அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 12

பிராமணர்கள் , சவுகரியத்திற்குத் தகுந்தாற்போலக் கூட்டுக் குடும்பம் சவுகரியமென்கிறார்கள். தமிழர்கள் அன்புக்குக் கல்யாணம் செய்யவேண்டுமென்று கூறித் தம் குழந்தைகளை அந்த அன்புடன் பாதுகாக்கிறார்கள். பிராமணர் அல்லது ஆரியர், இவ்வுலகத்தில் தம் ஜாதியார் முன்னால் வரவேண்டுமென்றும் அதற்காகவே குழந்தைகளைப் பெற வேண்டுமென்றும் கல்யாணம் செய்கிறார்கள். மற்றும் தம் வகுப்பை விருத்தி செய்யவேண்டுமென்கிற எண்ணத்துடனும், தம் பிள்ளைகளைக் காப்பாற்றி ஆண்பிள்ளைகளைப் பெறவேண்டுமென்ற எண்ணத்துடனும் கல்யாணம் செய்கிறார்கள்.

பிச்சை கேட்பது, தமிழர்களால் இழிவாகக் கருதப்படுகிறது. ஆனால், பிராமணர்கள் எனப்படும் ஆரியர்கள் அதுதான் சிறந்தது என்று எண்ணுகிறார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். இதுதானா ஆரியர்களுக்கும் ஆரியரல்லாத தமிழ் மக்களுக்கும் வித்தியாசமில்லாத பொதுவான கலை என்று சொல்லக்கூடியது.

பல பொய்க் கூற்றுகள், சரித ஆராய்ச்சியின்மையால் முளைக்கின்றன. இக்காளான்களைப் போக்கப் பேராசிரியர் பாரதியார் கூறியது போன்ற ஆராய்ச்சியுரைகள் மேலும் சிலவற்றைத் தருகிறோம்.

பண்டைக் காலத்தில் தமிழ்ப் பெருமக்கள் அறிவிலும் ஆற்றலிலும் கைத்தொழில் வியாபாரங்களிலும், அரசியல் நாகரிகத்திலும் தலை சிறந்து விளங்கினார்கள் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. பல நாட்டுச் சரித்திரங்களில் இதற்கு ஆதாரங்களுண்டு. ஆயினும், இடைக் காலத்தில் ஆரியர் தமிழர் நாகரிகத்தைத் திருத்தி மாற்றி தங்களுக்கே பெருமை உண்டாக்கத்தக்க விதமாகப் பலவித வேத புராணங்களை எழுதித் தமிழர் சிறப்பை உருத்தெரியாமல் மாற்றிவிட்டார்கள்.

ஆரியர், படையெடுத்து வந்த தமிழர்களைப் போரில் வென்றதாகவும், தமிழர்கள் ஆரியர்களை எதிர்த்து நிற்க  மாட்டாமல், விந்திய மலைக்குத் தெற்கே பின்வாங்கி ஓடி விட்டதாகவும், ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதென்றும், ஆரியர்கள் தந்திரமாகச் செய்து வந்த பிரச்சாரம் காலக்கிரமத்தில் நாடெங்கும் பரவி வேரூன்றி விட்டது. பெரும்பான்மையினரான மக்கள், இன்றும் இந்தக் கதைகளை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் புலவர்களிலும் பலர், இந்தப் பொய்க் கதைகளை உண்மை போல எடுத்துக் கூறிப் பிரசங்கங்கள் செய்து வருகிறார்கள். இதுவும் போதாதென்று சென்ற நூற்றாண்டின் கடைசிப் பாகத்தில், ஐரோப்பிய அறிஞர் சிலர் இந்தியப் புராதனக் கதைகளை உண்மைபோல நம்பி, ஆரியர் என்ற ஒரு வகுப்பார் மத்திய ஆசியாவிலிருந்து கிளம்பி ஐரோப்பா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும், அவர்களில் ஒரு பிரிவினர் இந்தியாவுக்கும் படையெடுத்து வந்து இந்தியாவை நாகரிகப்படுத்தினர் என்றும் புதுமை புனைந்து ஒரு புதுக்கதை செய்தனர். இதை இங்குள்ள ஆரிய வகுப்பினர் தங்கள் குலப் பெருமையை நிலைநாட்டுவதற்காக வெகு சாமர்த்தியமாகப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள்.

ஆரியர் படையெடுத்து வந்து இந்தியாவையும் திராவிடப் பெருமைகளையும் நாசப்படுத்தினர் என்ற இந்தக் கற்பனைக் கதைக்குச் சரியான ஆதாரம் எதுவுமே கிடையாது. ‘வேலிக்கு ஓணான் சாட்சி’ என்பது போல் ஆரியர் எழுதின வேத புராணங்களே இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஆனால் அறிஞர், தோழர் பி.டி. சீனிவாச ஐயங்கார் எம்.ஏ. இந்தப் படுபொய்யை அடியோடு மறுத்து, இதெல்லாம் வெறும் கற்பனை என்று எடுத்துக்கூறி இருக்கிறார். ஒரு சம்பவம் சம்பந்தமாக அவர், (இந்தியப் புராதன ஆராய்ச்சி வெளியீடு 42 -ம் ஆண்டு புத்தகம் 77-வது பக்கத்தில்) எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின் சாரம் வருமாறு:

பி.டி. சீனிவாச ஐயங்கார்.

”தற்காலச் சரித்திராசிரியர்கள் பெரும்பாலோருக்கு அரசியல் கொள்கைப் பற்றும், மதப்பற்றும் இருந்தே வந்திருக்கின்றன. உதாரணமாகச் சரித்திராசிரியர்களான ஹியூமையும், மக்காலேயையும் கவனித்தால், சரித்திர உண்மைகளைத் தொகுப்பதிலும், அவற்றை வருணித்துக் கூறுவதிலும், ஹியூம் தமது ”கன்சர்வேடிவ்’’ கட்சிக் கொள்கைகளையும், மக்காலே தமது ”லிபரல்’’ கட்சிக் கொள்கைகளையும் இலைமறை காய் போல் வெளியிட்டிருப்பதைக் காணலாம். புராதன சரித்திர விஷயத்திலும் இப்படித்தான்.

ஆரிய நாகரிகத்தைப்பற்றி மேற்கண்ட கற்பனை ஆரம்பமான பொழுது, ஆரியர் உயர்ந்த உருவமும் நீண்ட தலையும் அழகிய மேனியுமுள்ளவர்களென்றும், அவர்கள்தான் ஜெர்மனியின் மூதாதைகள் என்றும், ஜெர்மன் ஆராய்ச்சிக்காரர்கள் கூறினார்கள்.

அதற்கு மாறாகப் பிரெஞ்சு ”ஆல்ப்பின்” வகுப்பினர் மூலமாகத்தான் ஆரிய நாகரிகமும் மொழியும் ஐரோப்பாவுக்குள் புகுந்தது என்று வற்புறுத்தினார்கள் பிரெஞ்சு அறிஞர்கள். ஆல்ப்பின் இனத்தினர் பிரெஞ்சுக்காரரில் பெரும்பாலாராய் இருப்பதே இதற்குக் காரணம்.

இத்தாலிய ஆசிரியர் செர்ஜி கூறியிருப்பது. இவ்விதக் கருத்துக்களுக்கு முற்றும் மாறானது. ஐரோப்பாவில் ஏற்பட்ட கிரேக்க – ரோம் நாகரிகம், மத்திய தரைக்கடல் பக்கத்திலுள்ள ஓர் இனத்தினரால் கொண்டுவரப்பட்டதென்றும் ஐரோப்பா மீது படையெடுத்து வந்த ஆரியர்கள் காட்டுமிராண்டிகள் என்றும் கூறியிருக்கிறார் அவர்.

இப்படிச் சரித்திரத்தைப் பலவாறு மாறுபடுத்தி இருப்பதால், கூரிய புத்தியால் அனுதாபத்துடன் சுயநலப் பித்தலாட்டப் பிரச்சாரமாகிய தடித்த திரையைக் கிழித்தெறிந்து அதனுள் மறைந்திருக்கும் உண்மைகளைப் பகுத்தறிவுடன் கண்டு பிடித்து வெளியிட வேண்டும்.

படிக்க:
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?

ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்று நாடெங்கும் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற கற்பனையைப் பகுத்தறிவு வாயிலாக ஆராய்ச்சி செய்தல் வேண்டும்.

வட இந்தியா, பாரசீகம், அர்மீனியா பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் ஆகிய தேசங்களில் பேசப்படும் பல்வேறு பாஷைகள், ஒரே பாஷைத் தொகுதியைச் சேர்ந்தவையென்று மொழி ஆராய்ச்சிக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு, இந்திய – ஜெர்மன் பாஷைகள் என்று பெயர் கொடுத்தார்கள். அதன் மேல் இந்தப் பாஷைகளுக்கெல்லாம் ஒரு தாய் மொழி இருந்திருக்க வேண்டும் என்றும், அந்தப் பாஷையைப் பேசியவர்கள் (அதாவது ஆரியர்கள்) இந்துக்குஷ் மலைக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் வாழ்ந்திருந்தார்களென்றும், சரித்திர காலத்துக்கு முன் அவர்களில் சில பிரிவினர் பாரசீகம், இந்தியா, ஐரோப்பா முதலிய நாடுகளுக்குச் சென்று குடியேறினார்களென்றும் அழகாகக் கற்பனை செய்து சரித்திரம் எழுதினார்கள்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க