அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 04

குழந்தை – எல்லையற்ற திறமையின் மாடல்

ன்று ஒரு அதிசயம் நடக்கப் போகிறது. ஒருவேளை “அதிசயம்” என்பது மிகைப்படுத்தி சொல்லப்பட்டதோ? அதிசயங்கள் சாதாரணமாக நடப்பதில்லை, அதுவும் கல்வி போதிப்பதிலும் குழந்தை வளர்ப்பிலும் இது நடப்பதில்லையோ! ஆனால் 84-வது பள்ளி நாளாகிய இன்று நடக்கப் போவதை வேறு எப்படிச் சொல்வது?

இன்று என்ன நடக்கப் போகிறது தெரியுமா? “எனக்கு எது மகிழ்ச்சி தருகிறது? எது வருத்தமளிக்கிறது?” எனும் தலைப்பில் எழுதும்படி அவர்களுக்குச் சொல்லப் போகிறேன். அவர்கள் தமது வாழ்வின் முதல் கட்டுரையை எழுதுவார்கள். என் வகுப்புக் குழந்தைகளில் பலர் எல்லா எழுத்துகளையும் படித்து முடிப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே கவிதைகள், கதைகளைப் படிக்க ஆரம்பித்ததும் தங்கள் மனதில் தோன்றியதை எழுதத் துவங்கியதும் எனக்குத் தெரியுமென்ற போதிலும் வியப்புடனும் சந்தோஷத்துடனும்தான் இவர்களின் முதல் கட்டுரைகளைப் படிப்பேன்.

யாருக்கெல்லாம் இக்கட்டுரைகளைக் காண்பிப்பேனோ அவர்களில் பெரும்பாலோர் ஆறு வயதுக் குழந்தைகளால் இப்படி எழுத முடியாது என்பார்கள். இந்த வயதுக் குழந்தைகளிடம் இப்படிப்பட்ட திறமைகள் இருப்பதை நம்ப மாட்டார்கள், இவற்றை எழுதியது குழந்தைகள்தானா என்று சந்தேகப்படுவார்கள்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நான் முதன்முதலில் இந்த அதிசயத்தைச் சந்தித்த போது இப்படி நடந்தது. அப்போது நான் மகிழ்ச்சியோடு, உணர்ச்சி வசப்பட்டு எனது அன்றைய குழந்தைகள் எழுதியதைக் காட்ட விஞ்ஞானிகளிடம் ஓடினேன் (அக்குழந்தைகள் இன்று வளர்ந்து பெரியவர்களாகிப் படிக்கின்றனர், உழைக்கின்றனர்).

“இன்று இவர்கள் என்ன எழுதியிருக்கின்றார்கள் பார்த்தீர்களா!”

குழந்தைகளின் இந்த முதல் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன்.

திடீரென யாரோ என்னைத் தடுத்து நிறுத்தினார்.

“போதும்!” என்று எரிச்சலோடு யாரோ சொன்னார்கள்.

வயது முதிர்ந்த, செல்வாக்குள்ள, எல்லோர் மரியாதைக்கும் உரிய ஒரு பழைய ஆசிரியை சொல்கிறார்:

“என் அன்பு சக ஆசிரியர்களே! ஏன் ஒருவரையொருவர் நாம் ஏமாற்றிக் கொள்ள வேண்டும்! அதுவும் ஆசிரியர் ஆலோசனைக் கவுன்சில் கூட்டத்தில்! ஆறு வயதுக் குழந்தைகள் எப்போதாவது இப்படி எழுதியிருக்கின்றார்களா!”

மற்ற விஞ்ஞானிகள் ஏளனமாக புன்னகைத்தபடி, அந்த முதிய ஆசிரியைச் சொல்வதை ஒப்புக் கொள்ளும் முகமாகத் தலையை ஆட்டியபடி ஏதோ நான் அவர்களை ஏமாற்றுவது போல் என்னைப் பார்த்தனர். “இது எப்படி நடந்தது? விளக்கிச் சொல்” என்று யாருமே என்னைக் கேட்கவில்லை.

படிக்க:
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?

ஆம், அறுபதாம் ஆண்டுகளின் மத்தியில் விஞ்ஞானிகளிடையே இப்படி நடந்தது! “குழந்தையால் இதைக் கிரகிக்க முடியாது…”

“குழந்தைகளுடைய வயதுரீதியான சிறப்பியல்புகள்….. மட்டுப்பாடுகள்…”

“குழந்தைகளுக்கு இது புரியாது. இதை அவர்களால் கிரகிக்க முடியாது…”

சில விஞ்ஞானிகள், கல்வி முறையியலர்கள், ஆசிரியர்களிடமிருந்து நான் அடிக்கடி இப்படிப்பட்ட கருத்துகளைக் கேட்கிறேன்.

நிச்சயமாக, குழந்தைகளால் எல்லாவற்றையும் கிரகிக்கவும் புரிந்து கொள்ளவும் செய்யவும் முடியாது.

உதாரணமாக, பிறந்தவுடன் எழுந்து நின்று பேச அவர்களால் முடியாது. அவர்களால் தாமாகவே உணவு சாப்பிட்டு அம்மாவை இந்த வேலையிலிருந்து விடுவிக்க முடியாது. தேவையான திறமைகள் வரும் வரை விஞ்ஞானங்களைப் பயில முடியாது. தேவையான அறிவும் அனுபவமும் கிட்டும்வரை நகரங்கள், பாலங்கள், தொழிற்சாலைகளைக் கட்ட முடியாது, சாலைகளைப் போட முடியாது, விவசாயம் செய்ய முடியாது. சமூக அனுபவம் கிட்டும் வரை நம்முடைய பல அக்கறைகளைப் புரிந்து கொள்ள இயலாது.

குழந்தைகளின் வயது, அனுபவமின்மையால் வரும் மட்டுப்பாடுகள் உண்மையிலேயே நிறைய உள்ளன. ஆனால் மேற்கூறிய படி குழந்தைகளால் முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்வதில் குழந்தைகளைப் பற்றிய பழமையில் ஊறிப்போன கருத்து உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. “முடியாது.” ஏன்? நீண்டகாலமாக இப்படி இருந்தது, நேற்று இப்படி இருந்தது, அதனால் இன்றும் நாளையும் நாளை மறுநாளும் இப்படித்தான் இருக்க வேண்டுமா? அப்படியெனில் 21-வது நூற்றாண்டுக் குழந்தைகளின் சிந்தனைகளிலும் இதே வயதுக் கட்டுப்பாடுகள்தான் வெளிப்படுமா? அப்படியென்றால் ஆசிரியரியல், கல்வி போதிக்கும் முறை, ஆசிரியரின் படைப்பாற்றல் ஆகியவற்றிற்கு என்ன விலை?

“குழந்தைகளால் முடியாது” என்று சொல்லும்போது இதில் குழந்தைகளின் பாதுகாப்பின்மையையும் பலவீனத்தையும் காப்பாற்ற வேண்டுமே என்பதை விட இவர்களைத் தமது உண்மையான திறமைகளிலிருந்து வேலியிட்டுத் தடுக்க வேண்டும் எனும் எண்ணம்தான் மிகுந்திருப்பதாக எனக்குப்படுகிறது. அனேகமாக “குழந்தைகளால் முடியாது” எனும் கூற்றில் குழந்தைகளின் வளரும் திறமைகளின் மட்டுப்பாட்டை விட அவர்களைப் பற்றிய நமது கருத்துகளின் மட்டுப்பாடே அடங்கியிருப்பதாக நான் எண்ணுகிறேன்.

நமது 20-ம் நூற்றாண்டின் சிறப்பியல்புகள் யாவை? பல்வேறு விஞ்ஞான சாதனைகள் ஒரு புறமிருக்க, குழந்தைகளுடைய மனநிலையின் கிட்டத்தட்ட எல்லையற்ற திறமைகளும் உள்ளாற்றல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கவையாகும். 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இன்று ஆசிரியரின் வசம் பெரும் எதிர்கால வாய்ப்புள்ள, ஆழ்ந்த வளர்ச்சிப் போக்குகள் உள்ளன. குழந்தைகளின் சக்தி (நல்ல ஆக்கபூர்வமான கல்வி, குழந்தை வளர்ப்புப் போக்கில் இது வளர்ந்து வலுப்பெறும்) மீதுள்ள நம்பிக்கை நவீன சோவியத் ஆசிரியரின் பிரதான அம்சமாகும். ஒரு சில வயது மட்டுப்பாடுகள் பற்றிய பழைய கருத்துகள் நம் கண்களிலேயே தகர்ந்து விழுகின்றன. எதிர்காலத்தில் குழந்தைகள் தமது திறமைகளால் உலகைப் பன்முறை வியப்பில் ஆழ்த்துவார்கள், குழந்தை மனதைப் பற்றிய விஞ்ஞானிகள், ஆசிரியர்களின் கருத்துகளைப் பன்முறை தகர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல, ஆக்கபூர்வமான ஆசிரியரின் கவனத்தின் கீழ் இருந்தால் குழந்தைகளின் திறமைகளுக்கு எல்லைகளே கிடையாது. எனவே கீழ்வரும் “முதுமொழியை” நான் பின்பற்றுகிறேன், இது சிறு குழந்தைகளின் மனதையும் இதயத்தையும் நாடிச் செல்லும் போது எனக்குக் கைகொடுக்கிறது:

குழந்தைகளின் ஆழ்ந்த உள்ளாற்றல்களை வெளிப்படுத்தி, வளர்க்கவல்ல கல்வி போதிக்கும் முறை எவ்வளவுக்கெவ்வளவு செயல்முனைப்போடு புதுப்பிக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது மனிதாபிமானம் மிக்கதாய், எதிர்கால நம்பிக்கையுள்ளதாய், மகிழ்ச்சிகரமானதாய் மாறும்.

இன்றைய அதிசயத்தின் வேர் இந்த “முதுமொழியில்” தான் உள்ளது.

நான் இந்தக் கட்டுரைகளை யாருக்கெல்லாம் காட்டுகிறேனோ அவர்கள் இவற்றை நம்பாமல் இருக்கட்டும், இவற்றை அப்பா, அம்மாக்கள் எழுதினார்கள் என்று கூறட்டும். இதனால் என் குழந்தைகளின் வெற்றி மங்காது. இவர்களுடைய திறமைகளின் மீதும், புதிய மனிதனை உருவாக்குவதில் ஆசிரியரியலின் வாய்ப்புகள் மீதும் எனக்குள்ள உறுதி இருமடங்கு அதிகமாகும்.

எனது சின்னஞ்சிறு மாணவமணிகள் முதன்முதலாக வாழ்க்கையில் தமது உணர்வுகளின், இன்ப துன்பங்களின் ஆழத்திற்குள், சென்று, “நான்” என்பதினுள் மூழ்கும் அந்த நிமிடத்தின் மகிழ்ச்சியையும் உணர்ச்சிப் பெருக்கையும் நான் உணருகிறேன். ஒரு வேளை சாஷா அல்லது வாசிக்கோ பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அதே வயதிலிருந்த நூக்ரீ எழுதியதைப் போல எழுதலாம்: ”பலவற்றைக் கண்டு மகிழ்கிறேன். உதாரணமாக, நேற்று நானும் அப்பாவும் பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த போது அவருடைய அலமாரியை ரிப்பேர் செய்து தந்தோம். ‘உங்களுடன் இருக்கும்போது எவ்வளவு நன்றாக உள்ளது’ என்றார் பாட்டி. எனது யோசனையற்ற நடவடிக்கைகளால் மற்றவர்களுக்கு வருத்த மேற்படச் செய்யும் போதும் அல்லது எதற்கு என்று எனக்குத் தெரியாதபோது என்னைத் தண்டிக்கையிலும் வருத்தப்படுகிறேன்…”

படிக்க:
உங்களுக்குத் தேவை அறிவியல்பூர்வமான கல்வியா – அய்யர்களை குஷிப்படுத்தும் கல்வியா ?
செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !

முதன்முதலாக தன்னைத்தானே நன்கு உணர்வதை நான் விண்வெளிவலவர் முதன்முதலாக திறந்த விண்வெளியில் வருவதுடன் ஒப்பிடுகிறேன். தனது உணர்வுகள், எண்ணங்கள், உறவுகளை எழுத்து வடிவில் வடிப்பதன் மூலம் குழந்தை தன் மனநிலையை அறிந்துணருமாறு செய்ய நான் மேன்மேலும் பாடுபடுவேன். எனது சின்னஞ்சிறு மாணவமணிகள் தம் நடவடிக்கைகள், உற்றார் உறவினர் மீதான நேசம், தம் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி, மக்களுக்கு எப்படி மகிழ்ச்சியை வழங்குவது, தீமையை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பதைப் பற்றி மேன்மேலும் அதிகம் சிந்திப்பார்கள்.

மற்றவர்கள் மத்தியில் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளக் குழந்தைக்குச் சொல்லித் தருவது, சுயவளர்ப்பிற்கு, சுயகல்விக்கு, சுயமாகத் தன் நிலையை முடிவு செய்வதற்குப் பாடுபடுவது-எழுதுவதன் மூலம் சிந்திக்கும் திறமையை, தன்னுடன் தானே உரையாடும் திறமையைக் குழந்தைகளிடம் வளர்க்கும்போது நான் முன்வைக்கும் லட்சியம் இதுதான். எழுத்துகள்-மனதின் மெழுகுவர்த்தி. தன் ஆன்மிக வாழ்வுக் கிடங்கினுள் குழந்தை அடியெடுத்து வைக்கும்போது இதை எப்படிப் பயன்படுத்துவதென சொல்லித் தரவேண்டும். எனது பணியில் இது குழந்தைகள் மத்தியில் தனிப்பட்ட குண நலன்களை வளர்க்கும் முறையாக, அவர்கள் தமது ஆன்மிக உலகைத் தாமே கண்டறிய உதவும் முறையாக மாறும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க