அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 08

கலைப் பாடம்

டுத்தபடியாக எனது பாடத் திட்டத்தில் கலைப் பாடத்தின் உள்ளடக்கமும் இதை எப்படி நடத்த வேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளன. இப்பாடத்தை நான் மாதத்தில் 2-3 முறை நடத்துகிறேன். நுண் கலை, இசை, நடனம், ஒப்பனை, பொம்மலாட்டம், தாள இசை, இசை நாடகங்களை அமைத்தல், பாடங்களுக்குப் பின் படித்தல், உழைப்பு ஆகிய பாடங்களுக்கு முன் அல்லது இவற்றின் சாரத்தை செழுமைப்படுத்தும் வகையில் கலைப் பாடங்களை நடத்துகிறேன். கலை, மக்களின் வாழ்வில், நம் ஒவ்வொருவரின் வாழ்வில் இதன் முக்கியத்துவம் பற்றிய பொதுவான கருத்தை இப்பாடங்களில் தர முயலுகிறேன். எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கிட்டக்கூடிய கலைப் படைப்புகளில் ஆசிரியரின் உணர்வுகள், உறவுகள், சிந்தனையைப் “படிக்கும்” திறமையை அவர்களிடம் வளர்க்கவும், தமது சிந்தனைகள், இன்ப துன்பங்களின் எதிரொலியைக் காண அவர்களுக்குச் சொல்லித் தரவும் இப்பாடங்கள் எனக்கு உதவுகின்றன.

சின்னஞ்சிறு பள்ளி மாணவர்களின் வாய்ப்புகள் கலையின் உச்சியிலிருந்து இப்படித் தள்ளியிருப்பதைப் போன்ற ஒரு உணர்வைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வரும் ஒரு பெரிய மரத்தின் கீழ் விளையாடும் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள். குழந்தைகள் ஒரு வேளை மர உச்சிக்கு ஏற விரும்பினாலும் அவர்களால் முடியாது. ஆனால் கிளைகளில் ஏறி விளையாட அவர்களால் முடியும். இவ்வாறாக இவர்கள் இந்த மரத்தின் கீழ் (இதைக் கலையுடன் ஒப்பிடலாம்) வளருகின்றனர். அவர்கள் மரக் கிளைகள் வரை, அதாவது கலையின் தனிப்பட்ட பிரிவுகள் வரை எட்டிப் பிடிக்கின்றனர். இதை இவர்கள் அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் பார்த்து யோசிக்கின்றனர், படிப்படியாக – ஆனால் இளம் வயதிலேயே – கலையின் பன்முகத் தன்மையின் முழுமையை அறியத் துவங்குகின்றனர், மரத்தின் மீதேறி உச்சியிலிருந்து உலகைப் பார்த்து, மக்களின் வாழ்வையும் தம் வாழ்வையும் அறியக் கற்றுக் கொள்ள சக்தியைத் திரட்டுகின்றனர்.

எனது பாடத் திட்டத்தின்படி இன்றைய கலைப் பாடத்தில் குழந்தைகளுக்குப் பின்வருமாறு சொல்வேன்: “சவ்ராசவ் எனும் ஓவியர் வரைந்த ‘ரூக் பறவைகள் பறந்து வந்தன’ எனும் ஓவிய மாதிரியை உங்களுக்கு காட்டுவேன், பின் லாடோ அசாதியானியின் ‘வசந்தம்’ எனும் கவிதையைப் படிப்பேன், பின் இசையமைப்பாளர் செர்கேய் ரஹ்மானினவின் ‘வசந்தம் நடைபோடுகிறது’ எனும் இசை நாடகத்தைச் சேர்ந்து கேட்போம். வசந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மூன்று படைப்புகளிலும் ஒரு ஓவியர், ஒரு கவிஞர், ஒரு இசையமைப்பாளர் ஆக மூவர் ஒரே உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் தம் படைப்புகளில் எந்த மன நிலையை வெளிப்படுத்த விரும்பினார்கள், இவர்கள் என்ன சொல்ல விரும்பினார்கள் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்.”

முதலில் ஓவிய மாதிரியைக் காட்டுவேன், கவிதையைப் படிப்பேன், பின் வகுப்பில் இசை ஒலிக்கும். குழந்தைகள் தம் உணர்வுகளில் ஆழமாக மூழ்கவும், இதன் மூலம் படைப்பாளர்களின் உணர்வுகளில் மூழ்கவும் உதவும் பொருட்டு, அவர்களுக்கு ஓவியத்தை இன்னுமொரு முறை காட்டுவேன், கவிதையைப் படிப்பேன், இசையை ஒலிக்கச் செய்வேன். பின் ஓவியர், கவிஞர், இசையமைப்பாளர் பற்றி பேசுவேன். முந்தைய கலைப் பாடங்களில் குழந்தைகள் பல்வேறு ஓவிய மாதிரிகளையும் படங்களையும் பார்த்தனர், இசையைக் கேட்டனர், கவிதைகளைப் படித்தனர். “இவற்றின் ஆசிரியர்கள் தம் படைப்புகளில் எந்த மனநிலையைப் பிரதிபலித்துள்ளனர்? இவர்கள் சொல்ல விரும்பியது என்ன?” என்ற என் கேள்விக்குப் பின்வரும் பதில்கள் கிடைத்தன:

“’அழகாயிருக்கிறது, இல்லையா!’ என்கிறார் ஓவியர்.”

“இசையமைப்பாளர் தனக்கு மிகவும் சோகமாயிருப்பதாகக் கூறுவதைப் போல் உள்ளது. நான் இந்த இசையைக் கேட்ட போது எனக்கும் சோகமேற்பட்டது.”

“’எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்!’ என்கிறார் கவிஞர்.”

படிக்க:
சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் !

“ஓவியர் அனேகமாக அன்பானவராக இருந்திருக்க வேண்டும். அவருடைய படங்கள் என்னிடம் சோகத்தை ஏற்படுத்துகின்றன.”

இதற்கு மேல் என் வகுப்புக் குழந்தைகள் இதுவரை செல்லவில்லை.

நீண்ட இடைவேளை

நாங்கள் கீழிறங்கி முற்றத்திற்குச் செல்வோம், சுவரில் இலக்கை மாட்டிவிட்டு, பத்தடி தள்ளி நின்று வில்லிலிருந்து அம்பெய்ய ஆரம்பிப்போம். ஒவ்வொருவரும் எப்படி இலக்கில் படுகின்றனர் என்ற விவரங்களைப் போட்டி அட்டவணையில் எழுதுவோம்; ஐந்து நாட்களாக நடக்கும் இப்போட்டி அடுத்த வாரம் முடிவடையும். சிறுவர்கள் மத்தியில் சாஷா முன்னணியில் இருக்கிறான், அவனுக்கு அடுத்த படியாக தாத்தோ, நான் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் இருக்கிறேன். சிறுமிகள் மத்தியில் எலேனா, ஏக்கா, மாக்தா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

உழைப்புப் பாடம்

இப்பாடவேளையின் போது பள்ளிக்கு அருகில் உள்ள நர்சரிப் பள்ளியிலிருந்து சிறு குழந்தைகளைக் கவனித்து கொள்ளும் பெண்மணி எழுதிய கடிதத்தைப் படித்துக் காட்டுவேன். கெட்டியான காகிதத்திலிருந்து 40 சிறு பெட்டிகளைச் செய்து தருமாறு இவர் கடிதத்தில் என் வகுப்புச் சிறுவர் சிறுமியரைக் கேட்டிருக்கின்றார்; இப்பெட்டிகளில் எண்ணுவதற்காகச் சிறு கற்களைப் போட்டு வைக்கலாம். அவர் எப்படிப்பட்ட சிறு பெட்டி செய்ய வேண்டுமென காட்டுவதற்காக ஒரு மாதிரி பெட்டியையும் அனுப்பியிருக்கின்றார். குழந்தைகள் இந்த வேண்டுகோளை மகிழ்ச்சியோடு நிறைவேற்றுவார்களென நம்புகிறேன். அவர்கள் பின்வருமாறு சொல்லும்படி நான் பேச்சு கொடுப்பேன்:

“இந்த மாதிரிப் பெட்டியை விட அழகான பெட்டிகளைச் செய்வோம்!”

“வரைதல் பாடத்தில் கற்றுக் கொண்டபடி இவற்றைச் சுற்றி அலங்கரிப்போம்!”

“ஒவ்வொருவரும் தலா 2-3 பெட்டிகளைச் செய்யட்டும். அப்போது தான் அழகான 40 பெட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.”

பின்னர் இவற்றை எப்படிச் செய்வதென நான் சொல்லித் தருவேன். நானும் எப்படிச் செய்கிறேன் என்று வாய் விட்டு சொல்லியபடியே குழந்தைகளோடு சேர்ந்து பெட்டியைச் செய்வேன், அது எப்படியுள்ளது என்று மதிப்பிடும் படி குழந்தைகளிடம் சொல்வேன். 35 நிமிடப் பாடவேளையின் போது இவ்வேலையை முடிக்க முடியாது. எனவே இதை வீட்டில் தொடருமாறு குழந்தைகளிடம் சொல்வேன். “மூன்று நாட்கள் கழித்து இவற்றை நர்சரிப் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென” அவர்களிடம் கூறுவேன்.

பாடங்களுக்குப் பின்

பின்னர் கூடுதல் பள்ளி நேரம் துவங்கும். இந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெண்மணிகளும் குழந்தைகளோடு பல விதமான வேலைகளில் ஈடுபடப் போகும் பெற்றோர்களும் சேர்ந்து முடிவு செய்கின்றனர். குழந்தை வளர்ப்பு பற்றி நாங்கள் கூட்டாக வகுத்த திட்டத்தின் பொது லட்சியங்களும் கோட்பாடுகளும் தான் இங்கும் அடிப்படையில் உள்ளன. ஒவ்வொரு வார இறுதியிலும் நாங்கள் சந்தித்து ஒவ்வொருவரும் செய்து வரும் காரியத்தை ஒத்திசைவிக்கின்றோம். இன்று இசை நாடக ஒத்திகை, பூங்காவில் உலாவுதல், புத்தகம் படித்தல், கார்டூன் படம் பார்த்தல் முதலியன எங்கள் திட்டத்தில் உள்ளன.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க