டலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் கோ. பூவனூரில் 02.10.2019 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டார்கள். ஊர் பொதுமக்கள் சார்பில் தங்கள் அடிப்படைத் தேவைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினர்.

பிறகு ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை காண்பிக்கும்படி ஊர் பொதுமக்கள் ஊராட்சி செயலாளரிடம் கேட்டனர். இதற்கு, முன்பு கடந்த 8 ஆண்டுகளாக வரவு செலவு கணக்குகளை காண்பித்ததே கிடையாது. ஆனாலும் பொதுமக்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் குறைந்தபட்சம் நீங்கள் இந்த ஆண்டு வரையான வரவு செலவுகளைக் காட்டினால் மட்டுமே உங்களை வெளியே விடுவோம் இல்லை என்றால் இங்கேயே சிறை பிடிப்போம் என்று உறுதியாக அமர்ந்தனர்.

ஊராட்சி செயலாளரும், சிறப்பு அதிகாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். பொதுமக்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, 100 நாள் வேலைத்திட்டத்தின் பயனாளிகளாக இறந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றவர்களைச் சேர்த்து, அவர்களது பெயரில் ஊதியப்பணம் செலுத்தப்பட்டதாக மோசடி நிகழ்ந்துள்ளதை தோழர்கள் அம்பலப்படுத்தினர். இதற்கு ஊராட்சி செயலாளர் “இதற்கும் எனக்கும் எந்த பொறுப்பும் கிடையாது…” என்று தட்டிக்கழித்தார்.

படிக்க:
விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !
விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

இதையடுத்து பொதுமக்கள் ஊழலை அம்பலப்படுத்தி கோஷமிட்டு தீர்மானம் நோட்டில் கையொப்பம் போட விடாமல் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சென்றார்கள். இந்த செய்தியை கேட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினமலர், தினத்தந்தி ஆகிய பத்திரிகைகளில் மறுநாள் செய்தி வெளியிட்டன. இதை ஏற்க முடியாத ஊழல்வாதிகள், அரசு அதிகாரிகள் துணையோடு மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர் சங்கர் கணேஷ் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக மங்கலம்பேட்டை போலீசு நிலையத்தில் பொய் புகார் கொடுத்தனர். காலை 7 மணி அளவில் தோழரை கைது செய்து போலீசு நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

இத்தகவலறிந்த அப்பகுதி ஒருங்கிணைப்பாளர், தோழர் பாலாஜி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் மற்றும் பிற தோழர்களும்; ஊர் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் போலீசு நிலையத்திற்கு சென்றனர்.

பின்னர், ஆய்வாளரிடம் இது பொய்வழக்கு என்பதை சுட்டிக் காட்டி கைது செய்யப்பட்ட தோழரை விடுவிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆய்வாளர் இரு தரப்பினரையும் விசாரணை செய்து வழக்கு ஏதும் போடாமல் தோழரை விடுவித்தார்.

ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தினால் அவர்கள் மீது பொய் வழக்கு, கைது ஆகிய நடவடிக்கைகள்தான் பாயும் என்பதை கண்கூடாக பார்த்த பொதுமக்கள், ஊழல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம், மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம் வட்டாரம்,
தொடர்புக்கு : 97912 86994