தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?

நாடெங்கும் சாதி - மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகள், முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. காவி பாசிஸ்டுகள் அமைக்க விரும்பும் இந்துராஷ்டிரத்தில் அன்றாடம் நிகழப்போகும் சம்பவங்களின் முன்னோட்டம்தான்.

வ்வொரு நாளும் தலித்துகள், மத – இனச் சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல்கள் காவி பாசிசக் கும்பலின் ஆசியுடன் பெருகிக் கொண்டே வருகின்றன. இதன் அண்மையச் சான்றுதான், மணிப்பூர் குக்கி பழங்குடிகள் மீதான தொடர் தாக்குதலும், குக்கி பழங்குடிப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்முறையும்.

இது தொடர்பான காணொளி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வெளியாகி நாட்டையே அதிர வைத்தது. அந்தக் காணொளியில், கிட்டத்தட்ட எழுநூறு மேய்தி இனவெறி கொண்ட ஆண்கள், இரண்டு குக்கி இனப் பெண்களை, ஆடைகள் களையப்பட்ட நிலையில் அவர்களின் அந்தரங்க உறுப்புகளை சீண்டித் துன்புறுத்திக் கொண்டே இழுத்து வருகின்றனர். வயல்வெளிகளில் வைத்து அப்பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதோடு, இதைத் தடுக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தையையும் சகோதரனையும் சுட்டுக் கொலை செய்து விட்டனர் இனவெறியர்கள். மே நான்காம் நாள் நடந்த இந்தக் கொடூரத்தை நாடு அறிந்துகொள்ள சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாகியிருக்கிறது. காரணம், மணிப்பூரை ஆளும் பா.ஜ.க அரசு இணையத்தைத் தடை செய்து வைத்திருந்தது.

மணிப்பூர் மட்டுமின்றி நாடெங்கும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பதும், அவற்றில் சில சமூக ஊடகங்களில் வெளியாவதும், வெளியான சில நாட்களுக்கு நமது கோபத்தை வெளிப்படுத்துவதும், பிறகு அடுத்தச் சம்பவம் – அதற்குக் கண்டனம் தெரிவிப்பது என்றவாறு நாட்கள் நகர்வதுமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாட்டின் நிலைமையையே மாற்றி வருகிறது.

இதற்கு உதாரணமாக பின்வரும் சில சம்பவங்களைக் குறிப்பிட முடியும்.

  • ஜூலை 22 ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் சத்தர்ப்பூர் மாவட்டம், பிகௌரா எனும் கிராமத்தில், வடிகால் கட்டும் பணியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அஹிர்வார் என்பவர் ஈடுபட்டிருந்தார். பணியிடத்திற்கு அருகில் குளித்துக் கொண்டிருந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ராம்கிரிபால் படேல் என்பவனை கிரீஸ் கைகளோடு அஹிர்வார் தொட்டுவிட்டார் என்பதற்காக, அஹிர்வாரின் தலையிலும் முகத்திலும் மனிதக் கழிவைக் கொட்டியுள்ளான் சாதிவெறியன் ராம்கிரிபால்.இப்பிரச்சினை குறித்து பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார் அஹிர்வார். ஆனால், ஆதிக்கச் சாதிவெறியன் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காத பஞ்சாயத்து, பாதிப்புக்குள்ளாகி புகார் தெரிவித்த அஹிர்வாருக்கு 600 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
  • ஜூலை 5 ஆம் தேதி, இதே மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவன் வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, திமிரோடு பழங்குடியின இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்தான். அப்பாவியான அந்த இளைஞர் அவமானத்தில் கூனிக்குறுகி போய் உட்கார்ந்திருந்தார். இந்த நிகழ்வு நாடெங்கும் கோபாவேசத்தைத் தூண்டியது. அந்த பா.ஜ.க.காரனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.மக்களின் கோபத்தைத் தணிக்க மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு அவரது காலைக் கழுவியதாக ஒரு காணொளி வெளியிடப்பட்டது. ஆனால் பா.ஜ.க. முதல்வர் சவுகான், இதில் ஆள்மாற்றாட்டம் செய்து வேறொரு நபரின் கால்களைக் கழுவியது அம்பலமாகி நாடே காறி உமிழ்ந்தது.இந்நிகழ்வு நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில், காரில் கடத்தப்பட்ட முஸ்லிம் ஒருவரை சரமாரியாக தாக்கிய இந்து மதவெறியர்கள், அவரை நிர்பந்தம் செய்து தங்களின் காலை நக்க வைத்துள்ளனர்.
  • ஜூலை 8 ஆம் தேதி, ராஜஸ்தானில் டீ அருந்த கடைக்குச் சென்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரை சூழ்ந்து கொண்ட இந்துமதவெறி குண்டர்கள், “ஜெய் ஸ்ரீராம்” என சொல்லச் சொல்லி ஆபாசமாகத் திட்டியுள்ளனர். அன்று தப்பித்து வந்த முஸ்லிம் இளைஞர் மீண்டும் அந்தக் கடைக்குச் சென்றபோது அதே கும்பலிடம் சிக்கிக்கொண்டார். முஸ்லிம் இளைஞரைச் சூழ்ந்த இந்துமதவெறிக் குண்டர்கள் கம்பி, கட்டை உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்கியதில் அவரின் மண்டை உடைந்தது. மோசமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
  • இதேபோல் சில நாட்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் திருட்டு வழக்கில் இந்துமதவெறிக் கும்பலால் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட தன் மகன், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை, ஏன் அவனைப் பிடித்துக் கொடுத்தீர்கள் என தட்டிக்கேட்ட வயதான முஸ்லிம் ஒருவரை சூழ்ந்து, அவரை மரத்தில் கட்டிவைத்து “ஜெய் ஸ்ரீராம்” என முழங்கச் சொல்லி தாக்கி சித்திரவதை செய்தது இந்து மதவெறிக் கும்பல். வலி தாங்கமுடியாமல் அவர் படும் வேதனைகளைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தது அக்கும்பல்.
  • ஜூன் 1 ஆம் தேதி, மஹாராஷ்டிரத்தில் திருமண ஊர்வலம் ஒன்றில் ஆதிக்க சாதிவெறி இளைஞர்கள் கத்தி, கோடாரி, வாள்களை ஏந்தி களிவெறியாட்டமிட்டனர். ஊர்வலம் அந்தக் கிராமத்தின் பிரதான வீதியொன்றை அடைந்தபோது, அங்கு தனது தாய்க்கு உணவு வாங்க வந்த 25 வயதான தலித் இளைஞர் அக்ஷய் பலராவ், தன் சகோதரருடன் அங்கிருந்த மளிகைக்கடை ஒன்றுக்குள் சென்றார். கடைக்குள் அக்ஷய் நுழைந்தது ஊர்வலத்தில் இருந்த ஆதிக்கச்சாதி வெறியர்களின் கண்களில் பட, அந்த சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. கத்தியால் பலமுறை குத்தப்பட்டதால் நிலைகுலைந்து கீழே விழுந்த அக்ஷய் அப்போதே இறந்துவிட்டார். ஆனால் அதன் பின்னும் வெறி தணியாத அக்கும்பல் உயிரற்ற அக்ஷயின் குரல்வளையைக் கால்களால் மிதித்து ஆபாசமாகக் கூச்சலிட்டது.அம்பேத்கர் பிறந்த நாளினை நினைவு கூர்ந்து, கிராமத்தின் பிரதான வீதியில் ஊர்வலத்தை நடத்த அக்ஷய் திட்டமிட்டதே, இந்த ஆதிக்கசாதியினரின் வெறிச் செயலுக்குக் காரணம்.

படிக்க: ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!


மேற்சொன்ன இந்த நிகழ்வுகள் எல்லாம் ஊடகங்களில் வெளியானவை மட்டுமே. ஆனால், தலித்துகளுக்கும், மத – இனச் சிறுபான்மையின மக்களுக்கும் இந்நிலை அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது. எப்படியாவது இந்த சாதி – மதவெறி பிடித்த கும்பல்களின் கண்களில் படாமல் அன்றைய நாளைக் கடத்திவிட வேண்டும் என்பதே வாழ்க்கையா? இவர்களின் பகல்கள் கூட எத்துணை அச்சுறுத்தக் கூடியதாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

இதுபோன்று பயங்கரமான சம்பவங்கள் நாள்தோறும் ஏராளமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இவற்றில் வெளியுலகின் கவனத்தில் வரக்கூடிய சில விஷயங்களுக்கு மட்டுமே சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதைவிடப் பெரியதொரு சம்பவம் வெளியே தெரிய வரும்போது முன்பிருந்த விஷயம் மறக்கடிக்கப்பட்டு புதிய சம்பவம் பேசுபொருளாக மாறுகிறது.

இதுபோன்று ஒவ்வொரு நாளும் நாம் என்ன பேச வேண்டும் என்பதையும், ஒடுக்கப்பட்ட – சிறுபான்மை மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதே பாசிசக் கும்பலின் நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறது. ஆசிஃபா என்ற குழந்தை ஒரு வாரத்திற்கும் மேலாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டபோது நாடே கொதித்தெழுந்தது. ஆனால், அதன்பிறகும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறையவில்லை; மாறாக, ஹத்ராஸ், உன்னாவ், மணிப்பூர் என அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இப்போது நாடெங்கும் சாதி – மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகள், முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. காவி பாசிஸ்டுகள் அமைக்க விரும்பும் இந்துராஷ்டிரத்தில் அன்றாடம் நிகழப்போகும் சம்பவங்களின் முன்னோட்டம்தான்.

பாசிசக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது?

பா.ஜ.க.வின் பாசிசப் போக்கை எதிர்ப்பதற்காக ஒன்றிணைந்து நிற்பதாகக் கூறும் எதிர்க்கட்சிகள் இவற்றிற்கெல்லாம் ஆற்றும் எதிர்வினை என்ன? “மோடி ஏன் மணிப்பூருக்கு வரவில்லை”, “மணிப்பூர் குறித்து ஏன் இன்னும் பேசவில்லை?” என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு கேள்வி எழுப்புவதில் தவறில்லை, ஆனால் மோடி வாயைத் திறந்துவிட்டால் இதற்கெல்லாம் முடிவு வந்துவிடும் என்று நாம் கருதமுடியுமா? இந்தக் கொலைவெறித் தாக்குதல்களின் ஆணிவேரே மோடியை முன்னிறுத்தும் பாசிசக் கும்பல்தான் என்பது இவர்களுக்கெல்லாம் தெரியாதா?

அதிகாரவர்க்கத்தின் துணை இல்லாமல்தான் இவை நடக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறார்களா? மணிப்பூரில் இரண்டு பழங்குடிப் பெண்களையும் மேய்தி இனவெறி கும்பலிடம் ஒப்படைத்ததே மணிப்பூர் போலீசுதானே? நீதிமன்றம், போலீசு, இராணுவம், அதிகார அமைப்புகள் என்று அரசுக் கட்டமைப்பு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் ஊடுருவி இருக்கின்றனரே, இவர்களை என்ன செய்வது? இதை மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகளிடம் என்ன மாற்றுத் திட்டம் இருக்கிறது?

இவற்றிற்கெல்லாம் தீர்வாக எதிர்க்கட்சிகள் முன்வைப்பது ஒரே விசயம்தான். அது, 2024-தேர்தலில் பி.ஜே.பி.யை, மோடியை வீழ்த்திவிட்டால் இதற்கெல்லாம் விடிவு வந்துவிடும் என்பதுதான். ஆளும்வர்க்கக் கட்சிகள் வெறும் பி.ஜே.பி எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து இவ்வாறு பேசுவது அவர்களது வரம்பு. ஆனால் பாசிச எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதை அப்படியே உழைக்கும் மக்களுக்கும் கடத்துவதுதான் ஆபத்தானது. இதற்குக் காரணம், அவர்களது அரசியல் பாமரத்தனமல்ல, தமது சந்தர்ப்பவாதத்தை, சரணாகதிப் பாதையை அவர்கள் மூடிமறைத்துக் கொள்கிறார்கள். காவி பாசிசத்தை, கார்ப்பரேட் சுரண்டலை முறியடிக்க இவர்களிடம் எந்த மாற்றுத் திட்டமும் இல்லை. அவற்றை முன்வைக்கும் விருப்பமும் இல்லை.


படிக்க: ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி


பாசிசக் கும்பல் உழைக்கும் மக்கள்மீது மேற்கொண்டுவரும் அத்தனை அநீதிகளையும், அதற்கெதிரான மக்களின் கோபாவேசத்தையும் பாசிச எதிர்ப்பு என்ற பெயரால் ஆளும்வர்க்கக் கட்சிகளின் ஓட்டுவங்கியாக மாற்றுவதே அவர்களது திருப்பணி!

காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராகத் தனித்தனியான தீர்வுகள் இல்லை. இந்தக் கட்டமைப்பு முழுவதுமே தலித்துகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிராகத்தான் செயல்படுகிறது. இதனை தூக்கியெறிந்துவிட்டு சாதிவெறி, மதவெறி, இனவெறியை முன்வைத்துச் செயல்படுகின்ற அமைப்புகளை தடைசெய்யும் வகையிலான ஜனநாயகக் கட்டமைப்புக்காக – பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவது மட்டுமே தீர்வு! இந்த மாற்றை உரக்க ஒலிப்பதும், மக்களை திரட்டுவதுமே புரட்சிகர சக்திகளின் தலையாய பணி.


வெண்பா

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க