சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்துவரும் மாணவர் முத்தமிழன். இவர் சேப்பாக்கம் அருகில் உள்ள விக்டோரியா விடுதியில் தங்கி படித்துவருகிறார். விடுதி நிர்வாகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மிரட்டல் காரணமாக கடந்த 15/10/2019 அன்று தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.  உடன் தங்கியிருந்த மாணவர்கள் அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அம்மாணவர் உடல்நலம் தேறி வருகிறார்.

muthamizhan presidency college
முத்தமிழன்

ஒவ்வொரு ஆண்டும் விக்டோரியா மாணவர் விடுதியில் சேரும் மாணவர்களிடமும் பராமரிப்புச் செலவு என்ற பெயரில் ரூ.5000-மும், வைப்புத் தொகையாக ரூ.15,000-மும் பெறப்பட்டு வருகிறது.

விடுதியில் மாணவர்களுக்கு தண்ணீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. அதை நிர்வாகம் சரிசெய்யவில்லை. பராமரிப்புக்குப் பெறப்படும் ரூ.5000 ரூபாய்க்கு எவ்விதக் கணக்கையும் நிர்வாகம் கொடுப்பதில்லை. இந்நிலையில் கூடுதல் பராமரிப்புக் கட்டணமும் கேட்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பிரெசிடென்சி கல்லூரிக்கு வந்து படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்துதான் வந்துள்ளனர். இந்தக் கூடுதல் கட்டணம் அவர்களது பெற்றோர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தக் கூடியது. அதனையொட்டி மாணவர்கள் அனைவரும் இரு நாட்களுக்கு முன்னர் உள்ளிருப்புப் போராட்டம் செய்துள்ளனர்.

இதில் பங்கெடுத்த மாணவர்களையெல்லாம் மிரட்டும் வகையில் இந்தப் போராட்டத்தில் உணர்வுப் பூர்வமாக கலந்து கொண்ட முத்தமிழன் என்ற மாணவரைத் தொடர்ந்து போனில் பேசி மிரட்டியிருக்கிறார், விடுதி துணைக் காப்பாளர். “போராட்டத்திற்கு நீ தான் காரணம். உன் மீது போலீசில் புகார் கொடுத்து உனக்கு டி.சி கொடுத்து அனுப்பிவிடுவோம்” என்று மிரட்டியிருக்கின்றனர்.

படிக்க :
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
♦ சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?

கல்லூரிக்கும், வேதியியல் துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்திவிட்டதாகக் கூறி மிரட்டியதோட, பிற மாணவர்களை போனில் கூப்பிட்டு, “முத்தமிழன் ரேகிங் செய்தான், போராட்டத்தில் ஈடுபடத் தூண்டினான் என்று எழுதிக் கொடு” என மிரட்டியுள்ளது நிர்வாகம்.

விடுதிக் காப்பாளரான கல்லூரி முதல்வரின் பேச்சைக் கேட்டு கல்லூரி ஆசிரியர்களும், “நீ எப்படி மதிப்பெண் வாங்குவாய்? எப்படி இண்டர்னல் மார்க் வாங்கிவிடுவாய் எனப் பார்த்துக் கொள்கிறேன்” என மிரட்டியுள்ளனர். மேலும், “நீயெல்லாம் ஏன் இருக்கிறாய் ?” என்றும் கேட்டுள்ளனர் ஆசிரியர்கள்.

இதனால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான முத்தமிழன் விடுதியில் கடிதம் எழுதிவைத்து விட்டு விசம் குடித்திருக்கிறார். தனது கடிதத்தில் ” நீ ஏன் இருக்கிறாய் என்று கேட்கிறார்கள் நண்பர்களே ! நான் ஏதோ கொலை செய்துவிட்டது போல ? இனிமேல் அவர்கள் ஒவ்வொருவரையும் அச்சுறுத்தி இது போல் செய்வார்கள். இந்த நிர்வாகத்திற்கு நமது கோரிக்கை மீது எந்த அக்கறையும் இல்லை. நம்மை கொல்வதில்தான் அவர்களுக்கு அக்கறை !” என்று குறிப்பிட்டுள்ளார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மேலும் “நம் பெற்றோர்கள் இனி விடுதி கட்டணம் தர பிச்சையெடுக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம். வேண்டுமென்றால் நாமும் படிப்பை விட்டுவிட்டு விடுதி கட்டணம் செலுத்த அவர்களுடன் சேர்ந்தே பிச்சையெடுப்போம்!” என்று கூறியிருக்கிறார்.

இந்த வரிகளில் அந்த மாணவரின் வலி தெரிகிறது. இது முத்தமிழனின் மனவலி மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மாணவர்களின் மனக்குமுறல். சரியான நேரத்தில் சக மாணவர்கள் பார்த்து மருத்துவமனையில் சேர்த்ததால் முத்தமிழனின் உயிர் காப்பாற்றப்பட்டது.

கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்தின் நேர்மையற்ற சந்தேகத்திற்கிடமான அதிகாரப் போக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பதம் பார்க்கப் போகிறதோ !

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
எழுத்து : வினவு செய்திப் பிரிவு

1 மறுமொழி

  1. கட்டுரையில் சொல்லப்பட்டது போல, தண்ணீர் பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கிறது. விடுதியில் உள்ள பல மாணவர்கள் பல நாட்கள் குளிக்காமலேயே கல்லூரி சென்று வருகின்றனர். மேலும், விடுதியில் வழங்கப்படும் உணவும் மிகவும் மோசமானதாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். மொத்தத்தில் அடிமைகளைப் போலவும், விடுதி கொட்டடிச் சிறைச்சாலை போலவும் இருக்கிறது என்கிறார்கள்.

    இக்கொடுமைகளுக்கு எதிராக விடுதி மாணவர்கள் போராடும்போது, அவர்களை பிரித்தாள முயல்கிறது, கல்லூரி நிர்வாகம். குறிப்பாக, சென்னை மாநிலக் கல்லூரியின் புதிய முதல்வர் பத்மினி, போராடும் மாணவர்களை அழைத்து மிரட்டி எச்சரித்து அனுப்பியுள்ளார். “நீ அவர்களுடன் சேரக்கூடாது” என்று தனித்தனியாகவும் துறைவாரியாகவும் மிரட்டியிருக்கிறார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க