பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
ஜினி அரசியலுக்கு வருவேன் எனக் கூறியபோதும் பலர், அவர் அரசியலுக்கு வருவார் என்பதை நம்பத் தயாராக இல்லை. தான் நடிக்கும் படங்களின் வெளியீடுகளின்போது மட்டும் அரசியல் பேசுவதன் மூலம், படங்களை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார் அவ்வளவே, அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் என விளக்கமும் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், தான் அரசியலுக்கு வருவதற்கு தக்கத் தருணம் வந்துவிட்டதை ரஜினி உணர்ந்தே இருக்கிறார். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்களின் இறப்புக்குப் பின் அதற்கான தயாரிப்பு வேலைகளில் அவர் வெகுஜாக்கிரதையாக ஈடுபட்டுவருகிறார்.

பெருமளவில் ரஜினியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது என்பதும் வெளிப்படையானவை. சமீப காலமாக டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உருவாகியிருக்கும் ரஜினியின் படை , அவர்களை விமர்சிப்பவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறது. ரஜினி வெகு விரைவில் அரசியலில் இறங்க இருக்கிறார் என்பதற்கான முன் தயாரிப்புகளை அடையாளம் காட்டுகின்றன மேற்கண்டவை.

ஆனாலும், ரஜினியின் அரசியல், தமிழகத்தின் அரசியலோடு ஒத்துப் போகுமா என்பது முக்கியமானதொரு கேள்வி. ரஜினியும் ரஜினியை ஆதரிப்பவர்களும் ஆராய மறுக்கும் கேள்வி இது.

முதலில் ரஜினியின் அரசியல் என்னவென்று பார்ப்போம். தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தபோது, ‘உங்களுடைய அரசியல் எப்படிப்பட்டது?’ என செய்தியாளர்கள் ரஜினியிடம் கேட்டனர். ரஜினி சொன்ன பதில் ‘ஆன்மீக அரசியல்’. அவர் அப்படி சொன்ன அடுத்த நாள், இந்து சமயம் சார்ந்த ஒரு மடத்துக்குச் சென்று வந்தார். அதாவது தன்னுடைய அரசியல் ‘இந்து ஆன்மீக அரசியல்’ என பட்டவர்த்தனமாக அறிவித்தார் ரஜினி.

படிக்க :
♦ ரஜினி : எச்ச ராஜாவின் வெர்சன் 2 | துளைத்தெடுக்கிறது டிவிட்டர் !
♦ ரஜினி : வரமா – சாபமா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி வெளியீடு !

‘இந்துத்துவம்’, ‘காவி’ ஆகிய வார்த்தைகள் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘தேச விரோத’ சொற்கள். இந்த வார்த்தைகளை உச்சரிக்கும், உச்சரித்த அரசியல்வாதிகள் சட்டமன்ற தொகுதி தேர்தலில்கூட வெல்ல முடியாது. அத்திவரதரை தரிசிக்க முண்டியடித்துக் கொண்டு சென்ற அதே ஆன்மிக நாட்டம் கொண்ட மக்கள்தான், ஆன்மீகத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களையும் நிராகரிக்கிறார்கள் என்பதை ’ஆன்மீக அரசியல்’ கனவு காண்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, ரஜினி அதை உணர்வாரா என்பது கேள்விக்குறியானதே..!

ரஜினி தன்னுடைய ஆன்மீக அரசியலில் பிடிவாதமாக இருப்பதைப் போன்றே, மக்கள் போராட்டங்களை அவர் அணுகும்விதமும் தமிழக மக்களின் உணர்வுகளிலிருந்து பாரதூரமாக விலகியிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் திரள் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். அந்த சமயத்தில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பிய ரஜினி, “தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டது மக்கள் கிடையாது, சமூக விரோதிகள் தான். இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா விஷக்கிருமிகளை அடக்கி வைத்திருந்தார். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர்” என்றார்.

ஆயிரக்கணக்கான மக்கள் தன்னுணர்வோடு கலந்துகொண்ட போராட்டத்தை, மக்கள் தலைவராக வரத்துடிக்கும் ஒரு நபர் ‘சமூக விரோதிகள்’, ‘விசக்கிருமிகள்’ என கொச்சைப் படுத்தினார். தூத்துக்குடி மக்கள் வெகுண்டெழுந்தார், ரஜினியை இனி தங்கள் மண்ணில் அனுமதிக்கப்போவதில்லை என்றார்கள். ஆனாலும், ரஜினி தன் அரசியலில் பிடிவாதமாகவே தொடர்ந்தார்; தொடர்கிறார்.

அடுத்தது காஷ்மீர் பிரச்சினையை கையிலெடுத்தது பாஜக அரசு. ‘இந்து தேசியம்’ என்ற தங்களுடைய நீண்ட கால இலக்கின் அடிப்படையில் பாஜக அரசு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. காஷ்மீரில் வீட்டுக்கு வீடு இராணுவத்தை நிறுத்தி, தகவல் தொடர்புகளை துண்டித்து, வெகுஜென அரசியல்வாதிகளை சிறை வைத்து தன்னுடைய ராஜ்ஜிய கனவை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறது பாஜக அரசு.

காஷ்மீரை திறந்த வெளி சிறைச் சாலையாக மாற்றிவிட்டு, அம்மக்களின் உணர்வுகளை கேட்டறியாமல் திணிக்கப்பட்ட முடிவை ரஜினி ஆதரிக்கிறார். காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட தமிழக மக்கள், திமுக உள்ளிட்ட பெரும்பாலான தமிழக வெகுஜென அரசியல் கட்சிகள் அரசின் முடிவை எதிர்க்கிறார்கள். மீண்டும் ரஜினியும் தமிழக மக்களும் எதிரெதிர் திசையில் நிற்கிறார்கள்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி, பாஜக அரசின் முடிவைப் புகழ்ந்து தள்ளினார்.

படிக்க :
♦ காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு
♦ ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !

“உங்களின் மிஷன் காஷ்மீர் ஆபரேஷன் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறேன். இதுகுறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகச்சிறப்பு. அமித் ஷா யார் என்பதை மக்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். அதுகுறித்து நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்” என ரஜினி பேசியது சர்ச்சையானது; ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

தமிழகத்தில் பாஜகவின் அரசியலை புகழ்ந்து யார் பேசினாலும் பேசுகிறவர்களை மக்கள் ஒதுக்கிவிடுவர். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, நாற்பது ஆண்டு காலம் தங்களை மகிழ்வித்த ரஜினியும் விலக்கல்ல. மக்களின் உணர்வோடு பல்வேறு சமயங்களில் முரண்பட்டு நின்ற ரஜினியை, காஷ்மீர் குறித்த பேச்சின் மூலமாக மேலும் சற்று தள்ளி வைத்தனர். சமூக ஊடகங்களில் ரஜினிக்கு கிடைத்த எதிர்ப்பே அதற்கு சாட்சி!

அதோடு விட்டாரா என்றால், இல்லை. விளக்கமளிக்கிறேன் என்கிற பெயரில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளில் கல்லெறிந்துவிட்டுப் போனார் ரஜினி.

“காஷ்மீர் மிகப்பெரிய விஷயம்; அது நம் நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய விஷயம். அந்த காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் ஒரு தாய் வீடாக இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் இந்தியாவில் ஊடுருவ அது ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது. அதை நம் கைப்பிடியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ராஜதந்திரத்துடன், முதலில் 144 தடை உத்தரவு போட்டு, பிரச்சினை செய்பவர்களை வீட்டுக்காவலில் வைத்து, என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லாமல், பெரும்பான்மை இல்லாத ராஜ்யசபாவில் சட்டத்தைக் கொண்டுவந்து அமல்படுத்தியிருக்கின்றனர். இது அருமையான ராஜதந்திரம். தயவுசெய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்க வேண்டும் என புரிந்துகொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மிஞ்சும் அளவுக்கு பாஜக அரசின் நடவடிக்கை வக்காலத்து வாங்கினார் அவர்.

சுயாட்சி, தன்னாட்சி, மாநில சுய உரிமை இதெல்லாம்தான் தமிழக மக்களின் உணர்வு. நூறாண்டு கால தமிழக அரசியல் இந்த உணர்வின் மீது கட்டப்பட்டதே. இந்த உணர்வுகளை அடித்து நொறுக்கும் எவரையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மோடியுடன் தனிப்பட்ட முறையில் நட்பாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மோடி பிரதமர் வேட்பாளராக நின்றபோது ஏன் அவருடன் கூட்டணி அமைக்கவில்லை? ஜெயலலிதாவுக்கு மக்களின் உணர்வுகள் தெரியும். மோடியை, பாஜகவை முன்னிறுத்தினால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். திமுக நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிக்கண்டதும் இதே உணர்வின் அடிப்படையில்தான்.

ஏன் புதிய அரசியல்வாதி கமலும்கூட தமிழரின் உணர்வை தெரிந்து வைத்திருக்கிறாரே? ரஜினியைப் போல் அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டாமல், பாஜகவின் அடாவடி திட்டங்களை விமர்சிக்கும் விஜய் சேதுபதி, சித்தார்த் போன்ற நடிகர்களுக்கு இருக்கும் துணிவும் பொறுப்பும்கூட இந்த ஆன்மீக பெரியவருக்கு இல்லை.

படிக்க :
♦ குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !
♦ மோடியின் குடியுரிமை சட்டத்துக்கு இந்து தமிழ் திசையின் மானங்கெட்ட ஜிஞ்சக்கு ஜிஞ்சா !

இப்போது, இந்து ராஷ்டிர கனவுடன் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்திருக்கிறது பாஜக. அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது. மதத்தின் பெயரால் மக்களை ஒரு இனப்படுகொலைக்குத் தயார்படுத்தும் இவற்றை எதிர்த்து தன்னெழுச்சியாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. போராடும் மக்களை ஒடுக்க துப்பாக்கி குண்டுகள் பாய்கின்றன. கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களை இரக்கமில்லாமல் அடித்து விரட்டுகிறார்கள் அமித் ஷாவின் ஏவலர்கள்.

போராட்டங்கள் வலுவடைந்திருக்கும் நிலையில், “எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” பாஜகவின் குரலை அமைதி விரும்பி வேசம் கட்டி கருத்து கூறியிருக்கிறார் ரஜினி.

அமைதி வழியில் வளாகத்துக்குள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துகொண்டிருந்த ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை மாணவர்களை ஈவு இரக்கமில்லாமல் அடித்து உதைத்தது டெல்லி போலீசு. நூலகமெங்கும் இரத்தக்கறை! அதைக் கண்டுதான் மாணவர் சமூகம் வெகுண்டெழுந்தது. அப்போது ரஜினி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். மாணவர்கள் அடிவாங்கியது அவருடைய மனதிற்கு வேதனை அளிக்கவில்லை. சமூகம் கொந்தளிக்கும்போது அதிகாரத்துக்கு கால் பிடித்துவிடும் அவருடைய கேடுகெட்ட ஆன்மீக ஆன்மா விழித்தெழுந்துகொள்கிறது.

ரஜினி பாஜகவின் குரலாக ஒலிப்பதன் பின்னணி என்ன? ரஜினியின் ‘இந்துத்துவ ஆன்மீக ஈடுபாடு’ம் அவற்றை அவர் நடிக்கும் படங்களில் திணிப்பதும், மட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ‘பார்ப்பன இந்து மத’த்தின் மேன்மைகளை எடுத்துச் சொல்வதும் பாஜகவினருக்கு நெருக்கத்தை உண்டாக்குகிறது.

இப்போது அல்ல, நீண்ட காலமாகவே ரஜினி, இந்துத்துவ அரசியலுக்கு தோதான ஆளாகவே பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்பினரும் பார்த்து வந்துள்ளனர். ரஜினிக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் இந்து முன்னணி அவரை காத்து நின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரும் சோ விட்ட அரசியல் (தரகர்) பணியைத் தொடர்பவருமான குருமூர்த்தி ‘பாஜகவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்’ என ரஜினி உள்ள மேடையிலேயே இணைப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

முழுக்க முழுக்க எதிர்ப்பு நிலையிலேயே தங்களை வைத்திருக்கும் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடிக்க பாஜக பல வகையிலும் திட்டமிடுகிறது. சினிமா செல்வாக்குள்ள, தங்களுடைய ‘கொளுகை’களுக்கு ஒத்துப்போகும் ரஜினி போன்ற பிம்பத்தின் பின்னால் வளரலாம் என்பது அவர்களுடைய நீண்ட காலத் திட்டம்.

ரஜினியின் ‘கொளுகை’கள் காவிமயமானவை; தமிழக மக்களின் எண்ணங்களுக்கு, வாழ்வியலுக்கு எதிரானவை. இதை அவர் உணர்ந்திருந்தாலும் தன்னுடைய சித்தாந்தத்திலிருந்து அவர் ஒருபோதும் கீழே இறங்கியதில்லை. தமிழகத்தின் மத எதிர்ப்பு அரசியலை எதிர்கொள்ள அவருக்குப் போதிய மன தைரியம் இல்லை என்பதோடு அது வெற்றி பெறவும் செய்யாது என்பதை அறிந்திருக்கிறார். அவருடைய இத்தனை ஆண்டுகால தயக்கமே இதை உணர்த்தக்கூடியதுதான். ஆனாலும், பாஜகவுக்கு இது பொருட்டில்லை.

ரஜினி என்பது பாஜகவுக்கு ஒரு முகமதிப்பு மட்டுமே. பணபலத்தைப் பற்றியோ, ஆள் பலத்தைப் பற்றியோ ரஜினி கவலைகொள்ளத் தேவையில்லை; அதை பாஜக கவனித்துக்கொள்ளும். பாஜகவுக்குத் தேவை தங்களுடைய சித்தாந்தத்தைத் தாங்கிச் செல்லும் ஒரு முகம். அந்தப் பணிக்கு ரஜினி கச்சிதமாகப் பொருந்துவார் என அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசிக்கும் நடிகர் ரஜினிகாந்த், தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாதவராகவே இருக்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ரஜினியின் சிந்தனை பள்ளியான காவி, இந்துத்துவ அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அவர்களின் அரசியல் வார்ப்பு அப்படிப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 130 பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்சியை வளர்க்கத்தான் ரஜினி களமிறங்கப் போகிறார்.  உங்களுடைய ஆன்மீக அரசியலுக்கு பாடம் கற்பிக்க தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள், வாருங்கள் ரஜினி.

மு.வி. நந்தினி

disclaimer