மிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏழாவது நாளாக நடந்து வருகிறது. மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவெடுத்திருக்க வேண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு சட்டையில் புழுதியை பூசிக் கொண்டிருந்தார். சுஜித் மீட்புப் பணிகளை கவனித்திருக்க வேண்டிய பேரிடர் மீட்புத் துறைக்கான அமைச்சர் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை. விஜயபாஸ்கர் கடந்த வார இறுதியில் வடித்துக் கொண்டிருந்த முதலைக் கண்ணீருக்கு மசியாமல் மருத்துவர்கள் விடாப்பிடியாய் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

போராடும் மருத்துவர்கள் நான்கு கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் அரசுப் பணிகளில் உள்ள மருத்துவர்களுக்கு உயர் கல்விக்கென 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது – இதை மீண்டும் வழங்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. அடுத்து தமிழக அரசு சுமார் 800 பணி இடங்களை நீக்கியுள்ளது – இந்த பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்பட வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.

அடுத்ததாக, அரசு மருத்துவர்கள் டைனமிக் அஸ்யூர்டு கேரியர் ப்ரொக்ரெஷன் என்ற விதியின்படி, 20 ஆண்டுகள் பணியை முடித்த பிறகுதான் நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்வுபெற்று, 1.3 லட்ச ரூபாய் சம்பளத்தை எட்ட முடியும். இளநிலை, முதுநிலை, சிறப்புப் படிப்புகளை முடித்து அரசுப் பணியில் சேரவே 30 -32 வயதாகும் நிலையில், இந்த ஊதியத்தைப் பெறும்போது ஐம்பது வயதைத் தொட்டுவிடுகிறார். இதை மாற்றி மத்திய அரசுப் பணிகளில் இருப்பதைப் போல் 13 ஆண்டுகளிலேயே பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கை.

மேலும்,  அரசு மருத்துவராக இருந்து கொண்டே முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களை பின்னுக்கு தள்ளி தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுவதை மாற்ற வேண்டும் என்பது நான்காவது கோரிக்கை.

நியாயமான இந்த கோரிக்கைகளுக்காக கடந்த ஏழு நாட்களாக மருத்துவர்கள் போராடி வரும் நிலையிலும் காய்ச்சல் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளை நம்பி வரும் நோயாளிகளை தவிக்கவிடவில்லை. எனினும், மற்ற பணிகளை புறக்கணித்துள்ளதால் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். மக்கள் படும் துன்பங்களையும் மருத்துவர்களின் கோரிக்கையில் இருக்கும் நியாயங்களையும் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டிய அரசு தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் வியாழக்கிழமை (31-10-2019) மதியம் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் அவ்வாறு பணிக்கு வராத மருத்துவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் பணி முறிவில் இருப்பதாகக் கருதப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் 30-ம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர்களது பணியிடங்களுக்கு புதிதாக மருத்துவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அரசுப் பணிக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பதாகவும் தேவைப்பட்டால் உடனடியாக மருத்தவர்களை நியமிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

படிக்க:
தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 ஐந்தாம் பாகம் | டவுண்லோடு

***

மிழகத்தைப் பொருத்தவரை வட இந்திய மாநிலங்களை விட – குறிப்பாக பசு வளைய மாநிலங்கள் – பொது சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. இதன் விளைவாகவே மனித வளக் குறியீட்டெண்களில் தமிழகம் பிற இந்திய மாநிலங்களை ஒப்பிடும் போது முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்தது. எனினும்,  சமீப ஆண்டுகளில் மெல்ல மெல்ல இந்த கட்டமைப்பு திட்டமிட்டரீதியில் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஜூன் மாதம் மத்திய அரசின் நிதிஆயோக் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தமிழகம் பொதுச் சுகாதாரத் துறையில் பல படிகள் கீழிறங்கியிருப்பதாக சொல்கிறது. பொதுச் சுகாதாரத் துறையில் ஒவ்வொரு மாநிலமும் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பது தொடர்பான புள்ளிவிவரங்களை National Institution for Transforming India (நிதி ஆயோக்) அமைப்பு வெளியிடுகின்றது. அதன்படி, கடந்த ஆண்டு பொதுச் சுகாதாரத் துறையில் 3-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதாரத் துறையில் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் 74.01 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்திலும் 28.61 புள்ளிகளுடன் உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது. பல்வேறு குறியீடுகளில் தமிழகம் பின்தங்கியிருப்பதாக நிதிஆயோகின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குறிப்பாக, குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு குறைவான எடையுடன்) குழந்தைகள் பிறப்பது கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கும் விகிதத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 82.7 சதவீதமாக இருந்து இந்த ஆண்டில் 76.1 சதவீதமாக வீழ்ந்துள்ளது. ஜம்மு – காஷ்மீர், கேரளா, ஆந்திரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 100 சதவீத குழந்தைகளுக்கும் நோய்த் தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் சதவீதமும் 81.8 சதவீதத்தில் இருந்து 80.5ஆகக் குறைந்துள்ளது.

நிதிஆயோக் தவறான புள்ளிவிவரங்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டதாக அப்போதே தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார் – ஆனால், எது சரியான புள்ளிவிவரம் என்றும் சுகாதாரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் உண்மையான நிலை என்னவென்பதைக் குறித்து அவர் வாயே திறக்கவில்லை.

படிக்க:
குட்கா இழிபுகழ் விஜயபாஸ்கரின் ஊரில் மக்கள் வாழ் நிலைமை !
♦ ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !

இந்நிலையில் சமீபகாலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் “மர்மக் காய்ச்சல்” என ஊடகங்களால் பெயர் சூட்டப்பட்ட டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் உள்ளதாக மாவட்ட நிர்வகாமே ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 5 ஆயிரம் பேருக்காவது டெங்கு காய்ச்சல் பரவியிருக்கும் என நக்கீரன் பத்திரிகையின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது

குடியாத்தம் அரசு மருத்துவமனை, வாணியம்பாடி, திருப்பத்தூர், வாலாஜா மருத்துவனைகளில் மர்ம காய்ச்சலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்வதாகவும்,  சோளிங்கர்  அரசு மருத்துவமனையில் ஐம்பதுக்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் பல குழந்தைகள் உள்ளதாகவும் என்கிறது பத்திரிகை செய்திகள்.  குழந்தைகள் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

***

தமிழகத்தின் பொது சுகாதார கட்டமைப்பு ஏற்கனவே நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், ஆட்கொல்லி நோய்களும் வேகமாக பரவி வருகின்றது. இந்த சூழலில் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் எடுத்தெறிந்த பாணியில் பேசி வருகிறார்கள் மாநில அமைச்சர்கள்.

“மக்கள் பாதிப்பதைப் பார்த்து சும்மா இருக்கமாட்டோம்” என்கிறார் எடப்பாடி ! டாஸ்மாக் மரணங்கள் முதல் மலக்குழி மரணங்கள் வரை அன்றாடம் மக்களைக் கொல்லும் இந்த எடுபிடி அரசுக்கு இந்த டயலாக்கை பேசும் அருகதை உண்டா ?


சாக்கியன்
செய்தி ஆதாரம் :  பி.பி.சி. தமிழ், நக்கீரன்.