ங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது : ஐதராபாத் போலி மோதல் கொலைகள் குறித்து அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் கண்டன அறிக்கை !

தராபாத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கில் சந்தேகத்திற்குரியவர்களாக குற்றம் சாட்டப்பட்ட நான்குபேர் ஒரு அதிகாலை நேர ‘மோதலில்’ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ’மோதல் கொலை’ போல சித்தரிக்கப்பட்டுள்ள இந்த ’மோதலில்’ கொட்டடிக் கொலைக்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகின்றன. சந்தேகத்திற்குரியவர்கள் போலீசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அவர்கள் கையில் ஆயுதங்கள் இல்லாத போது, ”போலீசை தாக்கிய போது’ அவர்கள் கொல்லப்பட்டனர் என போலீசு சொல்வது பொய் என்பது தெளிவாகிறது. அந்த இரவில் நடத்தப்பட்ட பாலியல் வன்முறை மற்றும் கொலை சம்பவத்தை ‘மீள் உருவக்க’ கூட்டிச் சென்ற இடத்தில் இந்த ‘மோதல் கொலை’ நடந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் பழிவாங்கியதாகவும், “நீதி”  நிலைநாட்டப்பட்டதாகவும் இப்போது நமக்கு – மொத்த நாட்டிற்கும் சொல்லப்படும். இப்போது நாம் அனைவரும் நமது போலீசும், அரசாங்கமும் நமது சமூகமும் சரியாக சென்று கொண்டிருப்பதாகவும், மோசமான பாலியல் வன்முறையாளர்கள் அழித்தொழிக்கப்பட்டதாகவும் மறு உறுதி செய்யப்பட்டு நாம் வழக்கம்போல நமது வேலைகளைப் பார்க்கச் செல்லலாம்.

அனால் இந்த நீதி மோசடியானது. ஒரு கொலையை “நீதியாக” வழங்கும் ஒரு அமைப்பு, இங்கிருக்கும் பெண்களிடம், “நாங்கள் சாலைகள் பாதுகாப்பானவை என்று உறுதியளிக்க முடியாது; பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரித்து குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை உறுதிசெய்ய முடியாது; பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பின்னர் உயிரோடு இருப்பவர்களை பாதுகாக்க முடியாது (நேற்று ஒரு பெண் உத்திரப் பிரதேசத்தில் உயிரோடு கொழுத்தப்பட்டார்); நீதிமன்றத்தில் அத்தகைய பெண்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதிபடுத்த முடியாது”  என்கிறது. அவர்கள் செய்யக் கூடியதெல்லாம், அடித்துக் கொலை செய்யும் ஒரு கும்பல் போல மட்டுமே நடந்து கொள்வதும், மக்களாகிய நம்மிடம் அடித்துக் கொலை செய்தல் மட்டுமே சாத்தியமான ஒரே ‘நீதி’ என்று ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறார்கள்.

அந்த நான்கு ஆண்களும் சந்தேகத்திற்குரியவர்கள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்தியாவில் வழக்கம்போல போலீசு தனது கொட்டடி சித்திரவதை மூலம் பெறும் ஒப்புதல் வாக்குமூலங்களைத் தவிர, அவர்களது குற்றத்தை நிரூபிக்க ஒரு துளி ஆதாரமாவது இருக்கிறதா என்பது குறித்து நமக்குத் தெரியாது. சித்திரவதைகள் உண்மையை வெளிக் கொண்டு வராது. சித்திரவதை செய்பவர்கள் கேட்க விரும்பும் எதையும் சித்திரவதை செய்யப்படுபவர்கள் சொல்வார்கள். ஆகவே உண்மையில் அந்த நால்வரும்தான் ஹைதராபாத்தில் அந்தப் பெண் மருத்துவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொலை செய்தார்களா என்பதுகூட நமக்குத் தெரியாது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட, குற்றம்சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள்.

தங்களது மகளைக் கண்டுபிடிக்க பரபரப்பாக முயற்சிகள் எடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை நக்கலடித்த ஐதராபாத் போலீசு, “பெண்கள் செய்யவேண்டியவை / செய்யக் கூடாதவை” என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் பெண்களை இரவு 8 மணிக்கு மேல் வீட்டிலேயே இருக்குமாறு கூறியிருக்கிறது. ஏனெனில் சாலைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய தங்களது வேலையை அவர்களால் செய்ய இயலாது / முடியாது. இப்போது அதே போலீசுதான் பாலியல் வன்முறையாளர்களை அவர்களே கண்டுபிடித்துத் தாமே நீதிபதியாகவும் விசாரிப்பவராகவும் தண்டனையளிப்பவராகவும் மாறி தண்டனையை நிறைவேற்றியிருப்பதாக நம்மை நம்பச் சொல்கிறது. இது ஒரு கொடூரமான நகைச்சுவை.

என் மகன் குற்றவாளியெனில், தாராளமாக கொன்றுவிடுங்கள் – தற்போது என்கவுண்டர் செய்யப்பட்ட முகம்மதுவின் தாயார் : உழைக்கும் வர்க்கத்தின் நேர்மை இது.

பெண்கள் இயக்க குழுக்கள்தான் “இது நீதியல்ல” என்பதை முதலில் சொல்லும். பெண்களுக்கான மரியாதைக்கான நமது கோரிக்கையையும், அரசாங்கம், நீதித்துறை, போலீசு ஆகியவற்றின் பொறுப்புடைமைக்கான நமது கோரிக்கையையும் இழுத்து மூடுவதற்கான ஒரு சூழ்ச்சியே இது. தனது பணிக்கு பொறுப்புமிக்கவராக, பெண்களின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிய அவரது அரசாங்கத்தின் தோல்விகளைக் குறித்த நமது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியவராக இருப்பதற்குப் பதிலாக தெலங்கானா மாநில முதல்வரும், போலீசும் அடித்துக் கொல்லும் கும்பலின் தலைவர்கள் போலச் செயல்பட்டிருக்கிறார்கள்.

போலி மோதல் கொலையை முன்னின்று நடத்திய போலீசு அதிகாரி.

கொட்டடிக் கொலைகள் குற்றங்களைத் “தடுக்கக் கூடியவை” என்று எண்ணுபவர்கள் மீண்டும் ஒருமுறை சிந்தியுங்கள். இத்தகைய கொட்டடிக் கொலைகளுக்கு ஐதராபாத் மற்றும் தெலங்கானா போலீசார் பேர் போனவர்கள். கட்ந்த 2008-ம் ஆண்டு, ஐதராபாத் போலீசு ஆசிட் வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் கொட்டடிக் கொலை செய்தனர். அந்தக் கொலைகள் எதுவும் ஐதராபாத்திலோ, தெலங்கனாவிலோ பெண்களுக்கு எதிராக நடந்த எந்தக் குற்றங்களையும் தடுத்துவிடவில்லை. பெண்கள் மீதான ஆசிட் தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள், கொலைகள் அனைத்தும் பாதுகாப்போடு தொடர்ந்து நடைபெற்றன.

“மோதல்” என்று சொல்லப்படும் இச்சம்பவத்தினை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இதற்குப் பொறுப்பான போலீசார் கைது செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை தற்காப்புக்காகத்தான் அந்த நால்வரையும் இவர்கள் கொன்றார்கள் என்பதை நிரூபிக்கச் சொல்ல வேண்டும். மனித உரிமைகளுக்காக மட்டுமின்றி பெண்கள் உரிமைக்கும் இந்தக் கோரிக்கை ஏன் முக்கியமானது ? ஏனெனில் பாதுகாப்போடு கொலை செய்யக் கூடிய போலீசால், எந்த கேள்வியும் கேட்கப்பட முடியாது என்ற பாதுகாப்போடு பெண்களை பாலியல் வன்முறை செய்து கொலையும் செய்ய முடியும்.

படிக்க :
குஜராத் :  சூட் அணிந்த தலித் மீது ஆதிக்கசாதி முசுலீம்கள் தாக்குதல் !
சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !

சட்டீஸ்கர் போலீசால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், மாவோயிஸ்ட் முத்திரை குத்தப்பட்டு ‘மோதலில்’ சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட பதின்வயது சிறுமி மீனா கால்கோவை நினைத்துப் பாருங்கள். போலீசால் கும்பல் பாலியல் வன்முறை மற்றும் கொலை செய்யப்பட்டதை மறைப்பதற்குத்தான் ‘மோதல்’ நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது நீதி விசரணையில் தெரிய வந்தது. பாலியல் வன்முறை மற்றும் கொலையில் ஈடுபட்ட அந்தக் கும்பல், இன்னும் விசாரணையையோ எவ்வித நீதியையோ இன்னும் சந்திக்கவில்லை.

ரோஜா பூ தூவி போலீசை வரவேற்கும் உள்ளூர் மக்கள்.

தொலைக்காட்சி சேனல்களும் வலதுசாரி சமூக வலைத்தளப் படையினரும், பெண்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள், கொட்டடிக் கொலைகளையும் கும்பல் கொலைகளையும் நீதி என்று ஏற்றுக் கொள்ளாததால் எங்களைத்தான் எதிரிகள் என உங்களிடம் கூறுவார்கள். கத்துவாவில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க நடத்தப்பட்ட பேரணிகளையும் குற்றம் நிரூபிக்கப்பட்ட கத்துவா பாலியல் வன்முறையாளர்களையும் ஆதரித்தவர்களும் இதே தொலைக்காட்சி சேனல்களும், இதே வலதுசாரி சமூகவலைத்தளப் படைகளும் தான். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் மீது பாலியல் குற்றம் சாட்டிய பெண்ணை பொய்யர் என முத்திரை குத்தியவர்களும் ஜே.என்.யு மாணவிகளை மோசமான ‘நடத்தை’ கொண்டவர்கள் என அசிங்கப்படுத்தியவர்களும் கும்பல் பாலியல் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செனெகருக்கு ஆதரவாகப் பேசியவர்களும் இவர்கள்தான்.

பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களாகிய நாங்கள், பெண்களுக்கு உண்மையான நீதியை தொடர்ந்து கோருவோம். போலீசு, அதன் பணியை மட்டும் செய்து பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், நீதிபதிகளாவும், நீதியைச் செயல்படுத்துபவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். பாலியல் வன்முறையாளர்கள் என போலீசால் அறிவிக்கப்பட்ட ஆண்களின் படுகொலையால், கற்பனையான “கூட்டு மனசாட்சி” சாந்தப்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. சமூகத்தின் மனசாட்சி, பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் பெண்களின் புகார்களுக்கு ஆதரவாகவும், பாலியல் வன்முறைக் கலாச்சாரத்தையும், பாதிக்கப்பட்டவர்களை பழி கூறுவதை நிராகரிப்பதில் செயலூக்கமாகவும் மாற வேண்டும் என்று விரும்புகிறோம்.

ரதி ராவ், தலைவர், AIPWA.
மீனா திவாரி, பொதுச் செயலாளர், AIPWA.
கவிதா கிருஷ்ணன், செயலாளர், AIPWA.
அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் கழகம்.


தமிழாக்கம் :  நந்தன்