போலிசு நிலையத்தில் கைதிகளை விசாரிப்பதைப்போல் நம்மிடம் அலட்சியமாகப் பேசினார் முதிர் இளைஞர் ராஜ். டீ.எஸ் ஸ்போர்ட்ஸ் என்ற இளைஞர்களுக்கான விளையாட்டு ஆடைகள் தயாரிக்கும் சிறு நிறுவன முதலாளி. சென்னை தி. நகர் ரங்கநாதன் தெருவில் பிரபரல சரவணா ஸ்டோருக்கு  பின்புறம். பரபரப்பான இடம். மூன்று மாடித் தளத்தில் கீழே விற்பனை – தயாரிப்புக்கூடமும், மேலே கிளாத் பிரிண்டிங் மற்றும் டிசைனிங் பிரிவும் வைத்துள்ளார்.

நாங்கள் சென்றபோது முதலாளி ராஜ் கணினியில் கிளாத் பிரிண்டிங் செய்வதற்கான டிசைனிங் வேலையில் மூழ்கியிருந்தார். “உங்களைப் போன்ற குறுந்தொழில்கள் கொள்ளை நோய் தாக்கிய நோயாளிபோல் நலிந்து வருகின்றனவே காரணம்” என்ன என்றோம்.

டீ.எஸ் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ராஜ்.

அதற்கு அவர், “நலிஞ்சிப் போச்சா… குறுந்தொழிலா… நோய் தாக்கிடுச்சா… அப்பிடியா… ஏன்?” என்று நக்கலாக நம் கேள்வியையே தனித் தனியாக பிரித்து மேய்ந்தார். போலீசு மாதிரியே நம்மை மீண்டும் ஏற இறங்கப் பார்த்தார். நாம் ஒரு அடி பின்வாங்கி ஒதுங்கி நின்றபடி… அவருடைய போலீசு உடல்மொழியை பார்த்து அவரிடம் எப்படி பதில் வாங்குவது என்று தவித்தோம்… எங்கள் நிலையைக் கண்டு மனம் இரங்கினார்.

பிறகு இரகசிய குரலில், “சார் தொழில் தெரியாதவன், மொதலாளின்னு ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது. தெரியாத தொழிலுக்கு மொதலாளி ஆவுறவன்தான் அழிஞ்சிப்போவான். என்னைய எடுத்துக்குங்க…. எனக்கு தெரியாததுன்னு எதுவும் கிடையாது…. பிச்சை எடுக்க சொன்னாக்கூட ஒழுங்கா செய்வேன்…. சோகமா அய்யோன்னு நமக்கு பைசா போட்றவன பாக்கணும்…. அப்பதான் பாக்கறவன் பிச்ச போடுவான்…. நீ ஏனோ, தானோன்னு பார்த்தா, கேட்டா எவன் போடுவான்….. செய்யற தொழில்ல நேர்மை வேணும்…. சின்சியரா இருக்கணும். இப்படி இருந்தா எந்தத் தொழிலும் நலிவடையாது. அதுக்கு நானே உதாரணம்.

இதுக்கு முன்ன ஹெட்கான்ஸ்டபிளா ஒர்க் பண்ணேன். நான் நேஷனல் லெவல் ஸ்போர்ட்ஸ்மேன் வேற. அங்க வேலை புடிக்கல. ஸ்போர்ட்ஸ்மேன் என்றதால விதவிதமா ஸ்போர்ட்ஸ் டிரஸ் போடுவேன். அப்புறம் அதையே அரம்பிச்சிடலாம்னு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்.

ஸ்கிரீன் பிரிண்ட் வேலை செய்யும் விஜய்.

இங்க தொண்ணூறு பர்சன்ட் நான் தொழிலாளிதான்… பத்து பர்சன்ட்தான் மொதலாளி. கடையில எவன் வேலைக்கு வர்லனாலும் டான்னு ஒன்பது மணிக்கு கடைய தொறந்துடுவேன்… கஸ்டமர் நாள் முழுக்க இல்லன்னாலும், இரவு ஒன்பது மணி வரைக்கு கடையில இருப்பேன். வேல செய்யற ஆள் ஒரு  இடத்துல  இல்லன்னா அந்த இடத்துல போய் நான் நிப்பேன்.. துணி மூட்டயகூட தூக்குவேன்… லேபர்கூட லைன்ல நின்னு துணிக்கு பிரிண்டிங் பண்ணுவேன்… நானே கம்ப்யூட்டர்ல டிசைனிங்கும் பண்ணுவேன். அப்பத்தான் வேலைக்காரனுங்க பயப்படுவானுங்க… இந்த ஆளுக்கு நாம முக்கியம் கிடையாது… நாம இல்லன்னாலும் வேல நிக்காதுனு பதறிக்கினு நமக்கு முன்ன வந்து நிப்பான்.

படிக்க :
♦ இந்த வேலை எப்பவுமே உயிருக்கு உலைதான் | கிணறு தோண்டும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை
♦ மத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை

தொழிலாளின்னா யாரு? கூலி வாங்குறவன். மொதலாளிக்கு லாபம் சம்பாதிக்கிறது அவன் வேலை இல்ல…. அவன் நம்மள பாத்துப்பானு நாம போனா… நம்ம பிச்ச எடுக்க வேண்டியதுதான்….. பிறகு மொதலாளி நலிஞ்சிட்டாரு… நொடிஞ்ச்சிட்டாருனு… சொன்னா அது வேஸ்ட்.

ஜி.எஸ்.டி வந்து தொழில் பெருசா பாதிக்கல… ஒவ்வொரு தொழிலையும் பலபேர் பங்குப்  போட்டுக்கறதாலே மொத்தத்துல தொழில் குறைஞ்சிப்போச்சி… விலவாசியெல்லாம் தனியா எதுவும் ஏறல…. பொதுவா.. எல்லா விலயும் பத்து பர்சென்ட் ஏறியிருக்கு… ஒருபக்கம் சரக்கு வெலய ஏத்தி வாங்குனா… நம்மசரக்க அதுக்குமேல ஏத்தித்தானே விக்கிறோம்… அதுதானே வியாபாரம்.

விளையாட்டிற்கான ஆடைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

முன்ன ‘வாட்’ என்ற பேர்ல வரி இருந்தது… இப்ப “ஜிஎஸ்டி”னு பேர் மாத்திக்கிட்டான். தொழில் பண்ணா வரிக் கட்டித்தான் ஆவணும்… அப்பப்ப வர்ற பிரச்சனைய சமாளிச்சித்தான் ஆவணும்… நீ விக்கிற பொருளுக்கு மட்டும் ஜிஎஸ்டி கட்டுனா போதும். வாங்குன பொருளுக்குக் கட்டண ஜிஎஸ்டிய கழிச்சி ரிட்டர்ன் எடுக்கலாமே… அந்த வசதி ஜிஎஸ்டியில இருக்கு இல்லையா? அது தெரியாதவங்க… ஜிஎஸ்டிய ரொம்ப கொழப்புறாங்க….

எப்பவும், வெலவாசி ஏறிடிச்சி…. வியாபாரம் படுத்திடுச்சி…னு வியாபாரிங்க சொல்லிக்கினுத்தான் இருப்பாங்க… இது வியாபாரத்தில ஒரு தந்திரம். தொழில் நொடிஞ்சதுக்கு ஜி.எஸ்.டி.-ய காட்றது தப்பு… தொழில் தெரியாதவனெல்லாம் மொதலாளி ஆவணும்னு நினைக்கிறான்…பாரு…! அதனால வந்த வினை…”

ஸ்கிரீன் பிரிண்ட் செய்வதற்குத் தேவையன மை.

நாம் இடைமறித்துப் பேசினோம் : “செய்யிற தொழிலுக்கு பர்மிஷன் கொடுக்கிறது யாரு? அரசுதானே… அரசு பணத்த தூக்கிக்கினு வெளிநாட்டுக்கு ஓடுறவனெல்லாம் பெரிய மொதலாளின்னு சொன்னது அரசுதானே! சொன்னது மட்டுமில்ல, அவனுக்கு அரசு மானியமும்; வங்கிக் கடனும் கொடுத்தது. ஆனா சிறு மொதலாளி சொந்த பணத்த தொழில்ல போட்டு நட்டமாகி வீட்டுச் சொத்த வித்து நடுத்தெருவுல நிக்கிறான். ஆனா, அரசு நம்ம நாட்டு மொதலாளினு அவன சொல்லல… கொள்ள அடிச்சிட்டு ஓடுனவனத்தான் பெரிய மொதலாளியினு நமக்கு கைக்காட்டுது”. என்றோம்.

“சார் உலகத்தப் பத்தி பேசாதீங்க…. என் தொழில பத்தித்தான் நான் பேச முடியும்… நான் ஏன் முன்னேறலன்னு என் காரணத்தத்தான் நான் சொல்ல முடியும். இருக்கிறத எல்லாம் முடிச்சிப் போடாதீங்க….. நான் அதுக்கு வர்ல…” என்றார்.

“சரி, உங்க தொழில் ஓ..ஓஹொன்னு செழித்து வளர்ந்துள்ளது என்று உங்கள் பேச்சிலிருந்து தெரிந்துக்கொண்டோம். ஏறியுள்ள விலைவாசியை சமாளித்து பெரும் வெற்றியாளராக நீங்கள் வளர்ந்த இரகசியத்தை மற்றவர்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள். இவ்வளவு காலம் தொழில் செய்யிறீங்க? வீடு, கார், பங்களான்னு… நீங்க சம்பாதிச்ச வெவரத்தை கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்” என்றோம்.

ஸ்கிரீன் பிரிண்ட் செய்யப் பயன்படும் துணிப்பலகை.

அவர், தீடிரென ரிவர்சாகி “சார் நான் பணம் இருந்தா ஏன் சார் மூத்திர சந்துல  கடைய தொறந்து நடத்திகிட்டிருக்கப் போறேன்…. சாதாரணமாகவே இந்த பின் பக்கம் எவனும் வர மாட்டான். நாறுது, கப்படிக்குதுனு இந்த இடத்த கிராஸ் பண்ணும்போதே மூக்க மூடிக்குவான்…. சுத்தமா தொழில் இல்லன்னு கடனுக்குத்தான் சார் மெஷின வாங்கிப்போட்டேன். அதுக்குக் கொடுத்த செக்க ஹானர் பண்ண முடியல….. இப்ப அது பவுண்ஸ் ஆவுது… சரக்கு வித்தப் பணமும் வரல. இருந்தாலும்… அந்தக் கத வேற…. தொழில் தெரியாதவனெல்லாம் புகுந்துத்தான் இந்தத் தொழிலே நாசமாப்போச்சு….

நான் இன்னிக்கும் கடைக்கு தேவையான சாமான் மூட்டைகள, நாலு பொட்டியினாலும் சளைக்காம தனியா தூக்குவேன்; இன்னிக்கு வரைக்கும் அப்படித்தான் தொழில் செய்யறேன். ஆனா, இப்ப வர முதலாளிங்க அவன் கைப்பைய தூக்கவே நாலு ஆளு வைக்கிறான்… அவன்தான் பெரிய முதலாளியின்னு அவன் பின்னாடி ஒடுறானுங்களே சார்? எப்படி சார்…?” என்றார் கண்கள் விரிய…

முட்டியில் கிழிந்த ஜீன்ஸ், முரட்டு தங்கச் சங்கிலி… அணிந்து பவுண்ஸர் மாதிரி தோற்றம் தரும் அந்த முன்னாள் தலைமைக் காவலர் கடைசியில் பிரியத்துடன் நம்மை வழியனுப்பி வைத்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க