உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04b

மெரேஸ்யெவின் விமானம் ஒரு புறம் தள்ளப்பட்டது. அது நெருப்புப் பிழம்பு ஒன்றின் அருகாகப் பாய்ந்து சென்றது. விமானத்தைச் சமநிலையில் திருப்பியவாறு மெரேஸ்யெவ் வானத்தை அண்ணார்ந்து பார்த்தான். அவனது பின்னோடி வெள்ளைச் சோப்பு நுரையை ஒத்த மேகப் படிவுகளுக்கு மேலே எல்லையற்ற நீல வானில் தொங்கியபடி வலப்புறமாக அவனைத் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தான். சுற்றிலும் வெறுமையாக இருந்தது. தொடுவானில் மட்டுமே, தொலைதூர மேகங்களின் பின்னணியில் நாற்புறமும் சிதறி ஓடிய “செருப்புக்காலிகள்” வரையுருக்கள் தென்பட்டன. மெரேஸ்யெவ் கடிகாரத்தைப் பார்த்தவன் ஆச்சர்யம் அடைந்தான். சண்டை குறைந்தது அரை மணி நேரம் நீடித்திருக்க வேண்டும் என்றும் பெட்ரோல் தீர்ந்து போகும் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றியது. உண்மையிலோ, எல்லாவற்றிற்கும் மூன்றறை நிமிடங்களே பிடித்திருக்கின்றன என்று கடிகாரங்கள் காட்டின.

வலப்புறம் சம மட்டத்துக்கு வந்து அருகாகப் பறந்த பின்னோடியைப் பார்த்து, “உயிரோடு இருக்கிறாயா?” என்று கேட்டான் மெரேஸ்யெவ்.

பல்வகை ஒலிகளின் குழப்பத்தினூடாக, எங்கோ தொலைவிலிருந்துபோல் ஒலித்தது வெற்றிக் குரல்.

“உயிரோடிருக்கிறேன்!… தரை… தரையில் பாருங்கள்…..”

கீழே, மிதித்துத் துவைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டிருந்த கல்லுங்கடுரடுமான பள்ளத்தாக்கில் புகைமண்டிய பெட்ரோல் நெருப்புக்கள் சில இடங்களில் மூண்டெரிந்தன. வீசாமல் அசைவற்றிருந்த காற்றில் அவற்றின் கொழும் புகை தூண்களாக எழுந்தது. ஆனால் மெரேஸ்யெவ் பகை விமானங்களின் இந்த எரியும் பிணங்களைப் பார்க்கவில்லை. போர்க்களம் அனைத்திலும் விரிவாகப் பரவி ஓடிக் கொண்டிருந்த சாம்பல் – பசுமைநிற வண்டுகளையே அவன் நோக்கினான். இரு குறுகிய பள்ளங்கள் வழியே அவை பகைவர்களின் இடங்களைத் தாக்கிப் புகுந்து விட்டன. ஜெர்மன் பீரங்கிகளின் குண்டுகள் அவற்றின் பின்னே இன்னும் வெடித்துக் கொண்டிருந்தன, எனினும் அவை ஜெர்மன் அரண்வரிசைகளைக் கடந்து மேலே முன் சென்றன.

பகைவர்களின் தகர்ந்த அரணிடங்களுக்கு உள்ளே நூற்றுக் கணக்கான இந்த டாங்கிகள் புகுந்து தாக்குவதன் அர்த்தம் என்ன என்பதை மெரேஸ்யெவ் புரிந்து கொண்டான்.

படிக்க:
அரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு !
கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்

அன்று நிகழ்ந்ததைப் பற்றி மறுநாள் சோவியத் மக்களும், விடுதலை விரும்பும் உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துடன் செய்தித்தாள்களில் படித்தனர்.

கூர்ஸ்க் பிரதேசத்தின் ஒரு பகுதியில், இரண்டு மணி நேரம் பலத்த பீரங்கித் தாக்குதலுக்குப் பிறகு சோவியத் சேனை ஜெர்மானிய அரண்வரிசையை உடைத்து எல்லாப் படைகளுக்கும் வழியைச் செப்பம் செய்தன.

காப்டன் செஸ்லோவின் ஸ்குவாட்ரனில் இருந்த ஒன்பது விமானங்களில் இரண்டு அன்று விமான நிலையம் திரும்பவில்லை. விமானச் சண்டையில் ஒன்பது “செருப்புக் காலிகள்” சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒன்பதுக்கு இரண்டு என்பது விமானங்களைப் பற்றிப் பேசுகையில் சந்தேகமின்றி நல்ல கணக்குத் தான். எனினும் இரண்டு தோழர்களை இழந்தது வெற்றிக் களிப்பில் துயர நிழல் படியச் செய்தது. விமானங்களிலிருந்து வெளியே குதித்த விமானிகள் ஆரவாரிக்கவில்லை, கத்தவில்லை, சண்டையின் சிக்கல்களைப் பற்றி உற்சாகத்துடன் விவாதித்து, கடந்துவிட்ட அபாயத்தை மீண்டும் அனுபவித்தவாறு கைகளை வீசி ஆட்டவில்லை. வெற்றிகரமான சண்டைக்குப் பின் வழக்கமாகச் செய்யும் இந்தக் காரியங்களை அன்று அவர்கள் செய்யவில்லை. அலுவலகத் தலைவரைச் சுளித்த முகங்களுடன் அணுகி, விளைவுகள் பற்றிய வரையறுத்த, சுருக்கமான தகவலைக் கொடுத்துவிட்டு ஒருவரை ஒருவர் நேரிட்டு நோக்காமலே பிரிந்து சென்றார்கள்.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் ரெஜிமென்டுக்குப் புதியவன். கொல்லப்பட்டவர்களின் முகங்கள் கூட அவனுக்குப் பழக்கமில்லை. எனினும் பொதுவாக எல்லோருக்கும் ஏற்பட்டிருந்த சோகம் அவனையும் தொற்றிக் கொண்டது. எதற்காகத் தனது சித்தவுறுதி முழுவதையும் மனோபலம் அனைத்தையும் ஈடுபடுத்தி முயன்றானோ, அவனது வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான அந்த நிகழ்ச்சி நடந்தேறிவிட்டது. அவனது அடுத்துவரும் வாழ்க்கை முழுவதையும் நிர்ணயிப்பது இந்த நிகழ்ச்சி, உடல் நலமுள்ள முழு மதிப்பு வாய்ந்த மனிதர்களின் அணிகளில் அவன் மீண்டும் சேரப் புரிவது. மருத்துவமனைக் கட்டிலிலும், பிறகு நடக்கவும் நடனமாடவும் கற்றுக்கொள்ளும் போதும், இழந்துவிட்ட விமானமோட்டும் தேர்ச்சியை விடாப்பிடியான பயிற்சிகளால் மீண்டும் பெற்ற போதும் எத்தனை எத்தனை முறைகள் அவன் இந்த நாளைப் பற்றிக் கனவு கண்டிருந்தான்! இப்போது, அந்த நாள் வந்துவிட்டது. இரண்டு ஜெர்மன் விமானங்கள் அவனால் சுட்டு வீழ்த்தப்பட்டன. சண்டை விமானமோட்டிகள் குடும்பத்தில் அவன் சமஉரிமையுள்ள உறுப்பினன் ஆகிவிட்டான். அவன் எல்லோரையும் போலவே அலுவலகத் தலைவரை அணுகி, தான் வீழ்த்திய விமானங்களின் எண்ணிக்கையைக் கூறி, நிலைமைகளை விவரித்து, பெத்ரோவைப் புகழ்ந்து விட்டு அப்பால் போய், அன்று திரும்பாத விமானிகளைப் பற்றிச் சிந்தித்தவாறு பிர்ச் மரப்பந்தரின் கீழ் நின்றான்.

பெத்ரோவ் மட்டுமே தலைக்காப்பு இன்றி, வெளிர் முடிகள் கலைந்து பறக்க, விமானத் திடலில் ஓடி, வழியில் எதிர்ப்பட்டவர்கள் எல்லாருடைய கைகளையும் பற்றிக் குலுக்கி, விமானச் சண்டையை விவரிக்கலானானன்:

“..பார்க்கிறேனோ, பகை விமானங்கள் பக்கத்தில் வந்து விட்டன., கையை நீட்டினால் பிடித்துவிடலாம் போல! கேளு…. பார்த்தேன்: சீனியர் லெப்டினன்ட் முன் விமானத்தைக் குறிவைத்துத் தாக்கிவிட்டார். நான் பக்கத்து விமானத்தைக் குறிவைத்தேன். ஒரே அடி, விமானம் கயா!”

அவன் மெரேஸ்யெவிடம் ஓடி அவன் காலருகே மென்மையான புல்லடர்ந்த பாசி மீது விழுந்து கால்களை நீட்டிக் கொண்டான். இந்த அமைதியான கிடை அவனுக்குச் சகிக்கவில்லை. எனவே உடனே துள்ளி எழுந்தான்.

“நீங்கள் தாம் இன்று எப்பேர்பட்ட வளையங்கள் இட்டீர்கள்! வெகு நேர்த்தி! என் கண்கள் அப்படியே இருண்டு விட்டன….. ஜெர்மன்காரனை இன்று எப்படி அடித்து வீழ்த்தினேன் தெரியுமா? கேளுங்கள்…. உங்கள் பின்னாலேயே பறந்தவன் திடீரென்றுப் பார்த்தேன், அவன் கிட்டே வந்துவிட்டான், கையை நீட்டித் தொட்டுவிடலாம் போல. இதோ, நீங்கள் நிற்கிறீர்களே, இதே மாதிரி…. ”

அலெக்ஸேய் தன் சட்டைப் பைகளைத் தட்டிப் பார்த்தவாறு அவன் பேச்சை இடை முறித்தான்: “பொறு, தம்பி. கடிதங்கள், கடிதங்கள்… அவற்றை எங்கே வைத்துவிட்டேன்?”

தனக்கு அன்று கிடைத்த, தான் இன்னும் படிக்காத கடிதங்களை அவன் நினைவு கூர்ந்தான். பைகளில் அவற்றைக் காணாமையால் அவனுக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. அப்புறம் சட்டைக்குள் மார்பின் மீது சரசரத்த உறைகளைத் தொட்டுணர்ந்து அவன் அப்பாடா என்று பெருமூச்சுவிட்டான். ஓல்காவின் கடிதத்தை எடுத்து, பிர்ச் மரத் தடியில் உட்கார்ந்து, வெற்றிக் கிளர்ச்சி கொண்ட தன் நண்பனின் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், உறையை ஜாக்கிரதையாகப் பிரிக்கலானான்.

அந்தச் சமயத்தில் வாணக்குழல் டப் பென உரக்க ஒலித்தது. சிவப்புப் பொறிகள் சிந்திய பாம்பு விமானத் திடலுக்கு மேலே வானில் நெளிந்து சென்று, மெதுவாகக் கலைந்து சிதறிய சாம்பல் தடத்தை விட்டுவிட்டு அணைந்தது. விமானிகள் துள்ளி எழுந்தார்கள். போகிற போக்கிலேயே அலெக்ஸேய் கடித உறையைச் சட்டைக்குள் மார்பருகேச் செருகிக் கொண்டான். கடிதத்தின் ஒரு வரியைக் கூட படிக்க அவனுக்கு வாய்க்கவில்லை. உறையைப் பிரித்த போது அதற்குள் காகிதங்கள் தவிர ஏதோ கடினமான ஒன்றும் அவனுக்கு தட்டுப்பட்டது. ஏற்கனவே பழக்கமாகிவிட்ட வழியில் அணிக்கு முன்னே பறந்தவாறு அவன் அவ்வப்போது உறையைத் தொட்டுப் பார்த்தான். அதில் என்ன இருந்தது?

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க