“சென்னை ஐ.ஐ.டி. மாணவி ஃபாத்திமா தற்கொலை!
RSS ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்யாதது ஏன்?
காவிகளின் பிடியில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம்!”

என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கண்டனக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 26.11.2019 அன்று கடலூர், மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில், மாலை 05:00 மணி அளவில் கண்டன தெருமுனைகூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு புமாஇமு தோழர் பால்ராஜ் தலைமை வகித்தார், அவர் தனது தலைமையுரையில் ;

“இன்று உயர்கல்வி நிறுவனங்கள் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு கீழே செயலாற்றி வருகிறது. இங்கே ஆர்.எஸ்.எஸ் சார்புடைய அதிகாரிகளை நியமித்து உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்க கூடிய வேலைகளை முன்னெடுத்து வருகிறது மோடி கும்பல்.

குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை பாடமாக கொண்டுவரப்பட்டது. பகவத் கீதை என்பது நான்கு வர்ணம், நாலாயிரம் சாதி என்று கூறுவதும்; இந்த ஏற்றத்தாழ்வுகள் எந்த வகையிலுமே சமநிலைக்கு வரக் கூடாது என்பதை உயர்த்திப் பிடிப்பதும் தான் அதன் சாரம்.

தனது அண்ணன், தம்பி.., யாராக இருந்தாலும் கொலை செய்யலாம் என்பதை ஊக்குவிக்கும் பகவத்கீதையை; அறிவியலுக்கு எதிராக உள்ளதை பாடமாக திணிக்க ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி – சங்பரிவார் கும்பல் முயன்று வருகிறது.

சென்னை ஐ.ஐ.டி.-யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்தது. அப்போது தமிழகம் முழுக்க மாணவர்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடி மோடி கும்பலின் மூக்கை உடைத்தனர்.

மாணவன் தனது கல்வி உரிமை சார்ந்தும், சமூக அக்கறை என்ற அடிப்படையிலும் தனது போராட்டங்களை முன்னெடுத்து போராடியதால்; அம்பேத்கரிய – பெரியாரிய கருத்துக்களை மாணவர்களிடம் பேசுவதாலும், அதை பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனிய அடிவருடி ஆளுநரின் நேரடி தலையிட்டால். சட்டவிதிகளை மீறி மாணவர் கிருபா மோகன் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இப்படி உயர்கல்வி நிறுவனங்களில் முற்போக்குக் கருத்துக்களை பேசுவதோ, மாணவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கேள்வி எழுப்புவதை, போராடுவதை கண்டு அஞ்சி நடுங்க கூடிய இந்த பார்ப்பன கும்பல் சதித்தனமாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர்கள் கண்டு அஞ்ச கூடிய அம்பேத்கர், பெரியார், மார்க்சியக் கருத்துக்களை இளந்தலைமுறையினர் நாம் படிக்க வேண்டும். இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்…” என உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் தோழர் ராமலிங்கம் கண்டன உரையாற்றினார். அதில்;

“ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கு பெரும் கொடுமைகளை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய, பாலியல் குற்றவாளியை கைது செய்யக்கூடாது என்று தேசிய கொடியை தூக்கிக் கொண்டு போராடினார்கள். இவர்களிடம் எத்தகைய ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியும்?

அதுதான் இன்று சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமாவிற்கு நடந்துள்ளது. தமிழகத்தில் பெரியார் – கடவுள் இல்லவே இல்லை என்ற எதிர்ப்பு இயக்கமானது – பகுத்தறிவு சிந்தனைகள் காவிகளிடமிருந்து தமிழக மக்களை பாதுகாத்து வந்தது. அதற்கு மாறாக தற்போது மக்களை காவு வாங்க துடிக்கும் சாதி, மத கருத்துக்களை பரப்பும் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி கும்பல் அதிகார பீடங்களில் அமர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது. தற்போது அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டியுள்லது. அத்தகைய போராட்டங்களில் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் களத்தில் முன்நின்று போராட வேண்டும்.” என்று பேசினார்.

அதற்கடுத்தபடியாக அண்ணாமலை பல்கலைக்கழக ஆய்வு மாணவர் தோழர் மணிவாசகம் பேசுகையில்;

“இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 71-வது ஆண்டு தினம், சுதந்திர நாடு என்று இவர்கள் சொல்வதை நாம் அனைவரும் ஏற்க வேண்டும். இந்திய அரசமைப்பு சட்டத்தில் சொல்லக்கூடிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இன்று இருக்கிறதா?

இந்த நாட்டில் ஆகப் பெரும்பான்மையான உழைக்கின்ற வர்க்க பின்னணியிலுள்ள குறிப்பாக தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படிக்கவே கூடாது என்று சொல்வதுதான் இவர்கள் சொல்லக்கூடிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமாக உள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.-யில் முதல் மதிப்பெண் எடுத்த பாத்திமா லத்தீப் என்ற மாணவியை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் “இன்டர்னல் மார்க் போட மாட்டேன்..” என்று மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அந்த மாணவியை தற்கொலைக்கு தூண்டி உள்ளார். இந்திய நாட்டில் பாப்பானுக்கு ஒரு நீதியும், பொதுமக்களுக்கு ஒரு நீதியும் இங்கு நிலைநாட்டப் படுகிறது. எடுத்துக்காட்டாக போக்குவரத்து காவல்துறை, தமிழக காவல்துறை ஹெல்மெட் போடவில்லை என்றால் நம்மளை விரட்டி விரட்டி பிடிக்கின்றனர். சில சமயங்களில் உயிரும் போகிறது ஆனால் அதே தமிழகத்தில் சட்டை இல்லை, தலையில் ஹெல்மெட் இல்லை, மண்டையில் ஒரு குடுமி மட்டும் இருக்கிறது. அவர்களைப் பார்த்து போலீஸ் கும்பிடு போடுகிறார்கள். இதுதான் இவர்கள் சொல்லக்கூடிய அரசியல் சட்டம், நீதி, ஜனநாயகம்.

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள், தினக்கூலிக்கு அன்றாடம் ஓடாய் தேய்ந்து உழைக்கின்ற மக்களுக்கு மதிப்பில்லாமல் உள்ளது. இங்கே அரசியல் சட்டம் என்பது பார்ப்பனியமும், மனுஸ்மிருதிதான். அண்ணாமலை பல்கலை கழகத்தை எடுத்துக்கொண்டால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட உழைக்கும் பின்னணியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு தரக்கூடிய சலுகைகள் அனைத்தும் இந்த ஓரிரு ஆண்டுகளில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திடீரென விடுதிக் கட்டண உயர்வு, தேர்வு கட்டண உயர்வால் மாணவர்கள் அவதிப்படும் நிலையே உள்ளது.

இன்று மாணவர்களை திண்டாட்ட நிலைக்கு தள்ளுகிறார்கள் நிர்வாகத்தில் பேராசிரியர்களும் நிர்வாகமும் எக்ஸாம் பீஸ் கட்ட வக்கில்லை என்றால் ஏன் படிக்க வரீங்க என இழிவாக பேசுகிறார்கள். இதனை சகித்துக் கொண்டுதான் கல்லூரிகளுக்கு படிக்கச் சென்று வருகிறோம். இது என்னுடைய நேரடி அனுபவம். ஆளுகின்ற மோடி, எடப்பாடி அரசுகள் கல்வியை வணிகமயமாக்கும் நோக்கத்தோடு இந்த அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. நாம் வீதியில் இறங்காமல் தீர்வுகாண முடியாது” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு அவரது கண்டன உரையில்;

“மோடி அரசு நீட் தேர்வு மூலம் மாணவி அனிதாவின் மருத்துவ கனவை அழித்தது மாணவி பாத்திமாவிற்கும் அதே நிலைதான். பாத்திமாவின் தாயார் கதறுகிறார் தமிழக மக்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

தமிழக வரலாறு நெடுக்க பார்ப்பன எதிர்ப்பானது பெரியார், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், பல்வேறு புரட்சிகர இயக்கங்கள் என போராட்டங்கள் நடத்தியதன் விளைவால் பகுத்தறிவு பூர்வமான சிந்தனை உருவாக்கியது. ஆனால் இன்று சிதம்பரத்தில் தன் மகனுக்கு பிறந்தநாள் என்பதால், அர்ச்சனை செய்யச் சொன்ன அரசு செவிலியரை கன்னத்தில் அறைந்திருக்கிறான் தீக்ஷிதர் தர்ஷன். இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை, ஏனென்றால் அவன் ஒரு பார்ப்பான்.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் இந்துமத கோவில்களில் சிற்பக்கலை என்ற பெயரில் ஆபாசமாக உள்ள சிலைகளை அசிங்கம் என்று சொன்னதற்காக பிஜேபி அடிவருடி, சங்கப் பரிவார கும்பலால் நெருக்கடிகளுக்கும் அவதூறுகளுக்கும் ஆளாக்கப்படுகிறார். இந்த நாட்டில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவான பார்ப்பனர்கள்தான் நாட்டை ஆள வேண்டும். ஆனால் 98% உழைக்கின்ற வர்க்க பிள்ளைகளோ படிப்பதற்கு கூட உரிமை கிடையாது என்ற நிலையை நிறுவப் பார்க்கிறது பார்ப்பனியம். பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்கும் மோடி அரசையும், இந்த அரசு கட்டமைப்பையும் எதிர்த்து போராடாமல் நமக்கான உரிமையை பெறமுடியாது.” என பேசினார்.

இவர்களைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் மா. மணியரசன் உரையாற்றினார் அதில்;

“ஐஐடி மாணவி பாத்திமாவை பார்ப்பனிய வெறி தான் கொலை செய்திருக்கிறது. ஐஐடி நிர்வாகம் அதற்கு காரணமான பேராசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு, நீதிமன்றம் ஆகியவை இந்த கொலை குற்றவாளிகளை பாதுகாக்கிறது. இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி? பொது மக்களுக்கு ஒரு நீதி? என்ற வகையில் தான் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஏனென்றால் எஸ்.வி. சேகர், பெண் பத்திரிக்கையாளரை இழிவாக பேசிய போதும், H. ராஜா நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய போதும், சிதம்பரம் தீட்சிதர் தர்ஷன் கோவிலுக்கு வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தபோதும் இதில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தமிழக அரசு மற்றும் நீதிமன்றங்கள் இவர்களை பாதுகாத்து ஜாமினில் வெளியில் விடுகிறது. ஆனால் இதுபோன்ற தவறை சாமானியர் செய்திருந்தால் இந்த சட்டமும் நீதியும் என்ன செய்திருக்கும்.

இந்த படுகொலைகள் தமிழகத்திலுள்ள மட்டுமல்ல இந்திய முழுமைக்கும் உள்ள கான்பூர், கௌஹாத்தி, டெல்லி, கரக்பூர், ஹைதராபாத், மும்பை போன்று நாடெங்கும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிளும் நடைபெருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 53 மாணவர்களை கொலை செய்திருக்கிறது பார்ப்பனியம்.

சென்னை ஐஐடி நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் பேராசிரியர் நியமனம் கூட பார்ப்பனர்களை கூடுதலாக நியமித்து சட்டவிதிகளை மீறி இருக்கிறது. அதுகுறித்த அரசின் புள்ளி விவரம் பின்வருமாறு:

பேராசிரியர்கள் நியமனம்:
SC _ 03
ST _ 00
BC, MBC _ 00
FC _ 209

இணைப் பேராசிரியர்கள் நியமனம்:
SC – 03
ST – 00
BC, MBC – 00
FC – 88

துணைப் பேராசிரியர் நியமனம்:
SC – 04
ST – 01
BC, MBC – 07
FC – 165

மொத்த பணியிடம் = 480
பார்ப்பனர்கள் = 467

இவ்வாறு சென்னை ஐஐடி நிறுவனம் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு இயங்குகிறது, இதில் சமூகநீதி என்பது எந்தவகையிலும் நிலை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இதன் விளைவுதான் பாத்திமா தற்கொலை, மாணவர் சுராஜ் மீது மத வெறி தாக்குதல், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை என பல்வேறு பார்ப்பன அடக்குமுறைகள் தொடர்ந்து வருகிறது.

அதுமட்டுமலல் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இனி அனைத்தும் காசிருந்தால் பெறமுடியும் என்ற வகையில் மோடி அரசு கொண்டுவரத்துடிக்கும் தேசிய கல்வி கொள்கை மீண்டும் மனு தர்மத்தை நிலை நிறுத்துவதாக இருக்கிறது.

உதாரணமாக மருத்துவத்துறையில் நீட் தேர்வை திணித்தனர், அதைக் கொடுவரும் போது அது ‘ஊழலை ஒழிக்கும், ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்வி வாய்ப்பை உருவாக்கும்’, என்றெல்லாம் பேசினார்கள் பிஜேபி தலைவர்கள். ஆனால் நடந்தது என்ன ஏழை மற்றும் தமிழ்வழி படித்த மாணவர்கள் மருத்துவக் கனவை நினைத்துகூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கட்டணக் கொள்ளைக்கும் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது. உதாரனமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிக்க ஆண்டுக் கட்டனம் ரூபாய் 13,640 மறும் BDS படிக்க ரூபாய் 11,640 என அறிவித்துள்ளது.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2014-ல் அரசு பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு தற்போது மருத்துவத்திற்கான ஆண்டு கட்டணம் 5 லட்சத்து 54 ஆயிரம். மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் 50,000; ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் 60,000; தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் 30,000 என மருத்துவக்கல்லூரிகள் தங்களது விருப்பத்திற்கு கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்கின்றன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்த தாக்குதலாக, மோடியின் தேசிய கல்விக் கொள்கை ஏற்றத்தாழ்வான கல்வி முறையை உருவாக்க போகிறது. பார்ப்பனியம் சமநிலையை என்றுமே ஏற்காது. அதன் விளைவுகளாக தான் இன்று நடக்கும் மாணவர்களின் தற்கொலைகள். இது புதிது அல்ல ஆனால் தற்போது அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஏற்கனவே மகாபாரதம், ராமாயணம் புராணக் கட்டுகதைகளில் ஏகலைவன், சம்புகன் போன்றவர்கள் அறிவுத்திறன், ஆற்றல் உள்ளவர்களை பார்ப்பனியம் எப்படி அன்று கொலை செய்ததோ? அதன் நீட்சிதான் இன்று ரோகித் வெமுலா, அனிதா, முத்துகிருஷ்ணன், பாத்திமா போன்றவர்கள்.

ஆகையால் இந்த பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கக் கூடிய ஆர்எஸ்எஸ், பிஜேபி, சங்க பரிவார கும்பலை வீழ்த்த வேண்டும். இதனை தேர்தல் முறையில் நின்று நாம் வீழ்த்த முடியாது.

சமத்துவமான வாழ்க்கையை மக்களுக்கு வழங்கிய ரஷிய சோசலிசப் புரட்சியை போன்று இந்தியாவிற்கான ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டும். இதற்கு மாணவர்கள், இளைஞர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான அதிகாரத்தையும்; சமத்துவமான வாழ்க்கையையும் கட்டியமைக்க முடியும்.” என்ற வகையில் சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக புமாஇமு தோழர் பூங்குழலி தனது நன்றியுரையில்; “ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி வேண்டுமானால், பார்ப்பன பேராசிரியரை கூண்டில் ஏற்ற தமிழ்மக்கள் பெரியார் வழியில் நின்று போராட வேண்டும். பெரியார் – அம்பேத்கரின் கருத்துகளை இளந்தலைமுறை இந்த சமூகத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். பார்ப்பன மனுதர்மம் சொல்லக்கூடிய இந்துத்துவா கருத்துகளை தகர்த்தெறிய இதுதான் நம்மிடம் உள்ள ஆயுதம்” என நன்றி உரையாற்றினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க