“அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை – தமிழகத்தை நாசமாக்காதே !” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் மாநாடு, கருத்தரங்கம், பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடலூரில் 26.08.2019 அன்று மாலை 04:00 மணி அளவில் மஞ்சகுப்பம் டவுன்ஹாலில் கருத்தரங்கம், ம.க.இ.க கலை நிகழ்ச்சி ஆகியவை  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம், கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர், தோழர் து. பாலு அவர்கள் தலைமைதாங்கினார். அவர் பேசுகையில்:

“கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் அதிகாரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. தமிழகத்தில் மக்கள் அதிகாரம் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது ஏனென்றால், இது அதானி – அம்பானி போன்ற முதலாளிகள் தொடர்பான பிரச்சினை எனவே கூட்டத்திற்கு அனுமதி இல்லை.

CUddalore-PP-Meeting-(5)இந்தியாவில் உள்ள 58 மண்டலங்களில் மிகவும் முக்கியமான இடம் தமிழகம். மரக்காணம் முதல் கடலூர் வரை ஒரு மண்டலம், பரங்கிப்பேட்டை முதல் வேதாரண்யம் வரை ஒரு மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் வேளாங்கண்ணி வரை ஒரு மண்டலம் இதில் மிகவும் முக்கியமானது கடலூர் பகுதி.

இப்படி ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை, அணுக்கழிவு, கோயம்புத்தூர் பகுதியில் கெயில் குழாய் பதிப்பு, தேனியில் நியூட்ரினோ என பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டுவருகிறார்கள். 10 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை நாசமாக்குவது போல் தமிழகத்தை நாசமாக்க பார்க்கிறார்கள்.

இந்த நாசகார செயல்களை மறைக்க இவர்கள் எடுக்கும் ஆயுதம் டாஸ்மாக், சாதிக்கலவரம், மதக்கலவரம் போன்றவை. எனவே இதையெல்லாம் நாம் முறியடிக்க வேண்டும். மக்கள் அதிகாரம் மட்டும் போராடி இதை முறியடிக்க முடியாது நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என்று உரையாற்றினார்.

படிக்க :
♦ டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !
♦ காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

இதைத்தொடர்ந்து சிதம்பரம், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு இளங்கிரன் பேசுகையில்: “கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி தெரியாமல் உள்ளது எனவே ஒவ்வொரு இளைஞரும் கிராமத்திலுள்ள பத்து விவசாயிகளுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்கிறார். இவர்களை நம்பினால் நீட் தேர்வில் என்ன நடந்ததோ, அதேதான் ஹைட்ரோ கார்பன் திட்டதிலும் நடக்கும். மத்திய அரசு தமிழகத்தை சுடுகாடாக நினைக்கிறது, ஆகையால் இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து திரு இளங்கோவன் அவர்கள் ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருத திணிப்பு, ஆகியவற்றை அம்பலப்படுத்தும் வகையில் கவிதை வாசித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவருக்கு அடுத்தபடியாக ஹைட்ரோகார்பன் – சாகர்மாலா எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு, தோழர் கு. பாலசுப்பிரமணியன் அவரது உரையில்: “நாடே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது, மக்களை பாதுகாப்பது விவசாயம்தான். ஆனால் இன்று விவசாயம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை, வறுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, குடிநீர் கூட இந்த அரசால் வழங்க முடியவில்லை தமிழகம் முழுவதும் மின்சாரம் வழங்கப்படவில்லை; ஆனால் அரசு ஹைட்ரோகார்பன் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது.

இன்று விவசாயிகள் பெருமளவு தங்களுடைய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி போராடி வருகிறார்கள் ஆனால் அதை செய்ய மறுக்கும் இந்த அரசு அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் கடனை பெருமளவு தள்ளுபடி செய்கிறது.
ஆக அரசு என்பது மக்கள் நலன் இல்லாமல் முதலாளிகள் நலன் என மாறிவிட்டது. எனவே இந்த பிரச்சாரத்தை கிராமந்தோறும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் இதை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்” என்று கூறி நிறைவு செய்தார்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் திரு அய்யநாதன் உரையாற்றும் பொழுது; “தமிழகத்தில் குறிப்பாக காவிரிப்படுகையில் மக்களுடைய பிரச்சினைகளுக்கு போராட்டம், கூட்டம் நடத்த இதற்கு முன் அனுமதி இருந்தது. ஆனால் எப்பொழுது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக காவிரி படுகையை கபளீகரம் செய்யத் துணிந்தார்களோ; எட்டு வழி சாலைக்காக ஐந்து மலைகளை சிதைக்க துணிந்தார்களோ; மக்களை வாழ வழி இல்லாத நிலையை உருவாக்க அணுக் கழிவுகளை கொட்ட துணிந்தார்களோ; அப்போதிருந்து அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் அடக்குமுறை.

வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மண் வளங்களையும், கனிம வளங்களையும், மக்களையும் சுரண்டுகிறார்கள். இதனை எதிர்த்து கேட்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். பிரதமர் மோடி அவர்களே, இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?

உலகம் முழுவதும் தொழில்நுட்ப மாற்றத்தினால் மின்கலங்களுக்கும் மாறிக் கொண்டிருக்கும் வேளையில்; உலகம் முழுவதும் கச்சாப்பொருள் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில்; ஹைட்ரோ கார்பன் யாருக்காக எடுத்து எங்கே கொடுக்கப் போகிறீர்கள்?”

மேலும் மக்கள் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, மக்களின் வாங்கும் சக்தி குறைதல் என்று அடுக்கடுக்கான பிரச்சினை குறித்த கேள்விகளை முன் வைத்து எழுச்சிகரமாக உரையாற்றினார்.

படிக்க :
♦ வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு : கடலூர் மாணவர்கள் போராட்டம் !
♦ இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் அவரது சிறப்புரையில்: “தமிழகத்தில் அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டு வழி சாலை, போன்ற திட்டங்கள் எல்லாம் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் இந்த வளர்ச்சி எங்களுக்கு தேவையில்லை என்று எதிர்க்கிறார்கள், போராடுகிறார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் நாங்கள் கிரிமினல் வழக்கு தொடருவோம் என்கிறார்கள். ஆனால் மக்கள் ஹைட்ரோகார்பன் வேண்டாமென தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினால் போலீசு மக்கள் மீது வழக்கு போடுகிறது. எனில் தமிழகத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது.

கார்ப்பரேட்டுகள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் ஆட்சியாளர்களும், போலீசும் செய்கிறது. தமிழகம் முழுவதும் மக்கள் இந்த நாசகார திட்டங்களுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி போராடி வருகிறார்கள். ஆனால் இது போதுமானது கிடையாது.

நாம் இப்போது தனித்தனி ஆயுதமாக இருக்கிறோம், அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். நாம் மிகப்பெரிய சக்தியை மாற வேண்டும், மாபெரும் சக்தியாக எழுந்து நாசகார திட்டங்களை விரட்டி அடிப்போம்.” என்று கூறி நிறைவு செய்தார்.

பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசியாக மக்கள் அதிகாரம் கடலூர் வட்டார குழு தோழர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார். அத்துடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் – இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
தொடர்புக்கு :  81108 15963


இதையும் பாருங்க :

எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு ? – பாடல் வீடியோ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க