ரப்பா நாகரிகம் என்றழைக்கப்படும் சிந்துச் சமவெளி நாகரிக (Indus Valley Civilisation – IVC) மக்களின் மரபு வழி அடையாளம் குறித்த மர்மம் மற்றும் சர்ச்சைகளுக்கு கடந்த வியாழனன்று (05-09-2019) வெளியிடப்பட்ட இரண்டு மரபணு ஆய்வுகள் மறுக்கவியலாத பதிலை அளித்துள்ளன. மேலும், ஆரியர்களின் வருகை படையெடுப்பின் விளைவானதா அல்லது இடம்பெயர்வு குடியேற்றத்தின் மூலமானதா என்கிற கேள்விக்கும் விடையளித்துள்ளன.

சிந்துச் சமவெளி நாகரிகம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் பகுதிகளில் தோராயமாக கி.மு3300 முதல் கி.மு1300 வரை (5000 ஆண்டுகளுக்கு முன்) செழித்திருந்த இந்நாகரிகம் மெசபடோமிய மற்றும் எகிப்திய நாகரிகங்களின் சமகாலத்தியதும் அளவில் அவற்றைவிடப் பெரியதுமாகும்.

சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் யார், எங்கிருந்து வந்தனர், அவர்களுடைய நாகரிகம் என்ன? வட மற்றும் தென்னிந்திய மக்களின் மூதாதையர்கள் யார்? என்ற இரண்டு கேள்விகளுக்கும் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

Indus-Valley-Civilizationமத்திய ஆசியாவிலிருந்து சிந்துச் சமவெளி நாகரிகத்தின் இறுதிக் காலத்தில் படையெடுத்தோ அல்லது இடம்பெயர்ந்தோ வந்த ஆரியர்களின் மொழியே இந்தோ-ஐரோப்பிய மொழியான சமஸ்கிருதம். அவர்களின் கலாச்சாரமே வேத கலாச்சாரமும் வேதங்களும் என்பது மொழியியல் மற்றும் தொல்லியல் ஆய்வறிஞர்களின் கருத்து. குறிப்பாக சிந்து சமவெளி நாகரீகம் வேத நாகரீகம் அல்ல என்பது தொல்லியல் ஆய்வறிஞர்களின் கருத்து.

ஆனால் இந்துத்துவ சார்பு அறிஞர்களோ, இந்தக் கருத்துக்கள் முதலில் ஐரோப்பிய ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டதைக் காரணம் காட்டி, காலனியவாதிகள் இந்தியர்களை பிரித்தாள்வதற்காக பரப்பிய கருத்தாகக் கூறி வருகின்றனர். மேலும், திராவிடர்கள் முந்தி வந்தனர், ஆரியர்கள் பிந்தி வந்தனர் என்பது போன்ற வாதங்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்து ஆட்சியைப் பிடித்த ஆங்கிலேயர்கள் தங்களது ஆதிக்கத்திற்கு ஒரு தார்மீக நியாயத்தைக் கற்பிப்பதற்காக எடுத்த முயற்சிகளின் ஒரு பகுதியே என்பதுதான் இந்த இந்துத்துவ அறிஞர்களின் வாதம்.

“சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய், வேத நாகரிகமும் அதன் கலாச்சாரமுமே எல்லா இந்தியப் பண்பாடுகளுக்கும் மூலம். இந்தியப் துணைக்கண்டத்தின் முதல் நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் ஒரு வேத நாகரிகமே. அதனடிப்படையிலேயே இந்நாடு இந்தியா என்றழைக்கப்படுகிறது. அனாதிக்காலம் தொட்டு இங்கே இந்து மதமும் சமஸ்கிருதமும் நிலவி வந்தது” என்பதே இந்துத்துவ அரசியலின் அடிப்படை. இந்தப் பின்னணியில்தான் அவர்கள் சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் என்று நிறுவ முற்படுகின்றனர்.

படிக்க:
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !
♦ நூல் அறிமுகம் : வேதமும் விஞ்ஞானமும்

ஹரியானா மாநிலத்தின் ராக்கிகர்ஹி என்ற இடத்தில் வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிக கால நகரம் இருந்துள்ளது. அவ்விடத்தில் தொல்பொருள் அகழ்வாய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் சிந்துச் சமவெளி நாகரிக காலத்தைச் சேர்ந்த இடுகாட்டில் ஆண், பெண் இருவரின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். அதில் பெண்ணின் எலும்பை மரபணு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இவ்வாய்வறிக்கை செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

இரண்டாவது, அறிவியல் (science) ஆய்விதழில் வெளியான “தெற்காசியா மற்றும் மத்திய ஆசிய மக்களின் மரபணு உருவாக்கம்” என்ற ஆய்வறிக்கை. இது மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவின் வடபகுதியில் (குறிப்பாக ஈரான், ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்) கண்டெடுக்கப்பட்ட 300 முதல் 8000 ஆண்டுகள் வரை பழமையான 523 மரபணுத் தொகுப்புக்களை தற்போதைய தெற்காசிய மக்களின் மரபணுவுடன் ஒப்படுவதன் மூலம் முழுதுமாக மத்திய, தெற்காசிய மக்களின் வம்சாவளி, கலாச்சாரம் மற்றும் மொழி நகர்வுகள் குறித்து ஆராய்கிறது.

mohenjo-daro-Indus-Valley-Civilizationஇதில் சிந்துச்சமவெளி நாகரிக மக்கள் மற்றும் இந்திய வம்சாவளிகள் குறித்தும் “வெளிப்புற மாதிரி”யின் (Outlier Model) மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது நேரடியான சிந்துசமவெளி நாகரிக மனிதர்களின் மரபணுவைக் கொண்டு செய்யப்படவில்லை. அதோடு தொடர்பிலிருந்த பிற நாகரிகங்களில் அவற்றோடு பொருந்தாத ஆனால் சிந்துசமவெளி நாகரிகத்தோடு பொருத்தபாடுடைய 11 மரபணுக்களைக் கொண்டு செய்யப்பட்டது. தொல்லியலில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய மனிதர்களின் மரபணு பற்றிய ஆய்வுகளிலேயே மிகப்பெரும் ஆய்வு இதுவாகும்.

சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் பண்டைய ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை. பழங்கால தென்னிந்திய வேட்டைச் சமூகம் மற்றும் பழங்கால விவசாயத்திற்கு முந்தைய (புதிய கற்கால) ஈரானிய சமூகம் ஆகிய கலப்பின மரபணுவைக் கொண்டிருப்பதை இவ்விரு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

சிந்துச் சமவெளி மக்களிடம் ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை நிறுவுயிருப்பதன் மூலம் இந்தோ – ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்திலேயே ஈரானில் இருந்து வந்து இந்திய மூதாதையினருடன் கலந்தனர் என்றும், இவர்களே பின்னர் வேளாண்மையில் ஈடுபட்டு சிந்துச்சமவெளி நாகரிகமாக வளர்ச்சியடைந்தனர் என்றும் இந்துத்துவ அறிஞர்களால் பரப்பப்பட்டுவந்த கூற்று தவறானது என்பது தற்போது ஆதாரத்துடன் நிருபணமாகியுள்ளது.

இந்தோ-ஐரோப்பிய மொழி ஈரானிலிருந்து வரவில்லை எனும்போது ஸ்டெப்பி புல்வெளி மேய்ப்பர்களின் மூலம் மட்டுமே வந்திருக்க முடியும். சிந்துச் சமவெளி நாகரிக மக்களிடம் ஸ்டெப்பி புல்வெளி நாடோடி மேய்ப்பர்களின் மரபணுவும் இல்லை என்பதிலிருந்து சிந்துச்சமவெளி நாகரிகம் வேத (ஆரிய) நாகரிகம் அல்ல என்பதும் உறுதியாகிவிட்டது.

படிக்க:
தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல் PDF வடிவில் !
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

“தற்கால வட இந்தியர்களிடம் குறிப்பாக இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பங்களை பயன்படுத்தும் இந்திய புரோகித சமூகங்களில் (குறிப்பாக பார்ப்பன, பனியா மேல்சாதியினர்) இந்த ஸ்டெப்பி வம்சாவளி மரபணு மிக அதிகமாகக் காணக்கிடைக்கிறது” என்கிறது science இதழில் வெளியான ஆய்வு.

சிந்துச் சமவெளி மக்களிடம் இல்லாத மரபணுக் கூறு இன்றைய வட இந்திய மக்களின், மேலதிகமாக பார்ப்பன- பனியா மேல் சாதியினரின் மரபணுக்களில் காணப்படுவதன் காரணம் என்ன?

இன்றைய நவீன இந்தியர்கள் அனைவருமே வடஇந்திய மூதாதையர் (Ancestral Noth Indians – ANI)  மற்றும்  தென்னிந்திய மூதாதையர் (Ancestral South Indians – ASI) ஆகிய இரு வம்சாவளியின் வழித்தோன்றல்களே. இவ்விரு வம்சாவளியினரும் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பின்னரே தோன்றினர் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.

“சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அம்மக்கள் வடமேற்கில் இருந்த இனக்குழுக்களுடனும் மற்றும் ஸ்டெப்பி வம்சாவளியுடனும் கலந்து ‘வடஇந்திய மூதாதையர்’ உருவாகினர். மேலும் தென்கிழக்கு குழுக்களுடன் கலந்து ‘தென்இந்திய மூதாதையர்’  உருவாகினர்” என்கிறது science இதழில் வெளியான ஆய்வு அறிக்கை.

Aryansஅதாவது, இந்தோ-ஐரோப்பிய (இந்தோ-ஆரிய) மொழிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்த ஸ்டெப்பி நாடோடி மேய்ப்பர்கள் கிமு 2000 முதல் கிமு 1500 வரையிலான காலப்பகுதியில் தான் அதாவது ஹரப்பா நாகரிக வீழ்ச்சிக்குப் பின்னர்தான் வந்தனர் என்பதை இவ்விரு ஆய்வுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. மக்கட்தொகுப்பு மரபணு (Population Genetics) ஆய்வில் ஏற்கெனவே நிருபிக்கப்பட்டிருந்த இக்கருத்து மீண்டும் உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் ஆரியப் படையெடுப்பு – அதாவது, ஆரியர்களின் படையெடுப்பினால்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் அழிந்தது என்ற கருதுகோல் தவறென்று நிருபிக்கப்பட்டுள்ள, அதேவேளையில் குடியேற்றங்கள் மூலமான ஆரியர் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரியர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்து சேர்ந்தனர், தங்களுடன் சமஸ்கிருதத்தையும், இன்னபிற வேத கலாச்சாரங்களையும் சுமந்து வந்தனர் என்பதை தற்போது வெளியாகியிருக்கும் இவ்விரண்டு ஆய்வுகளும் உறுதிபடக் கூறுகின்றன. ஏற்கெனவே இந்த உண்மைகளை தொல்லியல் மற்றும் மொழியியல் ஆய்வுகள் நிறுவி உள்ளன. தற்போது மறுக்கவியலாத வகையில் மரபணு ஆய்வுகளும் அதே முடிவுக்கு வந்தடைந்துள்ளன. வந்தேறி ஆரியர்களின் பண்பாட்டுக் கலாச்சாரமே இன்றைய வேத – பார்ப்பன கலாச்சாரம் என்பதும் நிறுவப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி இந்தியாவில் வேளாண்மை எப்போது தோன்றியது என்ற கேள்விக்கான விடைதேடலுக்கும் ஒளியை வழங்கியுள்ளன இந்த ஆய்வுகள். ஹரப்பா நாகரிகத்துக்கும் மிக முற்பட்ட காலத்தில் மத்திய ஆசியாவின் அனடோலியா என்ற ஆசியா மைனர் (தற்போதைய துருக்கி) அல்லது ஈரானில் இருந்துதான் விவசாயம் பண்டைய இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும் என்றுதான் இதற்கு முன் கருதப்பட்டது. தற்போதைய ஆய்வின் மூலம், சிந்து சமவெளி மனிதரில் பண்டைய ஈரானிய விவசாயக் குடி சமுகத்தின் மரபணு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதால், இந்திய சமூகம் தனிசுயமாக (Indigenously) விவசாய சமூகமாக முன்னேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

படிக்க:
சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே
♦ ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் !

“தெற்காசியாவில் இரண்டாவது மிகப் பெரிய மொழிக் குழுமமான திராவிட மொழிக் குழுமத்தின் தோற்றம் பற்றிய கேள்விக்கும் இந்த ஆய்வு விடையளித்துள்ளது. தென்னிந்திய மூதாதையருக்கும் (ASI) தற்போதைய திராவிட மொழிகளுக்கும் இடையில் உள்ள இணையுறவை வைத்துப் பார்க்கும்போது தென்னிந்திய மூதாதையர் என்பவர்கள், சிந்துச் சமவெளி நாகரிகம் (IVC) மறையத் துவங்கியபோது கிழக்கிலும் தெற்கிலும் பரவி, மிக ஆதிகால தென்னிந்திய மூதாதைகளான வேட்டை சமூக குழுக்களுடன் (AASI) கலந்தனர். இவர்கள், ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசியிருக்கக்கூடும்” என்கிறது Science இதழில் வெளியான ஆய்வறிக்கை. அதாவது, இம்மண்ணின் தொல்குடி மக்கள் பேசிய மொழி திராவிட மொழியே என்றும் அது சமஸ்கிருதத்தை விட தொன்மையானது என்பதும் மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது.

இந்துத்துவ அரசியலின் அச்சாணியை இந்த ஆய்வுகள் முறித்துள்ளதால் அதற்கு முட்டுக் கொடுக்கும் முயற்சிகள் பல முனைகளில் இருந்தும் வந்துள்ளன. ராக்கிகர்ஹி எலும்புக்கூட்டில் ஸ்டெப்பி புல்வெளி மனிதனின் மரபணு இல்லை என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்பதாக தி பிரிண்ட் இணைய இதழ், தி எகனாமிக் டைம்ஸ், தி வீக் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதை ஆர்.எஸ்.எஸ்-ன் ஆர்கனைசர் உள்ளிட்ட பல இந்துத்துவ தளங்கள் மீள்பதிவிட்டிருந்தன.

“சிந்து சமவெளி நகரங்கள் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் இடங்களாக இருந்தன என்று தொல்பொருள் சான்றுகள் கூறுகின்றன. அதனால், ஒரு நபரின் மரபணுவைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு மற்ற மக்களுடன் பொருந்த வேண்டியதில்லை. இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் சமூகத்தின் ஒரு பிரிவினரிடம் மட்டுமே இருந்திருக்கும்” என்று விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜொனாதன் மார்க் கெனோயர் கூறுகிறார். இவற்றை எடுத்துக்காட்டி இந்த ஆய்வுகளிலிருந்து முடிவுக்கு வரவேண்டிய அவசியமில்லை என சில இந்துத்துவ அறிஞர்கள் வாதிடுகின்றனர்.

ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள இறந்த உடல்களை எரிக்கும் முறைகளைக் கொண்டு, வேதகாலத்திற்கு முற்பட்ட சிந்துச் சமவெளி நாகரிகத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் சமூகத்தின் கீழ்நிலையிலிருந்த பிரிவினரிடம் மட்டுமே இருந்திருக்கும். அதனால் அது மொத்த மக்கட்தொகையின் மரபணுவுடன் பொருந்த வேண்டியதில்லை என்று ஆர்.எஸ். பிஸ்த் போன்ற ஆய்வாளர்கள் கூற்றை சுட்டிக்காட்டி வாதிடுகின்றனர்.

Nadukal
மாதிரிப்படம்

இறந்தவர்களை எரிப்பதென்பது ஓரிடத்தில் தங்காமல் அலைந்து திரியும் நாடோடிகளின், குறிப்பாக ஸ்டெப்பி புல்வெளி நாடோடிகளின் வழக்கமாகும். ஓரிடத்தில் நிலையாக குடியிருக்கும் மக்களிடம் பெரும்பாலும் புதைக்கும் வழக்கம், நடுகல் நடும் வழக்கம் போன்றவை இருந்துள்ளன. மேலும், வேதமே சிந்துச்சமவெளி நாகரிகத்தின் அழிவிற்கு பின்னர் தான் வந்தது என்றான பிறகு அந்நாகரிகத்தில் வேதத்தில் குறிப்பிட்டுள்ள எரிக்கும் வழக்கம் இருந்திருக்கும் என்று வாதிடுவதை என்னவென்பது? இத்தகைய சிந்தனை மாட்டு மூளைகளுக்கு மட்டுமே சாத்தியம்.

மேலும், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் (INTACH) சார்பில் கடந்த வெள்ளியன்று (06-09-2019) இவ்விரு ஆய்வறிக்கையின் பதிப்பித்த ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த இந்தியர்கள் இருவரைக் கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. பேராசிரியர் வசந்த் ஷிண்டே மற்றும் நீரஜ் ராய் இருவரும் ராக்கிகர்ஹி மரபணு ஆய்வு முடிவைக் கொண்டு ஆரியர்களின் குடியேற்றம் என்பது இல்லை என நிரூபணமாகிவிட்டது என்றும் சிந்து சமவெளி நாகரிகம் வேத நாகரிகமே என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு, இந்தியாவிலிருந்து வெளியேறி குடியேறிய (Out of India migration theory – OIT) கருதுகோளுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் கதையளந்தனர்.

முரண்நகையாக, பேராசிரியர் வசந்த் ஷிண்டே மற்றும் நீரஜ் ராய் இருவரும் இணை ஆசிரியர்களாக இருக்கும் Science இதழில் வெளியான ஆய்வறிக்கை ஸ்டெப்பி புல்வெளி மேய்ச்சல் இனத்தைச் சேர்தோரும் அவர்களுடைய மொழியான சமஸ்கிருதமும், வேத நாகரிகமும் வெளியிலிருந்து வந்ததாக உறுதியாகக் கூறுகிறது. இந்த இரண்டாவது ஆய்வறிக்கையைப் பற்றி இவர்களும் சரி, இந்துத்துவ ‘அறிஞர்’ குழாமும் சரி, வாய் திறக்கவே இல்லை.

இந்தியா முழுமைக்கும் ஒற்றைப் பண்பாடு, கலாச்சாரத்தை திணிக்கும் நோக்கில் சமஸ்கிருதமயமாக்கப்படுகிறது. ஆனால் அறிவியல் ஆய்வுகளோ, நம்முடைய இந்தியப் பண்பாடு ஒற்றை மூலத்தைக் கொண்டதல்ல; மாறாக பன்முக மூலத்தைக் கொண்டது என நிருபிக்கின்றன.

ஒற்றைக் கலாச்சாரக் கருத்துருவாக்கத்தை மக்களிடம் பரப்புவதன் மூலம் இந்துத்துவ முனைவாக்கம் தெடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த மதங்கள், கலாச்சாரங்களை பிரித்தொதுக்குவதன் மூலம் இம்முனைவாக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அஸ்ஸாமில் தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 19 இலட்சம் மக்களை குடியுரிமையற்றவர்கள் என இரண்டாம் நிலைக்கு தள்ளியுள்ளது இந்துத்துவ பாசிசம். இந்தியா முழுமைக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் இந்து, பௌத்த, சீக்கியர் தவிர பிற மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய், வேத நாகரிகமும் அதன் கலாச்சாரமுமே எல்லா இந்தியப் பண்பாடுகளுக்கும் மூலம் என்ற இந்துத்துவத்தின் அச்சாணியை அறிவியல் முறித்துவிட்டது. அதன் முதுகெலும்பை முறிப்பதற்கு அவர்களது ஆயுதத்தை நாம் கையிலெடுக்க வேண்டும். இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த முதல் வந்தேறி கலாச்சாரமான ஸ்டெப்பி புல்வெளி மரபணு கொண்டவர்களிடமிருந்து பிரித்தொதுக்குதலை துவங்குமாறு நாம் கோரவேண்டும். அறிவுத்தளத்திலும் தெருவிலும் அதை வீழ்த்தி பன்முகத் தன்மையை மீட்டெடுக்கவில்லையெனில் கலாச்சாரத் திணிப்பு தவிர்க்கவியலாததாகி நாம் இரண்டாம் குடிமக்களாக்கப்படுவோம்.

– மார்ட்டின்

மேலும் படிக்க :
An Ancient Harappan Genome Lacks Ancestry From Steppe Pastoralists or Iranian Farmers
♦ The formation of human populations in South and Central Asia
♦ Study of ancient DNA throws light on origin of farming, languages
♦ Mysterious Indus Valley People Gave Rise to Modern-Day South Asians
♦ ‘We are a multisource civilisation, not unisource’: Tony Joseph
♦ The Press Conference On Rakhigarhi Findings Throws Up More Questions Than Answers
♦ Forever, even in death
♦ New DNA study debunks Aryan invasion theory