அண்டப் புளுகு… ஆகாசப் புளுகு… ஆர்.எஸ்.எஸ். புளுகு !

காஷ்மீர் நிலைமை குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததாகவும், தற்போது அது நீக்கப்பட்டுவிட்டதால், அம்மாநில மக்களின் வாழ்க்கை மேம்படப் போகிறது” என்றும் நீட்டி முழக்கினார். மோடி மட்டுமல்ல, சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த அனைவருமே இப்படிப்பட்டதொரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறார்கள். இந்த வாதமுறையின் மூலம், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஏதோ பீகாரைவிட வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதைப் போன்ற கருத்தை நாட்டின் பிற பகுதி மக்களிடம் உருவாக்கிவிட முயன்று வருகிறது, ஆர்.எஸ்.எஸ். ஆனால், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி குறித்து அரசு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் புள்ளிவிபரங்களே அம்மாநிலம் பல்வேறு சமூக நலன் சார்ந்த  அம்சங்களிலும், மனித வளர்ச்சிக் குறியீட்டிலும் (Human Development Index) பா.ஜ.க. ஆண்டுவரும் பசு வளைய மாநிலங்களைவிட, ஏன் குஜராத்தை விடவும் முன்னேறிய நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன.

மனித வளர்ச்சி குறியீடு என்பது மூன்று முக்கிய காரணிகளான கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது.

இம்மதிப்பீட்டில் ஜம்மு காஷ்மீர் 1990-களில் இருந்தே ஓரளவு முன்னேறிய நிலையில்தான் இருந்து வருகிறது. 25 மாநிலங்களைக் கொண்ட மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் காஷ்மீர் 11-ஆவது இடத்தில் உள்ளது. 370 போன்ற “தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான” சட்ட உரிமைகள் இல்லாத இராஸ்தான், ஆந்திரா, ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உ.பி., பீகார் ஆகிய மாநிலங்களெல்லாம், ஜம்மு காஷ்மீரை ஒப்பிடும்போது பின்தங்கிய நிலையில்தான் உள்ளன. உ.பி., பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களை விடுங்கள், மோடியின் சாதுர்யத்தால் அசாத்திய வளர்ச்சியடைந்திருப்பதாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்கூட காஷ்மீருக்குக் கீழே 14-ஆவது இடத்தில்தான் இருக்கிறது.

மனித வளர்ச்சி குறியீட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உறுதி செய்யப்படும் சமூகப் பாதுகாப்பு முக்கியமானதொரு அம்சமாகும். பேறுகால சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மரணமடையும் விகிதமும், பச்சிளம் குழந்தை மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மரணமடையும் விகிதமும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2005-க்கும் 2015-க்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் கணிசமாகக் குறைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. தேசிய குடும்ப சுகாதார அறிக்கை. அவ்வறிக்கைகளின்படி, 2005-இல் 1000 குழந்தைகளுக்கு 38 ஆக இருந்த ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் 2015-இல் 32 ஆகக் குறைந்திருக்கிறது.

இக்குறியீட்டில் மோடி-அமித் ஷாவின் குஜராத் மாநிலம் இன்றுவரையிலும் ஜம்மு காஷ்மீரைவிடப் பின்தங்கியேயுள்ளது. அங்கு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணவிகிதம் 2005-இல் 43; 2015-இல் 34.

பெண் கல்வியை எடுத்துக்கொண்டால், கடந்த பத்தாண்டுகளில் காஷ்மீரில் பத்தாம் வகுப்பிற்கு மேலே படிக்கும் பெண்களின் எண்ணிக்கை 10.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆறு வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது 2005-06-இல் 57.5 சதவீதமாக இருந்தது. அது 2015-16-இல் 65.5% ஆக உயர்ந்த்திருக்கிறது. இச்சதவீதம் பா.ஜ.க. ஆளும் உ.பி. மாநிலத்தைவிட அதிகமாகும்.

பெண் சிசு பாதுகாப்பிலும்கூட ஜம்மு காஷ்மீர் குஜராத்தைவிட ஒருபடி மேலேதான் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 2005-06-இல் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 902 ஆக இருந்த பெண் குழந்தை பிறப்பு விகிதம் 2015-16 இல் 921 ஆக அதிகரித்திருக்கிறது. அதேசமயம், குஜராத்தில் கடந்த பத்து வருட காலத்திலும் பெண் பிறப்பு விகிதம் 902 என்ற எண்ணிக்கையிலேயே தேங்கி நிற்கிறது. இத்தேக்க நிலைக்குக் காரணம், தந்தை வழி ஆணாதிக்க இந்துத்துவா மனப்பான்மை என்பதை யாரும் மறுக்கவியலாது.

இளவயது பெண் திருமணங்களின் சதவீதம் ஜம்மு காஷ்மீரில்  8.7 ஆகச் சரிந்துவிட்ட நிலையில், குஜராத்தில் அதனைவிட மூன்று மடங்கு அதிகமாக 24.9 சதவீதமாக உள்ளது.

திட்ட கமிசன் 2009-10-இல் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, ஜம்மு காஷ்மீரில் கிராமப்புற வறுமை 8.1 சதவீதமாகும். இச்சதவீதம் தேசிய சராசரியைவிட (33.8%) மிகமிகக் குறைவாகும். இவ்விடயத்தில் ஜம்மு காஷ்மீரையும் குஜராத்தையும் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு தென்படுகிறது. திட்ட கமிசன் புள்ளிவிவரப்படி 2009-10-இல் குஜராத்தில் கிராமப்புற வறுமை 26.7 சதவீதமாகும். மோடி, குஜராத் முதல்வராகப் பதவியேற்று ஏழு ஆண்டுகள் கழித்து வந்த புள்ளிவிவரம் இது. தனது ஏழாண்டு கால ஆட்சியில் கிராமப்புற வறுமையைக் குறைக்க முடியாத மோடி, அம்மாநிலத்தை வளர்ச்சியின் உச்சத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டதாகக் கூறுவது எத்தகைய மோசடி!

ஜம்மு காஷ்மீரில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமென்றாலும், அவ்வெண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவானது எனத் தேசியக் கணக்காய்வு மையம் 2017-18-இல் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த கணக்கெடுப்பில் ஜம்மு காஷ்மீரைவிடப் பத்து மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதையும் அவ்வறிக்கைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதேசமயம், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தரமான வேலைவாய்ப்பு குறியீடு கணக்கீட்டின்படி தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஜம்மு காஷ்மீர் குஜராத்தைவிட முன்னேறிய நிலையில் இருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றுக்கு அப்பால், ஊரகச் சாலைக் கட்டமைவு, மருத்துவர்களின் எண்ணிக்கை, சராசரி ஆயுட்காலம் ஆகிய சமூக மதிப்பீடுகளிலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைச் சாதித்திருப்பதை அரசின் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

படிக்க:
பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும் : துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!
பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை !

இவற்றையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஜம்மு காஷ்மீரின் சமூகப் பொருளாதார நிலை குறித்துப் பச்சைப் பொய்யை உண்மையைப் போலப் பிரச்சாரம் செய்துவருகிறது, ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தின் மனித வள மேம்பாட்டு வளர்ச்சிக்கு திராவிட இயக்கங்களும், கட்சிகளும் செய்த பங்களிப்பை மறைத்துவிட்டு, திராவிட அரசியலால்தான் தமிழகம் பின்தங்கிச் சீரழிந்துவிட்டதைப் போல பிலாக்கணம் பாடிவரும் பார்ப்பன வக்கிர மனோபாவம்தான் 370-ஆவது அரசியல் சட்டப்பிரிவு குறித்தும் அவதூறு செய்துவருகிறது.

இங்கு நாம் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்களெல்லாம் காஷ்மீர் மக்களின் வாழ்வியல் வளர்ச்சி குறித்துக் காட்டுகின்றன. இவற்றையெல்லாம் வளர்ச்சியாகக் கருத முடியாதென்றால், மோடியும் ஆர்.எஸ்.எஸ்.-ம் ஜம்மு காஷ்மீரில் யாருக்கு வளர்ச்சி இல்லை என்று அழுகிறார்கள்?

மகேஷ்


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க