வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள், கடை வாடகை தொகையில் 18 சதவிகிதத்தை ஜி.எஸ்.டி வரியாக மாதந்தோறும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாசிச மோடி அரசு எடுத்துள்ள இந்த முடிவு வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் குறு, சிறு, நடுத்தர வணிகர்கள் மீதான தாக்குதலாகும்.
“கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாகக் குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதித்துள்ளது சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதலாகும். மத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், “வணிக கட்டடங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் சிறு வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ரூ.20,000 வாடகை செலுத்துபவர்கள், மாதம் ரூ.3,200 கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும் என வணிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்” என்று வணிகர் சங்கத்தினர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆகவே, வணிக கட்டடங்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதைக் கண்டித்தும் இம்முடிவை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் நவம்பர் 29 ஆம் தேதி தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: ஜி.எஸ்.டி: இந்துராஷ்டிர வரிக் கொள்கை!
தமிழ்நாடு எம்.எஸ்.எம்.இ (MSME) அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பும் இந்த வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், நாளை (நவம்பர் 29) மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் வணிகர் சங்கங்களின் முழு கடையடைப்புப் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் எம்.பி. முத்துரத்தினம் கூறுகையில், “மூலப் பொருட்களின் விலை ஏற்றம், சர்வதேச நாடுகளில் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் பின்னலாடை உள்ளிட்ட தொழில்கள் மிகவும் நலிவடைந்து வருகிறது. கடந்த பத்தாண்டுக் காலமாகப் பின்னலாடை தொழில் பல்வேறு காரணங்களாக நலிவடைந்து தற்போது மெல்ல மீண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசு, வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கான வாடகைக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதித்து இம்மாதம் முதல் அமல்படுத்தியுள்ளது.
திருப்பூரில் உள்ள பெரும்பாலான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.
தற்போது பின்னலாடை தொழில் உள்ள நிலைமையில் வாடகை கூட செலுத்த முடியாத சூழலில், வாடகைக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி என்பது நியாயமற்ற செயல். இதிலும் 1.5 கோடி ரூபாய்க்குக் கீழ் வருட வர்த்தகம் செய்பவர்களால் வாடகைக்குச் செலுத்தும் 18 சதவீத ஜி.எஸ்.டி-யை ஐடிசியில் திரும்பப் பெற முடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக ஏற்கெனவே நலிவடைந்த தொழிலை, மேலும் நலிவடையச் செய்யும் நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளுகிறது. எனவே சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைப் பாதிக்கக்கூடிய வகையிலான வாடகைக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு எம்.எஸ்.எம்.இ (MSME) அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜெயபால் கூறுகையில் , “தமிழகம் முழுவதும் 47 லட்சத்திற்கும் மேல் சிறு – குறு – நடுத்தர நிறுவனங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் 1.5 கோடி ரூபாய்க்குக் கீழ் வருட வர்த்தகம் செய்பவர்கள்.
இவர்களுக்கு ஐடிசியில் செலுத்திய ஜி.எஸ்.டி வரியைத் திரும்பப் பெற வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால் உடனடியாக ஒன்றிய அரசு 18 சதவிகித ஜிஎஸ்டி என்பதைத் திரும்பப் பெற வேண்டும். அதேபோல் மாநகராட்சி பகுதிகளுக்குள் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, ஆண்டிற்கு ஆறு சதவீத உயர்வு என்பதையும் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பாசிச மோடி அரசு 2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்திச் சிறு – குறு தொழில்களுக்குச் சம்மட்டி அடி கொடுத்தது. இதில் பல நிறுவனங்கள் அழிந்தே போயின. அந்த தாக்குதலிலிருந்து சிறு – குறு தொழில்கள் மீண்டு வருவதற்குள் தற்போது வாடகைக் கட்டடங்களுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை விதித்து தனது அடுத்த தாக்குதலைத் தொடுத்துள்ளது பாசிச மோடி அரசு.
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram