‘பயங்கரவாத நிதியுதவி’ தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்துவரும் நிறுவனத்திடமிருந்து ‘பயங்கரவாத ஒழிப்பு புகழ்’ பாஜக, பெரிய அளவிலான நன்கொடை பெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவரும் மாஃபியா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியுமான இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சியிடமிருந்து சொத்துக்களை வாங்கியது தொடர்பாக ஆர்.கே. டபிள்யூ டெவலப்பர்ஸ் லிமிட். நிறுவனத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த நிறுவனம் பாஜகவுக்கு நிதியளித்திருப்பதாக, அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த தகவலில் தெரிவித்துள்ளது.

நெருக்கடி நிலையில் இருக்கும் திவான் ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆர். கே. டபிஸ்யூ, 2014 – 15 ஆண்டில் பாஜக -வுக்கு ரூ. 10 கோடி நிதியளித்துள்ளது. இந்த விசயத்தை கோப்ரா போஸ்டு, கடந்த ஜனவரி 2019-ல் வெளியே கொண்டுவந்தது.
பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்டுகிற பல்வேறு தேர்தல் அறக்கட்டளைகளிடமிருந்து பாஜக தொடர்ந்து பெரிய அளவிலான நிதியை பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், எந்தவொரு தனிப்பட்ட நிறுவனமும் ஆர்.கே. டபிள்யூ கொடுத்ததைவிட பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக நிதியை கொடுக்கவில்லை.
தற்போது தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சர்ச்சைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், மற்றொரு விசயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். 2014- 15 ஆண்டில் மோடி அரசாங்கம், முன்பின் தெரியாதவர்கள் அரசியல் செல்வாக்கு செலுத்தும் தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால், ஆர்.கே. டபிஸ்யூவின் நன்கொடை வெளிச்சத்துக்கே வந்திருக்காது.
படிக்க:
♦ தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !
♦ நூல் அறிமுகம் : குஜராத் கோப்புகள் – மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்
இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான ரஞ்சித் பிந்த்ரா, நிழல் உலகத்தின் சார்பாக ஒப்பந்தங்களை பேசியதாக அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்டு கைதானவர். பிந்த்ரா, மிர்ச்சிக்கும்; நிறுவனங்களுக்குமிடையே முகவராகவும் தரகராகவும் செயல்பட்டதாக அமலாக்கத்துறை கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அதுமட்டுமல்ல..
மிர்ச்சியின் சொத்துக்களை வாங்கியதாக அமலாக்கத்துறையால் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனமான சன்பிளிங்க் ரியல் எஸ்டேட் , ஒரு பொதுவான இயக்குனர் வழியாக வேறொரு நிறுவனத்தின் மூலம் பாஜகவுக்கு ரூ. 2 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது.
சன்பிளிங்க் இயக்குனரான மெகுல் அனில் பவிஷி, ஸ்கில் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இயக்குனராகவும் உள்ளார். தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்த அறிக்கையில் 2014-15 ஆண்டில் ஸ்கில் ரியால்டர்ஸிடமிருந்து ரூ. 2 கோடி நிதி பெற்றுள்ளது.

ஆர்.கே. டபிள்யூ டெவலர்ப்பர்ஸ் இயக்குனர் பிளாசிட் ஜேக்கப் நரோன்ஹா, தர்ஷன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார். 2016-17-ஆம் ஆண்டில் பாஜகவுக்கு தர்ஷன் ரூ. 7.5 கோடியை வழங்கியுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் நரோன்ஹாவும் விசாரணையில் உள்ளார்.
ஆர்.கே. டபிள்யூ டெவலப்பர்ஸ் நிறுவனம் மிர்ச்சியின் சொத்துக்களை விற்க உதவியதாகவும், இதற்காக பிந்த்ரா ரூ. 30 கோடியை கமிஷனாக பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. நடிகர் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவையும் ஆர்.கே. டபிள்யூ டெவலப்பர்ஸ் உடனான உடன்பாடுகளுக்காக அமலாக்கத்துறை விசாரித்தது. ஆர்.கே. டபிள்யூ நிறுவனத்துடன் பரிவர்த்தனைகளில் இருந்த எசென்ஷியல் ஆஸ்பிட்டாலிட்டி என்ற நிறுவனத்தில் ஷில்பாவும் ஒரு இயக்குனர்.
இரண்டு மாதங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, இக்பால் மிர்ச்சி விசயம், சர்ச்சைக்குரியதாக இருந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரஃபுல் பட்டேலுக்கு சொந்தமான மில்லேனியம் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கும், சன்பிளிங்க் நிறுவனத்துக்கும் மிர்ச்சியுடன் சொத்து பரிவர்த்தனை இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணை சொன்னது.
மகாராஷ்டிர தேர்தலுக்கு முன்பே விசாரணை தொடங்கப்பட்டு, பிரஃபுல் பட்டேலை விசாரித்ததோடு, பிந்த்ரா உள்ளிட்ட இருவரை கைது செய்தது. பிரஃபுல் பட்டேல் தான் எந்த தவறும் செய்யவில்லை என உறுதியாக மறுத்துள்ளார். மிர்ச்சியின் சொத்துக்களை சன்பிளிங் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் மற்றும் மில்லேனியம் டெவலப்பர்ஸ் பிரைவேர் லிமிடெட் நிறுவனங்கள் விற்றது தொடர்பாக மிர்ச்சியின் மைத்துனரான முக்தார் மேமனிடம் அமலாக்கத்துறை விசாரித்தது.
படிக்க:
♦ போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! புதிய கலாச்சாரம் நூல் !
♦ பாஜக தேர்தல் அறிக்கை 2019 : கலாய்க்கும் நெட்டிசன்கள் | #sanghifesto
சன்பிளிங்க் நிறுவனத்துக்கு ரூ. 2,186 கோடியை கடன் கொடுத்தது தொடர்பாக கடந்த மாதம் டி.எச்.எஃப்.எல் நிறுவனத்தின் பதினான்கு கிளைகளில் சோதனை நடத்தியது அமலாக்கத்துறை. இந்த பணம் துபாய்க்கு அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை நம்புகிறது. மிர்ச்சிக்கு சன்பிளிங்கிற்கும் இடையே சொத்து பரிமாற்ற பேச்சுவார்த்தை நடத்தியை பிந்த்ரா ஒப்புக்கொண்டதாக பெயர் சொல்ல விரும்பாத அமலாக்கத்துறை அதிகாரி கூறியதாக பிஸினஸ் டுடே செய்தி வெளியிட்டிருந்தது.
பிரஃபுல் பட்டேலுக்கு எதிராக அமலாக்கத்துறையை பயன்படுத்திய பாஜக :
மகாராஷ்டிரத்தில் தனது கடைசி பிரச்சார பயணத்தில் பேசிய பிரதமர் மோடி, மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் நியாயம் செய்யவில்லை என்றார்.
“மும்பை குண்டு குண்டுவெடிப்பின் காயங்களை எங்களால் மறக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அப்போதைய அரசாங்கம் நீதி செய்யவில்லை, அத்தகைய நிலைப்பாட்டிற்கான காரணம் இப்போதுதான் தெரியவருகிறது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கைது செய்வதற்குப் பதிலாக, அதிகாரத்தில் இருந்தவர்கள் மிர்ச்சி வியாபாரத்தில் ஈடுபட்டனர்” என அவர் வெடித்தார்.
மிர்ச்சியுடனான நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் ‘தேசத்துரோகத்திற்குக் குறைவானதல்ல’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வெளியானது. பிரஃபுல் பட்டேல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் காரணமாக அமித் ஷாவின் பேச்சை மேற்கோள் காட்டிய கட்டுரைகள் TOI இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், TOI யில் வெளியான கட்டுரை pressreader.com வழியாக இன்னும் கிடைக்கிறது.
இந்த வழக்கில் பிந்த்ராவைத் தவிர, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஹாரூன் யூசுப்பும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடக செய்திகளின்படி, பிந்த்ரா நில ஒப்பந்தத்தின் தரகராக செயல்பட்டார், அதே நேரத்தில் யூசுப் பணத்தை ஒரு அறக்கட்டளைக்கு மாற்றி ஒப்பந்தத்திற்கு வசதி செய்தார்.
தேசியவாத காங்கிரசை ‘தேச துரோகி’யாகவும் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர்களாகவும் பேசிய டெல்லி சாணக்கியர்கள் மோடி – அமித் ஷா, அதே கட்சியுடன் கள்ளக்கூட்டு வைத்து அதிகாலையில் ‘அதிரடி’யாக ஆட்சியமைத்திருக்கிறார்கள் மகாராஷ்டிரத்தில். குற்றவாளியுடனும் கூட்டு, குற்றம்சாட்டப்பட்டவனுடனும் கூட்டு! ஆக, டெல்லி சாணக்கியர்களுக்கு நீதி – நியாயம் – அறம் -மானம் – சூடு -சுரணை என எதுவுமே இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
கட்டுரை : ரோஹிணி சிங்.
கலைமதி
நன்றி : தி வயர்