ரானா அயூப், தெஹல்காவின் முன்னாள் ஆசிரியர். தற்போது மும்பையிலும் டெல்லியிலும் வசிக்கும் ஒரு எழுத்தாளர். சுதந்திர பத்திரிகையாளர். 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளராகவும் அரசியல் பகுப்பாய்வாளராகவும் பல புகழ்பெற்ற கட்டுரைகளின் ஆசிரியர். அவரது புலனாய்வுக் கட்டுரைகளின் ”அம்பலப்படுத்துதல்” காரணமாக பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா 2010 ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றார். (நூலிலிருந்து…)

”புனைகதைகளைவிட உண்மை விசித்திரமானதாக இருந்திடும். ஏனெனில், புனைகதைகள் சாத்தியக்கூறுகளுக்கு இணங்கத்தான் செல்லமுடியும், ஆனால் உண்மை அப்படியல்ல’ என்கிறார் மார்க ட்வெயின். ஆயினும், உண்மையின் தன்மை உலகம் முழுதும் உள்ள தத்துவஞானிகளை, அனைத்துக் காலங்களிலும் ஒரு குலுக்கு குலுக்கியே வந்திருக்கிறது. ‘ஹோலி கிரெய்ல்’, போன்று, அது பல்வேறு காலங்களிலும், பல்வேறு நபர்களால் பல்வேறு விதத்தில் வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கிறது. உண்மையைக் கண்டறிந்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறவர்கள், மிகக் கடினமான சோதனைகளுடன் தங்கள் சொந்த மனசாட்சி அவர்களுக்கு வழிகாட்டுவதைத் தவிர, வேறெவரிடமிருந்தும் உதவிகள் வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிராமல், தன்வழியே விழிப்புடன் சென்றுதான் ஆக வேண்டும்.

2002-ல் குஜராத்தில் நடைபெற்ற; மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளின் உண்மை வடிவங்கள் மற்றும் நடைபெற்ற என்கவுண்டர்கள் வாசகர்களை மிகவும் உலுக்கிவிடும். இதன் ஆசிரியரின் கூற்றுப்படி, இந்தப் புத்தகம் ஆசிரியரின் ரகசிய கேமரா மற்றும் ரகசிய மைக்ரோபோன் ஆகியவற்றுடன் அவர் மேற்கொண்ட ஸ்டிங் ஆபரேசன் மூலமாக குஜராத்தில் நடந்த கலவரங்களின் பின்னணியிலிருந்த ஆழமான அம்சங்களை வாசகர்களுக்கு அளித்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையானவைகளா, அல்லது நிகழ்வுகளின் இயற்கைத் தோற்றம் மட்டுமா என்பது வாசகர்களின் முடிவுக்கே விடப்படுகிறது.

இந்நூலின் ஆசிரியர் தான் சந்தித்த நபர்களிடம் மேற்கொண்ட உரையாடல்களைத் தொகுத்து வாசகர்கள் ஆர்வத்துடன் படிக்கும் விதத்தில் தந்திருக்கிறார்.

… மும்பையில் 1992 டிசம்பர் – 1993 ஜனவரி ஆகிய மாதங்களுக்கு இடையே நடைபெற்ற கலவரங்கள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆணையம் சேகரித்த கசப்பான அனுபவங்களுடன், அத்தகைய கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட வேண்டும் என்ற உணர்ச்சியே இல்லாது இருக்கும் அரசுகளைப் பார்க்கும் போது, ஒரு விஷயத்தை மிகவும் தெளிவாக உய்த்துணர முடிகிறது.

… இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியானவைதான் என ஒருவரால் உறுதி செய்யப்பட முடியாமல் இருக்கலாம். ஆனால், தான் உண்மை என்று நம்புகின்றவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்காக, அதில் ஈடுபட்டிருந்தவர்களின் வேஷத்தைக் கலைப்பதற்காக ஆசிரியர் காட்டியுள்ள துணிவு மற்றும் உணர்வு பூர்வமான ஈடுபாடு ஆகியவற்றை எவரொருவரும் போற்றிப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆட்சியாளர்களிடம் அதிகரித்து வரும் நேர்மையின்மை, சூழ்ச்சிகள் மற்றும் அரசியல் சதிவேலைகளுக்கு எதிராக, புலனாய்வு இதழியலின் கீழ் வேண்டிய வீரத்துடனும், துணிவுடனும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள். (பி.என். ஸ்ரீகிருஷ்ணா எழுதியுள்ள அணிந்துரையிலிருந்து…)

குஜராத்தில் நடைபெற்ற என்கவுண்டர்கள் அனைத்தும் மிகவும் கேவலமான வடிவங்களிலேயே அமைந்திருந்தன. சமீர்கான் பர்தான், சாதிக் ஜமால், இஸ்ரத் ஜகான், ஜாவேத் என்கிற பிரனேஷ் பிள்ளை , சொராபுதீன், துளசி ராம் பிரஜிபதி – இவைகள் நாட்டின் உயர் மட்ட அளவிலான நீதிமன்றங்களால் (அதாவது உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களால்) மேற்பார்வைக்கு உள்ளாக்கப்பட்ட குஜராத்தை சேர்ந்த என்கவுண்டர் வழக்குகளாகும். இவற்றைச் சுருக்கமாகப் பார்த்தாலே, இவை அனைத்தும் மிகவும் கவனத்துடன் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கொலைகள் என்பதைத் தெரிந்துகொள்ள போதுமானவைகளாகும். இவற்றில் மிகவும் முக்கியமான வழக்கு ஒன்றைக் குறித்து 2011 டிசம்பரில் தெகல்காவில் நான் எழுதியிருந்ததாவது:

நூலாசிரியர் ரானா அயூப்.

ஆயினும், குஜராத் போலி என்கவுண்டர்களில் மிகவும் சங்கடத்தை அளித்த விஷயங்கள் என்னவெனில், அவை தொடர்பாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களும், கொல்லப்பட்டவர்கள் குறித்து அவிழ்த்து விடப்பட்ட பழிதூற்றல்களுமாகும். இவ்வாறு போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே லஸ்கர்-இ-தொய்பா (LeT-Lashkar-e-Toiba) பயங்கரவாதிகள் என்று பகிரங்கமாக முத்திரையிடப்பட்டார்கள். இவர்கள் அனைவருமே முதலமைச்சர் நரேந்திர மோடியையும், அப்போது துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானியையும் மற்றும் பிரவீன் தொகாடியா, ஜெய்தீப் பட்டேல் போன்ற அதிதீவிர இந்துத்துவாவாதிகளையும் கொல்வதற்காக வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டன.

2002 குஜராத் மதக் கலவரங்களை அடுத்து, மாநிலம் மதரீதியாகக் கூர்மையாகப் பிளவுபட்டிருந்த சமயத்தில், இத்தகைய பிரச்சாரங்கள் எரிகிற கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றியது போல் வேகமாகப் பரவின. பயங்கரவாதத் தாக்குதல்களில் நாட்டில் எங்குமே முஸ்லீம் பையன்கள் பங்கேற்கவில்லை என்ற போதிலும், அவர்கள் அனைவரும் ‘பயங்கரவாதிகள்’ என முத்திரை குத்தப்பட்டார்கள், முஸ்லீம் சமூகத்தினர் அனைவருமே தேச விரோதிகள் என்ற கரியைப் பூசினார்கள். அதன் மூலம் மோடியை “இந்து இதய மாமன்னன்” (Hindu Hriday Samrat) -ஆக உயர்த்திப்பிடித்தார்கள். இவர் ‘இந்து எதிரிகளுக்கு ‘ ஒரு பாடம் கற்பிப்பதில் வல்லவராக மட்டுமல்லாமல், தொடர்ந்து ஜிகாதிக் குழுக்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களையும் எதிர்த்து முறியடிக்கும் வல்லமை பெற்றவர் என்று போற்றப்பட்டார். (நூலிலிருந்து பக்.39-40)

… அடுத்த நாள் காலை நான் தில்லி போய்ச் சேர்ந்தேன். நேரடியாக தெகல்கா அலுவலகத்திற்குப் போனேன். மோடியுடனான பதிவின் “காணொலிக் காட்சியை என் மடிக் கணினிக்கு மாற்றினேன். தருண் அவரது அறையிலிருந்தார். ஷோமாவும் அவருடன் சேர்ந்து கொண்டார். நான் அவர்களிடம் அந்த காணொலியைக் காட்டினேன்.

… ”என்னை ஏன் திரும்ப அழைத்தீர்கள்?” என்று நான் கேட்டேன். “அவரது அலுவலகத்திலிருந்து ஒருசில நாட்களில் என்னைத் திரும்பவும் அழைப்பார்கள். நான் அவரை மீண்டும் சந்திக்கலாம்.”

படிக்க :
சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு !
இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !

“இங்கே பார் ரானா, தெகல்கா, பங்காரு லக்ஷ்மண் தொடர்பாக ரகசியப் பதிவினை (ஸ்டிங்) மேற்கொண்ட பின்னர், அவர்கள் நம் அலுவலகத்தை மூடிவிட்டார்கள். மோடி, நாட்டின் மிகவும் வலுவானவராகவும், பிரதமராக இருக்கிறார். நான் அவர் மீது கை வைத்தால் நாம் அனைவரும் தீர்த்துக் கட்டப்பட்டுவிடுவாம்.”

என்னால் அவர்களின் கூற்றுக்கு இணக்கமாகப் போக முடியவில்லை. ஒட்டுமொத்த ரகசியப்பதிவும் ஆபத்தானதில்லையா? ஆயினும் ஆனால் அவர்கள் எனது ஒவ்வொரு வாதத்திற்கும் ‘இல்லை’, ‘இல்லை ‘ என்றே கூர்மையாகப் பதில் கூறினர்.

… இரு நாட்கள் கழித்து, நான் யூனினார் சிம் கார்டை என் போனிலிருந்து வெளியே எடுத்து, அதனை நசுக்கி, குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டேன். போனையும் அவ்வாறே செய்துவிட்டேன். அன்றிலிருந்து மைதிலி முழுவதுமாக இல்லாது போனாள். புலனாய்வை பிரசுரிக்க வேண்டாம் என்று ஆசிரியர் முடிவெடுத்தார்.

அன்றிலிருந்து நான் அமைதியாக இருந்தேன். இன்றுவரை. (நூலிலிருந்து பக்.205)

நூல் : குஜராத் கோப்புகள் (மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்)
ஆசிரியர் : ரானா அயூப்
தமிழில் : ச. வீரமணி

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com

பக்கங்கள்: 208
விலை: ரூ 170.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | panuval

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க