும், கொலைகாரர்களும், ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.க.வை தங்களது பாதுகாப்பான சரணாலயமாகக் கருதி தஞ்சம் புகுகிறார்களே; அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறதே தமிழ்நாடு பா.ஜ.க – அதைப் பற்றியேனும் ஏதாவது வாய்திறந்திருக்கிறாரா, இனிமேலாவது திறப்பாரா; ஒன்றுமில்லை!

‘இந்துக்களின் போர்வாள்’ குத்துவது யாரை?

அடுத்து இந்துக்களின் போர்வாள் கிருஷ்ணாசாமியைப் பார்க்க வேண்டும். “இந்து ஒற்றுமைக்காக பாடுபடுவதே என் வாழ்நாள் கடப்பாடு” என்று அறிவித்துக் கொண்ட இவர், இன்று “ஐயோ, தென் மாவட்டங்களில் தேவேந்திரர்களைக் குறிவைத்து ஒரு இனப்படுகொலையே நடத்தப்படுகிறது” என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில்: அதிகரித்துவரும் இப்படுகொலைகள் ஏதேச்சையானவை அல்ல என்றும்; ஒரு பயங்கரவாதக் கும்பல் இச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும்; இஸ்ரேலில் யூதர்கள் எப்படி பாலஸ்தீன மக்களின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பதற்காக, அவர்கள் மீது இன அழிப்பை நடத்திவருகிறார்களோ, அதே போல தேவேந்திர குல வேளாளர்கள் மக்களுக்கு நடக்கின்றது என்றும் பேசியுள்ளார்.

நெல்லையில், தேவேந்திர குல வேளாளர் மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, கடந்த மாதம் 19-ஆம் தேதி பேரணி ஒன்றையும் தனது கட்சி சார்பில் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.

இதைச் சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக கருதக்கூடாது; இதற்கு பின்னால் மிகப்பெரிய வலைப்பின்னலே உள்ளது. போலீசு அதிகாரிகள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் இவ்விசயத்தில் கூட்டணியாக உள்ளார்கள். இதை உடைக்க வேண்டும் – என்றெல்லாம் ஆவேசமாகப் பேசியுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சி, பல்வேறு லோக்கல் சேனல்கள், யூடியூப் சேனல்கள், பி.டி.ஐ. ஆங்கில ஊடகம் ஆகியவற்றுக்கெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு பேட்டிகொடுத்துள்ளார்.

களத்திலோ, தூத்துக்குடி மணக்கரை கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டுள்ளார். இப்பிரச்சினையை பேசுபொருளாக்குகிறாராம்; தேவேந்திர குல மக்களின் ‘காவலர்’ அல்லவா, அம்மக்களைப் பாதுகாக்க வேண்டுமல்லவா.

“மத்தியப் புலனாய்வு அமைப்புகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்”; “தென் மாவட்டங்களை சாதிரீதியாக அச்சுறுத்தல்மிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக முன்வைத்துள்ளார், கிருஷ்ணசாமி.

கிருஷ்ணசாமி ஜான் பாண்டியனைப் போலல்ல; இல்லையா!

ஆமாம், ஜான் பாண்டியனைவிட தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு மிகமிக ஆபத்தான கோடாரிக் காம்பு!

சரி, இந்த சாதிவெறிக் கிரிமினல்களை ஏவுவது யாராய்யா கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்டால், தி.மு.க-வாம்! தி.மு.க. ஆட்சி வந்ததிலிருந்துதான் இப்படியெல்லாம் நடக்கிறதாம். மேலும், தி.மு.க.தான் எல்லா ரவுடிகளும் கிரிமினல்களும் குடிபுகும் இடமாக இருக்கிறதாம். இவ்வாறு புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டிகொடுத்துள்ளார்.

ஆனால், களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும்; தங்களது எதிரி யார் என்று! குறிப்பாக, கிருஷ்ணசாமியே கூட, பல்வேறு பேட்டிகளில் சூசகமாகவும் இலைமறை காய்மறையாகவும் மறவர் சாதியைச் சேர்ந்த ‘சில கூலிப்படை கும்பல்’தான் இதைச் செய்துள்ளது என்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

14-11-2023 தேதியிட்டு, அவர் கட்சியின் சார்பாக விடுத்த அறிக்கையில், “மணக்கரை கிராமத்தைச் சார்ந்த சிலரது வன்முறைப் பின்புல வரலாறுகள் அனைத்தும் காவல்துறையினருக்குத் தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வல்லநாடு வனக் காவலரையே வெட்டிக் கொன்றவர்களும் அந்த வட்டாரத்தைச் சார்ந்தவர்களே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் அந்த ‘சிலர்’, ‘அவர்களுக்கும் தி.மு.க-வுக்கும் என்ன உறவு?’ கிருஷ்ணசாமிக்கு பெயரைச் சொல்ல தொடைநடுக்கம் என்றால், நாம் சொல்கிறோம்!


படிக்க: தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?


நெல்லை, தென்காசி, தூத்துக்குடி வட்டாரங்களில் ஆர்.எஸ்.எஸ்-இன் டிரோஜன் அமைப்புகளாக பல்வேறு ஆதிக்கச்சாதிவெறி அமைப்புகள் செயல்படுகின்றன. அதில் முக்கியமான ஒரு அமைப்பு, “இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம்”. இந்த இயக்கத்தின் தலைவரும், அடிக்கடி தனது ‘சமூகத்துக்காக’ ஏதாவது கொலைசெய்துவிட்டு உள்ளே போகும் ‘முக்குலத்தோர் குல பாதுகாவலருமான’ “பேச்சிமுத்து தேவர்”, அவரது பட்டப் பெயர் “மணக்கரை பாயாசம்”.  பச்சையான ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டு! இவர்களைப் போல ஆதிக்கச் சாதி வெறியர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர்.

சனாதனம் நமது வாழ்வியல் என்றும்; இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்தப் போவதாகவும் சொல்லும் அய்யா கிருஷ்ணசாமி அவர்களே, உங்கள் ‘இந்து’ உறவின் முறையுடன் அன்பாகப் போய் அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டியதுதானே. ‘இந்து ஒற்றுமை’யை உயர்த்திப் பிடிக்க வேண்டியதுதானே! என்ன தயக்கம்; ‘லஷ்மண ரேகை’யைத் தாண்டிப் பேசினால், சாயம்போய்விடுமா!

நெல்லையில் நடைபெற்ற புதிய தமிழகக் கட்சியின் பேரணியில், கிருஷ்ணசாமியின் மகன், ஷியாம் கிருஷ்ணசாமி நெஞ்சு புடைக்கப் பேசுகிறார். “அடித்துக் கொள்ளும் இரண்டும் திராவிட இனம்தானே! எந்த திராவிடக் கட்சி வந்தது, இந்த ஐம்பது ஆண்டுகளில்; “தமிழ்தேசியம்” என்று புதிதாக கிளம்பியுள்ளார்களே, தமிழ் சாதிகள் அடித்துக் கொள்வதை ஏன் தடுக்கவில்லை; இந்து, இந்தியன் என்று மட்டும் நம்மை சொல்லிக்கொள்ள வேண்டும். ஆனால், ஓட்டுக்காக வருபவர்கள், தேவேந்திரர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வருவதில்லை” என்று சீறியிருக்கிறார்.

இந்த வாதம், நூற்றுக்கு நூறு சரி என்கிறோம். முதல் இரண்டு கூற்றுகளில் நாமும் உடன்படுகிறோம். இக்கேள்விகளை ‘திராவிடம்’ பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஓட்டுக் கட்சிகளையும், தமிழ்தேசியம் பேசுபவர்களையும் பார்த்து நாமும் எழுப்புகிறோம். ஆனால், இந்துத்துவம் பற்றி பேசும் முன், அவரும் அவரது தகப்பனாரும் தங்களைத் தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டு, பின்னர் பேச வேண்டும்.

“நாங்கள் இந்துத்துவம் பேசியது தவறுதான்; சனாதனத்தை ஏற்றுக் கொண்டது தவறுதான்; இந்துத்துவம் நமக்கு எதிரி” என்று தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்பாக அறிவிக்க வேண்டும். இல்லையேல், அது வெறும் நடிப்புதான்!

“நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது! கொஞ்சம் இப்படியெல்லாம் பேசினால், தென் மாவட்டத்தில் பா.ஜ.க. நமக்கு ஒரு சீட்டாவது தருமா… இல்லை பேரம் படியாவிட்டால் சாதி கெத்தைக் காட்டி, அ.தி.மு.க.விடம் கேட்டுப்பார்க்கலாமா” என்ற கணக்கோடுதான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகையினால்தான், ஜான் பாண்டியனைவிட, கிருஷ்ணசாமி அபாயமிக்க கோடாரிக்காம்பு என்கிறோம்.

இவர்களைப் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகள்தான் தற்போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு உறுதுணையாக உள்ளார்கள். தங்களை தேவேந்திர குல வேளாளர் மக்களின் தலைவர்களாக காட்டிக்கொண்டே அவர்கள் மீதான தாக்குதல்களுக்கான காரணங்களை மூடிமறைக்கும் வேலையை செய்து வருகின்றனர். ஆதிக்கச் சாதி வெறியர்கள் நேரடியாக இம்மக்களை கொல்கிறார்கள் என்றால், இவர்கள் கூடவே இருந்து கழுத்தறுக்கின்றனர்.

“பள்ளர்”, “ஒடுக்கப்பட்ட மக்கள்”, “தலித்” என்று சொல்லக்கூடாது என்பது; சாதிப் பெருமிதம் ஊட்டுவது; “இந்துக்களாக இணைய வேண்டும்” என தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்துத்துவ பாசிசத்தின் காலாட்படைகளாக மாற்றுவதற்கான சதிச்செயலைத்தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் இன்னொருபக்கம், தேவர் சாதிவெறியர்களால் தேவேந்திர குல வேளாளர் மக்கள் தாக்கப்படுவதும் தனித்த நிகழ்வல்ல; அதுவும் இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதல்தான்!

எனவே, இந்த இருமுனை கத்திக்கு தேவேந்திர மக்கள் பலியாவதைத் தடுப்பதற்கு ஒரே வழி, இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக, புரட்சிகர சக்திகளோடு இணைந்து களமிறங்குவதே! அது ஒன்றுதான் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சாதி ஆதிக்க எதிர்ப்பு மரபின் இன்றைய வடிவம்.


பால்ராஜ்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க