அணுக்கழிவை விட ஆபத்தான கழிவு மோடி – எடப்பாடி அரசு !

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்கும் அணுக்கழிவு – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை பேரழிவு திட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டம்.

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே! என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த 01.09.2019 அன்று புதுச்சேரி மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் விளக்கப் பொதுக்கூட்டமும் – புரட்சிகர கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

இந்தியப் பொருளாதாரம் சரிந்து வீழ்ந்து கிடக்கிறது. அதை நட்டமாக நிமிர்த்தப் போவதாகவும், அந்நிய முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்காகவும், எடப்பாடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறிவருகின்றனர் அதிமுக அடிமைகள். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும், உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், இந்தியா ஸ்திரமான நிலையில் இருப்பதாக தனது பங்கிற்கு பொய்யை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால், தமிழகம் ஏற்கனவே பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் வேதாந்தா போன்ற சில கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காக, ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு, எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழக வளங்களும் அழிக்கப்படுகிறது.

இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் அடுத்த தலைமுறை வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறும். நமது மண்ணைக் காப்பதற்கு இந்த அழிவுத் திட்டங்களை எதிர்கொண்டு முறியடிக்க, வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை விளக்கும் வகையில் இப்பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இப்பொதுக்கூட்டத்தில், புதுச்சேரி மக்கள் அதிகாரத்தின் தோழர் E.K.சங்கர் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில துணைச் செயலாளர் தோழர் திருநாவுக்கரசு, மக்கள் அதிகாரத்தின் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, மக்கள் அதிகாரத்தின் தமிழ்நாடு மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

PP Meeting Posterநிகழ்ச்சியில் பேசிய தோழர்கள், ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு திட்டங்கள் ஏற்படுத்தப் போகும் பேரழிவுகளையும், இத்திட்டங்களின் பாதிப்புக்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுடுகாடாக மாற்றிவிடும் என்பதை விளக்கியும், இப்பேரழிவு திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் மக்களை ஒன்றுசேர விடாமல் சாதிவெறியையும், மதவெறியையும் தூண்டி எதிரிகளாக மாற்றும் வேலையைத்தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்து வருகிறது என்பதை விளக்கியும் உரையாற்றினர். சமீபத்திய அம்பேத்கர் சிலை உடைப்பும், விநாயகர் சிலை வைப்பது ஊர்வலம் நடத்துவது என்பது சமீபத்திய உதாரணங்களாகச் சுட்டிக் காட்டியும் விளக்கினர்.

படிக்க:
கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?
புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?

நிகழ்ச்சியின் இடையிடையேயும், நிகழ்ச்சியின் இறுதியிலும் பாடப்பட்ட மகஇக-வின் புரட்சிகர பாடல்கள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும், போராட அறைகூவும் வகையிலும் இருந்தது.

வினவு செய்திப் பிரிவு

தகவல்:
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.
தொடர்புக்கு: 87542 05589

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க