குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 16 (இறுதி)
பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்புகளை ஆரம்பிப்பதை ஏதோ மூன்றாண்டு ஆரம்பக் கல்வி முறை சரிப்பட்டு வராததால், நான்காண்டு ஆரம்பக் கல்விக்குத் திரும்பி வருவதாகக் கருதக் கூடாது. இதை மூன்றாண்டு ஆரம்பக் கல்வியாகவும் (ஒவ்வொரு வகுப்பிலும் வயது வரம்பு ஓராண்டு குறைக்கப்பட்டுள்ளது) கருதக்கூடாது. உண்மையில் பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பு கல்வி முறையில் குணாம்ச ரீதியான மாற்றத்திற்கு வழிகோல வேண்டும். இது பிந்தைய வகுப்புகளுடன் ஒரே தொடர்ச்சியாக விளங்க வேண்டும்; அதே சமயம் குழந்தைகளின் விசேஷ வயதின் காரணமாக விசேஷ கடமைகளை ஏற்க வேண்டும், அதாவது மாணவன் எனும் சிக்கலான வேலைக்கு குழந்தையை மனவியல், தார்மீக, சமூக ரீதியாக, மூளை வளர்ச்சி ரீதியாக தயார்படுத்த வேண்டும். இந்த அம்சங்களும் ஆறு வயதுக் குழந்தைகளுடனான எனது பணியின் அடிப்படையாகத் திகழ்ந்தன.
பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பை அமல்படுத்துவதால் ஆரம்ப வகுப்புகளில் ஐந்து நாள் கல்வி வாரத்தை நிறைவேற்றுவது சாத்தியமாகிறது. ஐந்து நாள் கல்வி என்றால் வெறுமனே பாட நேரத்தைக் குறைக்க வேண்டுமென்றோ, இவற்றை ஐந்து நாட்களுக்கு ஏற்றபடி மாற்றியமைக்க வேண்டுமென்றோ பொருளாகாது. ஐந்து நாள் கல்வி வாரத்தில் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரும் தரம் உயர வேண்டும். ஐந்து நாள் வாரம் என்பது கல்வி – வளர்ப்பு போக்கு, பாடத்திட்டங்கள், பாடநூல்கள், முறையியல் அம்சங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டின் விளைவாக இருக்க வேண்டும். பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் ஒருவேளை ஐந்து நாள் வாரத்தை அமல்படுத்துவதால் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கலாம்.
ஆனால் கல்வி – வளர்ப்புப் போக்கை குணாம்ச ரீதியாக மேம்படுத்தாமல் இருந்தால், பிந்தைய வகுப்புகளில் ஆசிரியருக்கு நேரம் பற்றாக்குறையாக இருக்கையில் குழந்தைகளின் தயாரிப்பு மட்டத்தை உரிய அளவில் வைப்பது கடினமானதாக இருக்கும். அதே சமயம் குடும்ப வளர்ப்பின் பயன் தன்மையை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். பெற்றோர்களுக்கு சில அடிப்படை விஷயங்களை சொல்லித் தருவதோடு கூட மேல் வகுப்பு மாணவர்கள் மற்றும் விசேஷ தொழில் நுட்பக் கல்லூரி, உயர் கல்விக்கூட மாணவர்கள் ஆகியோருக்குக் குடும்ப வளர்ப்பு அடிப்படைகளைச் சொல்லித் தருவது சிறந்ததாய் இருக்கும். இந்த ஞானத்திற்குச் சமுதாய முக்கியத்துவம் உண்டு. இதை நாடு தழுவிய அளவில் இளைஞர்களுக்கு ஊட்ட வேண்டும். இரண்டு நாள் விடுமுறையின் போது குழந்தைகளின் ஓய்வு, உழைப்பு, பொழுது போக்கிற்குச் சமுதாய ரீதியாக ஏற்பாடு செய்யும் பிரச்சினையும் தோன்றுகிறது.
பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் கல்வி போதனை எவ்வளவு வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பது வகுப்பறையில் உள்ள ஆசன இருக்கைகளைப் பெரிதும் பொறுத்துள்ளது. மற்ற சாதனங்கள், கருவிகளோடு சேர்ந்து இவையும் – கல்வி முறையின் இயல்பான அங்கமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் பன்முக வளர்ச்சிக்கு ஆசிரியருக்கு உதவ வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆரம்ப வகுப்புகளில் விசேஷ ஆசன இருக்கைகள் பிரச்சினை ஸ்தல விஷயமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆரம்ப வகுப்பிலும் (பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பு உட்பட) ஒரு சில நவீன, போதனை முறைக்கு ஏற்ற வசதியான கரும்பலகைகள், ஆசிரியருக்கு வசதியான மேசை, குழந்தைகளுக்குத் தனித்தனி சிறு அலமாரிகள் முதலியன தேவை.
டெஸ்க்குகள்? பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை நான்காண்டுகளுக்கு குழந்தை ஒரே டெஸ்கில் – அதுவும் முதலில் இதன் கால்கள் ஆடும், பின் இதன் மீது சாய வேண்டும் – உட்கார வேண்டும் என்பதை சகித்துக் கொள்ள இயலுமா? குழந்தைகளின் உயரத்திற்கேற்ப டெஸ்குகளைப் போடவும், வேறு வேலைகளின் போது இவற்றை மடித்து வைத்து இடமேற்படுத்தவும் என்னால் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? இந்த டெஸ்குகளை மேடைகளை அமைக்க, வீடுகள், கப்பல்களைக் கட்டி விளையாட குழந்தைகளால் பயன்படுத்த முடியும் என்றால் பள்ளி வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானதாக, உணர்ச்சிகரமானதாக மாறும்?
படிக்க :
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு | ராஜு – கருணானந்தன் – முத்துகிருஷ்ணன் உரை | காணொளி
♦ பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்கக் கோரி் கனடாவில் பேரணி !
பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் எப்படி செயல்பட வேண்டும் என்பது சம்பந்தமாக என் அனுபவம் பத்து கேள்விகளை என் முன் வைத்துள்ளது. இவற்றிற்கு என்னால் உறுதியாக ”வேண்டாம்” (“முடியாது”, “இல்லை”) என்றோ ”ஆம்” (”முடியும்”, “அவசியம்”) என்றோ பதில் சொல்ல முடியும்.
பின்வரும் கேள்விகளுக்கு நான் எதிர்மறையில் பதில் அளிப்பேன்:
-
- முதல் வகுப்புப் பணியின் அனுபவத்தை மாற்றமின்றி அப்படியே பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் பயன்படுத்தலாமா? – கூடாது.
- ஆசிரியரின் கட்டளைகள், ஏவல்களை உடனடியாக நிறைவேற்றுமாறு குழந்தைகளைக் கட்டாயப்படுத்தலாமா? – கூடாது.
- கட்டாய வீட்டுப் பாடங்களைக் குழந்தைகளுக்குத் தரலாமா? – கூடாது.
- குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் போடலாமா? – கூடாது.
- வகுப்பில் யார் மற்றவரை விட நன்றாகப் படிக்கின்றனர் என்று சொல்லலாமா?
– கூடாது. - வகுப்பில் குழந்தைகள் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார வேண்டும் என்று கோரலாமா? – கூடாது.
- குழந்தை வகுப்புக்குக் கொண்டு வந்த விளையாட்டு சாமானைப் பிடுங்கலாமா?
– கூடாது. - குழந்தையைப் பெயில் செய்யலாமா? – கூடாது.
- சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டுமென குழந்தைகளிடம் சொல்லலாமா?
– கூடாது. - ஆறு வயதாக 2-3 மாதங்கள் உள்ள குழந்தைகளை பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாமா? – கூடாது.
பின்வரும் கேள்விகளுக்கு ‘ஆம்” என்று பதில் தருவேன்:
-
- பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பிற்கு விசேஷ முறை வேண்டுமா? – ஆம்.
- நர்சரிப் பள்ளியில் மூத்த வயது குழந்தை வளர்ப்புப் பணியில் கிடைத்த அனுபவத்தை பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பில் பயன்படுத்தலாமா? – ஆம்.
- பாடங்களைப் படிப்பதில் குழந்தைகள் ஆசிரியரை விஞ்ச அவர்களுக்கு ஊக்கம் தரலாமா? – ஆம்.
- குழந்தைகள் கண்டுபிடித்து, திருத்த வேண்டும் என்பதற்காக ஆசிரியர் வேண்டுமென்றே தப்பு செய்யலாமா? – ஆம்.
- குழந்தைகளுடனான பணியில் ஆசிரியர் கலைத் திறமையை வெளிப்படுத்த வேண்டுமா? – ஆம்.
- குழந்தைகள் சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு விதமான வேலைகளைத் தரலாமா? – ஆம்.
- குழந்தைகளின் சுய வேலையை அதிகப்படுத்த வேண்டுமா? – ஆம்.
- குழந்தைகள் பாடங்களை மதிப்பிட வேண்டுமா? – ஆம்.
- குழந்தைகளைப் பற்றிய சான்றிதழ்களைப் பெற்றோர்களுக்கு வழங்க வேண்டுமா, குழந்தைகளின் வேலைகள் அடங்கிய பாக்கெட்டுகளைத் தயாரிக்க வேண்டுமா?
– ஆம். - பெற்றோர்களுக்கான வெளிப்படையான பாடங்களை நடத்த வேண்டுமா? – ஆம்.
இந்த “ஆமாம்”, ‘கூடாது” எனும் பதில்களையும் குழந்தைகளுடனான வேலையின் போது தோன்றக் கூடிய இது போன்ற பிறவற்றையும் எனது கருத்துப்படி மிக முக்கியமான, ஒரே சரியான ஆசிரியரியல் நிலையிலிருந்து பெறுகிறேன். இதையே இனியும் தொடர்ந்து பின்பற்றுவேன்:
குழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும், இவர்களை இப்படி நேசிக்க, இந்த நேசத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டுமென இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளி நாளையும் ஒவ்வொரு பாடவேளையையும் ஆசிரியர் குழந்தைகளுக்கான பரிசாக யோசித்துச் செயல்பட வேண்டும். குழந்தை, ஆசிரியருடன் ஒவ்வொரு முறை கலந்து பழகும் போதும் இது மகிழ்ச்சியையும் எதிர்கால நம்பிக்கையையும் அவன் மனதில் ஊட்டவேண்டும்.
<< முற்றும் >>
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!