அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 11

“என் அப்பாவாக இருங்கள்…”

…திடீரென, “பாருங்கள், வெண்பனி விழுகிறது!” என்று சாஷா சந்தோஷமாகக் கூச்சலிட்டான்.

தி பிலீசி நகரத்தில் மார்ச் மாத ஆரம்பத்தில் திடீரென வெண்பனி விழுமென நான் எதிர்பார்க்கவில்லை. குளிர் காலம் பூராவும் வெண்பனியில் விளையாட வேண்டுமென்ற என் வகுப்புக் குழந்தைகளின் கனவு நிறைவேறவேயில்லை; சூரிய ஒளி மிக்க நாட்களையடுத்து மழை நாட்கள் வந்தன, குளிருக்குப் பின் கதகதப்பான நாட்கள் வந்தன. வெண்பனி, வெண்பனிப் பொம்மைகள் பற்றியும், குளிர் காலத்தில் வெண்பனியில் பனிச் சறுக்கு விளையாடுவது பற்றியும் குழந்தைகள் கவிதைகளைப் படித்தனர், கதைகளைக் கேட்டனர், ஆனால் வெண்பனி விழவேயில்லை…

”வெண்பனி, வெண்பனி, வெண்பனி !” என்று குழந்தைகள் கத்தியபடி ஜன்னல்களை நோக்கி ஓடுகின்றனர்.

வெண்பனி பெரும் திட்டுத் திட்டாக மேகத்திலிருந்து கொட்டுகிறது. பள்ளி முற்றம் வெண்பனியால் நிரம்புகிறது. நாங்கள் எவ்வளவு நாட்களாக இதற்காகக் காத்திருந்தோம்! ஒருவேளை எனது வகுப்புக் குழந்தைகளில் சிலர் இந்த அற்புதமான காட்சியை முதன் முதலாகப் பார்த்திருக்கலாம்.

“வெண்பனியை உருட்டி வீசி விளையாடலாம் வருகின்றீர்களா?” என்று நான் கேட்கிறேன்.

இதில் என்ன சந்தேகம், எல்லோருக்கும் சம்மதம்!

குழந்தைகள் மேலாடைகளை அணிகின்றனர். வரிசையாக நிற்குமாறு நான் வற்புறுத்தவில்லை. அவசரமாகச் செல்ல வேண்டுமே. நாங்கள் முற்றத்திற்கு வருகிறோம்.

மகிழ்ச்சியை வருணிக்க வார்த்தையே இல்லை!

கலைப் பாடத்திற்குப் பதில் வெண்பனியை ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடுகிறோம், வெண்பனியில் படுத்துப் புரள்கிறோம்.

பெரிய இடைவேளையின் போது ஒரு பெரும் வெண்பனிப் பொம்மையைச் செய்கிறோம்.

உழைப்புப் பாடத்திற்குப் பதில் பூங்காவிற்குச் சென்று பனிச் சறுக்கு விளையாட்டு விளையாடுகின்றோம்.

நேயாவுடன் சேர்ந்து பனிப் பொம்மையைச் செய்கிறோம்.

“எனக்கு உங்களுடன் ஒரு விஷயம் பேச வேண்டும்!”

அவள் ஒரு பிர் மரத்தடியில் நிற்கிறாள். அந்த மரத்தைப் பற்றி நான் குலுக்க அதன் மீதுள்ள வெண்பனி அவள் மீது விழுகிறது. அவள் சிரிக்கிறாள், கீழே விழுகிறாள். சாப்பிடப் போகலாமா? இல்லை, இது நேரமில்லையே!

மரங்களின் மீதுள்ள வெண்பனியையும் சுற்றிலும் வெள்ளை வெளேரனக் காட்சியளிப்பதையும் பார்த்து ரசிக்கிறோம்.

நாங்கள் களைத்து விட்டோம். வெண்பனி கொட்டுவது நிற்கிறது. திரும்பி வருகிறோம்.

எவ்வளவு மகிழ்ச்சிகரமான முகங்கள்! கன்னங்கள் எப்படிச் சிவந்து விட்டன!

விரல் நுனிகளும் மூக்கு நுனியும் உறைந்து விட்டனவா? பயப்பட ஒன்றுமில்லை ! – விரைவில் எல்லாம் சரியாகிவிடும்.

ஆனால் நமக்கு இன்று எவ்வளவு மறக்க இயலாத அனுபவங்கள் கிட்டியுள்ளன!

நேயா என்னை விட்டுப் பிரியாமல் என் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்.

“எனக்கு உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும், பிறகு சொல்வேன்” என்று திரும்பி வரும் பாதையில் செல்கிறாள்.

வகுப்பறையில் எங்களைச் சுத்தம் செய்து கொள்கிறோம்.

“சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் அல்லவா! சிறுமிகளுக்கு உதவுங்கள்!”

சிறுமிகள் மேல் கோட்டுகளைக் கழட்டவும் காலணிகளை மாற்றிக் கொள்ளவும் சிறுவர்கள் உதவுகின்றனர்.

சிறுமிகள் சிறுவர்களின் முகங்களைத் துண்டுகளால் துடைத்து விடுகின்றனர்.

“எவ்வளவு நன்றாக உள்ளது!”

“எவ்வளவு அருமையாக உள்ளது!”

“வெண்பனி ராணியைப் பற்றிய ஒரு கதையை உங்களுக்குச் சொல்லட்டுமா?”

“சொல்லுங்கள்!…”

“டெஸ்கில் வசதியாக உட்காருங்கள்… கேளுங்கள்!…”

மெதுவாக, ரகசியம் சொல்வது போன்ற குரலில் தொடங்குகிறேன்: “ஒரு காலத்தில்….”

அது ஒரு பெரிய கதை. குழந்தைகள் அசைவின்றி கவனமாகக் கேட்கின்றனர், பலர் குனிந்து, கண்களை மூடிக் கொண்டனர், ஒரு சிலர் தூங்கிவிட்டதைப் போலிருக்கிறது.

ஆனால் சாஷா தூங்கவில்லை. அவன் கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருக்கிறான். எப்போதும் ஜன்னலையே பார்த்தபடி இருக்கிறான். திடீரென கதையின் குறுக்கே வருத்தத்தோடு கூவுகிறான்: “பாருங்கள், வெண்பனி கரைகிறது!”

குழந்தைகள் கதையைப் பற்றி மறந்து விட்டு மீண்டும் ஜன்னல்களை நோக்கிப் பாய்ந்தனர்.

கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. சிறிது நேரத்திற்கு முன் முற்றம் முழுவதும் நிறைந்திருந்த வெண்பனி கண்கள் முன்னரே உருகி ஓடுகிறது.

சூரியன் தோன்றுகிறது .

“இந்த வெண்பனியுடன் விளையாட வேண்டுமென்று நான் சொன்னேன் இல்லையா! இப்போது பாருங்கள், வெண்பனி மறைந்து விட்டது!” என்று சாஷா கூறுகிறான்.

குழந்தைகள் உருகியோடும் வெண்பனியை வருத்தத்தோடு பார்க்கின்றனர்.

“நமது வெண்பனிப் பொம்மையைப் பார்த்தால் பாவமாய் உள்ளது! அது எப்படி உருகுகிறது!”

“போய் வா, குளிர்காலமே!” என்கிறாள் நேயா.

“போய் வா, குளிர்காலமே!” என்று குழந்தைகள் திரும்பச் சொல்கின்றனர்.

இன்று இரண்டு மணி நேரத்தில் நாங்கள் குளிர் காலத்தை வரவேற்று வழியனுப்பி விட்டோம்.

இவ்வாறாக இயற்கையன்னை அந்த அற்புதமான 122 வது பள்ளி நாளன்று போகின்ற போக்கிலேயே எனது முழு இசைக் குறியீட்டை மாற்றியமைக்கும்படி நிர்ப்பந்தித்தாள்.

“எனக்கு உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்!” என்று சிறு உதடுகள் என் காதில் முணுமுணுக்கின்றன, இன்னமும் சில்லிட்டிருந்த ஒரு சின்னஞ்சிறு கரம் என்னை ஜன்னலிருந்து பிரித்து வகுப்பறையின் மூலைக்கு இட்டுச் செல்கிறது.

“உட்காருங்கள்!”

டெஸ்கில் உட்காருகிறேன். சின்னஞ்சிறு கைகளால் என் கழுத்தைக் கட்டிப் பிடித்து என் வலது காதருகே சிறு உதடுகளை வைத்து ஏதோ சொல்கிறாள். வெப்பமான மூச்சுக் காற்றோடு வார்த்தைகள் நடுங்கியபடியே வெளிவருகின்றன:

“வந்து….. நான் என்ன சொல்ல, விரும்புகிறேன் தெரியுமா… நீங்கள் ஏன் எனக்கு அப்பாவாக இருக்கக் கூடாது?.. அப்போது அம்மா என்னை போர்டிங் பள்ளியில் சேர்க்க மாட்டாள், நானும் உங்களுடனே இருந்து விடுவேன்.”

ஆனால் அது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அம்மா கல்லைப் போல் உறுதியாக இருக்கிறாள்.

நல்ல அன்பான வார்த்தைகளை நான் தேடுகிறேன்.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !
புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ

“நீ கவலைப்படத் தேவையில்லை, போர்டிங் பள்ளியில் மோசமாக ஒன்றும் இருக்காது . அங்கு எப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்களும் குழந்தை வளர்ப்பாளர்களும் உள்ளனர் என்று எனக்குத் தெரியும். அவர்கள் உன்னிடம் அன்பாக நடப்பார்கள், உனக்கும் அவர்களை உடனே பிடித்துவிடும். நானும் மற்றவர்களும் உனக்குக் கடிதங்களை எழுதுவோம். நான் உன்னை வந்து பார்ப்பேன். உனக்கு அங்கே அலுப்பே ஏற்படாது.”

“அப்படியெனில், எனது அப்பாவாக இருக்க உங்களுக்கு விருப்பமில்லையா!” என்றாலும் அவள் என் கன்னத்தில் முத்தமிடுகிறாள்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க