சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு பேரின் படுகொலையின் குற்றவாளிகளை “நன்னடத்தை” விதிகளின் படி விடுவித்துள்ளது தமிழக அரசு. மேலவளவு முருகேசன் படுகொலை என்பது ஒட்டு மொத்த தமிழகத்தின் முகத்தின் மீதும் சாதி வெறியர்கள் காறி உமிழ்ந்த நிகழ்வு. இந்திய வரலாற்றிலேயே குறிப்பிட்டு சொல்லத்தக்க சாதிய வன்கொடுமைப் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு கொடூரமான குற்றத்தை இழைத்தவர்களைத்தான் விடுதலை செய்துள்ளது தமிழக அரசு.

இணைய தலைமுறையினருக்கு மேலவளவு முருகேசனைத் தெரிந்திருக்காது – பழைய வரலாற்றை சுருக்கமாகவாவது அறிந்து கொண்டால்தான் இந்த விடுதலையின் பின் இருக்கும் தடித்தனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

மேலவளவு : ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டோர்கள். (கோப்புப் படம்)

1996-ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, தலித் மக்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுவரை சூத்திரசாதி கள்ளர்களே ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருந்து வந்த நிலையில், புதிதாக தலித் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர் சூத்திரசாதி வெறியர்கள். இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக சாதி வெறியர்கள் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதிகாரத்தின் முன் மண்டியிட்ட சாதிவெறியர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தலித்துகளை மிரட்டியதை அடுத்து தலித்துகள் தரப்பில் இருந்து யாரும் மனுத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை, மீண்டும் தேர்தலுக்கான மாற்றுத் தேதி அறிவிப்பு என்கிற நாடகங்களின் ஊடே முருகேசன் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட முன்வந்தனர்.  தேர்தல் அன்று கலவரம்  செய்த சாதிவெறியர்கள்  வாக்குப் பெட்டிகளை களவாடிச் சென்றனர். இதனால், தேர்தல் தடைபெற்றது.

அதன் பின் மீண்டும் சில மாதங்கள் கழித்து கடுமையான போலீசு காவலோடு நடந்த தேர்தலில் முருகேசன் வென்றார். எனினும், ஊராட்சி மன்ற அலுவலகம் கள்ளர்கள் வசிக்கும் பகுதியில் இருந்ததால் அவரால் அங்கே செல்ல முடியாத நிலை தொடர்ந்து நீடித்தது.  ஒருபக்கம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தனது பணிகளை முருகேசன் மேற்கொண்டு வந்த நிலையில் சாதி வெறியர்கள் தலித் மக்களின் மேல் தொடர்ந்து வன்கொடுமைகளை கட்டவிழ்த்து வந்தனர்.

மேலவளவு முருகேசன்.

ஒரு சந்தர்பத்தில் மூன்று தலித் குடிசைகள் தீயிடப்பட்டன; இதற்கு நிவாரணம் பெற, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். இவர்களை பின் தொடர்ந்து சென்ற சாதி வெறியர்கள், அவர்கள் திரும்பும் பேருந்தைக் குறித்து ஊரில் தகவல் சொல்லி சென்னகரம்பட்டி ராமர் என்பவர் தலைமையில் ஆட்களை திரட்டி தயாராக இருந்தனர். பேருந்து  அக்ரகாரம் பழைய கள்ளுக்கடை மேடு அருகே வந்த  போது  துரைப்பாண்டி என்பவர், ஓட்டுநரை மிரட்டி வண்டியை நிறுத்தினார். அதே நேரம், ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் வண்டியை ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.

பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்), பூபதி, சௌந்திரராஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பிலிருந்து தனியாக வெட்டி எடுத்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.

♦ ♦ ♦

25.09.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு 85 நாட்கள் கழித்து 25.09.97 அன்று 41 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயராமன், பாம்பு கடித்து இறந்து விட்டார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர். அடுத்த ஆறே மாதத்தில் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் ஜாமீன் பெற்று ஊருக்கே திரும்பினர். அதன் பின் தலித்துகள் அச்சத்துடன் காலம் தள்ளி வந்தனர்.

நீண்ட விசாரணைகளுக்குப் பின் 26.07.2001 அன்று விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பில் குற்றத்தை நிறைவேற்ற சதி செய்தது நிரூபிக்கப்படவில்லை என சொல்லப்பட்டு இருந்தது. அதே போல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (1989) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை.

படிக்க:
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 

ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட 17 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே போல் தலித் மக்கள் தரப்பில் 23 பேர் விடுவிக்கப்பட்டதை சீராய்வு செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தமிழக அரசு வழக்கை மேல் முறையீடு செய்யாமல் விலகிக் கொண்டது. மேல் முறையீடுகளின் மீதான விசாரணைகள் நடந்து வந்த நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிணையில் வெளி வந்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணைகளை அடுத்து 17 பேரின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மற்ற 23 பேரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது துரதிர்ஷ்டவசமானது என்றும், அதனால் இவர்களின் விடுதலை உறுதி செய்யப்படுவதாகவும் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் குற்றவாளிகளில் மூன்று பேர் நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதமே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 14 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ.-வான பெரியபுள்ளான் சட்டமன்றத்தில் பேசியிருந்தார். அப்போதே இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி குற்றவாளிகளில் 13 பேரை ”நன்னடத்தை” விதிகளின்படி விடுவித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி,  சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி ஆகியோர் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மிக கொடூரமான வன்கொடுமைகளையும் படுகொலைகளையும் செய்த இந்த மக்கள் விரோதிகள் விடுவிக்கப்பட்டிருப்பதை கடுமையாக விமர்சிக்கும் சமூக செயல்பாட்டாளர்கள், மற்ற குற்ற வழக்குகளைப் போல் தீண்டாமை வன்கொடுமையால் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி விடுவிக்க முடியாது என்கின்றனர். ஆனால், அரசு தரப்பில் ஆரம்பத்தில் வழக்கை நடத்திய போதே  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகளை தப்பவிட்டுள்ளனர்.

குற்றவாளிகளை இவ்வாறு விடுவிப்பது இனிமேல் தலித் மக்களின் மேல் எந்த குற்றத்தை இழைத்தாலும் தண்டனையில் இருந்து “நன்னடத்தையை” காரணம் காட்டி தப்பி விடலாம் என்கிற திமிரை சமூக விரோதிகளுக்கும், சாதி வெறியர்களும் ஏற்படுத்தும் என்பதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டுகின்றனர். ஜனநாயகத்தின் மீதும், சமூகத்தின் மீதும் கொஞ்சமேனும் அக்கறை உள்ளவர்கள் இந்த அயோக்கியத்தனத்த்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

சாக்கியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க