அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 05

ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள உரிமை

ழுதுவதற்கான தாள்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன, பேனாக்கள் சரிபார்க்கப்பட்டு விட்டன, வேலை விளக்கப்பட்டு விட்டது.

“எழுதத் தயாராகுங்கள்!”

அதாவது, நிமிர்ந்து நேராக உட்கார்ந்து, பேனாவை எடுத்துக் கொண்டு, “நான் தயார்” என்று வலது கரத்தை உயர்த்த வேண்டும்.

ஒருவனைத் தவிர எல்லோரும் எழுதுவார்கள். அவனை மட்டும் வரையச் சொல்லியிருக்கிறேன். எல்லாம் சரியாக உள்ளது.

“தொடங்குங்கள்!” என்று நான் மெதுவாகச் சொல்கிறேன்.

இக்கட்டளைக்குப் பின் சாதாரணமாக வகுப்பறையில் பரிபூரண நிசப்தம் நிலவும். எழுதும் போது வேறெந்த அசைவுகளும் கூடாது, சத்தம் போடக்கூடாது, நண்பர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களுக்கும் தனக்குத் தானேயும் தொந்தரவு செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லித் தந்திருக்கிறேன். யாருக்காவது எதையாவது கேட்க வேண்டுமானால் என்னிடம் வந்து மெதுவாகப் பேசட்டும் அல்லது கையை உயர்த்தினால் நானே அருகே வந்து பேசுவேன்.

குழந்தைகள் எழுதும்போது நான் பெஞ்சுகளிடையே நடக்க மாட்டேன், சத்தம் போட்டுப் பேச மாட்டேன், இன்னமும் எழுதி முடிக்காதவற்றைப் பார்க்க மாட்டேன். இதற்கு காரணம் என்ன என்பது தெளிவு. தாம் ஒரு முக்கியமான விஷயத்தில் ஈடுபட்டுள்ளோம், இதில் இடையூறு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்று குழந்தைகள் புரிந்து கொள்ளட்டும். மனிதன் சிந்திக்கும் போது, மூளையுழைப்பில் ஈடுபட்டுள்ள போது அவனுக்குத் தொந்தரவு தரக் கூடாது என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும். “எப்போது சிந்திக்கின்றீர்களோ, சிந்தனையில் மூழ்குகின்றீர்களோ, ஏதாவது நல்ல காரியத்தைச் செய்கின்றீர்களோ அப்போதுதான் நீங்கள் மிக அழகானவர்களாவீர்கள்” என்று என் ஆறு வயதுக் குழந்தைகளிடம் அடிக்கடி சொல்கிறேன்.

இவ்வார்த்தைகளின் உட்பொருளை அவர்களால் புரிந்து கொள்ள முடியுமா? ஒருவேளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமலிருக்கலாம். ஆனால் இவற்றில் உள்ள கருத்தாழத்தை அவர்கள் உணருவார்கள். சில நேரங்களில் ஏதாவதொரு குழந்தையைக் கூப்பிட்டு இரகசியம் பேசுவேன், எனது கருத்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வேன்: “ஏக்காவைப் பார், அவள் எப்படி சிந்தனையில் மூழ்கியிருக்கின்றாள்…. உலகில் எல்லாவற்றையுமே அவள் மறந்துவிட்டாள். அவளைப் பார்க்க, அவள் சிந்திப்பதை, கண்களைச் சுருக்கி கொண்டு அவள் எங்கோ நோக்குவதைக் காண எனக்கு எவ்வளவு பிடிக்கிறது! அற்புதமான காட்சி இல்லையா?”

வேலையிலிருந்து பிரித்ததற்காக மன்னிப்புக் கேட்டு விட்டு அவனை இடத்திற்கு அனுப்புகிறேன். அவன் மெதுவாக நடந்து சென்று கவனமாக இடத்தில் அமருகிறான், ஒரு நிமிடம் கழித்துப் பார்த்தால் அவனும் நெற்றியைச் சுருக்கியபடி கண்களால் எங்கோ பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான். ஒவ்வொரு பாடமும் செல்லச் செல்ல, “நீ இப்போது எவ்வளவு அழகாய் இருக்கின்றாய்! நான் உன்னைப் பார்த்து மகிழ்கிறேன்!” என்ற எனது வெளிப்படையான, திருப்தியான கண்ணோட்டத்தை அவன் உணர ஆரம்பிக்கிறான்; வேலையில் ஈடுபட்டிருக்கும் போது விளையாட்டுத் தனத்தைக் கைவிட்டு, சிந்தனையில் மூழ்கி, சிந்திக்கும் மனிதனின் அழகைப் பெறும் முயற்சி அவனிடம் வலுப்பெற்று வருகிறது.

இந்த முறையால் குழந்தை சிந்திக்கக் கற்றுக்கொள்ளாது என்று எனக்குத் தெரியும். ஆனால், இப்படி நடந்து கொள்வதன் மூலம் குழந்தை சிந்திக்கும் மனிதனின் அழகை விரைவிலேயே பெறுகிறான், கவனத்தை ஒரு முனைப்படுத்தும் சக்தியைப் பெறுகிறான், ஒருவன் சிந்திக்கும் போது அவனைத் தொந்தரவு செய்ய யாருக்கும் உரிமையில்லை, அதே போல் தனக்கும் மற்றவர்கள் சிந்திக்கையில் இடையூறு செய்ய உரிமையில்லை என்று புரிந்து கொள்கிறான். எனது “முதுமொழி” பாடங்களில் தன்னிச்சையாக நான் நடந்து கொள்வதைத் தடை செய்கிறது. ஏனெனில், பாடங்கள் குழந்தைகளின் சொத்தே தவிர என் சொத்தல்ல. அந்த “முதுமொழி” இது தான்:

பாடவேளைகளின் போது தர்பார் நடத்தக் கூடாது, படிப்பில் புதியவற்றை அறியும் யோசனையில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் சிந்தனையைக் குலைக்கக் கூடாது. அமைதியாக வேலை செய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள உரிமையைப் பேணிக் காக்க வேண்டும்.

நான் என் மேசையில் உட்கார்ந்து, புத்தகத்தைத் திறந்து, படிப்பது போல் பாவனை செய்கிறேன். ஆனால், குழந்தைகளுக்குத் தெரியாமலேயே அவர்களைக் கவனிக்கிறேன். பலர் ஏற்கெனவே எழுத ஆரம்பித்து விட்டனர். ஆனால் நீயா தனது முதல் கட்டுரையில் என்ன எழுதுவது என்று இன்னமும் யோசிக்கிறாள். தாத்தோ பேனாவைச் சுற்றிக் கொண்டிருக்கிறான், இன்னமும் எழுதத் துவங்கவில்லை. மாயா உதட்டைக் கடிக்கிறாள், புருவங்களை நெறிக்கிறாள், கண்களைச் சுருக்குகிறாள், அவள் யோசிக்கிறாள்.

குழந்தைகள் பெஞ்சில் தலை குனிந்து அமர்ந்திருக்கின்றனர். சில தலைகள் மிகவும் கீழாக இருந்ததால் மூக்கு நுனி கிட்டத் தட்ட தாளைத் தொடுகிறது. இப்படி உட்காரக் கூடாது. என்ன செய்வது? எனது முதல் ஆசிரியையின் நினைவு எனக்கு வந்தது. இவரும் நாங்கள் இப்படி உட்காரக் கூடாது என்பதற்காகப் பாடுபட்டார், ஆனாலும் அவரால் நினைத்ததைச் செய்ய இயலவில்லை. அப்போது அவர் ஒரு அற்புதமான யோசனையைக் கண்டு பிடித்தார். இதன் உதவியால் நாங்கள் சரியாக உட்காரும் பிரச்சினையை வெகு விரைவில் தீர்த்தார்.

“பாருங்கள் என் முதுகை!” என்று சொன்ன அவர் தன் நீல நிற அங்கியைக் கழட்டிக் காட்டியபடி வரிசைகளின் ஊடாக நடந்தார்.

எங்களது அன்பு ஆசிரியையின் முதுகில் ஏதோ அசாதாரணமான ஒன்று உள்ளதை நாங்கள் தடவிப் பார்த்தோம். அவர் நேராக நிமிர்ந்து நின்ற போது, முதுகு ஒரு அசாதாரண வடிவத்தில் இருந்தது தெரிந்தது.

“இது கூன் விழுந்துள்ள இடம். இது இப்படியாகக் காரணம், நானும் சிறு வயதில் உங்களைப் போல் நேராக நிமிர்ந்து உட்காராமல் இருந்தது தான்” என்று சொன்ன அவர் தொடர்ந்தார்: “யாருக்கெல்லாம் முதுகில் கூன் விழ ஆசையில்லையோ அவர்கள் எல்லாம் நேராக நிமிர்ந்து உட்காரட்டும்!”

படிக்க:
வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !
ஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா ?

அவர் தன் நீல நிற மேலங்கியை அணிந்து கொண்டார், அது முதுகிலிருந்த கூனை மறைத்தது. “நேராக உட்காருங்கள்” என்று சொல்லும் அவசியம் அதற்குப் பின் அவருக்கு ஏற்படவே இல்லை. இதோ பல ஆண்டுகளுக்குப் பின் இன்று அவரை வருத்தத்தோடும் மகிழ்ச்சியோடும் நினைத்துக் கொள்கிறேன்.

எனது ஆறு வயதுக் குழந்தைகள் தோள்பட்டைகளைக் குறுக்கி, குனிந்தபடி எழுதுகின்றனர். எப்போதும் இவர்கள் நேராக உட்காரும்படி செய்யும் நம்பகரமான வழி இல்லாதது வரை நான் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தியாக வேண்டும். இதோ இப்போதும் அப்படித்தான்.

“குழந்தைகளே நிமிர்ந்து நேராக உட்காருங்கள்!” என்று நான் மெதுவாகச் சொல்கிறேன்.

உடனே எல்லோரும் நேராக உட்கார்ந்தனர்…..

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க