2600 ஆண்டுகளுக்குமுன் தமிழ் மொழியின் தொன்மை,
தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப் பண்பாடு !
கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! பாதுகாப்போம் ! பரப்புவோம் !

அரங்கக் கூட்டம்,
மூட்டா அரங்கம் காக்கா தோப்பு, மதுரை.
21.10.2019, திங்கள், மாலை 5.30 மணி.

தலைமை:

தோழர் இராமலிங்கம்,
மாவட்ட அமைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

உரையாற்றுவோர்:

“தமிழி” – பேராசிரியர் பெ.க. பெரியசாமிராசா.

“கீழடி ஆய்வின் புதிய வெளிச்சம்” – திரு. சாந்தலிங்கம், தொல்லியல் ஆய்வாளர்.

ந்து ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு அருகில் உள்ள சிற்றூர் கீழடி! ஆனால், இன்று உலக மக்கள் உற்று நோக்கும் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணம். கடந்த ஐந்து ஆண்டுகளில் கீழடி அகழாய்வு ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்களை காலப் பகுப்பாய்வு செய்ததில் அவை கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதில் – நெசவு, சாயத் தொழிற்சாலை, உறைகிணறு, சுட்ட செங்கற்கலான வீடுகள், கழிவு நீர்வடிகால் அமைப்பு, தாயக்கட்டை போன்ற விளையாட்டுப் பொருட்கள், மேலும் தங்கத்திலான அணிகலன்கள் மற்றும் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்புக்கான சான்று என 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் மேம்பட்ட நகரப் பண்பாடு இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது.

சிந்துநதி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி என துறை சார்ந்த நிபுணர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். சங்ககாலம் மற்றும் சங்க இலக்கியங்களும் அதில் வரும் மதுரை போன்ற பெயர்கள் கற்பனை அல்ல; அதற்கான புறச்சான்றுகள் உள்ளன என்பதை கீழடி அகழாய்வு உணர்த்துகிறது.

ஆனால், இது நாள் வரை வரலாற்று ஆய்வாளர்கள் கங்கை நதி நாகரிகம் போல் தமிழகத்தில் இரண்டாம் கட்ட நகர நாகரிகம் இருந்ததில்லை என்று கூறி வந்ததைப் பொய்யாக்கியிருக்கிறது கீழடி அகழாய்வு. வைகை நதி – கங்கை நதி போல் வற்றாத ஜீவநதி அல்ல. இருந்தும் ஒரு நகர நாகரிகத்தோடு தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இது தமிழர்களின் நீர் மேலாண்மை அறிவியல் வளர்ச்சியைக் காட்டுகிறது. அதுபோலவே 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ் சமூகம் இருந்திருக்கிறது. பானைக்குள் எழுதப்பட்ட எழுத்துக்கள் இதை பறைசாற்றுகின்றது. அதனால்தான் இந்திய வரலாற்றை, தென்னிந்தியாவிலிருந்து தொடங்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இதைப் பொறுத்துக் கொள்ளுமா காவிகும்பல்! காழ்ப்புணர்ச்சி கொண்டு அவர்கள் ஏற்படுத்திய தடைகள் எத்தனை எத்தனை!

கீழடி தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் ஆய்வாளர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணனை அஸ்ஸாம் மாநிலத்திற்க்கு தூக்கி அடித்தார்கள். அவர் என்ன தவறு செய்தார்? கீழடி ஆய்வில் மிகவும் ஆர்வம் காட்டினார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல, நேர்மையான தொல்லியல் ஆய்வாளர். கீழடி ஆய்வில் சாமி சிலைகள் எதுவும் கிடைக்கவில்லையா? என்ற மத்திய அரசின் கேள்விக்கு “மத அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை இருந்தால்தானே காட்டுவதற்கு” என்றார். உடனே மத்திய அரசு சிரிராம் என்ற அதிகாரியை நியமித்தது, மத்திய அரசின் கைப்பாவையான அவர் இரண்டாம் கட்ட அகழாய்வுக்கு மேல் இங்கே கிடைப்பதற்கு எதுவும் இல்லை என்று கை விரித்துவிட்டார். உடனே மத்திய தொல்லியல்துறை கீழடி அகழாய்வு வேலைகளை நிறுத்தியது.

பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுடுமண் உறைகேணிகள் இருந்ததற்கான சான்று.

கீழடி ஆய்வு பணியை நிறுத்தியதைக் கண்டித்து ம.க.இ.க. உள்பட பல்வேறு அமைப்புகள் அகழாய்வைத் தொடர பிரச்சார இயக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரங்கக்கூட்டம் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் போன்றவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம்காட்டி பத்திரிக்கைப் பேட்டி, கட்டுரை எனப் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். இந்த நெருக்கடியில்தான் தமிழக தொல்லியத்துறை கீழடி அகழாய்வைத் தொடர்ந்தது. இன்று ஐந்தாம் கட்ட அகழாய்வு வரை நடந்து முடிந்துள்ளது. இந்த ஆய்வுகள்தான் தொல் தமிழர் பண்பாட்டின் தடயங்களை வெளியே கொண்டு வந்துள்ளது.

படிக்க:
கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !
அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !

இல்லாத சரஸ்வதி நதியைத் தேட பலகோடி பணமும், இராமன் பிறந்ததை அறிய அகழாய்வு அதற்கொரு குழு – அதற்கு ஆயிரம் கோடிக்கு மேல் பணம் ஒதுக்கீடு! ஆனால், கீழடி ஆய்வுக்கோ வெறும் 40 இலட்சம் ரூபாய்தான். பொருட்களின் காலப் பகுப்பாய்விற்கு இரண்டு இலட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. இதிலிருந்தே தமிழ்பண்பாடு, தமிழ்மொழி மீது இந்த காவிக்கும்பலுக்கு எவ்வளவு காழ்புணர்ச்சி என்பதை புரிந்து கொள்ளலாம்.

வேதநாகரிகம்தான் இந்து நாகரிகம்! தமிழர்களுக்கென்று தனி நாகரிகம் – பண்பாடு கிடையாது என்று சதிவலை பின்னும் காவிப் பார்ப்பன கும்பலுக்கு கீழடி சான்றுகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது மத அடையாளங்கள் இல்லாத சமூகமாக இருந்திருக்கிறது என்பது மேலும் அந்தக் கும்பலைக் கதிகலங்க வைத்திருக்கிறது.

ஆகவே, அடுத்த கட்ட ஆய்வைத் தடுக்க அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அகழாய்வில் கிடைத்த ஆயிரக்கணக்கான பொருட்களைப் பாதுகாப்பது நமது கடமை. ஆய்வுக்கு ஒதுக்கிய 110 ஏக்கரிலும் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், எதிர்காலத்தில் வைகை நதிக்கரையில் அகழாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கிராமங்களிலும் அகழாய்வுப் பணிகளை தொடங்க வைப்பது; உலகத்தரம் வாய்ந்த தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்பட வேண்டும். என நாம் போராட வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. இவையெல்லாம் நடக்க வேண்டுமானால் தமிழ்மக்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மக்கள் சக்தி பெரும் சக்தியாய்த் திரள வேண்டும்.

கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகளை பாதுகாப்போம் ! பரப்புவோம் !

இவண்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.
தொடர்புக்கு : 97916 53200.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்