குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 09
கசப்பான மனப் புண்
யாரோ ஒருவர் தன் மகனைப் பற்றி என்னுடன் பேசத் துவங்குகிறார். “அதிகாரத் தொனியுள்ள அம்மாவிற்கு” திருப்தியில்லை: “என் மகன் ஏன் ஒரு தடவை தான் வாசித்தான்? ஏன் அவனுக்கு கிசிலாஃபானைத் தராமல் மரக் கரண்டிகளைத் தந்தீர்கள்?” இக்குழப்பத்தில் ஒரு சிறுமியின் அழுகை என் காதுகளை எட்டுகிறது. “இங்கே வா, ஏன் அழுகிறாய்?”
விழாவிற்கு அவளுடைய அம்மா வரவில்லை. அதனால் தான் அழுகிறாள். வருவதாகச் சொல்லியிருந்தும் வரவில்லை. எனவேதான் அவள் நடனமாடவில்லை. இதய வேதனை மகிழ்ச்சியில் திளைக்க விடவில்லை. அச்சிறுமி என்னோடு ஒட்டிக் கொண்டு அழுகிறாள். இதோ அம்மா வந்து விட்டாள். அவள் என்னை விட்டுப் பிரியவில்லை, அம்மாவை நோக்கிப் பாயவில்லை.
“போய் வருகிறேன்!” என்று அமைதியாகச் சொல்லி விட்டு, கண்ணீரைத் துடைத்தபடி, அம்மாவிற்கான ரகசியத்தை (பரிசை) மறந்த படி அல்லது விட்டு விட்டு அறையிலிருந்து வெளியேறுகிறாள்.
“என்னம்மா ஆயிற்று?” என்று தன் அக்கறையையும் கவனிப்பையும் எனக்கும் மற்ற பெற்றோர்களுக்கும் காட்டும் முகமாக அம்மா கேட்கிறாள்.
ஆனால் அச்சிறுமி பதிலளிக்கவில்லை. ஒருவேளை அம்மா இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாளா இல்லையா என்று அவளுக்குக் கவலையில்லையோ, ஒருவேளை இப்போது அம்மாவை விட்டுத் தள்ளி தொலைவில், போர்டிங் பள்ளியில் சேர விரும்புகின்றாளோ!
“என் மகன் மீது அதிக அக்கறை காட்டுங்கள்!”
“அதிகாரத் தொனியுள்ள அம்மா” என்னை விட்டு அகலவில்லை.
நான் அவள் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனெனில், அரிச்சுவடி விழா முடிந்த உடனேயே, இந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மாவின் கற்பனைக் குறைகளைக் கேட்பதை விட வேறு முக்கிய வேலைகள் எனக்கு வந்தன. தாழ்வாரத்தில் ஒரு சிறுவன் நிற்கிறான். அனேகமாக அவனும் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல யாராவது வருவார்களெனக் காத்திருக்க வேண்டும். அவன் வீட்டிலிருந்தும் விழாவிற்கு யாரும் வரவில்லை. பெரும் கோபத்துடன் அவன் ஜன்னலருகே நிற்கிறான், இப்போது அவனைப் பார்த்தால் குழந்தையைப் போலவேயில்லை. பெரிய மனிதனின் கவலைகள் அவனிடம் நிறைந்துள்ளன. அவன் எதைப் பற்றிச் சிந்திக்கிறான்? “அப்பா முன் போல் என்னுடன் நட்பாக இல்லை.”
ஏதோ ஒரு நபர் வருகிறார்: “நான் உன்னைக் கூட்டிச் செல்ல வந்திருக்கிறேன். பெற்றோர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்”.
“இது என் மாமா!” என்று சிறுவன் விளக்குகிறான், என்னிடம் விடைபெற மறந்து, சன்னலருகே உள்ள பெரிய பாக்கெட்டை மறந்து செல்கிறான்.
படிக்க:
♦ குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?
♦ பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?
அந்த பாக்கெட்டில் எவை இருக்கின்றன என்று எனக்குத் தெரியும். அதில் அவன் எழுதிய எழுத்துகளின் மாதிரிகள், நூறு, ஆயிரம், மில்லியன் வரையில் அவன் போட்ட கணக்குகள், வரைகணித வடிவப் படங்கள் (இவற்றில் முக்கோணங்கள், சதுரங்கள் தவிர கன வடிவங்களும் பிரமீடுகளும் கூட உள்ளன), இன்னும் சில படங்கள், மாடல்கள் முதலியன இருக்கின்றன. இவற்றில் ஒரு படம் மனிதனின் உடலாகும், இதில் ஒவ்வொரு உள் உறுப்பின் அருகேயும் அதன் பெயர் எழுதப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவன் இடைவேளைகளில் வகுப்பறையை விட்டு வெளியே செல்லாமல் ரகசிய பாக்கெட்டைத் தயாரித்தான். வீட்டிலிருந்து சுத்தமான தாள்கள், பசை, வண்ணப் பேனாக்கள், கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொண்டு வந்தான். அவன் கணக்குகளைப் போட்டான், வரைந்தான், வெட்டினான்…. சில நாட்களுக்கு முன் இதே போன்ற மனித உடலமைப்பு பற்றிய படத்தை எனக்குப் பரிசளித்தான்.
“வயிற்றில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும்! இரைப்பையினுள் உணவு எப்படி வருகிறது, அங்கு ஜீரணம் எப்படி நடைபெறுகிறது என்று எனக்குத் தெரியும்…” என்றான் அவன்.
“நீயா இதை வரைந்தாய்?”
“ஆமாம்.”
“இது என்ன ?”
“இரைப்பை !”
“அது?”
“இதயம்…. இது கல்லீரல்… இங்கே உணவு ஜீரணமாகிறது.”
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” “பாட்டி சொல்லித் தந்தாள். அவள் உயிரியல் விஞ்ஞானி.”
“மிக சுவாரசியமான படம்!”
“நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்… நான் இதை உங்களுக்காக வரைந்தேன்.”
“நன்றி !”
இதோ இந்தக் கனமான பாக்கெட்டை, “பெற்றோர்களுக்கான ரகசியத்தை” அவன் ஜன்னலருகே வைத்துச் சென்றுள்ளான். ஒருவேளை அவனுடைய ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள இனி யாருமில்லையோ, தனது இதயத்தை, மனதைத் திறந்து காட்ட ஒருவருமில்லையோ?
மனிதர்களின் பரஸ்பரக் கவனமும் அக்கறையும்தான் துக்கத்தைத் தாங்கிக் கொள்ளவும் மனதால் வீழ்ந்து விடாமல் இருக்கவும் புதிய சக்தி பெறவும் ஒவ்வொருவருக்கும் உதவுகின்றன. பெற்றோர்களின் தீமையோடு கலந்த, குடும்ப மகிழ்ச்சி குலைவதுடன் தொடர்புடைய துக்கத்தை குழந்தை எப்படித் தாங்குவான்? இதைத் தாங்கவல்ல எந்த ஆசிரியரியல் விஞ்ஞானம் எனக்குத் துணை புரியும்? ஒருவேளை அன்பு, பாசம், நேசம், அக்கறை, கவனம் அல்லது கண்டிப்பு – இவற்றில் எது எனக்குக் கை கொடுக்கும்? அல்லது இங்கு வேறு ஏதாவது ஒரு விசேஷ அணுகுமுறை தேவையோ?
“கடினமான குழந்தைகள்” என்றழைக்கப்படுபவர்கள் எப்படித் தோன்றுகின்றனர் என்பதன் அடிப்படைகளைக் கண்டுபிடிப்பதில் எவ்விதக் கஷ்டமும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. நாம்தான் அவர்களை அப்படி ஆக்குகின்றோம். மனதைப் பாழ்படுத்தி, இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் குழந்தையை ஆட்கொள்ளும் போது அவனுக்கு எப்படி உதவுவது? எனது ஆயிரக்கணக்கான சக ஆசிரியர்களைப் போன்றே நானும் இவர்களின் மனதிலும் இதயத்திலும் ஏற்பட்டுள்ள வடுவைப் போக்கும் வழிகளைத் தேட வேண்டியதாகிறது. என்னால் இது முடியுமா?
(தொடரும்)
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!