கேள்வி : //பரமஹம்ச யோகானந்தரின் “ஒரு யோகியின் சுய சரிதை” படித்திருக்கிறீர்களா? அதில் வரும் அத்வைத நிலை, மரணித்தவர் உயிருடன் எழுவது, மரணித்தவரின் மறுபிறவி, பாபாவுடன் சந்திப்பு, முற்பிறவி ஞாபகம் தோன்றுதல், உணவே உட்கொள்ளாத மகான் போன்ற பல விசயங்களுக்கு அறிவியல்பூர்வமான விமர்சனங்கள் தேவைப்படுகிறது.

அதேபோல் விவேகானந்தர் இந்து மதத்தின் முற்போக்காளராக அறியப்படுகிறார்.

நான் இவ்விருவரையும் பின்பற்றவில்லை என்றாலும் இவர்களது புத்தகங்கள் என்னை பெரிதும் பாதித்தவை. இவர்களைப் பற்றி மற்றும் இவர்களைப் போன்றோர்களின் கருத்துக்கள் பற்றி தெளிவான விமர்சனங்கள் அவசியமாகிறது.

ஏதாவது புத்தகங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் சிபாரிசு செய்யலாம். நன்றி!//

– S.கார்த்திகேயன்

ன்புள்ள கார்த்திகேயன்

Hallucination என்ற ஆங்கில வார்த்தையின் பொருள் இல்லாதவை இருப்பது போல மனச்சமநிலை இழந்தோருக்கு புலனுணர்வு வழியாகவும், சிந்தனையிலும் தோன்றுவது. தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு சானலில் பேசப்படும் வார்த்தைகளில் ஓரிரண்டு ஒலிமாறி வேறு ஒன்றாக கேட்டு புதிய மாய யதார்த்தத்தை தோற்றுவிக்கும். வேறு எதையோ நினைவுபடுத்தும். அது போல புதிய மனிதக் குரல்களும் அப்படி ஒலிக்கும். நமது சாமியார்களுக்கு தோன்றும் மந்திர விசயங்கள் அனைத்தும் இப்படித்தான் உருவாகின்றன. இவை எதுவும் உண்மையல்ல, யதார்த்தமல்ல என்றாலும் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அப்படி நம்புகிறார்கள். அவர்களிடம் என்ன சொல்லியும் அதை புரிய வைப்பது கடினம். இந்த இடத்தில் மனநல மருத்துவர் மூலம் சிகிச்சை எடுப்பதே சரியானது.

vivekanda-ramakrishna paramahamsaபுறநிலையில் இருக்கும் ஓரிரு விசயங்கள் குறிப்பிட்ட சமூக சூழல் காரணமாக அகநிலையில் நுணுக்கி நுணுக்கி நீண்ட நேரம் சிந்திக்கும் போது இத்தகைய கற்பிதங்கள் போகப் போகத் தோன்றுகின்றன. அது கலைஞனாக இருந்தால் ஒரு கவிதை தோன்றும். மனநிலை பாதிப்படைந்திருந்தால் கடவுள் பேசுவது போலத் தோன்றும். கவிஞன் கவிதை எழுதிய பிறகு சமநிலை அடைந்து விடுகிறான். மனநிலை பாதிப்படைந்தோரோ அப்படி உடனே சமநிலை அடைந்து விடுவதில்லை. இராமகிருஷண் பரமஹம்சரிடம் இந்த இரண்டும் இருக்கின்றன. அதனால்தான் நீதி உபதேசங்களை கதைகள் வழியாக உபதேசிக்கிறார். கூடவே இத்தகைய மாய கற்பிதங்களையும் உண்மையெனக் கூறுகிறார்.

இது shutter island எனும் ஹாலிவுட் உளவியல் த்ரில்லர் படம் போன்றது. மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கொண்ட தீவில் நிகழும் கொலையை விசாரிப்பதற்கு டிகாப்ரியோ ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார். அங்கே நிகழும் மர்ம சம்பவங்கள் அந்த தீவின் புதிரை அதிகப்படுத்துகின்றன. இறுதிக் காட்சியில் டிகாப்ரியோ பார்வையில் சொல்லப்படும் அனைத்தும் அவரது கற்பிதங்களே, அவரே அங்கு சிகிச்சை பெறும் ஒரு மனிதர் என்பதும் தெரிய வருகிறது. ஆனால் படத்தை பார்க்கும் போது அத்தனையும் தத்ரூபமாக உண்மையென நமக்குத் தோன்றுகிறது. ஏனெனினல் அங்கே மாயை பல்வேறு தர்க்க ஆதாரங்களோடும் நம்பகத் தன்மையோடும் நமக்கு முன்வைக்கப்படுகிறது.

நமது முந்தைய சாமியார்கள் பலரும் இந்த நிலையில் இருந்திருக்கின்றனர். முற்றிப் போய் இருப்பவர்கள் பேசா நிலை அடைந்து சித்தன் போக்கு சிவன் போக்கென வாழ்ந்து மடிகின்றனர். தனது சீடர்களோடு உரையாடி கொஞ்சம் யதார்த்த உலகோடு தொடர்புடையவர்கள் பாதி நேரம் சமநிலையிலும் மீதி நேரம் மாய நிலையிலும் மாறி மாறி இருக்கின்றனர். இந்த இரண்டும் அவர்களது யதார்த்தமாகி விடுகிறது.

படிக்க:
கேள்வி பதில் : வரலாற்றில் கல்விக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது ஏன் ?
♦ கார்ப்பரேட் சாமியார்கள் : இந்துத்துவத்தின் புரோக்கர்கள் !

இறைவன் சொல்லக் கேட்டுத்தான் குர்-ஆன் எழுதப்பட்டது, பெந்தகோஸ்தே வழிபாட்டில் பேசப்படும் அன்னியபாஷை அனைத்தும் இத்தகைய கற்பிதங்களே. ராமகிருஷண் பரமஹம்சர் பட்டியலிடும் அத்வைத நிலைகளும் அவ்வாறானதே. அவரைப் போன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்தக் காலத்தில் வாய்ப்புகள் இல்லை. இன்று இருக்கிறது. அதனால்தான் இன்றைய சாமியார்கள் (சாயிபாபா, பிரேமானந்தா போன்றோர் விதிவிலக்கு) இத்தகைய மந்திர தந்திரங்களை குறைத்துக் கொண்டு கார்ப்பரேட் சாமியார்களாக வலம் வருகின்றனர். கல்லாவையும் கட்டுகின்றனர்.

இராமகிருஷ்ண பரமஹம்சர்  இடைவிடாத முயற்சியால் காளியை தரிசித்தார், ஆறு மாத காலம் சமாதி நிலையில் இருந்து புத்தர், மகாவீரர், குருநானக்கை தரிசித்தார் என்பனவும் கற்பிதங்களே! தரிசித்தவர்களைப் பற்றி செவிவழிக் கதைகளை கேட்டு அதை எண்ணி எண்ணி அகநிலையில் தோயும் போது அப்படி அவர்கள் கற்பனையில் ‘தரிசனம்’ தருகிறார்கள். இராமகிருஷ்ணரின் உபதேசங்கள் இந்திய புராணங்கள், இந்து மத தத்துவங்களை எளிமையாக சொல்கிறது என்றால் விவேகானந்தர் இன்னும் கொஞ்சம் நவீன மொழியில் எடுத்து வைக்கிறார். இருவரும் இந்தியாவை பார்ப்பனியத்தின் பொற்கால மரபைக் கொண்ட ஒரு நாடாக கருதி அதையே வெளிநாட்டினருக்கும் உள்நாட்டினருக்கும் தத்துவமாய் எடுத்துரைத்தனர். முதன்மையாக பார்ப்பன இந்துமதத்தின் ஆன்மா வருணாசிரமம், சாதியில்தான் உறைந்து கிடக்கிறது என்பதை மறுத்து கர்ம வாழ்வில் இருந்து கடைத்தேறும் மதமாக இந்துமதத்தை முன்வைத்தனர்.

அதனால்தான் விவேகானந்தர் “சக்கிலியர்களின் குடிசைகளில் இருந்து புதிய இந்தியா எழட்டும்” என்றாரே ஒழிய சக்கிலியர்களின் சாதி தீண்டாமையை ஒழிப்போம் என்று சொல்லவில்லை. அனைத்து மதங்களும் உண்மையை எடுத்துரைக்கின்றன, நதிகள் பலவாயினும் சேருமிடம் கடல்தான் என்பதாக மற்ற மதங்களை அங்கீகரித்தாலும் மற்ற மதங்களில் பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை; இந்து மதத்தில் அது இருக்கிறது எனும் உண்மையான முக்கியமான வேறுபாட்டை புறந்தள்ளினர். அவர்களது காலத்து இந்து மத சீர்திருத்த முன்னோடிகள் பலருக்கும் இது பொருந்தும். ஆங்கிலவழிக் கல்வியினால் நவீன உலகை கொஞ்சம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப இந்து மதத்தின் கொடிய – சதி, குழந்தை மணம், விதவை கோலம் – ஆகியவற்றை சீர்திருத்தும் போக்கில் நேர்மறையாக இந்தியாவின் ஞான மரபு பற்றி இவர்கள் பெருமை கொண்டார்கள்.

சிகாகோ நகரில் நடந்த சர்வமத மாநாட்டிற்கு இராமநாதபுரம் சேதுபதி மன்னர் காசில்தான் விவேகானந்தர் சென்றார். கமுதி ஆலய நுழைவுப் போராட்டத்தை எதிர்த்த பாஸ்கர சேதுபதிதான் இந்துமதத்தின் அருமை பெருமைகளை பேசுவதற்காக விவேகானந்தருக்கு பொருளுதவி செய்தார்.

“நாடார்களுக்கு தீண்டாமை காரணமாக ஆலய நுழைவு மறுக்கப்பட்ட அதே காலகட்டத்தில் திரு. பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் அருமைப் பெருமைகளை அயல்நாடுகளில் வியந்துரைக்க விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப் பொருளுதவி செய்தார். 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக சமய மாநாட்டில் விவேகானந்தர், சகோதரர்களே, சகோதரிகளே, எனத் தனது உரையைத் தொடங்கி இந்து மதத்தின் மேன்மைகள் குறித்து பேசிய அதே காலகட்டத்தில் இந்து சனாதன தர்மங்களின் அடிப்படைத் தேவையான தீண்டாமையின் பொருட்டு, இந்துக் கோயில்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தங்களை இந்துக்களாக கருதிய உள்ளூர் நாடார் சகோதர சகோதரிகள் இந்துக் கோயிலுக்குள் தங்களை அனுமதிக்கும்படி திரு. பாஸ்கர் சேதுபதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.”

♦ தீண்டாமை வேண்டி வழக்கு போட்ட பாஸ்கர சேதுபதியின் காசில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர் !

சாதாரண இந்துக்களிடையே ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றனர். காரணம் என்ன? எழுத்தாளர் காஞ்சா அய்லயா பதிலளிக்கிறார்.

“ராம் மோகன் ராய், தாகூர், விவேகானந்தர் குறித்து நாட்டின் அனைத்து பகுதியினரும் அறிவர். வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால். அந்தப் பெயர் கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.” என்கிறார் அய்லய்யா.

பார்ப்பனிய வருணாசிரமத்தை எதிர்த்த பெரியோர்களின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கும், பார்ப்பனிய மீட்சிக்காக பாடுபட்டோரை சந்தைப்படுத்துவதும் வேறு வேறு அல்ல.

♦ வங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் ? காஞ்சா அய்லய்யா

விவேகானந்தர், புகைப்படத்தில் காவி தலைப்பாகையுடன் கம்பீரமாக திகழும் படிமத்தை இந்துமத அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் இந்திய மக்களிடையே வலுவந்தமாகக் கொண்டு சென்றன. விவேகானந்தரின் தேசியம்தான் தங்களது தேசியம் என்று ஆர்.எஸ்.எஸ் தனது நூல்களில் பிரகடனப்படுத்துகிறது. இந்தியா ஒரு நாடு அல்ல பல்வேறு தேசிய இனங்களின் நாடு என்று மார்க்சியர்களும், மற்றவர்களும் கூறுவதற்கு மாறாக அவர்கள் இந்தியா ஒரே படித்தான பண்பாட்டினைக் கொண்ட நாடு என்று கூறும் விவேகானந்தரை முன்வைக்கின்றனர்.

இந்திய மனநிலையில் துறவு, காவி, கடவுள், பக்தி, கர்மம், யோகம் அனைத்தும் நமது ஆழ்மனதில் படியும் வகையில் இங்கே சமூக அமைப்பும் அதன் இயக்கமும் இருக்கிறது. குறைந்தபட்சமாக படித்த நடுத்தர வர்க்கத்திடம் இது அதிகமாய் இருக்கிறது. அதற்கு அப்பாற்பட்ட மக்களிடத்தில் அப்படி இல்லை. அந்த நடுத்தர வர்க்கத்து மத உணர்வின்பால் எழும் குற்ற உணர்வை மட்டுப்படுத்தும் நீதி போதனைகளாக இராமகிருஷணர், விவேகானந்தரின் உபதேசங்கள் செல்வாக்கோடு இருக்கின்றன. அப்படி கொண்டு செல்லவும் படுகின்றன. சென்னை புத்தகக் காட்சியில் எடைக்கு எடை கடைக்கு கடை ஆன்மீக நிலையங்களும் புத்தகங்களும் இருப்பது ஒரு தற்காலிக சான்று. ஆண்ட்ராய்டு தலைமுறைக்கு முன்புதான் இந்த நடுத்தர வர்க்க ஆன்மீக நாட்டம் அதிகம் என்றாலும் இன்று ஆண்ட்ராய்டு காலத்தில் அத்தி வரதருக்கு திரண்ட கூட்டத்தை பார்க்கும்போது இன்றும் அந்த சூழல் சமூகத்தில் தொடர்வதை அவதானிக்கலாம். இவற்றை கடந்து உலகை உள்ளதுபடி பார்க்கும் போது அந்த உபதேசங்களின் பொருத்தப்பாடின்மையை நாம் அறிந்து கொண்டு நிஜ உலகோடு உரையாட வழி பிறக்கும்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

2 மறுமொழிகள்

  1. உங்களின் விரிவான பதிலுக்கு நன்றி..!
    கேள்வியில் நான் குறிப்பிட்டிருந்தது ராமகிருஷ்ண பரமஹம்சர் அல்ல. “பரமஹம்ச யோகானந்தர்”. இவரது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியிருக்கிற “ஒரு யோகியின் சுயசரிதை” உலகலவில் பிரபலமானது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க