அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 33

அரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல்

அ.அனிக்கின்

டேனியல் டிஃபோ எழுதிய இராபின்சன் குரூசோ என்ற நாவலின் முதல் பதிப்பு 1719-ம் வருடத்தில் லண்டனில் வெளியானது. அந்தப் புத்தகம் அசாதாரணமான சிறப்பைப் பெற்றது. ஒரு பக்கத்தில், வீரசாகஸக் கதை என்ற வகையில் அது அங்கீகாரம் பெற்ற பேரிலக்கியம். மறுபக்கத்தில் இராபின்சன் குரூசோ என்ற நாவலைப் பற்றி தத்துவஞான ரீதியாகவும் கல்வித்துறையின் கோணத்திலும் அரசியல் பொருளாதார அடிப்படையிலும் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கின்ற நூல்கள் ஒரு நூலகத்தை நிரப்புகின்ற அளவுக்கு அதிகமாக இருக்கின்றன.

ஒரு தனி மனிதன் (சில சமயங்களில் மனிதர்கள் கோஷ்டி) சமூகத்துக்கு வெளியே வாழ்க்கை நடத்துகின்ற, உழைக்கின்ற நிலைமைகளை ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளர் கற்பனையாக எழுதுவதற்கு “இராபின்சனாதல்” என்று பெயர். அதுவும் ஒரு பொருளாதார மாதிரிப் படிவம் என்று கூறலாம். அதில் மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகள், அதாவது சமூக உறவுகள் விலக்கப்பட்டு, ஒதுங்கிவாழ்கின்ற தனிநபர் இயற்கையோடு கொண்டிருக்கும் உறவுகள் மட்டுமே இருக்கின்றன. அரசியல் பொருளாதாரம் இராபின்சனாதலை விரும்புகிறது என்று மார்க்ஸ் சொன்னார். இது மார்க்சுக்கு முந்திய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தைக் காட்டிலும் மார்க்சுக்குப் பிந்திய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்துக்கு அதிகம்மாகப் பொருந்துகின்றது என்று நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

டிஃபோ இராபின்சன் குரூசோ என்ற நாவலைத் தன்னுடைய அறுபதாவது வயதில் எழுதினார்; அதற்குப் பிறகும் சில நாவல்கள் எழுதினார். இந்த நாவல்கள் சிறப்பானவை என்று கருதப்பட்ட போதிலும் டிஃபோ தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் அவற்றை மிகச் சாதாரணமானவை என்று தான் கருதினார். தான் எழுதியிருக்கும் ஏராளமான அரசியல், பொருளாதார, வரலாற்றுப் புத்தகங்களே தன்னுடைய மறைவுக்குப் பிறகு தனக்குப் புகழ் தேடித்தரக் கூடியவை என்று அவர் கருதினார். கலாச்சார வரலாற்றில் இப்படிப்பட்ட கற்பனைகள் ஏற்படுவதுண்டு.

Political-Economy-Daniel-Defoe
டேனியல் டிஃபோ

அவருடைய சொந்த வாழ்க்கையே ஒரு வீரசாகஸக் கதையைப் போன்றதாகும். அவர் 1660-ம் வருடத்தில் (அவர் பிறந்த வருடம் நிச்சயமில்லை) லண்டனில் பிறந்தார்; 1731-ம் வருடத்தில் அங்கே மரணமடைந்தார். பரிசுத்தவாதியான சிறு கடைக்காரரின் மகனான டிஃபோ தன்னுடைய சொந்தத் திறமை, ஊக்கம், அறிவு ஆகியவற்றின் மூலமாக வாழ்க்கையில் முன்னேற்றமடைந்தார். இங்கிலாந்தின் அரசரான இரண்டாம் ஜேம்சுக்கு எதிராக 1685-ம் வருடத்தில் நடைபெற்ற மான்மு கலகத்தில் அவர் பங்கெடுத்துக் கொண்டார். அந்தக் கலகம் நசுக்கப்பட்டது; அதில் ஈடுபட்டவர்கள் சிரச் சேதம் செய்யப்பட்டனர் அல்லது காலனிகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஆனால் டிஃபோ அதிர்ஷ்டவசமாகத் தப்பிவிட்டார். முப்பது வயதாகும் பொழுது அவர் பணக்கார வணிகராக இருந்தார்; ஆனால் 1692-ம் வருடத்தில் அவர் நொடித்துப் போனார், 17,000 பவுன் கடன்கள் அவருக்கு ஏற்பட்டிருந்தன.

இந்த சமயத்தில் தான் அவர் அரசியல் பிரசுரங்கள் எழுத ஆரம்பித்திருக்க வேண்டும்; ஹாலந்தின் மூன்றாம் வில்ஹெல்ம் மற்றும் அவருடைய நெருக்கமான ஆலோசகர்களின் நம்பிக்கையைப் பெற்றார். 1698ம் வருடத்தில் அவர் திட்டங்களைப் பற்றி ஒரு கட்டுரை என்ற பொருளாதாரப் புத்தகத்தை எழுதினார்; அதில் துணிச்சலான பொருளாதார, நிர்வாகச் சீர்திருத்தங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

அவரை ஆதரித்த அரசர் மரணமடைந்த சிறிது காலத்துக்குப் பிறகு, 1703-ம் வருடத்தில் அவர் பரிசுத்தவாதிகளை ஆதரித்தும் ஆங்கிலத் திருச்சபையைக் கண்டித்தும் எழுதிய காரசாரமான பிரசுரத்துக்காக தண்டனைக் கட்டையில் மாட்டப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். டோரிக் கட்சியின் தலைவர் ராபர்ட் ஹார்லி அவரைச் சிறையிலிருந்து (18 மாதங்கள் சிறையிலிருந்த பொழுது அவர் ஏராளமாக எழுதிக் குவித்தார்) விடுதலை செய்தார். இந்த உதவிக்கு நன்றியாக டிஃபோ தன்னுடைய எழுத்துத் திறமையை அன்றைக்கிருந்த மிகச் சிறந்த பத்திரிகையாளரின் எழுத்துத் திறமையை – டோரிக் கட்சிக்கும் தனிப்பட்ட வகையில் ஹார்லிக்கும் அர்ப்பணித்தார். அவர் ஹார்லியின் சார்பில் இரகசியமான பிரதிநிதியாக ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளுக்கும் போய் அவர் ஒப்படைத்திருந்த முக்கியமான இரகசியப் பணிகளை நிறைவேற்றினார்.

ஆன் அரசியின் மரணமும் ஹார்லியின் வீழ்ச்சியும் அவ ருடைய பணிகளைத் திடீரென்று முடிவுக்குக் கொண்டுவந் தன. 1715-ம் வருடத்தில் அரசியல் அவதூறுக் குற்றம் சாட்டப்பட்டு அவர் மறுபடியும் சிறையிலடைக்கப்பட்டார். அவர் மறுபடியும் இரகசிய வேலைகளைச் செய்வதற்காக, புதிய அரசாங்கத்துக்கு விரோதமான பத்திரிகைகளை உள்ளேயிருந்து கவிழ்க்கும் வேலைக்காக விடுதலை செய்யப்பட்டார்.

படிக்க:
வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் !
பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

இராபின்சன் குரூசோவின் ஆசிரியர் ஏராளமான அனுபவச் செல்வத்தைக் கொண்டிருந்தார். யார்க் நகரத்திலிருந்து புறப்பட்ட மாலுமியின் வீரசாகஸங்களைப் பற்றிய கதைக்கு ஆழத்தைக் கொடுத்தது இதுவே. டிஃபோவுக்குத் தன்னுடைய கடைசி நேரம் வரையிலும் அமைதியுமில்லை, ஓய்வுமில்லை. ஒரு மனிதர் தன்னுடைய அறுபதாவது வயதுக்கும் எழுபதாவது வயதுக்குமிடையில் பல பெரிய நாவல்களையும் கிரேட் பிரிட்டனைப் பற்றி பொருளாதார, பூகோள ரீதியாக மிக விரிவான வர்ணனையையும் ஏராளமான வரலாற்றுக் கட்டுரைகளையும் (ருஷ்ய சக்கரவர்த்தியான முதலாம் பீட்டரைப் பற்றியும் ஒரு கட்டுரை உட்பட) பேய்கள், மந்திர தந்திரங்களைப் பற்றியும்(!) வரிசையாகப் பல புத்தகங்களையும் அதிகமான வித்தியாசத்தைக் கொண்ட பல தலைப்புகளில் ஏராளமான சிறு கட்டுரைகளையும் பிரசுரங்களையும் எழுதியது அரிய சாதனை, நம்ப முடியாத அளவுக்குப் பெரிய சாதனை. 1728-ம் வருடத்தில் இங்கிலாந்தின் வர்த்தகத்துக்கு ஒரு திட்டம் என்ற தலைப்புடைய பொருளாதார நூலையும் எழுதினார்.

“இராபின்சன்களை” நோக்கித் திரும்புவோம். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச் சிறப்புடைய மரபுக்கு இயற்கையான மனிதனைப் பற்றிய கருத்து அடிப்படையாக இருந்தது. நிலப்பிரபுத்துவ சமூகம் பல வகையான ஒடுக்கும் உறவுகளாலும் கட்டுப்பாடுகளாலும் மனிதனைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது; இந்தச் “செயற்கையான நிலைக்குத்” தன்னையறியாமலே ஏற்பட்ட எதிர்ப்பாக “இயற்கையான மனிதனைப்” பற்றிய கருத்து தோன்றியது. ஆனால் புதிய முதலாளித்துவ சமூகத்தின் ”இயற்கையான” மனிதனை, இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமான போட்டி, சமமான வாய்ப்புக்களைக் கொண்ட உலகத்துக்குத் தயாராக்கப்பட்ட தனி மனிதவாதியை, -ஸ்மித்தும் ரிக்கார்டோவும் – அவர்களுக்கு முன் பிருந்தவர்களும் – ஒரு நீண்ட வரலாற்று ரீதியான வளர்ச்சியினுடைய விளைவாகக் கருதவில்லை; அதற்கு மாறாக, அதன் திருப்புமுனையாக, “மனித இயற்கையின்” கண் கூடான உருவமாகக் கண்டார்கள்.

முதலாளித்துவத்தின் கீழ் சமூக உற்பத்தியில் இந்தத் தனி மனிதவாதியின் நடத்தையை விளக்குவதற்கு முயற்சி செய்த பொழுது, அவர்கள் ”இயற்கைச் சட்டத்தின்” கருத்துக்களைத் தமக்கு ஆதாரமாகக் கொண்டார்கள்; சமூகத்தில் நடைமுறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் மீது தங்களுடைய கவனத்தைச் செலுத்தாமல், தன்னந்தனியான வேடன், மீன் பிடிப்பவன் ஆகியோரைப் பற்றிய கற்பனையான உருவத்தின் மீது கவனத்தைக் குவித்தார்கள். யாருமில்லாத தீவில் விடப்பட்டிருக்கும் ஸ்தூலமான இராபின்சன் குரூசோவை இந்த எழுத்தாளர்கள் சூக்குமமான தொடர் உருவகமாக, பெரும்பாலும் முற்றிலும் சம்பிரதாய பூர்வமான உருவகமாக மாற்றிக் கொண்டனர் என்பது இதன் பொருள்.

Political-economyRobinson-Crusoe-1ஆகவே இராபின்சனாதல் என்பது அவசியத்தின் காரணமாக எப்போதும் சமூகத் தன்மை கொண்டதும், வரலாற்று ரீதியான வளர்ச்சியில் ஸ்தூலமான ஒரு கட்டத்தோடு இணைக் கப்பட்டிருப்பதுமான உற்பத்தியின் விதிகளை, சமூகம் என்ற மிக முக்கியமான கூறை விலக்கியுள்ள சூக்குமமான மாதிரிப் படிவத்தைக் கொண்டு ஆராய்வதற்குச் செய்யப்பட்ட முயற்சியாகும். மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் இராபின்சனாதலை மார்க்ஸ் மிகவும் ஆழமாக விமரிசனம் செய்தார். இந்த விருப்பம் 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த “மிகவும் சமீபமான அரசியல் பொருளாதாரத்துக்கு” நகர்ந்து விட்டது என்று அவர் கூறினார்; அது தனக்குச் சாதகமான முறையில் ”இயற்கையான மனிதனின்” கற்பனை உலகத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்துக்கு உரித்தான பொருளாதார உறவுகளைப் பார்த்தது.

மார்க்சின் ஒரு வாக்கியத்தை மட்டும் இங்கே மேற்கோள் காட்டுவோம்: “சமூகத்துக்கு வெளியே தனித்து விடப்பட்ட நபரின் உற்பத்தி என்பது தற்செயலாக யாருமில்லாத தீவில் அகப்பட்டுக் கொள்கின்ற ஒரு நாகரிக முள்ள மனிதன் ஏற்கெனவே தன்னுள் சமூக சக்தியின் சுறுசுறுப்பைக் கொண்டிருக்கின்றபடியால் (அழுத்தம் என்னுடையது அ. அ.) அது அபூர்வமாக நடக்கக் கூடியதே. ஒன்று சேர்ந்து வாழ்கின்ற. பேசுகின்ற தனி நபர்கள் இல்லாமல் மொழி வளர்ச்சியடைவது போலவே இதுவும் அபத்தமானதாகும்.”(1)  

இந்த மேற்கோளில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் பகுதி இராபின்சன் குரூசோவின் கதை அமைப்புத் தொடர்பாக சுவாரசியமானதாகும். இராபின்சன் எந்த அளவுக்கு சமூக சக்திகளைத் தன்னுள் கொண்டிருக்கிறார் என்பதைக் காண்போம். மாறியுள்ள சூழ்நிலையில் அவர் ”இயற்கையான மனிதன்” என்ற நிலையிலிருந்து வேகமாக மாறுகிறார்; முதலில் தந்தை வழி அடிமை உடைமையாளராக (வெள்ளிக் கிழமை என்ற உதவியாள்), பிறகு ஒரு நிலப்பிரபுத்துவப் பிரபுவாக (குடியேற்றத்தை ஏற்படுத்துகிறார்) மாறுகிறார். அவருடைய ”சமூகம்” தொடர்ந்து வளர்ச்சியடைந்திருந்தால் அவர் முதலாளியாகவும் மாறியிருப்பார்.

படிக்க:
காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்
♦ புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே ! பொதுக்கூட்ட செய்திகள் – படங்கள்

பொருளாதார நிகழ்வுகளைத் தனி நபர்களின் உணர்ச்சிகள், உளவியலின் அடிப்படையில் ஆராய்வதற்கு அரசியல் பொருளாதாரத்தின் அகநிலை மரபினோர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு இராபின்சனாதல் ஒரு உண்மையான கண்டு பிடிப்பாகப் பயன்பட்டது. 19ம் நூற்றாண்டின் எழுத்துக்களில் இந்தப் போக்கு ஆரம்பமாயிற்று; இவர்கள் “மிகச் சிறிய பகுதியான” தனி நபரின் மீது கவனத்தை ஒருமுனைப் படுத்தினர். அதற்கு இராபின்சன் குரூசோவைக் காட்டிலும் அதிகப் பொருத்தமான நபரை யாராலும் கற்பனை செய்யக் கூட முடியாது.

ஆஸ்திரியாவின் அகநிலை மரபைச் சேர்ந்த சிறப்புமிக்க பொருளியலாளரான பேம்-பவேர்க்கின் (1851-1914) இராபின்சனாதல் ஒரு சிறந்த உதாரணமாகும். இவர் தன்னுடைய வாதத்தில் மதிப்புத் தத்துவத்திலும் மூலதனத் திரட்சி பற்றிய தத்துவத்திலும் – இரண்டு சந்தர்ப்பங்களில் இராபின்சன் குரூசோவைத் திருப்புமுனையாகப் பயன்படுத்துகிறார். – 17, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கூட, மதிப்பு என்பது சமூக உறவு, பொருள்கள் பண்டங்களாக, சமூகத்துக்குள் பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்படும் பொழுது மட்டுமே அது இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டார்கள். மதிப்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு யாரும் நுழையாத காட்டில் எல்லா விதமான தொடர்புகளுக்கும் அப்பாற்பட்ட இடத்திலிருக்கும் மரக்கூட்டில் வசிக்கின்ற ஒரு “குடியேற்றவாதி” போதுமென்று பேம்-வேர்க் கூறுகிறார். இந்த இராபின்சனிடம் ஐந்து மூட்டை தானியம் இருக்கிறது; கடைசி தானிய மூட்டையின் உபயோகத்தைக் கொண்டு தானியத்தின் மதிப்பு அளவிடப்படுகிறது. 

மூலதனம் என்பது உற்பத்திச் சாதனங்களை உடைமையாகக் கொண்டிருப்பவர்களுக்கும் அவற்றை இழந்திருக்கின்ற, உழைப்பை விற்பனை செய்கின்ற, சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கும் இடையே உள்ள சமூக உறவு . அது சமூக வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தான் தோன்றுகிறது. ஆனால் பேம்-பவேர்க்கைப் பொறுத்தவரையிலும் பொருள் வடிவத்திலிருக்கின்ற உழைப்புக் கருவிகள் எவையும் மூலதனமே. எனவே இராபின்சன் காட்டில் விழுந்து கிடக்கும் பழங்களைப் பொறுக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் அவனிடம் மூலதனம் கிடையாது. ஆனால் அவன் தன்னுடைய உழைப்பு நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி ஒரு வில்லும் சில அம்புகளும் தயாரித்தவுடன் அவன் முதலாளியாகிவிடுகிறான்; ஏனென்றால் இது மூலதனத் திரட்சியின் முதல் நடவடிக்கை. இங்கே மூலதனம் என்பது சாதாரணச் சேமிப்பாகச் சுரண்டலின் எந்த வடிவத்தோடும் சம்பந்தமில்லாததாக இருக்கிறது என்பதை நாம் காணலாம்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் இராபின்சன் மரபு அதிகமான பலமுடையதாக இருப்பதால் இராபின் சனைக் குறிப்பிடாமல் பொருளாதாரத் தத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகம் கூட எழுத முடிவதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த நவீன பொருளியலாளரான பி. சாமுவேல்சன் தன்னுடைய பாடபுத்தகத்தின் ஆரம்பத்தில் இராபின்சனை எதிர் நோக்கிய பொருளாதாரப் பிரச்சினைகள் ஒரு பெரிய சமூகத்தை எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து அடிப்படையில் மாறுபட்டிருக்கவில்லை என்று எழுதுகிறார். இது நம்ப முடியாத, தெளிவற்ற கருத்தாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)   K. Marx, Grundrisse der Kritik der Politischen Ökonomie, Moskau, 1939, p. 6..

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க